பார்வை மிருகம்
ஆர். மாணிக்கவாசகம்
எல்லாத் தெய்வங்கட்கும் குலம் கோத்திரம் உண்டு. இன்ன குலத்திலே இன்னாருக்கு இன்ன தினத்திலே மகனாகப் பிறந்தார் என்ற வரலாறு உண்டு. ஆனால் சிவபெருமானுக்கு இந்த வரலாறு கிடையாது. காரணம் என்னவென்றால் அவர் பிறப்பற்றவர். பிறப்பு இல்லாதபடியால் சிவமாகிய செம்பொருளுக்குக் குலம், தாய், தந்தை, ஊர், உறவு, ஒன்றுமில்லை.
‘எல்லார் பிறப்பும் இறப்புமியற் பாவலர்தம்
சொல்லால் தெளிந்தேம்நம் சோணேசர் - இல்லில்
பிறந்த கதை யுங்கேளேம் பேருலகில் வாழ்ந்துண்
டிறந்தகதை யுங்கேட்டி லேம்” (அருணகிரி அந்தாதி)
அவரைப் பிறவா யாக்கைப் பெரியோன் என்று இளங்கோவடிகள் பேசுகின்றார். பிறப்பின்மையால் வேதங்கள் அவரை “அஜம் “ என்று போற்றுகின்றன. இப்பெருமான் அவரவர் பக்குவத்திற்கு ஏற்றவாறு பல்வேறு வடிவங்களில் வந்து ஆண்டு கொள்கிறான்.
ஒரு மலம் உடைய ஆன்மாக்களாகிய விஞ்ஞானகலருக்குச் சிவபெருமான் உள்நின்று உணர்த்துகின்றார். இதனைத் தன்மை என்று கூறுவர்.
இரண்டு மலம் உடைய ஆன்மாக்களான பிரளயாகலருக்கு நீலகண்டம், திரிநேத்திரம், மான்மழு, முதலியன தரித்தவராய் உருவத்திருமேனி தாங்கி வந்து ஆண்டு கொள்வார். இதற்கு முன்னிலை என்று பெயர்.
மூன்று மலங்களை உடைய சகலராகிய நமக்கு இறைவன் ஆசாரியனாக வந்து ஆண்டு கொள்கிறார். இதற்குப் படர்க்கை என்று பெயர்.
சிவன் ஒரு வேடன்
இங்கே ஒரு சித்தாந்த நயம் உண்டு. சிவபெருமானை ஒரு வேடனாகவே உருவகம் செய்யலாம். மலைகளிலும், காடுகளிலும் வாழ்வது வேடர்களின் இயல்பு. சிவபெருமான் இமயமலை, பருப்பதம், கொல்லிமலை, குற்றாலம், சதுரகிரி, திரிசிராமலை, திருஎறும்பியூர், திருவாட்போக்கி, திருஈங்கோய்மலை, திருச்செங்கோடு, சென்னிமலை, சிவன்மலை, வெள்ளியங்கிரி, திரிகோணமலை இப்படிப் பல்வேறு மலைகளில் வாசம் பண்ணுகின்றார். இதனால் அவருக்கு மலையாளி என்றும் பெயர். காட்டிலேயும் வசிக்கிறார்.
வேடர்கள் முருகனை வணங்குவர். சிவபெருமானும் முருகக் கடவுளை வணங்கியுள்ளார்.
வேடர்களின் தொழில் சங்காரம். கொலையே புரிவேடர் என்பது கந்தரநுபூதி. சிவபெருமான் சங்கார கர்த்தா. பிரமன் படைத்தலையும், விஷ்ணு காத்தலையும், உருத்திரன் அழித்தலையும் செய்கின்றனர். சிவபெருமான் இம்மூவருக்கும் தலைவராகி மகாசங்காரத்தைப் பண்ணுகின்றார். சங்கரன் என்ற திருநாமம் சிவபிரானுக்குரியது.
‘நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன்
சலமிலன் பேர்சங் கரன்” (திருவருட்பயன்)
மேலும், வேடர்களுக்குப் புலித்தோல் முதலிய ஆடைகள் முக்கியம். சிவ பிரானுக்குப் புலித்தோல் ஆடை விசேடம்.
