கணினிப் பயன்பாட்டிற்காகப் புதிது புதிதாக மென்பொருட்கள் அவ்வப்போது உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்து கொண்டே இருக்கின்றன. இந்தப் புதிய மென்பொருட்கள் கணினியில் செய்யும் பணிகளை மேலும் மேலும் எளிதாக்கிக் கொண்டே செல்கின்றன. இருப்பினும், இந்த மென்பொருட்களைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து விலைக்குப் பெற்றுப் பயன்படுத்த முடியாத பொருளாதாரச் சூழலில்தான் பல கணினிப் பயன்பாட்டாளர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வழியில் பல கட்டற்ற மென்பொருட்களாக உருவாக்கி இலவசமாகவும் சிலர் தனியாகவோ அல்லது அமைப்புகளின் வழியாகவோ வழங்கிக் கொண்டுதானிருக்கின்றனர். அந்த வழியில் வரைகலைத் தொழில்நுட்பத்திற்கு உதவக்கூடியதாக ‘இங்க்ஸ்கேப்’ எனும் கட்டற்ற மென்பொருளாக உருவாக்கப்பட்டு இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.
கணினி வரைகலைத் தொழில்நுட்பத்தில் நல்ல திறனுடையவரும், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசினை இரண்டு முறை பெற்றவருமான ஜெ. வீரநாதன் அவர்கள் கட்டற்ற மென்பொருளாகக் கிடைக்கும் இங்க்ஸ்கேப் மென்பொருளை அனைவரும் கணினியில் நிறுவிப் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இந்நூலினை உருவாக்கித் தந்திருக்கிறார்.
இங்க்ஸ்கேப் மென்பொருளின் அறிமுகம், இதற்கான மென்பொருளை இணையத்தில் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளுதல் போன்றவைகளுடன் தொடங்கும் இந்நூலில் நூலாசிரியர், இங்க்ஸ்கேப்பில் இடம் பெற்றிருக்கும் கருவிகள் அதனைப் பயன்படுத்தும் வழிமுறைகள், இங்க்ஸ்கேப்பில் இடம் பெற்றிருக்கும் மெனுக்கள் மற்றும் கட்டளைகள், அதனைச் செயல்படுத்தும் வழிமுறைகள் போன்றவைகளைச் சிறந்த திரைக்காட்சிப் படங்களுடன் அனைவரும் புரிந்து கொள்ளும் வழியில் எளிமையாக்கிக் கொடுத்திருக்கிறார். இங்க்ஸ்கேப்பின் புதிய பதிப்பான இங்க்ஸ்கேப் 0.92.2 மென்பொருளில் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய வசதிகள், இங்க்ஸ்கேப் 0.92.2 மென்பொருளை நிறுவும் வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றியும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். பலரும் பயன்படுத்தி வரும் கோரல் டிராவுடன் இங்க்ஸ்கேப்பை ஒப்பிட்டு அதை அட்டவணைப்படுத்திக் கொடுத்திருப்பது சிறப்பாக இருக்கிறது. இந்த அட்டவணை, சில வழிமுறைகளைப் புரிந்துகொள்ள வசதியாக இருக்கிறது.
இந்நூலில், இங்க்ஸ்கேப்பில் உருவாக்கியவைகள், விசைப்பலகைக் குறுக்கு விசைகள் போன்றவைகளும் பின்பக்கங்களில் தரப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இங்க்ஸ்கேப்பை விரைவாக இயக்குவதற்கான வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது. இதே போல் இங்க்ஸ்கேப் தொடர்பான இணையதளங்கள் குறித்த செய்திகள் ஒரு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த இணையதளங்களின் வழியாக இங்க்ஸ்கேப்பில் செய்யப்படும் புதிய மாற்றங்களை, சேர்க்கப்படும் புதிய வசதிகளைத் தேடுதலின்றித் தெரிந்து கொள்ள உதவுவதாக இருக்கிறது. இந்நூலில் இடம் பெற்றிருக்கும் தொழில்நுட்பச் சொற்கள் அகரவரிசைப்படி கடைசிப்பக்கங்களில் பட்டியலிடப்பட்டிருப்பதால், அதனுடன் தொடர்புடைய பக்கங்களுக்கு எளிதில் சென்று அதுகுறித்து அறிந்து கொள்ள உதவுகிறது.
இந்நூலுடன் இங்க்ஸ்கேப் 0.92.2 மென்பொருள் குறுந்தகடு ஒன்றும் சேர்த்துக் கொடுக்கப்பட்டிருப்பது உடனடியாக இம்மென்பொருளைக் கணினியில் நிறுவிக் கொள்ள வசதியாக இருக்கிறது. வரைகலைத் தொழில்நுட்பப் பணியைச் செய்து வரும் கணினி வரைகலைப் பணியாளர்கள், அச்சகத்தினர் மட்டுமின்றி வரைகலைத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் சிறந்த வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது.