இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

மெய்க்கீர்த்திகளின் வழி பிற்காலச் சோழர்களின் ஆட்சிமுறை

கோ. முருகேஸ்வரி
முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் - 624 302


முன்னுரை

மனித இனம் துவக்க நிலையில் நிறுவன அமைப்புகளற்ற தன்மையில்தான் இருந்தது. பின்னர் பரிணாம வளர்ச்சியின் காரணமாகக் குழுவாகவும் கூட்டமாகவும் வாழவேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்வாறு வாழும்போதுதான் அவர்களுக்குள் தலைமைகள் உருவாயின. தலைமை நிருவாகத்தின் கீழ் மக்கள் கட்டுப்பட்டு பணி செய்தனர். நிருவாகம் செய்தல் என்ற பண்பே பின்னாளில் அரசு என்பதாக மாற்றம் பெற்றது. அதன் மீச்சிறு அலகே குடும்பம் என்ற அமைப்பு. குடும்பம் என்ற அமைப்பு தோன்றிய பின்னர்தான் அரசு உருவாகிறது. அரசின் தலைவன் அரசன். இவன் கீழ் பல நிருவாக அமைப்புகள் இயங்கின. சங்க காலத்திலேயே அரசமைப்புகளும், நிருவாக அமைப்புகளும் இருந்தன என்பதைப் பத்துப்பாட்டின் வழியாக அறியமுடிகின்றது. அரசு இயங்குவதற்குத் தேவையான பொருளாதார வசதியைப் பெருக்கிக் கொள்வதற்காகவே மக்களிடம் வரிகள் வசூலிக்கப்பட்டன. அவ்விதம் பெறப்பட்ட வரிகளை முறையாகச் செலவு செய்து, மக்கள் நலம் பேணி, குற்றங்கள் கடியவும் அவற்றைத் தடுக்கவும், அதற்கான அமைப்புகளையும் அரசு உருவாக்கியது. அவ்வமைப்புகளை வலுப்படுத்துவதற்கென விதிகளையும் அறங்களையும் ஒழுக்கநெறிகளையும் கடைப்பிடிக்கும் நோக்கில் அரசுகள் இயங்க ஆரம்பித்தன. அவ்வாறான அரசுகள் தோன்றிய முறையும் அவற்றின் வளர்ச்சியும் நிலப்பிரபுத்துவ சமூக வரலாற்றில் உறுதிப்பட்டன. இனக்குழுத் தலைமையும் அரசினைப் போன்ற அமைப்புகளையே கொண்டிருந்தன. பல்வேறு படைப்பிரிவுகளை உருவாக்கி அவற்றைப் போருக்கும் மக்களைக் கண்காணிக்கவும் பயன்படுத்தியமையைச் சங்க காலத்திலும் அதற்குப் பிந்தைய சூழல்களிலும் காணமுடிகின்றது.

சோழராட்சியில் அரசு முறைமை செலுத்தியதையே ஆட்சிமுறையாகக் கொள்ளப்படுகின்றது. அரசரிடமிருந்து தொடங்கி அமைச்சர்கள், காவலர்கள், தண்டலர்கள் வரை பல்வேறு அடுக்குகளில் அரசு அதிகாரிகள் மக்களிடம் தொடர்பு கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். சட்ட நெறிகளை நடைமுறைப்படுத்துதல், வரிவசூல் முறைகளைக் கண்காணித்தல் மற்றும் அரசு வருவாயைப் பெருக்குதல், அரசின் பணிகளைச் செய்தல், மக்கள் பிரதிநிதிகளாகச் செயல்படுதல் போன்ற பல்வேறு அடுக்குகள் செயல்பட்டு இயங்கி வந்துள்ளன. சோழர்கள் தங்கள் ஆட்சிப் பகுதிகளைப் பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து வைத்துள்ளனர். ஆளுகை செய்வதற்கு ஏதுவாகப் மண்டலங்களின் கீழ் வரும் ஒவ்வொரு கிராமத்திலும் முறை செய்யும் அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர். இத்தகைய பல்வேறுபட்ட நிருவாக அமைப்பு முறைகள் சோழர் கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வகையில் பிற்காலச்சோழர்களின் ஆட்சிமுறைகளைக் கல்வெட்டுகளில் காணலாகும் ஏழு அமைப்பு நிலைகளில் முதல்பகுதில் இடம் பெற்றிருக்கும் மெய்க்கீர்த்திகளின் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.


பிற்காலச் சோழர்களின் ஆட்சிமுறை

பிற்காலச் சோழர்களின் ஆட்சிமுறை, பல்வேறு சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பல்லவர்கள், பாண்டியர்கள் கால ஆட்சி முறைகளிலிருந்து மாறுபட்ட பல்வேறு இயல்புகளைச் சோழர்கள் ஆட்சியில் காணமுடிகின்றது. புது நிருவாக முறைகளும் நிருவாகத் தன்மைகளும் இவர்களாட்சியில் நிலைபெற்றன. நிருவாக உயர் அதிகாரியாக ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த அரசனின் உயராண்மை இக்காலகட்டத்தில் பெரிதும் உணரப்பட்டுள்ளது. சோழப் பேரரசர்கள் தம் எண்ணற்ற வெற்றிகளால் பேரரசின் எல்லைகளை விரிவாக்கியதோடு அப்பகுதிகளையும் நன்கு நிருவாகம் செய்யும் திறன் பெற்றவர்களாய் வாழ்ந்துள்ளனர். அதற்குச் சான்றாக, மன்னர்கள் தங்கள் பிள்ளைகளின் திறன் மேம்படும்படி நாட்டுப்பகுதிகளில் நிருவாகம் செய்வித்தமையைக் கூறலாம். முதலாம் இராசேந்திரன் காலம் முதல் இம்முறையானது பாண்டிய நாட்டில் செயல்பட்டு வந்துள்ளது. சிற்றரசர் முறை முழுவதுமாக நீக்கப்பட்டு அரச அலுவலர் வாயிலாக ஆட்சி நடைபெற்றுள்ளது. இவ்வகை நிருவாக மாற்றங்கள் முதலாம் இராசராசன் காலத்தில் சோழநாட்டில் நிகழ்ந்துள்ளன. இவ்வலுவலர்கள் பெரும்பாலும் அரசனால் அமர்த்தப்பட்டவர்கள். பல பகுதிகளுக்கும் சென்று நிருவாகப் பணிகளை ஆற்றியுள்ளனர்.

