நாட்காட்டி
மு. சு. முத்துக்கமலம்

உலகில் சமூக, சமய, வணிக, நிர்வாகப் பயன்பாடுகளில் நாட்காட்டியின் பங்கு முக்கியமானதாக இருக்கிறது. தமிழில் நாட்களைக் காட்டுகின்ற என்கிற பொருளில் நாள் + காட்டி = நாட்காட்டி என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் நாட்காட்டியைக் காலண்டர் (Calendar) என்றழைக்கின்றனர். இலத்தீன் மொழிச் சொல்லான “கலண்டே” எனும் சொல்லிலிருந்து “காலண்டர்” எனும் ஆங்கிலச் சொல் உருவாகி இருக்கிறது. இலத்தீன் மொழியில் “கலண்டே” என்றால் “கணக்கினைக் கூட்டுவது” என்று பொருள். கலண்டே (kalendae) என்பது இலத்தீனில் ஒவ்வொரு மாதங்களிலும் வருகின்ற முதல் நாளின் பெயராகும்.
பண்டைக் காலத்தில் இருந்தே பல நாடுகளிலும் தமக்கெனத் தனி நாட்காட்டிகளை உருவாக்கிப் பயன்படுத்தி இருக்கின்றனர். தொடக்கக் காலத்தில் புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை அடிப்படையாக வைத்தே நாட்காட்டிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நைல் நதியில் ஆண்டு தோறும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை அடிப்படையாகக் கொண்டு பண்டைய எகிப்தியர்கள் நாட்காட்டியை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தியாவில் பருவ நிலை மாற்றங்களை வைத்தும் சூரியன் மற்றும் சந்திரனின் மாற்றங்களை வைத்தும் காலத்தைக் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தக் கணிப்புகளினால் உருவாக்கப்பட்ட நாட்காட்டிகள் அனைத்திலும் நாள், வாரம், மாதம், ஆண்டு போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.
சூரிய நாட்காட்டி
சூரியனை வலம் வரும் புவியின் நிகழிடத்தைப் பொறுத்து நாட்களை அமைத்த நாட்காட்டி சூரிய நாட்காட்டி (Solar Calendar) எனப்படுகிறது. இந்தச் சூரிய நாட்காட்டி, சூரிய வலப்பாதையில் புவியின் நிகழிடம் சம இரவு நாள் கொண்டு கணிக்கப்பட்டால், அந்த நாட்காட்டியால் காலங்களைத் துல்லியமாகக் காட்ட இயலும். அத்தகைய நாட்காட்டி காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டி எனப்படுகிறது. இந்த நாட்காட்டிகளில் ஒவ்வொரு ஆண்டும் 365 நாட்களும், நெட்டாண்டில் (Leap Year) கூடுதலாக ஒரு நாள் சேர்த்து 366 நாட்களாகவும் இருக்கின்றன. கிரிகோரியன் நாட்காட்டி, சூலியன் நாட்காட்டி, தாய் சூரிய நாட்காட்டி போன்றவை காலநிலை ஆண்டு தழுவிய சூரிய நாட்காட்டிகளாகக் குறிப்பிடலாம்.
சந்திர நாட்காட்டி
சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்த நாட்காட்டி சந்திர நாட்காட்டி (Lunar Calendar) எனப்படுகிறது. இந்த நாட்காட்டி 12 சந்திர மாதங்களைக் கொண்டது. இத்தகைய சந்திர நாட்காட்டிகள் காலங்களுடன் ஒத்துக் கொள்ளாமையாக இருப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் (நெட்டாண்டுகளில் 12 நாட்கள்) தள்ளிப் போவதுமாக இருக்கிறது. சூரிய நாட்காட்டியுடன் ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திர நாட்காட்டி ஒருங்கிணைகிறது. சந்திர ஆண்டில் ஆண்டுக்கு 354.37 நாட்கள் இருக்கின்றன. சந்திர நாட்காட்டிகளுக்கு உதாரணமாக இசுலாமிய நாட்காட்டியைக் குறிப்பிடலாம்.
