சகிப்புத் தன்மை
முகில் தினகரன்
அந்தப் பேருந்து மெல்ல நகர ஆரம்பித்ததும் எங்கிருந்தோ ஓடி வந்து அவசரமாய்த் தாவி ஏறி கூட்டத்தினுள் முண்டியடித்து நுழைய முற்பட்ட அந்த இளைஞன் தெரியாத்தனமாய் ஒரு நடுத்தர வயதுக்காரரின் காலை தன் பூட்சுக் காலால் மிதித்து விட்டு நடுநடுங்கிப் போனான். தொடர்ந்து அவரிடமிருந்து வந்து விழப் போகும் வசை மழைகளைத் தாங்கிக் கொள்ள அவன் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்க அந்த நடுத்தர வயதுக்காரரோ சிறிதும் கோபமின்றி 'பார்த்து தம்பி” என்று அமைதியாயச் சொல்லிவிட்டு சிநேகமாய்ப் புன்னகைத்தார். வியப்பு மேலோங்க விக்கித்துப் போய் சிலையாய் நின்றான் அந்த இளைஞன். 'இந்தக் காலத்திலும் இப்படியொரு மனிதரா?”
மேலே விவரிக்கப்பட்ட காட்சியில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய பாத்திரம் 'அந்த நடுத்தர வயதுக்காரர்” என்றால் அதைவிடக் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சம் அந்தப் பாத்திரத்தின் குணாதிசயம்.
ஆம்!! சகிப்புத் தன்மை.
மனிதனுடைய சமுதாயப் பண்பாடுகளில் மிகவும் முக்கியமானவொன்று சகிப்புத் தன்மை. இது ஆண்டவன் தந்த பரிசு எனலாம். ஏனெனில் இது எல்லா மனிதர்களிடத்திலும் சமமான அளவில் இருப்பதில்லை. சிலர் மிகவும் சகிப்புத் தன்மை உடையவர்களாக இருப்பர். சிலரோ சிறிதும் சகிப்புத் தன்மை அற்றவர்களாக இருப்பர். பொதுவாகவே சகிப்புத் தன்மைக் குணம் அதிகமாய் உள்ளவர்கள் வாழ்க்கையை எல்லாச் சூழ்நிலைகளிலும் எளிதாகக் கடந்து விடுகின்றனர். மாறாக சகிப்புத் தன்மைக் குணம் குறைவாய் உள்ளவர்களோ அரைவேக்காட்டுத் தனமான அதிரடி முடிவுகளால் அல்லலுற்று… அவதிப்பட்டு அழிந்து விடுகின்றனர்.
சகிப்புத் தன்மை என்பது வலிமை
நடப்புச் சமூகத்தில் நல்லவர்களாகவும் பெருந்தன்மைப் பண்பாளர்களாகவும் இருப்பவர்கள் பலமுனைகளிலிருந்து வருகின்ற பல்வகையான சொல்லடி மற்றும் இடர்பாடுகளைத் தாங்க வேண்டியிருக்கும். அவ்வாறான பல்முனைத் தாக்குதல் நிகழும் போது அவர்கள் தங்கள் சகிப்புத் தன்மைக் குணத்தைக் கேடயமாக்கி அமைதி காப்பர். அந்த அமைதிதான் அவர்களின் ஆற்றலுக்கு அறிகுறி… வலிமைக்கு உதாரணம். அவர்களுடைய அந்த ஆற்றலானது நாட்பட... நாட்பட ஆன்மபலமாக மாறி அவர்களின் வாழ்க்கையை மேலும் மேலும் வளம் பெறச் செய்து விடுகின்றது. சகிப்புத் தன்மையில் பக்குவமடைந்தோர் என்றுமே பிறருடன் பிணக்குகள் கொள்வதில்லை. மாறாகப் பிறர் கூறும் கடுஞ்சொற்களைக் கூட இன்சொல் கொண்டு இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வர்.
ஒரு நிறுவனத்தில் மேலாளர் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு இந்தச் சகிப்புத் தன்மைக் குணமானது தலையாய பலமாகும். அவர் தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சிறு சிறு தவறுகளுக்காக அவர்களைத் தண்டிப்பது பணி நீக்கம் செய்வது போன்றவற்றில் ஈடுபடாமல் தன் சகிப்புத் தன்மைக் குணத்தின் மூலம் அவர்களின் முதல் தவறைச் சகித்து… இரண்டாம் தவறைத் திருத்தி… மூன்றாம் தவறை முறைப்படுத்தினாரென்றால் அங்கு நான்காம் தவறின் நிகழ்வே நின்று போய்விடும். அத்தோடல்லாது தொடர்ந்து தவறே செய்த அந்தப் பணியாளர் குறிப்பிட்ட அந்தப் பணியில் நிபுணத்துவம் பெற்று விளங்கவும் சந்தர்ப்பம் ஏதுவாகின்றது. இது போன்ற சூழ்நிலையில் அந்த மேலாளருக்கு அவரின் சகிப்புத் தன்மைக் குணமே ஒரு பலமாகி… அவருக்கும் பணியாளர்களுக்குமிடையே ஒரு பாலமாகவம் அமைகின்றது.