நாட்டு வருவாயைப் பெருக்கச் செய்யும் வழியாக குடிமக்கள் மீது அநேக புதுப்புது வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. எல்லையைப் பெருக்கவும் போர் மேற்கொள்ளவும் வேண்டியே படைத்துறை நிருவாகம் சீராக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் நிலைப்படைகள் நிறுவப் பெற்றுள்ளன. சோழர்களின் கடாரம், இலங்கை வெற்றிகளை நோக்கும்போது கப்பற்படை மிக வலிமையுடையதாக இருந்துள்ளது தெரிய வருகின்றது. உள்ளாட்சி நிறுவனங்களிலும் அதன் ஆட்சிமுறையிலும் புதுமைகளைப் புகுத்தியதுடன் ஊர்கள் மற்றும் பிரமதேய ஊர்களின் நிருவாகங்களும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சிக்காகப் பலவித முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஒரே தன்மையான ஆட்சியையே வழங்கியுள்ளனர். கடல் கடந்து சென்று பற்பல நாடுகளையும் மிகப்பெரும் தீவுகளையும் வெற்றி கொண்டதாலும் சோழர் ஆட்சியில் விரிவுபட்ட எல்லைகளுக்கு உரிய அதிகாரக் கட்டமைப்பு என்பது மிகவும் வலுவான நிலையிலேயே இருந்துள்ளது என்பதை மெய்க்கீர்த்திகள் வழியாக அறியமுடிகின்றது.

அரசன் சிறப்பும் அரசு முறையும்

நிலவளத்தால் மட்டும் ஒரு நாடு சிறந்திருந்தால் போதாது. அந்நாட்டில் வாழ்வோரும் சிறந்திருந்தால்தான் அந்நாடு நல்நாடு என்று போற்றப்படும். அது பள்ளமானாலும் சரி, மேடானாலும் சரி. சான்றோர் எங்கே தங்குகிறார்களோ, அவ்விடம்தான் நல்ல இடம் என்பது யாவரும் அறிந்ததாகும். ‘மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழி’ என்பதும் ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்பதும் அரசனின் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகின்றன. அரசனிடம் கல்வியறிவு, அஞ்சாமை, நுண்ணறிவு, சோம்பலின்மை, செயல்படும் திறமை முதலியன வேண்டுமெனச் சுட்டுகின்றனர் தமிழறிஞர்கள். இத்தகு சிறப்பு வாய்ந்த மன்னர்கள் சங்ககாலத்தில் வேதவேள்விகள், சமயக்கோட்பாடுகள் ஆகியவற்றைப் படிப்படியாக உட்புகுத்தத் தொடங்கினர். இதன் விளைவாகப் பிற்காலத்தில் “தமிழக அரசர்கள் தங்களைக் கதிரவன் வழி வந்தவர்கள் என்றும் சந்திரன் வழி வந்தவர்கள் என்றும் வடநாட்டு அரசரைப்போல கூறத் தலைப்பட்டனர்” என்று மா. இராசமாணிக்கனார் (2012,ப.107) எடுத்துரைக்கின்றார். தவிர, மன்னர்கள் வேதவேள்விகளில் விருப்பு கொண்டும், வேதங்களில் வல்லவரைத் தங்களுக்குப் புரோகிதராக்கிக் கொண்டும் வாழ்ந்துள்ளனர். “சோழமன்னர்கள் தங்களை, அரச கட்டளைகளின் வழி ‘உடையார்’ என்று அழைக்கப்பட்ட போதிலும் மக்களால் ‘இராசராசன்’, ‘சக்கரவர்த்திகள்’ போன்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்டுள்ளனர்” என்று கே. ஏ. நீலகண்டசாஸ்திரி (1989,ப.612) குறிப்பிடுகின்றார். மெய்க்கீர்த்திகளிலும் இத்தகு செய்திகள் இடம் பெற்றுள்ளன. சோழப் பேரரசர்களின் காலத்தில் அரசர்கள் கடவுளுக்கு இணையாகப் போற்றப்பட்டு இறைவனுக்கு இடப்பட்ட ‘உடையார்’, ‘தேவர்’, ‘நாயனார்’, ‘பெருமாள்’ போன்ற சிறப்புப் பெயர்கள் பெற்றுள்ளனர். முதலாம் இராசராசனைத் திருமாலின் வடிவம் எனக் கல்வெட்டுக்கள் சுட்டுகின்றன. இவ்வாறே முதலாம் குலோத்துங்கனும் திருமாலின் தோன்றலாகக் காட்டப்பட்டுள்ளான். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கோவில்களில் உறையும் இறைவனுக்கு அரசரின் சிறப்புப் பெயர்கள் இடப்பட்டுள்ளன. தஞ்சை பெருவுடையார் கோவில் முதலாம் இராசராசனின் சிறப்புப் பெயரால் ‘இராசராசேச்சுரம்’ என்று வழங்கப் பெற்றிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. மெய்க்கீர்த்திகள் பெரும்பாலும் சோழர்களின் குலம், பட்டப்பெயர், நீதி செலுத்திய முறை, பட்டத்தரசிகள், ஆட்சியாண்டுகள் முதலியவற்றைச் சுட்டுகின்றன.


முடிசூட்டு விழா

முடி சூடிக்கொண்ட பின்னரே ஒருவன் முறைப்படி அரசனாகி ஆட்சி உரிமையைப் பெறுகிறான். அதனால்தான் முதலாம் இராசாதிராசன் கொப்பத்துப் போர்க்களத்தில் இறந்த போது இளவரசனான அவன் தம்பி இரண்டாம் இராசேந்திரன் அப்போர்க்களத்திலேயே முடிசூடுகிறான். இரண்டாம் இராசராசன் முடிசூடி நாட்டின் மன்னனாகும் நிகழ்ச்சியை அவனது மெய்க்கீர்த்தி, மண்மடந்தையைக் கைப்பிடித்தான் என்கின்றது. திருமாலுடன் உவமிக்கப்பட்டு கூறப்பட்டிருக்கும் செய்தியானது, ஆயிரம் படங்களையுடைய பாம்பின் படுக்கையில் பாற்கடலில் பள்ளி கொண்டவன் திருமால். அத்திருமாலே பாற்கடலிலிருந்து எழுந்தருளி சோழநாட்டின் மணிமுடியைச் சூடி விளங்குவது போல, இராசராசன் முடிசூடி மண்மடந்தையைக் கைப்பிடித்ததாகக் குறிப்பிடுகின்றது. இதனை,

“பணியணைமிசைப் பரஞ்சோதி பாற்கடல்நின் றெழுந்தருளி
மணிநெடுமுடி கவித்தானென மண்மடந்தையைக் கைப்பிடித்து” (இரண்டாம்; இராசராசன் மெய். 2, 5-6)

என்ற அடிகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகின்றது. மேலும், ஒத்தகருத்தினையுடைய இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசாதிராசன் மெய்க்கீர்த்திகளும் இதனை மெய்ப்பிக்கின்றன.