சூரிய சந்திர நாட்காட்டி
சூரிய சந்திர நாட்காட்டிகள் சந்திர நாட்காட்டி போன்று மாதங்கள் சந்திரனின் பிறைகளைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தாலும் ஓர் கூடுதலான இடைச்செருகல் மாதத்தைக் கொண்டு சூரிய ஆண்டுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. சீன, எபிரேய, இந்து நாட்காட்டிகளைச் சூரிய சந்திர நாட்காட்டிகளாகக் குறிப்பிடலாம். சப்பானிய நாட்காட்டி 1873 ஆம் ஆண்டு வரை சூரிய சந்திர நாட்காட்டியாக இருந்தது. சீன, எபிரேய நாட்காட்டிகள் காலநிலை ஆண்டு|காலநிலை ஆண்டுடன் ஒருங்கிணைவதால் காலங்களை அவை பின் தொடர்கின்றன. புத்த, இந்து சமய நாட்காட்டிகள் விண்மீன் ஆண்டு|விண்மீன் ஆண்டுடன் ஒருங்கிணைவதால் அவை முழுநிலவின் போதுள்ள விண்மீன் மண்டலங்களைப் பின்பற்றுகின்றன. திபெத்திய நாட்காட்டி, சீன மற்றும் இந்திய நாட்காட்டிகளின் தாக்கத்தை உள்வாங்கியுள்ளது. செருமனியில் கிருத்துவ மதமாற்றத்திற்கு முன்னர் சூரிய சந்திர நாட்காட்டியையேப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
வீனசு நாட்காட்டி
வீனசு கிரகத்தின் இயக்கத்தினைக் கணக்கிட்டு உருவாக்கப் பெற்ற சில நாட்காட்டிகளும் முன்பு வழக்கத்தில் இருந்திருக்கின்றன. வீனசு நாட்காட்டிகளில் உதாரணமாகப் பண்டைய எகிப்து நாட்காட்டியைக் குறிப்பிடலாம். இந்த நாட்காட்டிகள் பெரும்பான்மையாகப் பூமத்திய ரேகை அருகே அமைந்துள்ள நாகரீகங்களைப் பின்பற்றியே இருந்திருக்கின்றன.
கிரிகோரியன் நாட்காட்டி
உலகின் பல்வேறு நாடுகளில் சமயம், பண்பாடு போன்ற வழக்கத்தில் பல்வேறு நாட்காட்டிகள் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமயம், பண்பாடு மட்டுமின்றி வணிக நோக்கத்திலும், பிற பயன்பாடுகளிலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டியாகக் கிரிகோரியன் நாட்காட்டி (Gregorian Calendar) இருந்து வருகிறது. இந்த நாட்காட்டி மேற்கத்திய நாட்காட்டி எனவும், கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப் பெறுகிறது. இந்த நாட்காட்டியைப் பன்னாட்டுத் தபால் ஒன்றியம் (International Postal Union) மற்றும் ஐக்கிய நாடுகள் (United Nations) அவை போன்ற அமைப்புகள் அங்கீகரித்திருக்கின்றன.
உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான கிரிகோரியன் நாட்காட்டியானது கி. மு. 45 ஆம் ஆண்டில் உரோமப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்ட சூலியன் நாட்காட்டியின் (Julian Calendar) திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியசு லிலியசு (Aloysius Lilius) என்ற மருத்துவரால் திருத்தப்பட்ட நாட்காட்டி வடிவம் முன் வைக்கப்பட்டது. உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரிகோரி 1582 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று இந்தப் புதிய நாட்காட்டியை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான ஆணையைப் பிறப்பித்தார். உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நாட்காட்டி பின்னர் பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, உலகம் முழுவதும் பரவலான பயன்பாட்டைப் பெற்றது. பின்னாளில் இந்நாட்காட்டிக்குத் திருத்தந்தையின் பெயரைக் கொண்டு "கிரிகோரியன் நாட்காட்டி" என்னும் பெயரே வழங்கலாயிற்று.
இந்த நாட்காட்டியில் இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் எண்களிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கி.பி. 6 வது நூற்றாண்டில் டயனீசியசு எக்சீகுவசு (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் தொடங்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.
ரோமானிய நாட்காட்டியில் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாக இருந்தது. கிரிகோரியன் நாட்காட்டியில் இரண்டு மாதங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டன. இதனால், கிரிகோரியன் நாட்காட்டியானது, சூலியன் நாட்காட்டியின் சராசரி ஆண்டை விட நீளமாகக் காணப்பட்டது. இதன் பிறகு இளவேனிற் சம இரவுப் பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்பாகக் கொண்டு வரப்பட்டது. மேலும், கிறித்தவ சமயத்தின் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாக அமைந்தது.
இசுபெயின், போர்த்துக்கல், போலிசு லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவை மட்டுமே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. இந்நாடுகள் 1582 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நாடுகள் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி வழக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரீசு ஆகும். 1923 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாளில்தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது.
உலகில் சமயம், பண்பாடு போன்ற பயன்பாடுகளுக்குப் பல்வேறு நாட்காட்டிகள் இன்றும் பயன்பாட்டில் தொடர்ந்து இருந்து வருகின்றன. சமயம், பண்பாடு தவிர்த்து வணிகம் மற்றும் பொதுவான பயன்பாடுகளுக்குக் கிரிகோரியன் நாட்காட்டியே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிரிகோரியன் நாட்காட்டியில் சாதாரண ஆண்டுகளில் 365 நாட்களும், நெட்டாண்டில் 366 நாட்களும் இருக்கின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.