இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

சங்க காலத்தில் தமிழின் நிலை

முனைவர் அ. விமலா
உதவிப்பேராசிரியர்,, தமிழ்த்துறை,
ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி (த), புதுக்கோட்டை.


முன்னுரை

காலந்தோறும் தமிழ் மொழி பல்வேறு போக்குகளைக் கொண்டு வளர்ந்து வருகிறது. அந்தந்தக் காலத்தில் சமயம், அரசு, பண்பாட்டுத் தாக்கம் உள்ளிட்டவற்றின் தாக்கங்களால் மெருகேறியும் உருக்குலைந்தும் தாக்குப்பிடித்து நிற்கும் இயல்பைக் கொண்ட மொழியாக மிளிர்கிறது. அந்தவகையில், சங்ககாலத்தில் தமிழ் மொழி எதிர்கொண்ட சூழல்களை இ்ந்தக்கட்டுரை ஆராய்கிறது.

“வடவேங்கடம் தென்குமாரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகத்து” (தொல். பாயிரம்)

என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்து தொல்காப்பியர் காலத்தில் அதாவது சுமார் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் வேங்கடத்திற்குத் தெற்கில் தமிழ் தவிர வேறெந்த மொழியும் வழக்கில் இருக்கவில்லை என்பது தெரிகிறது. தொல்காப்பியர் காலத்தைத் தொடர்ந்து வந்ததாகக் கருதப்படும் சங்க இலக்கியக் காலத்திலும் தமிழ் மொழியே பெருவழக்காக இருந்துள்ளது. ஆரியப் பண்பாடான வேள்விப் பண்பாடு சங்க காலத்தில் அரசர்களின் வழக்கில் இருந்துள்ளது. ஆனால் வடமொழித் தாக்கம் மிகுதியாக இருக்கவில்லை.

சங்க கால அரசியல் சூழல்

மூவேந்தர்களும் கடையெழு வள்ளல்களும் வேளிர்களும் குறுநில மன்னர்களும் ஆண்டகாலம் சங்க காலம். இக்காலத்தில் வேற்றுப்புலத்தை நோக்கி இத்தமிழ் வேந்தர்களும் மன்னர்களும் படையெடுத்துச் சென்றதாக ஏராளமான குறிப்புக்கள் சங்க இலக்கியங்களிலிருந்தே கிடைக்கின்றன (ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் போன்று). ஆனால், வேற்றுப்புல மன்னர்கள் தமிழகத்தைநோக்கிப் படையெடுத்ததாகச் செய்திகள் அவ்வளவாக இல்லை. மாறாக, தமிழ் மூவேந்தர்களும் மன்னர்களும் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் மாறிமாறிப் படையெடுப்புக்களை நிகழ்த்திக் கொண்டே இருந்துள்ளனர் என்பதைப் புறநானூறு தெளிவாக எடுத்தியம்புகிறது (தலையாலங்கானத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் போன்றோர்).

எனவே, தமிழ்வேந்தர்களும் மன்னர்களும் மட்டுமே ஆண்டுவந்த சங்ககால அரசியல் சூழலில் வேற்றுமொழிப் பண்பாட்டு ஆதிக்கம் ஏதுமில்லை என்பதும் தமிழ்மொழியின் தன்னேரிலாத் தலைமை மட்டுமே இருந்தது என்பதும் தெளிவாகிறது.


சங்ககாலச் சமயச் சூழல்

சங்க காலத்தில் எந்தவொரு சமயமும் நிறுவனமயப்பட்ட நிலையில் வலுவானதாக இல்லை. ஆனால், பல்வேறு தெய்வவழிபாட்டு முறைகள் மக்கள் வழக்கில் இருந்துள்ளன. சங்ககால இலக்கிய நூல்களில் கொற்றவை, முருகன், திருமால், சிவன் போன்ற கடவுளர்களைப் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. சங்க நூல்களில் மிகுதியானதும் பரவலானதுமான இடத்தைப் பெற்றிருப்பவன் முருகனே. அதற்கு அடுத்த நிலையில் கொற்றவை இடம் பெறுகிறாள். அதற்கும் அடுத்த நிலையில்தான் சிவனும் திருமாலும் இடம் பெறுகிறார்கள். அதிலும், சிவனைச் சிவன் என்ற பெயரால் அல்லாமல் வேறுபல அடைமொழி, புனைமொழிப் பெயர்களாலேயே சங்க நூல்கள் குறித்துள்ளன. இதைக்குறித்து அறிஞர் மா.இராசமாணிக்கனார் குறிப்பிடுவதாவது:

“எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் தொகை நூல்களில் சிவன் என்னும் பெயர் காணப்படவில்லை. ஆயின், அக்கடவுள் தாழ்சடைபொழிந்த அருந்தவத்தோன், முக்கட்செல்வன், கறைமிடற்று அண்ணல்., நீலமணிமிடற்று அண்ணல், முதுமுதல்வன், நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன், மழைதலை வைத்தவர், காய்கடவுள், பைங்கட் பார்ப்பான், புங்கம் ஊர்பவன், மறுமிடற்று அண்ணல், சலதாரி, முக்கணான், ஈர்ஞ்சடை அந்தணன், ஆலமர் செல்வன், கணிச்சியோன் முதலிய பல பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளான்” (இராசமாணிக்கனார்.,மா.1999:13)

இவ்வாறு சிவனைக் குறிப்பிடும் தன்மை சங்க இலக்கியத்தில் இருந்தாலும் அது ‘சைவம்’ என்கிற சமயச் சித்தாந்தமாக வளர்ந்திருக்கவில்லை. மாறாக, அது ஆதிகாலச் சமூக அமைப்பில் உருவான சிறுவழிபாட்டு முறையாக மட்டுமே இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் போலவே, பிற கடவுளர்களைப் பற்றிய குறிப்புகள் மட்டுமே உள்ளன.

“சைவம் வைணவம், பௌத்தம், சமணம் போன்ற சமயங்களின் மூலக்கூறுகளான வழிபாட்டுமுறைகள், அறநெறிக் கோட்பாடுகள் காணப்படும் சங்க இலக்கியம் எந்தவொரு சமயத்தையும் முன்னிறுத்திப் பேசுவதாக அமையவில்லை. சங்க இலக்கியத்தைப் பொறுத்தவரையில், சமய வேறுபாட்டைக் கடந்த வாழ்க்கையின் இன்ப, துன்ப உணர்ச்சிகளே பெரிதும் இடம் பெற்றிருந்தன” (வரதராசன்.,மு. 2006:50)


சங்க காலப் பண்பாட்டுச் சூழல்

தமிழ்ப் பண்பாட்டை உலகுக்கு அறிவிக்கும் மூலவித்துக்களைக் கொண்டவையாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. மானுட வாழ்வியல் பண்பாட்டை அகப்பண்பாடு, புறப்பண்பாடு என்னும் இருநிலைகளில் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

அகப்பண்பாடு என்பது களவு, கற்பு என இருவகைப் பாகுபாட்டுக்குள் ஒத்த தலைவனும் தலைவியும் நிகழ்த்தும் வாழ்வியலைக் குறிப்பாக இருந்தது. இதைத் ‘தனிமனித வாழ்வியல்’ எனலாம். இதில் தலைவன், தலைவி, தோழி, செவிலி, பாங்கன், நற்றாய் ஆகியோரின் அறத்தொடுநிற்கும் பண்பாடு நயத்தக்க நாகரீகம் உடையதாய் அமைந்திருந்தது. தமிழர்களின் அகப்பண்பாட்டு வாழ்வியல் நெறிகள் ஐவகை நிலங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவர்களின் உணவுப்பழக்கம், தொழில், நடை, உடை, பாவனைகளை அந்தந்த நிலத்தின் உற்பத்திமுறை தீர்மானித்திருந்தது. இவற்றை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூவகை நிலைகள் கட்டமைத்திருந்தன. மருத நிலத்தில் மிகுதியாகவும் பிற நிலங்களில் ஒரு சிறிதுமாகப் பரத்தமை ஒழுக்கம் நிலவியிருந்தது என்பது மட்டுமே பண்பாட்டு வீழ்ச்சிக் கூறாக இருந்தது.

