கோள்கள் பலன்கள் தருவதில் பல நிலைகளையும் அலசி ஆராய்ந்துப் பார்த்துப் பலன் சொல்ல வேண்டும். கோட்சாரம் இரண்டும் அதாவது பிறப்பு கோட்சாரம், தற்கால கோட்சாரம், திசாபுத்தி அந்தரம் மற்றும் உள் பிரிவுகள் கணக்கினில் கொண்டு தான் பலன் சொல்ல வேண்டும்.
திருமணப் பொருத்தம் பார்க்கின்ற போதும் ஆண், பெண் இருவரது சாதகங்களையும் பார்த்து பின்னர் பொருத்தம் உள்ளதா என அலசி ஆராய்ந்து தான் திருமணம் முடிக்க வேண்டும். வெறும் பத்து பொருத்தங்கள் கூடவே கூடாது. அது சரியாகப் பொருந்தாது. எனவே இருவரது சாதகங்கள் வைத்துத்தான் பொருத்தம் பார்க்க வேண்டும்.
இங்கு இலக்னப் பொருத்தம், இராசிப் பொருத்தம், 2. 4, 5, 7, 9 முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலக்னத்தில் சூரியன், சனி, இராகு, கேது, முதலிய பாவக்கிரகம் இருப்பின் பிதுர், மூதாதையர், பெரியோர், பெற்றோர், அரவு தோடம் முதலானவை உள்ளதை அறியலாம். அதுவும் சுபர் சேர்க்கை, பார்வை இருப்பின் சுபம். இவை போல் அனைத்துக் கட்டங்களினையும் அலசி ஆராய்ந்துப் பலன், பரிகாரம் கூறுதல் வேண்டும். இவ்விதம் பல பழைய சோதிட நுால்கள் பல எப்போதும் குற்றமறக் கற்றும், அனுபவப்படியும் யோசித்துப் பலன் கூறுதல் வேண்டும். பல காற் நுாற்பயிற்சி, அனுபவப்பயிற்சி மிக மிக அவசியம்.
மீன் கால் பலன்
மீன் கால் பலன் என்பது நட்சத்திரங்களின் பாத பலன் என்பதைக் குறிக்கும். மீன் எனும் தமிழ்ச்சொல் நட்சத்திரம், கோள், இராசி, நீர்வாழ் உயிரி எனப் பல பொருள் கொள்ளும் ஒரு சொல் என அகராதி குறிப்பிடுகின்றது.
குழந்தைகட்கு ஏற்படும் கிரக தோடங்களின் பலன்கள்
குழந்தைகட்கு ஏற்படும் கிரக தோடங்களின் நட்சத்திரப்பாதங்களின் வழி பலன்கள் குறிப்பிடப் பெற்றுள்ளது. எனவே இந்நுாலின் பெயர் சிறப்பாய் பொருந்தும். இந்நுால் புலிப்பாணி சித்தர் அருளியது.
புலிப்பாணி ஜோதிடம் 300, எனும் நுாலில் புலிப்பாணி சித்தர் அருளிச் செய்த பால கிரக தோஷ நட்சத்திர பாத பலன் என்னும் மீன் கால் பலன் பற்றிக் காண்போம்.
அசுவினியின் முதல் கால் 9 தோடமும் குணமாகும். கசம் பின்கால் தோன்றும். இரண்டாம் கால் மரணம். மூன்றாம் கால் 15 நாட் சென்ற பின்னர் சுகம் அடையும். நாலாம் கால் இரணம் செய்யும்.