“நெடுமால் இவனென நெடுமுடி சூடி
இருநில மகளை உரிமையிற் புணர்ந்து” (இரண்டாம் குலோத்துங்கன் மெய். 2, 3-4)

“தேமருவிய பசுந்துளவித் திருநெடுமால் இவன்னென
நீராழி புடைத்து தயகுலத் தவதரித்து
கருங்கலியின் இருளொதுங்கக் கதிர்வெண்குடை நிலாவெறிப்ப
வருங்கதிரின் வெயில்விரிக்கும் மணிமகுடம் புனைந்தருளி” (இரண்டாம் இராசாதிராசன் மெய். 2, 2-5)

மேற்கண்ட அடிகள் முடிசூட்டுதலின் முக்கியத்துவத்தை விளக்கி நிற்கின்றன. கல்வெட்டில் கூறப்பெறும் அறம் முதலிய செய்திகள் அரசனைத் தவிர மற்றவர்களால் செய்யப்பட்ட செயல்களைக் குறிப்பனவாகவே இருந்தாலும், இவ்வரசனது ஆட்சிக்காலத்தில் இச்செயல் செய்யப்பட்டது என்று உரைப்பதினூடாக அரசனின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன.

சிறப்புப் பெயர்

மதுரையை வெற்றிக்கொண்டதனால் ‘மதிரை (மதுரை) கொண்ட பரகேசரி’ எனவும் வீரபாண்டியனை வெற்றி கொண்டதனால் “வீரபாண்டியன் தலைகொண்ட பரகேசரி” எனவும் ‘கடாரம் கொண்டான்’ (முதலாம் இராசேந்திரன்) ‘ஆகவமல்ல குலகாலன்’ (வீரராசேந்திரன்) எனவும் சூட்டிக்கொண்டதோடு தங்களிடம் தோற்றுப்போன அரசர்களின் சின்னங்களையும் அவர்களது சிறப்புப் பெயர்களையும்கூட வெற்றியின் சின்னமாகவேப் புனைந்து கொண்டுள்ளனர்.

“தென்னனைத் தலைகொண்டு சேரனைத்திறைக் கொண்டு’ (வீரராசேந்திரன் மெய். 1, 3)

“மதுரையும் ஈழமும் கொண்டருளின
ஸ்ரீராசாதிராச தேவர்க்கு யாண்டு 4 ஆவது” (இரண்டாம் இராசாதிராசன் மெய். 1, 15)

“மதுரையும் ஈழமும் கருவூரும் பாண்டியன்
முடித்தலை யுங்கொண்டு வீராபி ஷேகமும்
விஜயாபி ஷேகமும் பண்ணி யருளின
ஸ்ரீ திரிபுவன வீரதேவர்க்கு யாண்டு 34 ஆவது” (மூன்றாம் குலோத்துங்கன் (வீரதேவன்) 18-21)

என வரும் அடிகள் மூன்றாம் குலோத்துங்கனின் சிறப்புகள் யாவும் போர் வலிமையினால் பெற்றவையே என்பதைப் புலப்படுத்துகின்றன.


சிற்றரசர்களாய் முடிசூடல்

வெற்றி பெற்ற மன்னர்கள் தங்கள் நாட்டின் அண்டை நாடுகளைத் தங்கள் நாட்டோடு இணைத்துக் கொண்டு ஆட்சி செய்வர். அவ்வாறு மிகப்பரந்த நாட்டை உருவாக்கிய மன்னர்கள் தங்கள் நாட்டுக் குடிமக்களின் நலனைக் காத்து வருவதில் கண்ணும் கருத்துமாய் இருந்து வந்துள்ளனர். அதனால் நாட்டைப் பல்வேறு பெரும்பகுதிகளாகப் பிரித்து மண்டலம், கோட்டம், கூற்றம் என்று அமைத்துள்ளனர். ஆங்காங்கு, பல சிற்றரசர்களையும் அரசப் பிரதிநிதிகளையும் அமர்த்தியுள்ளனர். தங்கள் பொறுப்பில் இருந்த பகுதிக்கும் இளவரசன் ஒருவனை நியமித்து, அதன்வழி பேரரசர்கள் அப்பகுதி மக்கள் நலனில் தங்கள் நேரடிக் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதில் நோக்கமாய் இருந்துள்ளனர். அவ்வப்போது மன்னர்களே படைத்தலைமை தாங்கிப் படையெடுத்துச் செல்லும்போது நாட்டின் பொறுப்பை ஏற்று நடத்துவதும் மன்னர்களுக்கு வேண்டிய பொழுதெல்லாம் துணை நிற்பதும் இளவரசர், சிற்றரசர்களின் கடமைகளாக இருந்தன. பேரரசர்கள் காலத்தில் இளவரசர்கள் படைத்தலைமை ஏற்றுப் போருக்குச் செல்வதும் உண்டு.

இவர்களுள் பெரும்பாலும் அரசர்களின் சுற்றத்தினரே சிற்றரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உரிமை முறையில் அடுத்துப் பட்டம் பெறுபவரே இளவரசர்களாகப் பொறுப்பேற்றனர். இவர்களுக்கு முறையாக முடிசூட்டு விழா நடைபெற்றுள்ளன. பட்டப்பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இச்செய்திகள் அனைத்திற்கும் மெய்க்கீர்த்திகளில் சான்றுகள் கிடைக்கின்றன. சான்றாக,

“தன்சிறியதா தையையும் திருத்தமை யனையும்
குறிக்கொள்தன் இளங்கோக் களையும் நெறியுணர்
தன்திருப் புதல்வர் தம்மையும் துன்றெழில்
வானவன் வில்லவன் மீனவன் கங்கன்
இலங்கையர்க் கிறைவன் பொலங்கழற் பல்லவன்
கன்ன குச்சியர்க் காவலன்எனப் பொன்னணிச்
சுடர்மணி மகுடம் சூட்டிப்… … ...” (முதலாம் இராசாதிராசன் மெய். 2, 4-10)