“புறப்பண்பாடு என்பது வீரம், கொடை, அறநெறி என மூவகைப் பாகுபாட்டுக்குள் தமிழ் மூவேந்தர்கள், குறுநில மன்னர்கள், பொதமக்கள் ஆகியோரின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. இதைச் ‘சமூக வாழ்வியல்’ எனலாம். இத்தகைய சமூகவாழ்வியல் நிறைந்த சங்ககாலப் புற இலக்கியங்களில் குழந்தைச் செல்வத்தைப் பாடுவது முதல் முதிய கிழவனின் கழிந்த இளமையை நினைத்து ஏங்கிப் பாடும் பாட்டு வரையில் இடம் பெற்றுள்ளன” என்கிறார் மு.வரதராசனார் (வரதராசன்., மு. 1972 : 57)

மொத்தத்தில், விழுமிய பண்பாட்டுக் கருவூலமாகச் சங்க இலக்கியம் திகழ்கிறது என்பது தெளிவு. சங்க காலத்தில் வேள்விப் பண்பாடு சிறிது இருந்தது தவிர, பிற பண்பாடுகளின் கலப்பு ஏதும் மிகுதியாக நிகழவில்லை. வேள்விப் பண்பாட்டுக்கலப்பு சிறிது இருந்த போதிலும் தமிழர்களின் அடிப்படைப் பண்பாடு, வாழ்வியல் வகைகளான அகப்பண்பாடு, புறப்பண்பாடு ஆகியவை அவற்றின் மெருகு குலையாமல் இருந்தன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

அகப்பண்பாட்டில் பரத்தமைநெறியும் புறப்பண்பாட்டில் வேள்விப் பண்பாடும் சங்கத்தமிழரின் நன்னெறி வாழ்க்கைக்கு ஊறு விளைவிப்பனவாக அமைந்திருந்தன என்பது இங்குக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய செய்தியாகும்.


சங்க கால மொழிச் சூழல்

மொழி, பண்பாட்டின் குறியீடாகின்றது. மேலும், பண்பாட்டின் தனித்துவமான தொழிற்பாட்டுக்கு மொழியே காரணியாகவும் அமைகின்றது. இக்கருத்து லெவிஸ்ற்றோஸ் என்பாரது கூற்றில் நன்கு புலனாகிறது. பண்பாட்டின் தோற்றத்திற்கு மொழி முக்கியமானதென்பர் (கார்த்திகேசு சிவத்தம்பி, 1994:21) எனவே, ஒரு காலகட்டத்தில் மக்களால் படைக்கப்பட்ட இலக்கியங்களிலும் வழக்கிலும் எந்தமொழி உச்சநிலை பெற்றிருந்ததோ அந்த மொழிச்சூழலால் அம்மக்களின் பண்பாடு அறியப்படுகிறது. இலக்கியம் என்பது சமூக உணர்வுகளையும் சிந்தனைகளையும் அச்மூகத்தில் வாழும் மக்களின் வாழ்க்கையிலே தோன்றும் உணர்ச்சிகளையும் மொழிக்குறியீடு செய்து தருவதாகும். (கார்த்திகேசு சிவத்தம்பி., 1994:20) இத்தகைய நோக்கில் பார்த்தால், சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்களில் பெருவழக்காய் இடம்பெற்றிருக்கும் மொழி தமிழ்மொழியே என்பது உறுதியாகின்றது. ஆரிய வேள்விப்பண்பாடு அரசியல் சூழலில் இடம் பெற்றிருந்த போதிலும், அந்த ஆரியத்தின் மொழியான சமஸ்கிருதம் இலக்கியச் சொல்லாடலில் இடம் பெறவில்லை என்பது தெளிவாகிறது. இதுவரை கண்ட செய்திகளிலிருந்து சங்ககாலத்தில் உச்சநிலை பெற்றிருந்த மொழி தமிழ் மொழியே என்பது உறுதியாகிறது. இதை,


“சங்க நூல்களிற் பிறமொழிச் சொற்கள் மிகக் குறைவு, ஆரியர் ஆதிக்கம் அதிகம் பரவாமையால் ஆரியச் சொற்கள் சிறுபகுதியினவாகவே தமிழிற் புகுந்தன” (மேற்கோள், மதிவாணன், பா.2000:36)

என்ற கருத்தும் உறுதிப்படுத்துகிறது.

