ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாட்டைச் ‘செம்மொழி’ என்கின்றனர்.
“செம்மொழியாக ஒரு மொழியைத் தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்” என்று கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் (பேர்க்லி) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றும் ஜோர்ஜ் எல். ஹார்ட் என்பவர் குறிப்பிடுகிறார்.
உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வந்தாலும், மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ள சில மொழிகளை மட்டும் ‘செம்மொழிகள்’ என்று அடையாளப்படுத்தி இருக்கின்றனர். செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் சில மொழிகளில் தமிழ் மொழிக்குப் பல்வேறு தனிச்சிறப்புகள் உண்டு.
சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்று வரை இடையறாத ஒரு நீண்ட இலக்கியப் பாரம்பரியமும், செம்மைசார் இலக்கியமும், நாட்டார் இலக்கியமும் கொண்ட மொழியாகத் தமிழ் மொழி இருந்து வருகிறது. தமிழின் செம்மொழித் தகுதிக்கு சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களும் திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் உரை போன்ற நூல்களும் ஆதாரமாக உள்ளன.
தமிழ்ச் செம்மொழி இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கும் பல்வேறு தமிழ்ச் சொற்களுக்கு, இன்றைய காலத்திற்கேற்ற வகையில் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளில் விளக்கமளிக்கக் கூடிய வகையில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் கா. உமாராஜ் அவர்கள் சிறப்பான முறையில் ‘செம்மொழித் தமிழ் கலைச்சொல் அகராதி’ ஒன்றை உருவாக்கித் தந்திருக்கிறார்.
இந்தக் கலைச்சொல் அகராதி, தமிழ் இலக்கியத்தில் உயர்கல்வி பெறுபவர்களுக்கு மட்டுமின்றி, தமிழ் மொழி ஆர்வலர்கள், இலக்கிய ஆளுமைகள், மொழியியலாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து, தமிழில் வெளியாகி இருக்கும் செவ்வியல் நூல்களுக்கும் கலைச்சொல் அகராதிகளை உருவாக்க இருப்பதாக அவர் இந்நூலில் குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. அவரது முயற்சி வெற்றியடைந்து இன்னும் பல அகராதிகள் தமிழுக்குக் கிடைத்திட வேண்டும்.