முன்னுரை
மனித வாழ்வின் அனுபவங்களை அடுத்த சந்ததிக்கு கொண்டுச் செல்லும் ஊடகமாக நாவல் இலக்கியம் திகழ்கிறது. தமிழ் நாவல் உலகில் சு. தமிழ்ச்செல்வி தனக்கென ஒரு வழித்தளத்தைத் தேர்வு செய்து அதன்வழிச் செல்பவராக விளங்குகிறார். இவரின் படைப்புகளில் பெண்ணியமும், இனக்குழு சமுதாயமும் இணைந்து இருப்பதே இவரின் படைப்புகளுக்குச் சான்றாகின்றன. அவ்வகையில் பெண்ணியப் போக்குகளும், பெண்ணிய சிக்கல்களும் பெண்ணியக் கூறுகள் என பல கோணங்களில் பார்க்க முடிகிறது. இனவரைவியல் நோக்கில் அணுகும் போது இவரின் நாவலில் இனக்குழுக்களாக மக்கள் சமுதாயம் சார்ந்து வாழ்ந்து வருவதை பதிவு செய்துள்ளார். மேலும், இவர் முற்போக்கு சிந்தனை உடையவராகவும், சிறந்த படைப்பாளராகவும் விளங்கி வருகிறார்.
நாவலில் பெண்ணியப் பார்வை
தமிழ்ச்செல்வியின் படைப்புகளில் காணலாகும் “பெண்ணியப் படைப்புகள்” என்ற நோக்கில் பார்க்கும் பொழுது, இவர் நாவலில் வரும் அனைத்துப் பெண்களும் `குடும்பம்’ என்ற கட்டமைப்பில் இருக்கும் நிலையைப் பார்க்க முடிகிறது. பெண்கள் தன்னையும், தன் குடும்பத்தையும் பராமரிக்கின்ற சூழலையும், கணவனைப் பிரிந்து வாழ்கின்ற துயர நிலையும், படிப்பறிவில்லாத பெண்களாகவும், அறியாமையின் சிக்கலில் பரிதவிக்கும் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் போன்றவை இவரின் படைப்புகளில் பார்க்க முடிகிறது. பெண்கள் வீட்டிற்குள்ளும், சமூகத்திலும் அவளுக்கு விதிக்கப்படும், கட்டுப்பாடும் அவளின் இறுக்கமான வாழ்க்கைக்கு வழி செய்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக சமூகம் விளங்குகிறது.
அளம், ஆறுகாட்டுத்துறை, கண்ணகி, கற்றாழை, கீதாரி, மாணிக்கம் போன்ற பல படைப்புகளில் நாடோடி வாழ்க்கையும், ஆண் பொருளீட்டல், பெண் இல்லறம் காத்தல், கணவனின் வருகைக்காக வீட்டில் காத்திருத்தல் போன்ற பல சிக்கல்களை மையமிட்டு நாவல்கள் இயங்குகின்றன. மேலும், குடும்ப உறவுகளைப் பேணும் பொழுது போதிய புரிதல் இல்லாமல் இருப்பது உறவுகளுக்கு இடையே சிக்கல் தோன்றக் காரணமாக அமைகிறது என்பதைக் காண முடிகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஆதாரமாக இருப்பது பொருளாதாரம். இத்தகையப் பொருளைத் தேடும் வகையில், கதையில் வரும் ஆண் பாத்திரப் படைப்பு பொருள் தேடச் செல்வதும், கணவன் இடத்தில் மனைவி இருந்து குடும்பத்தை வழி நடத்துவதும், பலநாள் பசிப்பட்டினியால் வாடிக் கிடக்கும் வறுமை நிலையும் நாவலில் இழையோடுவதைக் காண முடிகிறது.
இனவரைவியலும், இலக்கியமும்
தொல்காப்பியம், திருக்குறள் போன்ற இலக்கியங்களில் `இனம்’ என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறது. தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் மூன்று அதிகாரங்களில் இனம், இனப்பொருள், இனமணி, இனமொழி, இனஒற்று, மேலும் நெருக்கமான உறவு போன்ற பலப் பொருளைக் குறித்து வருகிறது. சங்க இலக்கியத்தில் `இனம்’ என்ற சொல்லிற்கு விலங்கு, பறவையைக் குறிக்கிறது. ஆனால் காலப்போக்கில் மாந்தர் குழுவையும் குறித்தது.
`இனக்களமர் இசை மருக’ (பொருநராற்றுப்படை 194 வது வரி)
`இனநாரை’ என்றச் சொல் நெடுநல்வாடையில் காணப்படுகிறது. இச்சொல் சான்றோர் என்ற பொருளில் கையாளப்பட்டுள்ளது.
மேலும் முல்லைப்பாட்டில் இளவண்டு என்றச் சொல் சான்றோரைக் குறிப்பிடுகிறது. `இனநாரை’ என்ற சொல் நெடுநல்வாடையில் காணப்படுகிறது. இச்சொல்லும் சான்றோரைக் குறிப்பதாகவே கையாளப்பட்டுள்ளது.
இனவரைவியலும், இலக்கியமும் என்பதில் உள்ள இனவரைவியல் இனக்கூட்டத்தினைக் குறிப்பதாகும். இனவரைவியல் அறிவுச்சார்ந்தும். இலக்கியம் என்பது வாழ்வியல் சார்ந்தும் இயங்கக் கூடியவையாகும். இவற்றை உற்று நோக்கும் போது, தொல்காப்பியத்தில் நமக்கு விடை கிடைக்கிறது. தொல்காப்பிய அகத்திணையியலில்,
``முதல் எனப்படுவது நிலம் பொழுது இண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே’’
நூற்பா இனவரைவியலுக்கும் இலக்கியத்திற்கும் சான்றாக அமைகின்றது.