சங்க காலத்தில் இருந்த குறுநில மன்னர்கள் எவ்வளவுதான் தமிழ்ப் புலவர்களுக்கு நெருக்கமாக இருந்ததாகக் குறிப்புகள் இருப்பினும், மூவேந்தர்களோடு மட்டுமே தமிழ்மொழி இணைத்துப் பேசப்பட்டது.

‘தமிழ்கெழு மூவர்’ - அகநானூறு, 31 (கேசவன்., கோ.1998:79)

சங்க காலம் என்று இக்காலத்தைக் குறிப்பிடும் வழக்கம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய வழக்காகவே இருந்துள்ளது. சகரக்கிளவி மொழிக்கு முதலில் வராது என்ற தொல்காப்பிய விதி சங்ககாலத்தின் முன்பகுதிக்காலத்தில் தெளிவாகப் பின்பற்றப்பட்டிருக்கிறது. அதனால்தான், சகரத்தை மொழிக்கு முதலாகக் கொண்ட சொற்களை அவ்வளவாகக் காண இயலவில்லை. இதை,

“சங்கம் என்ற சொல் மணிமேகலையில் (7.113) தான் முதன்முதலில் வழங்குகிறது. ‘இலக்கியம்’ என்ற சொல்லும் பிற்காலத்தேதான் பயிலப்பட்டு வந்தது. எனவே சங்க இலக்கியம் என்ற தொடர் பிற்காலத்தவரால் புனையப் பெற்றதாகும்” (சக்திவேல்.சு:108)

என்ற கருத்து உறுதிப்படுத்துகிறது. இங்குப் பிற்காலத்தவரால் புனையப்பெற்றது, என்ற தொடர் பிற்காலத்தில் சங்க இலக்கியத்தைத் தொகுத்தவர்களால் புனையப்பெற்றது என்பதைக் குறித்து நிற்கிறது. சங்கம் என்ற சொல் பாலி, பிராகிருதம், சமஸ்கிருத மொழிகளில் பயிலப்படும் சொல்லாகும். அச்சொல்லால் தொல்காப்பியத்தைத் தொடர்ந்து வந்த இலக்கியப் பெருவெளிக்காலத்தைக் குறிக்கும் மரபு பிற்காலத்தே உருவானதாகும். சங்க காலத்தின் இறுதிப்பகுதிக் காலத்தில் தமிழ்மொழியில் சில மாற்றங்கள் திகழ்ந்தன. சகரம், ஒகரம், யகரம் ஆகிய மெய்கள் அகரத்தோடு மொழிக்கு முதலாயின (எ.டு) சகடம், ஞமலி, வட சொற்கள் நுழைந்தன. இவை பெரும்பாலும் பிராகிருத வழியாகவே வந்தன. பத்துப்பாட்டில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான அளவிலேயே வடசொற்களைக் காண முடிகிறது. கலித்தொகையில் சராசரி ஒரு பாடலுக்கு ஒரு வடசொல் வேண்டுமானால் இருக்கலாம் (சண்முகம்பிள்ளை.,மு. 1981:136) இவ்வாறெல்லாம், சிற்சில மாற்றங்கள் தமிழ் மொழியில் நிகழ்ந்திருந்த போதிலும், இதுவரை கண்ட செய்திகளிலிருந்து சங்க காலத்தில் உச்சநிலை பெற்றிருந்த மொழி தமிழ்மொழியே என்பது தெளிவாகிறது.

பயன்பட்ட நூல்கள்

1. இராசமாணிக்கனார்.,மா. சைவ சமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், சென்னை.

2. கார்த்திகேசு சிவத்தம்பி., தமிழில் இலக்கிய வரலாறு, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், பிரைவேட் லிமிடெட், சென்னை. (1998)

3. கேசவன்.,கோ. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழினம். (1998)

4. சக்திவேல்.,சு. தமிழ்மொழி வரலாறு, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம். (1988)

5. சண்முகம்பிள்ளை.,மு. சிற்றிலக்கிய வளர்ச்சி, மணிவாசகர் நூலகம், சென்னை. (1981)

6. வரதராசன்.,மு. தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்ய அகாதெமி, புதுதில்லி. (1972)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p160.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License