சகிப்புத் தன்மை என்பது குடும்ப நெறி
சகிப்புத் தன்மை மறந்த குடும்பங்களில் கணவன் மனைவி உடன்பிறப்புக்கள் என்னும் உறவு முறைகள் யாவும் உடைந்து போய்விடுகின்றன. ஒற்றுமை நிலை கெட்டுக் குடும்பமே கலைந்து போகும் நிலை ஏற்பட்டுவிடும். சகிப்புத் தன்மைக் குணம் நிறைந்த குடும்பங்களில் ஒவ்வொருவரின் உறவு முறைகளும் உறவின் தன்மைகளும் தெளிவாகத் தெரிவதால் ஒற்றுமையுணர்வு ஓங்கும்.
சமீப காலங்களில் குடும்ப நீதி மன்றங்களில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கான ஆதாரக் காரணம் சகிப்புத் தன்மையைத் தொலைத்து விட்ட தன்மையே. ஒரு சிறிய நெல்லிக் கனியை எடுத்து கண்ணருகே வைத்துப் பார்க்க அது பூசணிக்காய் அளவில் பெரிய தோற்றத்தையே தரும். அதே போல்தான் வாழ்க்கை ஓட்டத்தில் மனித உறவுகளுக்குள் ஏற்படும் சிறிய சிறிய பிரச்சினைகளும். அவற்றை நாம் வெகு அருகில் நின்று கூர்ந்து நோக்கினால் அவை பூதாகரமாய்த்தான் தோன்றும். வித்தியாசம் நம் பார்வையிலேதானன்றி பிரச்சினையில் அல்ல.
சகிப்புத் தன்மை என்பது ஏற்றத்தின் அறிகுறி
இன்றைய இளைஞர்கள் சகிப்புத் தன்மைக் குணத்தை இளமையிலிருந்தே பழகி வருதல் வேண்டும். அவ்வாறு பழகி வருவார்களேயாயின் அவர்களின் எதிர்கால வாழ்வு நிச்சயம் ஏற்றமிக்கதாகத்தான் அமையும். இளைஞர்கள் முதலில் தங்களின் சகிப்புத் தன்மையை தங்களிடத்திலேயே காட்டிக் கொள்ள வேண்டும். பிறகு மற்றவர்களிடத்திலும் காட்டுதல் வேண்டும். யாராவது…ஏதாவது குறை கூறும் போது அதைப் பெரிய விஷயமாகக் கொண்டு அதற்காக நொந்து போய் வருந்துவது… தங்களைத் தாங்களே மனத்தால்… உடலால் வருத்திக் கொள்வது போன்றவை சகிப்புத் தன்மையற்ற தவறான அணுகு முறைகள். அது மட்டுமல்ல மனிதப் பண்பையே மறந்த மாபெரும் குற்ற முறைகள்.
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்டிப்புக்கள் தங்களின் எதிர்கால வளத்தினை முன்னிறுத்தியே நிகழ்த்தப் படுகின்றன என்பதனை உணர்ந்து அவற்றைச் சகித்துத் தங்களைச் செதுக்கிக் கொள்ளும் பட்சத்தில் மாணவர்கள்… மாமனிதர்களாக முடியும்.
சகிப்புத் தன்மை என்பது சமூகநெறி
'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்று கிறித்துவ வேதம் உரைப்பது போல சகிப்புத் தன்மையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் சமூகத் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருக நல்வாய்ப்பு அமைகின்றது. தொட்டில் தொடங்கி காடு வரை நம்மைப் பீடித்திருக்கும் பெரு நோய்களான சாதி மற்றும் மதம் போன்றவைகளுக்கு சரியான மாற்று மருந்து சகிப்புத் தன்மைக் குணமே. மற்றவர்களின் இடையூறுகளை நாம் சகித்துக் கொள்ளப் பழகிடும் போது அதுவே அவர்களை வெல்லும் வழியாக மாறுகின்றது. அது மட்டுமன்றி நம்முடைய அந்தக் குணமே அவர்களுக்குத் தங்கள் தவறினை உணர்த்தி மாற்றத்தையும் ஏற்படுத்தி விடுகின்றது.
சகிப்புத் தன்மை என்பது அஹிம்சை நெறி
சகிப்புத் தன்மைக் குணத்திற்கான சத்திய உதாரணமாய்த் திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் தன்னுடைய பக்குவப்பட்ட சகிப்புத் தன்மையால் ஆங்கில சாம்ராஜ்யத்தையே அசைத்தவர் என்பது நானிலமறிந்த உண்மை. வன்முறைகளாலும் போராட்டங்களாலும் சாதிக்க இயலாத பல அரும் பெரும் சாதனைகளை சகிப்புத் தன்மையென்னும் அஹிம்சை ஆயுதத்தால் சாதிக்கலாம் என்பதை அகிலத்திற்கு உணர்த்தியவர் அண்ணல் காந்தியடிகள்.
இருட்டு வெளிதனிலே இழுத்துச் செல்லும்
குருட்டு வாழ்விற்கோர் குந்தகம் நேராது
மருட்டும் பாதையிலே மலிந்துள இடர்தனையே
விரட்டும் வழிகாட்ட வீரியகுண மொன்றுண்டு…
அதுதான்… சகிப்புத் தன்மை
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.