இனவரைவியலும், நாவலும்
மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து சற்று மாறுபட்டு இனக்குழுவாக வாழத் தொடங்கிய காலம் தான் இனவரைவியலுக்கு உதாரணமாகக் கொள்ளலாம். தமிழ்ச்செல்வியின் நாவல்களில் இனவரைவியல் கோட்பாடு விரவி இருக்கின்றன. இவற்றில்;
கீதாரி - முல்லைத்திணைக்கோட்பாடும்
ஆறுகாட்டுத்துறை - நெய்தல் திணைக்கோட்பாடும்
அளம், கற்றாழை - பாலைத் திணைக்கோட்பாடும்
மாணிக்கம், கண்ணகி, கற்றாழை, கீதாரி, அளம் - பெண்ணியம் முன்நிறுத்தி எழுதப்பட்ட கதையாகும்.
அளம் நாவலில் பொருள் தேடச் சென்ற கணவன் திரும்பவில்லை. அதனால் சுந்தராம்பாள் என்ற பெண் குடும்பச் சிக்கல்களை எதிர் நோக்குகிறார். அவளின் வாழ்க்கை, நாளும் போராட்ட வாழ்வாக அமைகிறது. `சாண் ஏறினால் முழம் சறுக்கும்’ என்ற அளவில் இவளின் வாழ்க்கைச் சூழல் அமைகிறது.
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
`கீதாரி’ நாவலில் கெடை வைத்து ஆடு மேய்க்கும் குடும்பத்தின் வாழ்வியலைக் கூறுகிறது. முல்லைக்கோட்பாட்டுடன் இயைந்து வரைவியலுக்குட்பட்ட கதையாக விளங்குகிறது. இதில் வரும் `கரிச்சா’ என்ற பெண்ணின் வாழ்க்கை துயரமும் வறுமையும் நிறைந்த வாழ்க்கையாக அமைவதைக் காணலாம்.
பிரிதலும், பிரிதல் துன்பமும்
`அளம்’ என்ற நாவல் பாலைத்திணையின் அடிப்படையிலும், பாலைத்திணை மக்களின் வாழ்வியல் சூழலை மையமாக வைத்தும், பாலை என்பது வறுமையின் பிறப்பிடமாக இருக்கிறது என்பதைச் சங்க இலக்கியம் காட்டுகிறது. ஆனால் அளம் நாவலில் பிரிவின் துயரத்தைக் காட்டுகிறது. கம்பராமாயணத்தில் சீதையைப் பிரிந்த இராமன் நிலையும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியைப் பிரிந்த கோவலன் நிலையும் வறுமையுடையதாகவே பார்க்க முடிகிறது.
இரங்கலும், இரங்கல் நிமித்தமும்
`ஆறுகாட்டுத்துறை’ என்ற நாவல் நெய்தல் நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. கடலும் கடல் சார் பகுதியும் மையமிட்டு இந்நாவலில் நகர்கிறது. சமுத்திரவல்லி என்ற பெண்ணின் இல்வாழ்க்கை அறநெறியைக் கொண்டது. ஆறுகாட்டுத்துறை நாவல், இரங்கல், இரங்கல் நிமித்தத்தில் சமுத்திரவல்லியின் துயரம் இரங்கலாகவே இருக்கிறது. இரங்கலைப் பத்து வகை என நம்பியகப்பொருள் கூறுகிறது.
``நனவினான் நல்காதவரைக் கனவினான்
காண்டலின் உண்டென் உயிர்’’
என்கிறது திருக்குறள்.
சமுத்திரவல்லிக்கு இரண்டு கணவன் இருக்கும் நிலையில், மூவரும் ஒன்றாக ஒரு ஊரில் வாழ முடியாத அவலத்தில் இருக்கின்ற போது, ஒருவர் மற்றொருவருக்கு விட்டுக் கொடுக்கும் வாழ்வியலை, தியாக உணர்வைக் காட்டும் சமூகமாக நாவலைக் கட்டமைத்திருப்பது படைப்பாளரின் உயரிய சிந்தனையைக் காட்டுகிறது. சமுத்திரவல்லியின் வாழ்க்கை இரங்கலுக்குரிய நிலையில் உருவாக்கப்பட்டிருப்பது, படைப்பாளரின் உன்னத போக்கும் உயரியத் தன்மையையும் காட்டுகிறது. மேலும் கதைக்களம் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. இங்கு வாழும் மக்களில் உயர்வு தாழ்வு இல்லை. எல்லோருக்கும் ஒரே தொழில் என்ற நோக்கில் நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்ணியமும், இனவரைவியலும் என்ற தலைப்பிற்கு இணங்க படைப்பாளரின் படைப்புகள் வழி இக்கட்டுரை ஆராய்ந்து பெண்களுக்கு ஏற்படும் துன்பங்கள், மக்களின் வாழ்வியல் சமூகம் உருவாக்கம் இடப்பெயர்வு, புலம் பெயர்தல், பொருளீட்டல் பல்வேறு காரணங்களால் பெண்களின் வாழ்க்கையில் இடம்பெற்று அவர்கள் மிகுந்த சமுதாயச் சிரமங்களுக்கு ஆளாகுவதை சு. தமிழ்ச்செல்வி நாவல்கள் வழியே ஆராய்ந்து முடிவுகள் கொடுக்கப்படுகின்றன..
*****