சிறுகதை எழுதுபவர்கள் பலர், தங்கள் கதைகளைத் தங்களது பகுதியில் பேசப்பட்டு வரும் வட்டார மொழி வழக்கில் எழுதி இருப்பார்கள். இந்த வட்டார மொழி வழக்குக் கதைகளை அந்தந்த வட்டாரங்களில் வசிப்பவர்கள் வாசிக்கும் போது எளிமையாக இருக்கும். மற்றவர்கள் அதைப் புரிந்து கொள்வதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கும். இதே போல், பிராமணர், நகரத்தார், பிரமலைக்கள்ளர், மீனவர் போன்ற சில சமூகத்தினர் பேசும் பேச்சில் இடம் பெறும் பல சொற்கள் அவர்களுடைய சமூகத்தில் மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். சிறுகதை எழுதுபவர்கள் தங்கள் சிறுகதைகளில் அந்தச் சமூகத்தினர் பயன்படுத்தும் சில பேச்சுகளை இடையிடையே பயன்படுத்திக் காண்பிப்பதுண்டு. அந்தக் கதையினைப் படிப்பவர்கள் கதையின் போக்குக்கேற்ப, அதற்கான விளக்கத்தை அறிந்து புரிந்து கொள்வதுண்டு. இந்நூலில் இடம் பெற்றிருக்கும் சிறுகதைகள் அனைத்தும் மீனவ சமூகத்தினரை மையமாகக் கொண்டிருப்பதால், அனைத்துக் கதைகளும் அவர்களுடைய பேச்சு நடையில் அப்படியே எழுதப்பட்டிருக்கிறது. கரும்பின் சுவையைக் கரும்பிலிருக்கும் கணுக்கள் குறைத்துவிடப் போவதில்லை என்பதைப் போல், இங்கு இடம் பெற்றிருக்கும் கதைகளைச் சுவைக்க, வட்டார வழக்குச் சொற்கள் சிறிது இடையூறாக இருந்தாலும், இந்நூலின் கடைசிப் பக்கங்களில் ‘வட்டார வழக்குகள்’ எனும் இணைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் வட்டார வழக்குச் சொற்கள் உதவுகின்றன.
’மீன்காரி புளோரா’ கதையும், ‘கடல் முற்றம்’ கதையும் உயர்ந்த நட்பின் உன்னதத்தைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றன. ‘குடி, குடியைக் கெடுக்கும்’ என்பதை மிக நன்றாகப் புரிய வைக்கும் சிறந்த சிறுகதையாக ‘மைதீன்’ எனும் சிறுகதை அமைக்கப்பட்டிருக்கிறது.
‘தோழர் அருளானந்தம்’, ‘பாதர் டாமி’ ஆகிய இரு கதைகள் சமயநெறியைக் கருவாகக் கொண்டிருக்கின்றன. முதல் கதையில் வரும் பங்குத்தந்தை ‘மதத்திற்காக மனிதன்’ எனும் கொள்கையைக் கொண்டவர், அடுத்த கதையில் வரும் பங்குத்தந்தை ‘மனிதர்களுக்காகவே மதம்’ எனும் கொள்கையைக் கொண்டவர். ஒருவர் பிற்போக்கு எண்ணமுடையவராகவும், மற்றொருவர் முற்போக்குச் சிந்தனையுடையவராகவும் இருப்பதை நூலாசிரியர் சிறப்பாக எடுத்துக் காண்பித்திருக்கிறார். இருவரது பணிகள் ஒன்றாக இருப்பினும், அவர்களுக்கான தன்மைகள் வேறுபட்டிருப்பதை நூலாசிரியர் அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.
‘ஊம சேசய்யன்’, ‘மீன்காரி புளோரா’, ‘சேலு’, ‘கஞ்சிக் கலயம்’, ‘தெய்வம் பாதி சாத்தான் பாதி’, ‘கடல் முற்றம்’ ஆகிய கதைகள் கடல் சார்ந்த வாழ்க்கையைக் கொண்ட மக்களின் வாழ்க்கைச் சூழலின் அனைத்து நிலைகளையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அருமையான படைப்பாக இருக்கிறது. இக்கதைகளில் நிகழும் சம்பவங்கள் நம் மனதைக் கனக்கச் செய்து விடுகின்றன.
கடல் சார் வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதற்காகவாவது இந்த நூலை அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும்... இந்த நூலில் இடம் பெற்றீருக்கும் சிறுகதைகள் வலியுறுத்தும் அல்லது அறிவுறுத்தும் செய்தியான ‘மனிதநேயம் மிக்க புதிய சமுதாயம்’ படைப்பதற்கு நாமும் உதவிட முன் வர வேண்டும்.