இம்மெய்க்கீர்த்தியினைக் குறிப்பிடலாம். இரண்டாம் இராசேந்திரனும் தன் ஆட்சியில் முதலாம் இராசாதிராசனைப் போன்றே சிற்றரசர் பொறுப்புகளையும் மற்ற அரசப்பதவிகளையும் சிறப்புப் பட்டப் பெயர்களுடன் தன் பிள்ளைகளுக்கும் தன் சுற்றத்தினருக்குமே அளித்துள்ள செய்தியை,

“தன்சிறிய தாதை யாகிய எறிவலி
கங்கை கொண்ட சோழனைப் பொங்கிகல்
இருமுடிச் சோழனென்றும்
... ... ... ... ... ... ... ... ...
மானச் சிலைக்கையோ ரானைச்சே வகனை
நிருபேந்திர சோழனென்றும் பருமணிச்
சுடர்மணி மகுடஞ் சூட்டி… ... ...” (இரண்டாம் இராசேந்திரன் மெய். 4, 4-37)

என்ற அடிகளிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகின்றது. அவ்விதம் பட்டம் சூட்டப்பட்ட அனைவரையும் தன் நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் உரிய சிற்றரசர்களாக நியமித்து ஆங்காங்கு முடிசூட்டு விழாவும் நடத்திச் சிறப்பித்துள்ளான். இவ்விதமாக, தம் பரந்த நிலப்பகுதியினைச் சோழமன்னர்கள் பாதுகாத்துக்கொள்ளவும், திறம்பட தன் ஆட்சியினை நடத்திச் செல்லவும் இத்தகு அரச தந்திரங்களைப் பின்பற்றியுள்ளனர். பதினொரு நூற்றாண்டுகளுக்கு (கி.பி.10-ஆம் நூற்றாண்டு) முன்னர் கடைப்பிடிக்கப்பட்ட இவ்வரசியல் முறையின் எச்சம் தற்கால அரசியலிலும் (குடும்ப அரசியல்) காணப்படுகின்றது என்றுணர பிற்காலச் சோழர்களின் மெய்க்கீர்த்திகள் அடிப்படை ஆவணங்களாக விளங்குகின்றன.


அசுவமேதயாகம்

அரசன் என்பவன் நாட்டுக்கும் குடிமக்களுக்கும் நலன் தருவதற்கென்று சில வேள்விகள் செய்ய வேண்டும் என்பதே அரசனுக்குரிய ஒழுக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. “அரசன் அசுவமேத யாகம் போன்ற வேள்விகளை நடத்தியும் பிராமணர்களுக்கு அறச்சாலைகள் அமைத்தும் கொடை வழங்கியும் ஆட்சி புரிக” என்று மனுதர்மம் (2011, ப.98) குறிப்பிடுகின்றது. வடபுலத்திலிருந்து வந்தவர்களின் செல்வாக்கானது தமிழகத்தில் நிலைபெற்றபோது, தமிழக வேந்தர்கள் அவர்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றினர். அதன்படி பல யாகங்கள் செய்து, ‘பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’, ‘இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி’ என்ற அடைமொழிகளைப் பெற்றுள்ளனர். “பல்லவர் காலத்தில் ‘சிவஸ்கந்தவர்மன்’ என்ற பல்லவ மன்னன் ‘அசுவமேதம்’, ‘வாஜபேயம்’ முதலிய வேள்விகளைச் செய்தான் என்று உதயேந்திர பட்டயச் செய்திகளையும் பிற்காலச் சோழர்களில் இராசாதிராசன் காலத்தில் பரிவேள்வி (அசுவமேதம்) நடத்தப்பட்டதாகவும், கி.பி.17-ஆம் நூற்றாண்டில் தென்காசிபாண்டியன் ஒருவன் வேதவேள்வி செய்து ‘சோம யாஜி’, ‘தீட்சிதர்’ என்ற பட்டங்களைப் பெற்றுள்ளான்” என்றும் கல்வெட்டு, செப்பேடுகளின் வழி வரலாற்றறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளதை மா. இராசமாணிக்கனார் (2010, ப.115) எடுத்துக்காட்டுகின்றார். வள்ளுவர் இதனை,

“அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்” (குறள். 543)

என்று அறத்திற்கும் அந்தணர் நூலுக்கும் அடிப்படையாய் அரசர்களின் நல்லாட்சி அமைய வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். முதலாம் இராசாதிராசன் காலத்தில் அசுவமேதயாகம் செய்யப்பட்டுள்ளது குறித்து,

“… … … … … மனுநெறி நின்று
அஸ்வமேத யாகஞ்செய் தரசுவீற் றிருந்த” (முதலாம் இராசாதிராசன் மெய். 3, 76-77)

என வரும் மெய்க்கீர்த்தி தெளிவுபடுத்துகின்றது. மேலும், சோழப் பெருவேந்தர்கள் பிராமணர்களைச் சமுதாயத்தின் உயரிய இடத்தில் வைத்துப் போற்றியுள்ளதும் அவர்கள் வழி மனுதர்மத்தைக் காப்பதும் அவர்களுடைய நான்மறைகளைப் போற்றுவதும் அவை கூறும் சாதி முறைகளைக் கட்டிக்காப்பதும் கடமையென வாழ்ந்துள்ளதையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

சோழ மண்டல நாடுகள்

மூன்றாம் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்தியில் முதன்முதலாக சோழமண்டலத்தைச் சார்ந்த பல நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இச்செய்தியால் சோழமண்டலம் பல நாடுகளைக் கொண்ட ஒரு பேரரசாகத் திகழ்ந்தமை புலப்படுகின்றது. அத்துடன் பல நாடுகளும் தனித்தனியேச் செயல்படாது அனைத்து நாட்டிலுமுள்ள தலைமை வாய்ந்த பெருமக்கள் யாவரும் ஒருங்கே கூடி நன்மை தீமையறிந்து நாட்டுநலத்திற்கான தீர்வுகள் எடுத்துள்ளனர். அக்கூட்டம் நடைபெற்ற வருடமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை,

“செயங்கொண்ட சோழ மண்டலத்துப்
பெடைநாட்டு விஷயமான
முடைநாட்டு விஷயத்தோமும்
பெராத்திநாட்டு விஷயத்தோமும்
பகடைநாட்டு வி‘யத்தோமும்
… … … … … … … …
உட்பட்ட பெரியநாட்டு விஷயத்தோமும்
சகயாண்டு ஆயிரத்து ஒருநூற்று ஒன்பத்து ஒன்பதால்
பிங்கலசம் வத்சரத்து… … … … … … …” (மூன்றாம் குலோத்துங்கன் மெய். 4, 3-9)