‘பொன்னார் மேனியனே
புலித்தோலை அரைக் கசைத்து ... ...’ (தேவாரம்)
பார்வை மிருகம்
வேடர்கள் மிருகங்களைப் பிடிப்பதற்கு ஏதுவாகப் பார்வை மிருகங்களை வைத்திருப்பர். மானைக் காட்டி மான் பிடிப்பது எளிமையான வழி. கானகத்தில் வரும் மான்களைப் பிடிக்க இவர்கள் ஒரு மானைப் பழக்கி வைத்திருப்பர். அந்த மானுக்குப் பார்வை மிருகம் என்று பெயர். வேடர்கள் வாழும் பகுதியில் பன்றி, புலி, கரடி, கடமை, மான் முதலிய பார்வை மிருகங்கள் இருந்தன என்று பெரியபுராணம் பேசுகிறது.
‘குன்றவர் அதனில் வாழ்வார் கொடுஞ்செவி ஞமலி யாத்த
வன்றிரன் விளவின் கோட்டு வார்வலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்” (பெரியபுராணம், கண்ணப்ப நாயனார் புராணம்)
வேடர்கள் மானைக் காட்டி மான் பிடிப்பது போலச் சிவபெருமான் மானுடர்களாகிய நம்மைப் பிடிப்பதற்கு மானுடச் சட்டை தாங்கி வருகின்றான்.
மூன்று மலம் உடைய நம்மை ஆட்கொள்ளச் சிவபெருமான் வைத்திருக்கின்ற பார்வை மிருகம் ‘குருமூர்த்தம்’ ஆகும். பார்வைக்கு மானுடராகத் தெரியும். ஆனால், அந்தக் குருவின் உள்ளே இருந்து உபதேசம் பண்ணுகின்றவர் சிவபெருமானே ஆவார்.
‘ஈறில்லாத நீ எளியை ஆகிவந்
தொளிசெய் மானுடம் ஆக நோக்கியும்” (திருவாசகம்)
சகல வர்க்கத்தினராகிய நமக்குக் குரு மூர்த்தமன்றி வேறுவழி இல்லை. குருவை வழிபாடு செய்வதும், சிவத்தை வழிபாடு செய்வதும் ஒன்றே. இதையே திருமந்திரம் ‘குருவே சிவம்’ என்று கூறிற்று. சிவபெருமான் சிவலிங்கம் முதலான மூர்த்தங்களில் வந்து தங்கினாலும், அங்கே தமது அருளல் தொழிலை வெளிப்படையாகச் செய்வதில்லை. ஆனால் குரு என்று சொல்லப்படும் ஆச்சாரியனிடத்தே சிவபெருமான் தங்குவதோடன்றித் தமது அருளல் தொழிலைப் பிரத்திய‘யமாகச் செய்கின்றார். இக்கருத்தையே சிவஞான போதம் ‘தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த’ என்று கூறிற்று. இங்கே அருளல் என்பது சிவ தீட்சை ஆகும். சிவபெருமானுடைய ஐந்து தொழில்களில் மிக முக்கியமானது அருளல் தொழிலாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் ஆகிய நான்கு தொழில்களும் ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் பொருட்டாகவே நிகழ்த்தப்படுகின்றன. ஆகவே அருளல் தொழில் விசேடமானது.
அந்த அருளல் தொழில் குரு மூர்த்தியின் வாயிலாக நிகழ்த்தப் பெறுகின்றது. இதனால் குருவழிபாடு எவ்வளவு உயர்ந்தது என்பது புலனாகின்றது.
‘ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே” (சிவஞான போதம், 8-ம் சூத்திரம்)
முள்ளிச் செடிக்கு முத்தி கொடுத்தவராகிய உமாபதி சிவாச்சாரியார், மேற்கண்ட உண்மைகளைத் தொகுத்து ஒரு குறள் வெண்பாவில் விளக்குகின்றார். குருவின் வடிவைப் பார்வை மிருகத்தோடு ஒப்பிட்டுக் கூறுகின்றார்.
‘பார்வையென மாக்களை முன் பற்றிப் பிடித்தற்குப்
போர்வையெனக் காணார் புவி” (திருவருட்பயன்)
சிவபெருமான் இங்ஙனம் பார்வை மிருகம் வைத்திருத்தலால் சிவபெருமான் ஒரு வேடன் என்று சித்தாந்த அடிப்படையில் உருவகம் செய்யப்படுகிறது.
மேலும், வேடமாவது சிவஞானமாகும். ஞானமே வடிவான சிவபெருமான் வேடனாக விளங்குகின்றார். இது காறும் கூறப்பெற்ற கருத்துக்கள் மூலம் சிவபெருமான் பிறப்பற்றவர் என்பதும், அவரே பிறப்பை அறுக்க வல்லவர் என்பதும், குருவே சிவம் என்பதும் விளக்கப் பெற்றன. சிவபெருமான் ஒரு வேடன் என்பது சித்தாந்த உருவகமாகும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.