கவிஞர்கள் என்றாலே, பெண்களின் உடல் அழகை வர்ணித்துத்தான் கவிதைகளை எழுதுவார்கள் என்று பல காலமாகச் சொல்லி வருகிறார்கள். கவிஞரின் பார்வையில் பெண் போகப்பொருளாகவும், அதை நுகர்வதற்கான வழிமுறைகளைச் சொல்லும் கருப்பொருளாகவும் கொண்டே அதிகமான கவிதைகள் வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வப்போது, பெண்ணின் தற்கால நிலை குறித்தும், அவர்களின் சிறப்புகள் குறித்தும் சில கவிஞர்கள் கவிதைகளை எழுதுவதுண்டு. அந்தச் சில கவிஞர்களுள் ஒருவராக இந்நூலின் கவிஞரும் இருக்கிறார்.
இந்நூலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துக் கவிதைகளும் பெண்களை உயர்த்திக் காண்பிப்பதாகவே அமைந்திருக்கிறது. பெண்ணை உயர்வான இடத்தில் வைத்துப் பார்த்த கவிஞரின் சிந்தனையில் பல கவிதைகள் பெண்களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இந்தக் கவிதைகளில் இடையிடையே சில நகைச்சுவைக் கவிதைகளையும் காண முடிகிறது.
‘பெண்ணைப் பெற்றவன் எல்லாம்
ஆண்டியாவான்
என்பது பழமொழி என்றால்
ஆணைப் பெற்றவன் எல்லாம்
அம்பானி ஆகியிருக்க வேண்டுமே?’
என்கிற கவிதையில் பெற்ற குழந்தைகளில் ஆண், பெண் எனும் பாகுபாடு காட்டக்கூடாது என்பதையும், ஆண் குழந்தைகள் தான் தன்னைக் காப்பாற்றும் என்கிற வேரோடிப் போயிருக்கும் தவறான சமூகச் சிந்தனையையும் சாடியிருப்பது அருமை.
பெண்களின் மனத்துணிவை;
‘ஒவ்வொரு பிரசவத்தின் போதும்
ஒன்றை மட்டும்
பெண் கற்றுக் கொள்கிறாள்
ஆண் ஆதிக்கத்தால்
எவ்வளவு வலி வந்தாலும்
பொறுத்துக் கொள்ள வேண்டுமென்று...!’
எனும் கவிதையில் காண்பித்து, பெண்களுக்கெனத் தனி ‘வலி’மையும் உண்டு என்பதைச் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.
பெண்ணின் அழகைப் பற்றி ஒரு கவிதை;
‘பெண்
அழகில் ஆயிரம் கொடுமை!
அழகில்லை என்றால்
அத்தனையும் கொடுமை...!’
இந்தக் கவிதை மிகச்சிறியதாக இருந்தாலும், மிகப்பெரிய கருத்தை உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது. பெண்ணைப் போகப்பொருளாகப் பார்க்கும் ஆண்களை இதை விடக் கடுமையாகச் சாட முடியாது.
‘சிலுவை
சுமந்த இயேசுவை
வணங்கத் தொடங்கிவிட்டோம்
சித்திரவதையை
தாங்கும் பெண்ணை
எப்போது வணங்கப் போகிறது...
இந்த உலகம்!”
என்று ஒரு கவிதை. பெண்ணை ‘வணக்கத்துக்குரியவளாக’க் கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை ஒரு ஆண் கவிஞரிடமிருந்து வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆணாதிக்கச் சிந்தனையில் அடிமைப்பட்டுக் கிடக்கும் பெண்ணை விடுவித்துச் சமவுரிமை கொடுத்தாலே போதும் என்கிற எண்ணமே தோன்றுகிறது.
‘ஆணுக்குப்பெண் நிகர்
என்று சொல்லும்
அர்த்தநாரீஸ்வரர்
கோட்பாட்டை
அர்த்தமுடையதாக்க
ஆணுக்குத் துணிவிருக்கிறதா?’
என்று நம்மால் கேட்காமல் இருக்க முடிவதில்லை...!
இக்கவிதை நூலில் இடம் பெற்றிருக்கும் அனைத்துச் சிறுகவிதைகளும் பெண்களைப் பெருமைப்படுத்திச் சொல்வதாகவே அமைந்திருக்கிறது. எனவே, கவிஞருக்குப் பெண்கள் சார்பாக ’நன்றியும் வாழ்த்துகளும்’ சொல்லி மகிழலாம்.