என்ற அடிகளிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நாட்டுப் பிரிவுகள்

சோழர்கள் தங்கள் நாட்டின் நிருவாக வசதிக்கேற்ப, பேரரசின் பெரும் நிலப்பரப்பினைப் பல பகுதிகளாகப் பிரித்துள்ளனர். இப்பகுதிகளுள் முதன்மைப் பெரும்பிரிவு ‘நாடு’ ஆகும். “சோழப்பேரரசின் தொடக்க காலங்களில் வழங்கிவந்த தொன்மையான ஆட்சிப்பிரிவுகள், முதலாம் இராசராசனால், கி.பி.1009-ஆம் ஆண்டில் ஒரே சீராக மாற்றியமைத்துள்ளதனைக் காணமுடிகின்றது” என்று தமிழ்நாட்டு வரலாறு (1998, ப.409) என்னும் நூல் குறிப்பிடுகின்றது. அவ்வகையில் நாடுகள் எல்லாம் மண்டலங்கள் ஆயின. சோணாடு சோழ மண்டலம் எனவும், தொண்டை நாடு செயங்கொண்ட சோழமண்டலம் எனவும் வழங்கப்பட்டுள்ளன. “கிராமங்கள் அனைத்தும் மத்திய அரசின் உறுப்புகளாகவே விளங்கியுள்ளன. பல கிராமங்கள் சேர்ந்தது கூற்றம். கூற்றத்துக்குக் கோட்டம் என்றும், நாடு என்றும் பெயரிடப்பட்டுள்ளது. பல கூற்றங்கள் சேர்ந்தது ஒரு வளநாடு. பல வளநாடுகள் சேர்ந்தது ஒரு மண்டலம்” என்பதாக கே. கே. பிள்ளை (2000. ப.308) எடுத்துக்காட்டியுள்ளார். ஆக, பல வளநாட்டுத் தலைமக்கள் சேர்ந்திருந்த பெரும் கூட்டத்தினையே மூன்றாம் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்தி விவரித்துள்ளது. இது முன்பில்லாத ஒரு நிருவாக முறையை ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி அதனை நிருவகிப்பதற்காகத் தக்க நிருவாக அலுவலர்களையும் ஏற்படுத்தியமை அவர்களின் அரசியல் அனுபவங்களைப் பிரதிபலிப்பனவாகவே உள்ளன.


கிராமசபையும் குடவோலை முறையும்

உத்திரமேரூரில் முதல் பராந்தக சோழன் காலத்தில் வைகுந்தப் பெருமாள் கோவில் கல்வெட்டொன்று கி. பி. 919-921-இல் உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்தில் கிராம நிருவாகம் குடவோலை முறைப்படி நடைபெற்று வந்ததைக் குறிப்பிடுகின்றது. குடவோலை முறை இராசராசன் காலத்திற்கு முன்பே இருந்து வந்துள்ளமை தெளிவாக விளங்குகின்றது. ஏனெனில், “கி.பி.8-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாறன் சடையனின் கல்வெட்டு ஒன்று பாண்டியநாட்டுப் பார்ப்பனர்களின் கிராமங்களில் குடவோலை முறை வழக்கத்தில் இருந்தது” என்று கே. கே. பிள்ளை (2000, ப.310) எடுத்துக்காட்டியுள்ளமையால் விளங்கிக்கொள்ள இயலுகின்றது.

இம்முறை பிராமணர்கள் அதிகம் வசித்த, அவர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட அகரம், சதுர்வேதி மங்கலம், பிரமதேயம் ஆகிய இடங்களில் கிராமசபை என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்துள்ளன. மற்ற பகுதி மக்கள் இதற்குத் தகுதியானவர்களாகக் கருதப்படாமல் இருந்தமைக்கான காரணங்கள் புலப்படவில்லை. ஒவ்வொரு கிராமசபையும் குடும்பு எனப் பிரிக்கப்பட்டுள்ளது. குடும்பு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதே குடவோலை முறை. இதன்படி நிருவாகம் செய்யும் நபர்களின் பெயர்கள் ஓலையில் எழுதப்பட்டு அவை குடத்தில் போட்டபிறகு இரவும் பகலும் இன்னதென்று அறியாத ஒரு பிராமணச் சிறுவன் குலுக்கி எடுக்க வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மகாசபையை நிருவகிப்பார்கள். இந்தத் தேர்தல் முறையானது சோழமண்டலம் முழுவதும் நடைபெற்றதாகக் குறிப்பு காணப்படவில்லை. பிராமணர் குடியிருப்புகளில் தேர்தல் நடந்தது. அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமசபையில் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கும் வாக்காளராக இருப்பதற்கும் கீழ்வரும் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

1. ¼ பங்கு வேலி நிலம் இருக்க வேண்டும்.

2. சொந்த வீட்டு மனை இருக்க வேண்டும்.

3. வயது வரம்பு 38 லிருந்து 70 வரை.

4. அவருக்கு வேதத்துடன் தொடர்பு இருக்க வேண்டும்.

5. மந்திரம் பிரமாணமாவது தெரிந்திருக்க வேண்டும்.

6. ஒரு வேலி நிலமும் சொந்த வீடும் உள்ளவராக இருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள குடவோலை தேர்தல் முறை கீழ்வரும் இரு செய்திகளைத் தெளிவாக உணர்த்துகின்றது.

அ. தேர்தலில் செல்வந்தர்கள் மட்டும்தான் போட்டி இடலாம்.

ஆ. அவர்கள் பிராமணர்களாகவும் இருக்க வேண்டும்

பணம் இல்லாத ஏழைகள் மற்றும் மற்ற வகுப்பைச் சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடவும் அவர்களது குடியிருப்புப் பகுதிகளில் தேர்தலை நடத்துவதற்கும் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. எனவே தேர்தல் முறைகளே இல்லாத காலத்தில் தேர்தல் சிந்தனை வரவேற்கத்தக்கதுதான். எனினும், இம்முறை சமுதாய மக்கள் எல்லோரையும் பாகுபாடுடைய சாதிய நோக்கில் பிரதிநிதித்துவப்படுத்துவதில் தவறியுள்ளது.

