இன்றைய வாழ்க்கையில் செல்வத்தைத் தேடுவதற்காகப் பலரும் சுயத்தைத் தொலைத்துவிட்டு, முகத்தை மூடித் திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் விதமாக இக்கவிதை நூலில் பல கவிதைகளில் ‘சுயம்’ முன்னிலைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காகத்தான் இந்நூலின் அட்டைப்படம் கூட முகத்தைத் தொலைத்து விட்டு, வாழ்க்கைப் பாடத்தைத் தேடிக் கொண்டிருப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எனக்குக் கணினி, இணைத்தில், இணையத் தமிழில் ஈடுபாடு அதிகமென்பதாலோ என்னவோ,
‘அகிலம் இணைத்து
அண்டம் பிணைத்து
நொடிப்பொழுதில் பரிமாற்றிக் கொள்ளும்
அறிவியல் அற்புதம்
இணையம்.
பூவுலகின் சங்கமம்.
பாலும், பருப்பும்
நாலும் கலந்துனக்குத் தர
நான் ஒன்றும்
ஔவை இல்லை,
நீயும்
துங்கக் கரிமுகத்துத்
தூமணியில்லை.
ஈசன் தமிழ் அல்ல.
இணையத் தமிழ் என்று
அகம், புறம் எனச்
சுட்டி வளர்த்த
காப்பிய கர்வம்
தாகம் கொண்டலைகிறது
தகிக்கொணாச் சுடுகளம் ஒன்றில்’
என இந்நூலில் இடம் பெற்றிருக்கும் ‘கணினி’ எனும் தலைப்பிலான கவிதை எனக்குப் பிடித்தமாகிப் போனது.
‘பொதுமகள்’ எனும் தலைப்பிலான கவிதையில் விலைமகள் ஒருவள், அவளை நாடி வரும் பல ஆண்களின் விபரீத ஆசைகளால் அவள் படும் வேதனைகளைச் சொல்லிக் கொண்டிருப்பது அவளைப் பற்றிய கவலை நம் மனத்துக்குள் ஆழமாகப் பதிந்து நம்மை அவதிப்படுத்துகிறது. ஆனால் அக்கவிதையில் கடைசியாக, அவள் கவலையாக,
‘வாழ்நாள் முழுவதும்
ஒரே ஒருவனுடன் மட்டுமே
படுத்து வாழச்
சபிக்கப்பட்டிருக்கும்
பெண்கள் பற்றித் தான்’
என்று குறிப்பிட்டிருப்பது ‘ஒழுக்க முறையிலான’ பெண் வாழ்வினைக் கொச்சைப்படுத்துவதாகவும், அவமதிப்பதாகவும் எனக்குத் தோன்றுகிறது.
‘மழை’ என்பது எல்லோருக்கும் பொதுவானது என்பதை எடுத்துச் சொல்லும் விதமாக,
‘சாக்கடை, மலம்,
பூ, செடி,
குளம், குட்டை,
நதி, கடல்,
தெருவில் இறந்து கிடக்கும்
பிச்சைக்காரன்,
இப்படி,
நிகழ்வின் வெளி
எதுவெனக் கூடத் தெரியாமல்
விழுந்து தொலைக்கிறது
விவஸ்தை கெட்ட மழை
எப்படித்தான்
புனலாய்ப் பெருகி
கரைபுரண்டு ஓடினாலும்
மழை என்பது
ஓர் ஒற்றைத் துளிதான்’
என்று அந்தக் கவிதை இருக்கிறது.
கருமேகங்களில் சிறைப்பட்டுக் கிடந்த நீர்த்துளிகள் ஒன்றாகச் சேர்ந்து, ‘மழை’யாகத் தங்களை விடுவித்துக் கொண்டு பூமியை நோக்கிக் கீழிறங்கி வருகின்றன. அதை ‘ஒற்றைத்துளி’ எனும் ஒரு வார்த்தையில் சிறைப்படுத்தி இருக்க வேண்டியதில்லை.
இப்படி இந்தக் கவிதை நூலில் பல இடங்களில் எனக்கு ‘முரண்பாடுகள்’ தோன்றுகின்றன. இருப்பினும், இந்நூலில் பல கவிதைகள் ‘சுயம்’ எனும் ‘தன்னிலை’யை ‘முன்னிலை’ப் படுத்துவதால் என் நிலையில் வேறுபாடுகளை மறந்து வாழ்த்துகிறேன்.