“கோனென்ற அசுபதியின் முதற்காலப்பா
குணமாகு மொன்பது தோஷஞ்சொல்லு
மானென்ற பின்கசமே உண்டாம்பாரு
மற்றவிரண்டாங்காலே மரணமாகும்
தானென்ற மூன்றாங்கால் பதினைந்தாகும்
தயவான நாட்கழிந்தே சுகமேயெய்தும்
வானென்ற நாலாங்கால் விரணஞ்செய்யும்
வளமான புலிப்பாணி பாடினேனே” (1)
“பாடினே னின்னமொன்று சொல்லக்கேளு
பண்புடனே பரணிநாள் முதற்கால் மூன்று
தேடினே னிரண்டாங்கால் நாளேயேழாம்
தெரிந்தபின்பு சுகமேவும் பயமேயில்லை
கூடினேன் மூன்றுடனே நாலாம்பாதம்
சாடினேன் கோள்கள் நிலை யதுவும் பார்த்துக்
கொடுத்திடுமே சுகமேதும் பதினைந்தன்மேல்
சகவிதி பாலருக்குச் சாற்றுவாயே” (2)
“என்னவே கார்த்திகையின் முதற்காலானால்
எளிதில்லா ஒன்பதாம் நாள்தோஷந் தீரும்
பன்னவே யிரண்டாங்கால் பதமேயாகும்
பதமான மூன்றாங்கால் பதினைந்தாகும்
அன்னவே நாலாங்கால் நாற்பத்தெட்டு
அன்புடனே சென்றபின்பு சுகமேயாகும்
இன்னமே ரோகிணியில் பிறந்தால் பாலன்
இனிவில்லா மாமனுக்கு மரணமாமே” (3)
“ஆமேதான் ரோகிணியின் முதற்கால்பத்து
அன்பான ரெண்டாங்கால் பதினெட்டாகும்
போமேதான் மூன்றாங்கால் எண்ணான்காம்
புனிதமுள்ள நாலாங்கால் எண்பத்திரண்டு
தாமேதா னின்னாள்கள் கழிந்த பின்பு
தரணிதனில் சுகமாகுந் தோஷமில்லை
வாமேவான் போகருட கடாட்சத்தாலே
வளமான புலிப்பாணி பாடினேனே” (4)
“முத்தான மான்றலை முதற்காலப்பா
முப்பதுநா ளானபின் தீருந்தோஷம்
சித்தான விரண்டாங்கா லிருபத்தெட்டு
திறமான மூன்றுக்குப் பதினைந்தாகும்
பத்தான நாலாங்கால் முப்பத்தைந்து
பண்பான நாள்கள் வரை பீடையென்று
பெத்தான நவக்கிரக மீன்கால் தோஷம்
பேதமில்லை யென்னுாலைப் பிரித்துப் பாரே” (5)
“ஆமேதா னின்னமொன்று சொல்லக்கேளு
அடைவான ஆதிரைநாள் முதற்காலொன்பான்
தாமேதா னிரண்டாங்கால் மரணமாகும்
தயவாக மூன்றாங்கால் நாள்தான்பத்து
வாமேதான் நாலாங்கா லிருபத்தைந்து
வளமான புனர்பூச முதற்காலேழு
போமேதா னிரண்டாங்கால் நாள்தான் பத்து
பொங்குமுடன் மூன்றாங்கால் பதினெட்டாமே” (6)
“ஆமப்பா நாலாங்கால் மரணஞ் செய்யும்
அடைவான பூசமப்பா முதற்காலேழு
சோமப்பா யிரண்டாங்கால் பனிரெண்டின் மேல்
சுகங்கொடுக்கு மூன்றாங்கால் மரணமாகும்
சாமப்பா நாலாங்கா லிருபத்தேழில்
கனிவான வாயிலியம் முதற்காலொன்பான்
தாமப்பா லிரண்டாங்கா லிருபதோடு
தன்தமயன் மரணமாவன் தரணி மீதே” (7)
“மீதான மூன்றாங்கால் மூன்றே மாதம்
முன்னுரைத்த தோஷமொடு தகப்பன் பீடை
தானான நாலாங்கால் முப்பத்தொன்பான்
தயவான மகமுதற்கால் மரணஞ்செய்யும்
வானான ரெண்டாங்கா றகைக்கு தோஷம்
வகையான மாமன்லபி முடியும் பாரு
தேவான மூன்றாங்கா லொன்பதுடன் பெற்ற
தேன்மொழியாள் மாதாவும் மரணமாமே” (8)
“நானேதா னின்னமொன்று நாலாம்பாதம்
நயமாகும் நாலைந்து நாட்குப் பின்னே
வீணேதான் பூரமுதன் காலுதித்தோன்
வீரமில்லை சாவாகும் கிரகதோஷம்
கூனேநான் பூரமதி லிரண்டாம்பாதம்
குணமில்லை யிருப்பதுட னைந்துநாளும்
தேனான மூன்றினிலே தெரிய வந்தோன்
தோஷமுண்டு யிருப்பாரோ டாறுநாளே” (9)
“ஆறான நாலாங்கா லிருபத்தொன்பான்
அடைவான உத்திரந்தான் முதற்காலுக்கு
வீறான தந்தையார் மரணமாகும்
விதமான ரெண்டாங்கால் முப்பதாகும்
நீரான மூன்றாங்கா லன்பத்திரண்டாம்