வரிவிதிப்பு

ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் அந்நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்திற்கும் இன்றியமையாதது பணம். எனவே எந்த ஒரு அரசாங்கமும் பொருள் வருவாயின்றி நடைபெற இயலாது. சோழர் காலத்தில் வருவாய்க்கு மிக முக்கியமானதாக நிலவளம் இருந்துள்ளது. சோழர்கள் தங்கள் பேரரசை வலுப்படுத்தவும் நிலைப்படுத்தவும் நாட்டு மக்களிடம் வரி வாங்கியுள்ளனர். அவற்றுள் நிலவரியே முதன்மையாய் இருந்துள்ளது. இவை நெல்லாகவும் பணமாகவும் சில சமயங்களில் இருமுறையிலும் வாங்கப்பட்டுள்ளன. தவிர, “சுங்கவரி, தொழில் வரிகள், மற்றும் காடுகள், கனிப்பொருட்கள், உப்பளங்கள் போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்துவோர் செலுத்தும் வரிகள் அரசு வருவாய்களாக அமைந்துள்ளன” என்கின்றார் கே. ஏ. நீலகண்டசாஸ்திரி (1989,ப.691). பல்வேறு வகையான தொழில்கள் செய்யும் நாட்டு மக்களிடம் நடுவுநிலை குன்றாமல் நியாயமான முறையில் அரசன் வரி வாங்க வேண்டியது, அவனுடைய கடமையும் உரிமையுமாகக் கருதப்பட்டுள்ளது. “சோழர்காலக் கல்வெட்டுகளின் வழி ஏறத்தாழ 400 வகையான வரிகள் இருந்தன” என்று எடுத்துக் காட்டுகின்றார் அ. தட்சிணாமூர்த்தி (2011, ப.480). பிற்காலச் சோழர் மெய்க்கீர்த்திகளிலும் ‘வரிவிதிப்பு’ இருந்ததற்கான சான்றுகள் காணப்படுகின்றன. அதனை முதலாம் இராசாதிராசனின் மெய்க்கீர்த்தியானது,

“ஆறிலொன்று அவனியுள் கூறுகொள் பொருள்களும்
உகந்து… … … … … ” (முதலாம் இராசாதிராசன் மெய். 2, 74-75)

என்று தெரிவிக்கின்றது. மேலும் வருவாயைப் பெருக்கும் மற்றொரு வழியாகத் தம்மிடம் சரண்புகுந்த மற்றும் தோல்வியடைந்த பகை மன்னர்களிடமும் திறைப்பொருள்கள் பெறப்பட்டுள்ளன. இதனை,

“நாடுவளம் படுத்து நையுங்குடி ஓம்பி
ஆறில் ஒன்று கொண்டு அல்லவை கடிந்து
கோவீற்றிருந்து குடிப்புறங் காத்து” (விக்கிரம சோழன் மெய். 3, 4-6)

என்ற விக்கிரம சோழன் மெய்க்கீர்த்தி அடிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.

“சுங்கமில்லாச் சோணாடெங்கும்” என்பது மூன்றாம் குலோத்துங்கனின் மெய்க்கீர்த்தி. இவை போன்று முதலாம் இராசாதிராசன் முதல் இரண்டாம் இராசாதிராசன் வரையிலான பத்து அரசர்களின் ஆட்சியிலும் வரிவசூல் நடந்ததைக் குறித்தும் மெய்க்கீர்த்திகள் எடுத்துக்காட்டுகின்றன. இவர்களுக்குப் பின்னர் அரசு பொறுப்பேற்ற மூன்றாம் குலோத்துங்க சோழனது ஆட்சியிலேயே அதிகப்படியான வரிகள் வசூலிக்கப்படுகிற முறையானது குறைக்கப்பட்டுள்ளது. அதனாலேயே இவ்வேந்தன் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என அழைக்கப் பெற்றுள்ளான். இதனை, மெய்க்கீர்த்தியின் வாயிலாக அறிய முடிகின்றது.


சங்ககால வரி விதிப்பு

மன்னனுக்கு மக்கள் ஆறிலொரு பங்கு வரி செலுத்தி வந்தமையைப் பிற்கால உரையாசிரியர்கள் எடுத்துரைத்தாலும் சங்க இலக்கியத்தில் இதற்குச் சான்றுகள் காணப்படவில்லை. மன்னன் மக்களின் அன்பு கெடாதவாறு வரி வாங்கவேண்டும். மக்களின் அன்பு கெடுமாறு வரி வாங்கினால், ‘யானை புக்க புலம்போல நாடும் கெட்டு மன்னனும் கெடுவான்’ என்று பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பிக்கு அறிவுறுத்தியிருப்பதும், மன்னன் அறநெறி தவறி வரி வாங்கக்கூடாது என்று கலித்தொகையும், கொடுங்கோல் செய்து வரி வாங்குவோன் ‘ஆறலைக் கள்வனையொப்பான்’ என்று வள்ளுவரும், நிலம் சரியாக விளையாத போது மன்னன் வரியைத் தள்ளுபடி செய்தான் என்பதனை வெள்ளைக்குடி நாகனாரும் குறிப்பிடுவதிலிருந்து சங்ககாலம் தொட்டு ‘வரி’ செலுத்தும் முறை இருந்துள்ளமை உறுதியாகின்றது. ஆனால், பிற்காலச் சோழர் காலத்தில்தான் 1/6 வரி பெறுவதும் வரியைச் செலுத்தத் தவறும் நேரங்களில் மக்கள் ஒறுக்கப்படுவதும், சில நேரங்களில் தங்கள் ஊரை விட்டே வெளியேறும் அவல நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர் என்பது தெரிய வருகின்றது.

வரி வசூலிப்பு முறை

நில வரியையும் பிற வரிகளையும் வாங்கி அரசுக்குச் செலுத்தி வந்தவர்கள் அவ்வூரிலுள்ள சபையார்கள். இவர்கள் ‘மகாசபையார்’, ‘பஞ்சவார வாரியர்’ என அழைக்கப் பெற்றுள்ளனர். காணிக்கடன் செலுத்த வேண்டிய குடிமக்களிடமிருந்து ஆண்டுதோறும் வரியைப் பெற்று ஒன்று சேர்த்துத் தலைநகருக்கும் அரசாங்கப் பொருள் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அந்நாட்களில் நிலங்களில் விளைந்த நெல்லை ஆறு கூறாக்கி அவற்றுள் ஐந்து கூறுகளை வெள்ளாண் வகையில் நிலவுரிமையாளராக இருக்கிற குடிகளுக்கு அளித்து விட்டு, எஞ்சியுள்ள ஒரு பகுதியை மட்டுமே அரசாங்கத்திற்குரிய நிலவரியாகப் பெற்று வந்துள்ளனர். இவற்றுக்கு ஆறிலொன்று வரி வாங்குவதென்று பெயர். மெய்க்கீர்த்திகள் வாயிலாகச் சோழர்கள் இம்முறையைப் பின்பற்றி வந்தவர்கள் என்பது இவ்விடம் குறிப்பிடத்தக்கது.

