இந்நூலில்
1. சாதக அலங்காரத்தில் கலைகள்
2. சாதக அலங்காரத்தில் உவமைகள்
3. பெரிய சோதிட சில்லரைக் கோவையினுள் விநாயகர் பூஜையும், நவக்கிரக வழிபாடும்
4. பெரிய சோதிட சில்லரைக் கோவையினுள் நாள்கள் (அ) கிழமைகள்
5. கோச்சாரப் பலன்கள் - கோட்சாரப் பலன்கள்
6. சோதிடச் சாத்திரத்தில் முருகன்
7. குரு சந்திரயோகம்
8. சாதக அலங்காரத்தில் உரை வேறுபாடுகள்
9. வடமலை நிகண்டு தரும் சோதிடச் செய்திகள்
10. வியாதிகளுக்கான - கோள்களின் விதிகள்
11. சோதிட சாத்திரத்தில் திருமுருகன் - அகத்தியருக்கு அருளியது
12. சோதிட உரைப் பதிப்புகள்
13. சேந்தன் திவாகரம் தரும் சோதிடச் செய்திகள்
எனும் பதின்மூன்று தலைப்புகளில் சோதிடக் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.
இசை, சிற்பம், கட்டிடம், கல்வி உள்ளிட்ட பிற கலைகளில் வல்லமை பெற்றவர்கள், சாதனையாளர்கள், பெரும் பொருளீட்டுபவர்கள் மற்றும் உலகப் புகழ் பெறுபவர்களுக்கு சாதகத்தில், கிரகநிலை எவ்வாறு இருக்கும்? என்பதற்கான சோதிடக் குறிப்புகள் முதல் கட்டுரையிலேயே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
‘சாதக அலங்காரத்தில் உவமைகள்’ எனும் தலைப்பில் இடம் பெற்ற கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் உவமைகள் இலக்கிய நயமுடையவையாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக, ‘சாதக அலங்காரம்’ எனும் புகழ் பெற்ற சோதிட நூலை எழுதிய நூலாசிரியரின் ‘அவையடக்கம்’ குறித்த உவமை மிகச் சிறப்பாக அமைந்திருப்பதுடன், கவிச்சக்கரவர்த்தி கம்பரின் அவையடக்கம் பற்றிய உவமையை நினைவூட்டுவதாகவும் இருக்கிறது.
ஒன்பது கோள்களும், கோட்சாரத்தின் போது எந்தெந்த இடங்களில் (இராசிகளில்) அமர்ந்திருந்தால் என்னென்ன பலன்கள் நடக்கும் என்ற சோதிட விதிகள் உள்ளன. ‘கோச்சாரப் பலன்கள்’ கட்டுரையில் இவ்விதிகளைப் பற்றி முழுமையாக விளக்கிச் சொல்லியிருப்பது அருமையாக இருக்கிறது. பல்வேறு சோதிட நூல்களில் இவ்விதிகளில் காணப்படும் வேறுபாடுகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது படிப்பவர்களுக்குக் கோட்சாரப் பலன்களை எப்படி அணுக வேண்டும் என்பதை எளிதாக எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.
இந்நூலில் சில கட்டுரைகளில் சோதிடத்திற்கான மூல நூல்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்ட புத்திர பாவகம் பற்றிய சோதிட விதிகளும், ஏழாம் பாவகம் பற்றிய சோதிடக் குறிப்புகளும் விளக்கமாகத் தரப்பட்டிருக்கிறது. அக்கருத்துகளைப் படிக்கின்ற சோதிடர்கள் தாங்கள் கணித்துச் சொல்லும் சாதகங்களின் மூலம் அவை உண்மையானது தானா? என்பதை நன்கு தெளிவுபடுத்திக் கொண்டு, சாதகப் பலன்களைச் சொல்வது நலம் பயக்கும்.
எந்தெந்தத் திசையில், எந்தெந்தப் புத்தியில் என்னென்ன நோய்கள் வரும்? எந்தெந்தக் கிழமைகளுக்கு என்னென்ன பலன்கள் எல்லாம் உண்டாகும்? என்பது மட்டுமின்றி, இந்நூல் முழுக்கப் பல்வேறு அரிய சோதிடத் தகவல்களைத் தேடித் தொகுத்துத் தந்திருக்கும் நூலாசிரியரின் அறிவுத்தேடல்கள் வியக்க வைக்கிறது. இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளில் நூலாசிரியர் தான் படித்த சோதிட நூல்களின் மூலத்தைப் படித்து, அவற்றில் உள்ளவற்றை அப்படியே எளிமையாக்கித் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்நூலில் இடம் பெற்ற கருத்துகளைப் படிப்பவர்கள்;
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
என்ற திருக்குறளின் வழி நின்று, மெய்ப்பொருளைக் கண்டறிந்து கொள்வதும் நன்று.
சோதிடர்கள், சோதிட ஆர்வலர்கள் இந்நூலைக் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டும். அப்போதுதான், சோதிடத்தில் நாம் கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்கிற உண்மையும் புரியும்.