திறமான நாலாங்கால் மரணமாகும்
கூரான அஸ்தமுதற் கால்தானெட்டு
குணமாகு மிரண்டாங்கால் பதினைந்தாமே” (10)
“எட்டான மூன்றாங்கா லிருபத்தெட்டு
எளிதான நாலாங்கா லெண்பத்திரண்டு
நெட்டான சித்திரை முன் பாட்டன் சாவாம்
நேரான ரெண்டாங்கால் பதினைந்தாகும்
கிட்டான மூன்றுக்கு மரணம் நாலாம்
கெதியான நாற்பத்துநாள் பீடைசுவாதி
குட்டான முன்னீராறு பின் மரணமாகும்
குணமான மூன்றாங்கா லெண்பத்தெட்டே” (11)
“எட்டான நாலாங்கால் பன்னிரண்டுநாளாம்
எளிதான விசாகமுதற் காலொன்பான்
கட்டான விரண்டாங்கால் நாள் தான்மூன்றே
தயவான மூன்றாங்கால் நாற்பதாகும்
பட்டான நாலாங்கால் பாட்டனுடன் தாயும்
பாங்கான சாவுடனே அனுஷமுதற் தகப்பன் சாவாம்
சிட்டான விரண்டாங்கா லிருபதப்பா
செயலான மூன்றுக்கே மாமன்சாவாம்” (12)
“என்னவே நாலாங்கால் பாட்டனுடன் தாயும்
எழிலாகத் துஞ்சுவார்கள் கேட்டை முதற் சாவாம்
நன்னவே யிரண்டாங்கா லிருபதப்பா
நாயகனே மூன்றாங்கால் முப்பத்தொன்பது
துன்னவே தாய்மரணம் நாலாம்பாதம்
துஞ்சிடுவன் மூலமுதற் றகப்பன் சாவாம்
அன்னவே ரெண்டாங்காலெண்பது நாள்பீடை
அவன்மாதா மாமனுமே மூன்றாங்கால் சாவே” (13)
“சித்தான நாலாங்கால் பாட்டனுடன் தாயும்சாவாம்
செயலான பூராடம் முன்காலொன்பான்
பத்தான விரண்டாங்கால் பாலகனே மரணம்
பண்பான மூன்றாங்கால் தகப்பனுடன் சாவாம்
வித்தான நாலாங்கால் மரணம்மாமன்
விதமான உத்திராடம் முதற்காலேழும்
நித்தான ரெண்டாங்கா லிருபது நாள் பீடை
நேரான மூன்றுக்கேபிதா மரணமாமே” (14)
“பேச்சப்பா நாலாங்காலிருபது நாள்பீடை
பேதமில்லை ஓணமுதற் பதினொன்றப்பா
ஆச்சப்பா ரெண்டாங்கால் பத்துநாளாகும்
அடைவான மூன்றுக்கே எட்டுநாள் தோஷம்
வீச்சப்பா நாலாங்கால் மரணஞ்செய்தும்
விதமான அவிட்ட முதல் ஒன்பதாம்நாளாம்
நீச்சப்பா ரெண்டாங்கால் பதினைந்தாகும்
நிசமான மூன்றுக்கு முப்பத்திரண்டே” (15)
“வண்டான நாலாங்கால் பிதாமரணமாகும்
வளமான சதயமுதல் மாமன் சாவாம்
இரண்டான கால்களுக்கே பத்துநாள்பீடை
இதமான மூன்றாங்கால் நாள்தான் பத்து
திண்டான நாலாங்கால் நாள் தானைந்து
திறமான பூரட்டாதி முதற்கால் மாமன்
விண்டான ரெண்டாங்கால் பதினாறாகும்
விதமான மூன்றாங்கா லெண்பத்தொன்றே” (16)
“ஒன்றான நாலுக்கே பீடையது நாற்பத்தொன்றாம்
உத்தமனே உத்திரட்டாதி முதற்கேளு
நன்றான ரெண்டுக்கே பதினெட்டு நாளாம்
நலமான மூன்றுக்கே யேழாம்பாரு
குன்றான நாலாங்காலிருபத் தெட்டும்
குணமான ரேவதியு முதற்கால் சாவு
அன்றான ரெண்டாங்கால் பதினொன்றப்பா
அப்பனே இவை கழிந்தால் பீடைபோமே” (17)
“போமப்பா ரேவதியின் மூன்றாம்பாதம்
பொங்கிவந்த தகப்பனுமே மரணமாவான்
வாமப்பா பீடைபதி னெட்டுநாளாம்
வளமான ரேவதியின் நாலாம்பாதம்
போமப்பா குழவியது மரணமாகும்
கொடுமைசெய்யும் நாள்களிது கழிந்து போனால்
தாமப்பா சுகமேவும் கோள் நிலையும் பாரு
தயவான புலிப்பாணி பாடினேனே” (18)
(புலிப்பாணி ஜோதிடம் 300, பாடல்கள். 1 – 18, பக்கங்கள். 182 – 187)
கிழமை பிறந்த நாள் - (ஞாயிறு) பாணியும், (திங்) சித்திரையும், (செவ்) உத்திராடமும், (புத) அவிட்டமும், (வியா) கேட்டையும், (வௌ்) பூராடமும், (சநி) ரேவதியும் வருவன என்று மேலும் இந்நுால் தெரிவிக்கின்றது.
புலிப்பாணி சித்தர் தம் நுாலில்;
“பாடினே னின்னமொன்று சொல்லக்கேளு
பரமனுட பதியேகுநாளே தென்றால்
வாடினேன் அருக்கநாள் பரணியாகா
வளமான திங்கள் சித்திரையுமாகா
சாடினேன்செவ்வாய்க் குத்திராடஞ்
சாந்தமுடன் புதனுக்கு அவிட்டமாகா
கூடினேன் குருநாள் தான் கேட்டையாகா
கொற்றவனே புகர்க்குப் பூராடம் தீதே!”
“தீதான சனிநாள் ரேவதியுமாகா
தீங்குவரு மின்னாளில் ஜெனனமானால்
சூதான யெமனுக்கே அருதியாவார்
சொல்லிவிட்டேன் நுணுக்கமுட னேசல்துாது
வயதான சோதிடரே யென்னுால் பாருவளமையுடன்
கோள்நிலையுஞ் குணமும்பாரு
மாதான போகருட கடாட்சத்தாலே
மனமுவந்து புலிப்பாணி பாடினேனே”
என்று கிழமை பிறந்த நாளிளைப் பற்றி பாடல் இயம்புகின்றது.
(வளர்மதி, புலிப்பாணி ஜோதிடம் 300, பாடல் எண். 19 - 20, பக்கம்.187 - 188)
கிழமை பிறந்த நாள்
விதானமாலை எனும் நுால் ஞாயிற்றுக்கிழமை - பரணி, திங்கட்கிழமை - சித்திரை, செவ்வாய்க்கிழமை - உத்திராடம், புதன் - அவிட்டம், வியாழக்கிழமை - உத்திரம், வெள்ளிக்கிழமை - பூராடம், சனிக்கிழமை - ரேவதி ஆகிய இவை கிழமை பிறந்த நாட்கள். இவை ஒரு காரியத்திற்கும் ஆகாது.
“வந்திக்கும் கதிர்க்கும் கங்குல் மதிக்குச்சித் திரைசேய்க் காடி
புந்திக்கும் அவிட்டம் பொன்னுக் குத்திரம் புகர்பூ ராடம்
கெந்திக்கும் சனிக்குத் தோணி கிழமைகள் பிறந்த நாளாம்
சிந்திக்கும் கருமம் எல்லாம் தீமையாய் விளையும் மாதே”
(விதானமாலை, பாடல்.41, பக்கம்.17)
மேலும் மாதாந்தம் மூன்று நாளும், பங்குனி மாதம் பிறந்த தினம் ஐந்து நாளும், கிராணம் தீண்டும் நாளும், அதற்கு முன் மூன்று நாளும், பின் மூன்று நாளும் ஆக ஏழு நாளும் நாள் அந்தம் இரண்டு நாழிகையும் சுபகர்மங்கட்கு விலக்கப்பட்டன ஆகும் என்றும் இந்நுால் தெரிவிக்கின்றது.
“மாதாந்தம் மூன்று நாளும் வருடாந்தம் ஒருபத் தஞ்சு
தீதாந்த கிராணம் தீண்டும் தினமுன்பின் சேர்ந்த ஏழும்
காதார்ந்த கண்ணாய்! நாளின் கடையிரு கடிகை தானும்
வேதாந்தம் உணர்ந்தோர் தீதென் றுரைத்தனர் மிகவும் மென்மேல்”
(விதானமாலை, பாடல்.42, பக்கம்.17)