வரிச்சுமையும் வரிவிலக்கும்

கல்வெட்டு, செப்பேடுகளின் வழி காணவியலும் வரிவிதிப்பு, வரிநீக்கு முறைகளை நோக்குகின்ற போது அக்காலத்திய வரிச்சுமையைக் குறித்து எளிதில் ஆராய இயலாததாகவே உள்ளது. ஏனெனில் ஒருபுறம் அனைத்து (சொகுசு) வசதிகளும் கிடைக்கப் பெற்றவர்களின் கூட்டம் இருக்க, மறுபுறம் கள் இறக்குபவர்கள், ஓடம் செலுத்துபவர்கள், வண்ணார்கள், குயவர்கள், நெசவாளிகள், விவசாயிகள் என்று அனைத்து உழைப்பாளி பிரிவினர்களின் தலைகளில் வரிச்சுமைகள் அதிகமாகவே இருந்துள்ளன. பெரிய அதிகாரிகளுக்கும், சிற்றரசர்களுக்கும், கோவில்களுக்கும் வரியைப் பெற உரிமைகள் இருந்துள்ள காரணத்தினால் ஒரே சீரான முறையில் வரி வசூல் செய்திருப்பர் என்பது உறுதி இல்லை. அவர்கள் அளவுக்கும் மீறி வரிவிதிக்கின்ற நேரங்களில் அரசாங்கத்திடம் முறையிடுவது அல்லது ஊரைவிட்டே வெளியேறுவது என்ற இரண்டு வழிகளைத் தவிர மக்களுக்கு மாற்று வழி இல்லாத நிலையே இருந்துள்ளது என்பது தெரிய வருகின்றது. “வெண்கலம் எடுத்து மண்கலம் உடைத்து” என்ற சொற்றொடர் சோழர்கால கல்வெட்டுக்களில் காணப்பட்டுள்ளதாக துரை. இளமுருகு (2012, ப.17) சுட்டுவதின் வழி வரியைப் பெறுவதற்கு அவர்கள் கையாண்ட கடுமையான முறைகளுள் இதுவும் ஒன்றாக இருந்துள்ளது என்பது தெளிவாகின்றது. அஃதாவது உழைக்கும் வர்க்கத்தினரின் வீடுகளில் இருந்த ஒரே ஆடம்பரப் பொருள் சில வெண்கலப் பாத்திரங்கள் மட்டுமே. அந்தப் பாத்திரங்களையும் வரி என்ற பெயரில் பெற்றுக்கொண்டு, அவர்களின் வீடுகளில் உபயோகத்திற்காக வைத்திருந்த மண்ணாலான சட்டி, பானைகளை உடைத்து நொறுக்கியுள்ளனர். வரி பெறும் முறை கொடுமையாக இருந்துள்ளமைக்கு கே. ஏ. நீலகண்டசாஸ்திரியார் (1989, ப.707) “கி. பி.1001-ல் சில படையிலார் என்னும் அதிகாரிகள் மகேந்திர மங்கலச் சபையாரைத் தண்ணீரில் முக்கியும், வெய்யிலில் நிறுத்தியும் சித்திரவதை செய்ய, அவர்கள் இராசராசனிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அரசர் அவர்கள் குறைகளைப் படைத்தலைவர்களின் தீர்ப்புக்குத் திருப்பி அனுப்பியுள்ளான்” என்று கூறுவது சான்றாகின்றது. இதிலிருந்து அவ்வப்பகுதிகளில் உள்ள அதிகாரிகளை அரசன் ஆதரிப்பது என்ற நிருவாக மரபு அக்காலத்தில் இருந்துள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. மேலும், “இராசேந்திரன் கல்வெட்டு ஒன்றில் செண்பைக் கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணிடம் வரி பெறச் சென்ற அதிகாரி தகாதமுறையில் நடந்து கொண்டுள்ளதால் அவள் நஞ்சுண்டு உயிர் நீத்ததாகவும், அப்பாவத்திற்காக அவ்வதிகாரி கோயிலுக்கு 32 காசு தானம் வழங்கி விளக்கு ஏற்றியுள்ளான்” என்று கே.ஏ. நீலகணடசாஸ்திரியார் (1989, ப.708) எடுத்துக் காட்டியுள்ளார். இதன்வழி அதிகாரத்திலும் ஆட்சியிலும் இருப்போர் எத்தகு தவறுகளும் பாவங்களும் செய்ய நேரிடும் தருவாயில் அதற்குக் கழுவாயாகக் கோயில்களுக்குத் தானம் அளிப்பதால் நிவர்த்தி செய்ய இயலும் என்னும் முறையைக் கையாண்டுள்ளனர். இவை ஒருபுறமிருக்க, ஒவ்வொரு கிராமத்திலும் எந்தவிதமான வரியும் விதிக்கப்படாத சில நிலங்கள் இருந்துள்ளன. இதனை எடுத்துக்காட்டும் விதமாக “ஊர் நத்தம், கோவில் இருக்கும் நிலம், குளம், வாய்க்கால், பறைச்சேரி, கம்மாளச்சேரி, சுடுகாடு இவற்றின்மீது வரி விதிக்கப்படாது விலக்கு அளிக்கப்பட்டுள்ளன” என்பதைக் கே.கே. பிள்ளை (2000, ப.315) எடுத்துக்காட்டியுள்ளார்.


சோழர்கால வரிகள்

சோழர் கால அரசாங்கம் குடிமக்களின் மேல் விதித்து வந்த வரிகளும் கட்டணங்களும் பல உண்டு. அவற்றுள் சில, ஊர்க்கழஞ்சு, குமரகச்சாணம், மீன்பாட்டம், கீழிறைப் பாட்டம், தசபந்தம், மாடைக்கூலி, வண்ணக்கக் கூலி, முத்தாவணம், திங்கள் மேரை, வேலிக்காசு, நாடாட்சி, ஊராட்சி, வட்டி நாழி, பிடா நாழி அல்லது புதா நாழி, கண்ணாலக் காணம், வண்ணாரப்பாறை, குசக்காணம், நீர்க்கூலி, தறிப்புடவை அல்லது தறிக்கூறை, தரகு அல்லது தரகுபாட்டம், தட்டார்பட்டம், ஆட்டுக்கிறை அல்லது ஆட்டுவரி, நல்லா, நல்லெருது, நாடுகாவல் வரி, ஊடுபோக்கு, விற்பிடி, வால மஞ்சாடி அல்லது வாலக் காணம், உல்கு, ஓடக்கூலி, மன்றுபாடு, மாவிறை, தீயெரி, ஈழம் பூட்சி என்பனவாகும்.

முடிவுரை

* ஒரு நாட்டின் சிறப்பு என்பது அந்நாட்டின் இயற்கை வளத்தாலும் வேளாண்மைப் பெருக்கத்தாலும்தான் தீர்மானிக்கப்படுகின்றது. அவ்வகையில் சோழநாடு மாதம் மும்மாரி பொழியப்பெற்ற நிலையில் வளர்ச்சியடைந்துள்ளமைக்கும் சோணாடெங்கும் சோற்று மலையாகக் காட்சியளித்தமைக்கும் சோழர்களின் ஆட்சிச் சிறப்பே காரணமாக இருந்திருக்கின்றது.

* சோழநாட்டில் அரசனே மையமாகச் செயல்பட்டுள்ளான். அவனுக்கியைந்தாற் போன்றே மக்களும் இசைவுடன் வாழ்ந்துள்ளனர். அரசன் தன் ஆட்சி முறையில் இருந்து தவறாமல் முறைப்படி முடிசூட்டி ஆட்சி நடத்தியுள்ளான். முடிசூடுதல் என்பது சோழராட்சியில் இன்றியமையாததாகக் கருதப்பட்டுள்ளது. தந்தைக்குப் பின் மகன் அரசு என்ற முறை பின்பற்றப்பட்டு அரண்மனையில் விமரிசையாக முடிசூட்டுதல் நிகழ்த்தப்படும் இயல்பு இருப்பினும், காலச்சூழலுக்கு ஏற்ப தலைமையற்ற தருணங்களில் அத்தலைமையை ஏற்பதற்காகப் போர்க்களங்களிலும் சோழர்கள் முடிசூட்டியுள்ளனர் என்பதையும் அறிய முடிகின்றது.

* பேரரசர்கள் போரில் வென்ற பல நாடுகளைத் தான் ஒருவனாக இருந்து நிருவகிப்பதென்பது இயலாது. ஆகையால் மையத்தில் அரசன் ஆட்சி செய்து கொண்டு, சுற்றியிருக்கும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளையும் ஆட்சி செய்ய மகன்கள், பேரன்கள், சிறிய, பெரிய தந்தைகள் போன்றோரை நியமித்துள்ளனர்.

* சோழர்கள் தாங்கள் வென்ற நாடுகளை எக்காலத்திற்கும் தன்வசமே வைத்துக்கொள்ளவும், உறவினர்களைப் போன்று மற்றவர்கள் மிகுதியும் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ மாட்டார்கள் என்பதாலும் நம்பிக்கைக்குரிய சொந்தங்களைத் தன் கீழ் சிற்றரசர்களாக முடிசூட்டியுள்ளனர் என்பது மெய்க்கீர்த்திகளின் வழியே தெளிவாகின்றது.

* பேரரசர்களுக்கு இணையாக அரசமாதேவிகளும் அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்துள்ளனர். இதனை, வீரராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன் ஆகியோரின் மெய்க்கீர்த்திகள் வெளிப்படுத்துகின்றன.

* சோழநாடு எண்ணற்ற பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டதாகவே செயல்பட்டுள்ளது. நாட்டின் நிருவாகத்திற்கேற்பக் கிராமங்கள், கூற்றங்கள், கோட்டங்கள் என்றும் பல கூற்றங்கள் சேர்ந்தது ஒரு வளநாடாகவும் பல வளநாடுகள் சேர்ந்தது ஒரு மண்டலமாகவும் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்துள்ளமையை அறிய முடிகின்றது.

* மன்னனுக்கு மக்கள் ஆறிலொரு பங்கு வரி செலுத்தியுள்ளனர். நானூறுக்கும் மேற்பட்ட வரிகள் சோழநாட்டில் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நிலவரியையும் பிற வரிகளையும் வசூல் செய்து அரசுக்கு செலுத்தி வந்தவர்கள் அவ்வூரிலுள்ள சபையார்கள் என்பதைக் காணமுடிகின்றது.

* வரி வசூலிப்பில் கடுமையுடன் நடந்து கொண்டுள்ளனர் சோழர்கள். இவ்வாறு அடக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட பல்வேறு சூழல்களில் அதற்கான உரிமைகளைப் பெறுவதற்காகக் குடிமக்கள் குறிப்பிட்ட இயக்கங்கள் வழி கிளர்ச்சிகள் செய்துள்ளனர்.

* பலவித பொருள் இழப்புகளும் உயிர்ச் சேதங்களும் நிகழ்த்தப்பட்ட பின்னரே ஓரிரு இடங்களில் உரிமை மீட்பு கிடைக்கப் பெற்றுள்ளது. அதுவும் நிரந்தரமானதாகக் கிடைக்கப்பெறவில்லை என்பதும் புலப்படுகின்றது.

* சோழர் காலத்தைப் பொற்காலம் என அடையாளப்படுத்தும் வரலாற்றை மீண்டும் மீண்டும் மக்கள் வாழ்வியல் பார்வையில் மறுவாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய தேவை இருப்பதை இக்கட்டுரை பின்னாய்வு நிலையில் வலியுறுத்த விழைகின்றது.

பார்வை நூல்கள்

1. சுப்பிரமணியம், பூ. மெய்க்கீர்த்திகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1983.

2. இராசமாணிக்கனார், மா. சோழர் வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2012.

3. நீலகண்ட சாஸ்திரி, கே. ஏ. சோழர்கள் 1,2. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை, 1989.

4. தட்சிணாமூர்த்தி, அ. தமிழர்கள் நாகரீகமும் பண்பாடும், யாழ் வெளியீடு, சென்னை, 2011.

5. தமிழ் நாடன், மனுதர்மம், காவ்யா பதிப்பகம், சென்னை, 2011.

6. தமிழ் நாட்டு வரலாற்றுக் குழு, தமிழ் நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம் முதல் பகுதி, தமிழ் வளர்ச்சித்துறை வெளியீடு, சென்னை, 1997.

7. பிள்ளை, கே.கே. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2000.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p170.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License