ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களில் இலக்கிய வளமை
சி. மகேஸ்வரி
முன்னுரை
பண்டைத் தமிழரின் அகப்புற வாழ்வை நமக்கு எடுத்துரைப்பன சங்க இலக்கியமாகும். சங்க இலக்கியப் புலவர்கள் இயற்கைச் சூழலுடன் வாழ்க்கையை இணைத்துப் பாடுவதில் மிகுந்த உளநாட்டம் உடையவர்களாக இருந்திருக்கின்றனர். மனித மனத்தின் வெளிப்பாடாகவும் உணா்ச்சியின் வெளிப்பாடாகவும் உள்ள சங்க இலக்கியத்தைப் பாடிய புலவர்கள் போற்றுதலுக்குரியவர்களாவர். அந்த வகையில் குறிப்பிடத்தக்கவர் ஒக்கூர் மாசாத்தியா் ஆவர். இவர் இயற்றிய பாடல்களில் இலக்கிய வளமை எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
ஒக்கூர் மாசாத்தியார்
சங்க அக இலக்கியக் கவிஞா்களுள் குறிப்பிடத்தக்கப் பெண் கவிஞர் ஒக்கூர் மாசாத்தியார் ஆவார். இவர் பாண்டிய நாட்டில் திருக்கோஷ்டியூர்ப் பக்கத்தில் உள்ள ஒக்கூர் என்ற ஊரில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இவரின் இயற்பெயர் சாத்தியார். ஒக்கூர் என்பது இவர் பிறந்த ஊராகக் கருதப்படுகிறது. இவர் பாடிய பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பாகிய எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகையில் ஐந்தும் (126, 139, 186, 220, 275), புறநானூற்றில் ஒன்றும் (279), அகநானூற்றில் இரண்டும் (324, 384) ஆகும். ஆக மொத்தம் இவர் எட்டுப் பாடல்களைப் பாடியுள்ளார்.
ஒக்கூர் மாசாத்தியார் முல்லைத் திணையைப் பாடுவதில் வல்லவர் என்பது அவர் பாடிய பாடல்களிலிருந்து புலப்படுகின்றது. குறுந்தொகையில் 139-வது பாடலை மருதத்திணையிலும் மற்ற நான்கு பாடல்களை முல்லைத் திணையிலும் பாடியுள்ளார். புறநானூற்றில் ஒரு பாடலை மூதின் முல்லைத் துறையிலும் அகநானூற்றில் இரண்டு பாடல்களை முல்லைத் திணையிலும் பாடியுள்ளார். ஆக இவரை “முல்லைப் புலவர்“ என்று கூறுவோமானால் அது மிகையாகாது.
இலக்கிய வளமை
புலவர்கள் தாங்கள் இயற்றும் செய்யுளுக்கு அழகு சேர்ப்பதற்காக உவமை, உள்ளுறை, இறைச்சி, உருவம், மொழிநடை, பாடுபொருள், காட்சி அமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவதே இலக்கிய வளமை ஆகும்.
உவமை
ஒரு பொருளை முன்னர் அறிந்திராத ஒருவருக்கு அதனை அறிவிக்கும் பொருட்டு அதனோடொத்த வேறொரு பொருளைச் சுட்டி இதுபோல இது என்று கூறுவதே உவமையாகும். இவ்வுவமை தெரிந்ததைக் கொண்டு தெரியாததைப் புரிய வைக்கவும் தெரிந்ததை மேலும் விளக்கம் பெற வைக்கவும் உதவுகின்றது இதனைத் தொல்காப்பியர்,
”உவமை என்பது கவிஞனின் அனுபவப் பொருள். அவன் ஏற்கனவே கண்டு வைத்த பொருளைப் புதிதாகக் காணும் பொருளோடு பொருத்தி வைத்து பொருள் காண்பது உவமை ஆகும்” என்று கூறுகின்றார் ரா. சீனிவாசன் (ச.இ.உப. 2)
ஒரு செய்தியைச் சுவைபடச் சொல்லவும், அழகுள்ள ஒரு பொருளைப் பற்றிக் கூறவும் உவமையைக் கவிஞர்கள் பயன்படுத்துவர். பண்பினாலும், செயலினாலும், பயன் தருவதாலும் உள்ள ஒற்றுமையை நுணிகியறியும் திறனுடையவர்கள் அவர்கள். ஆதலின், உவமை பற்றி செய்திகள் இயல்பாகவே பாடல்களில் அமைகின்றன. இவற்றை ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களிலும் பார்க்க முடிகிறது.
பொருள் தேடிச் சென்ற தலைவன் கார்காலம் வந்தும் தலைவியைக் காண வரவில்லை என்பதை,
”பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே-தோழி-நறுந்தன் காரே” (குறுந். 126)
”கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி
எயிறு என முகையும் நாடற்குத்” (குறுந். 186)
என்ற பாடல்களின் மூலம் முல்லைக் கொடியிடத்தே விளங்கும் அரும்புகளை தலைவியின் பற்களுக்கு உவமையாக்கி அவளை நோக்கிச் சிரிப்பதாகக் கூறியுள்ளார். மற்றொரு பாடலில்,
“வெருகு சிரித்தன்ன, பசுவீ மென்பிணிக்
குறுமுகை அவிழ்ந்த நறுமலா்ப் புறவின் (குறுந். 220)
காட்டுப் பூனை சிரித்ததுபோல் முல்லை அரும்புகள் மலர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், மழை பெய்து வளர்த்த பசிய இளம் பயிர் இளம் கிளிப் பிள்ளையின் மேல் புதிதாக முளைத்து வரும் சிறகு போலவும், காற்று வீசுதலால் கிளைகளிலுள்ள மலர்கள் சிச்சிலிப் பறவையின் சிறகுகள் போலவும் காட்சி தருவதாக,
“தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன”
... ... ... ... ...
சிறற்சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த“ (அகம். 324)
என்ற பாடல்களின் மூலம் ஒக்கூர் மசாத்தியார், தம்முடைய பாடல்களில் உவமையை அழகாகக் கையாண்டுள்ளார் என்பதை நம்மால் காண முடிகிறது.
கற்பனை
நடக்காத ஒன்றை நடப்பதுபோல் கற்பனை செய்வது கற்பனையாகும். சங்க இலக்கியப் பாடல்கள் கற்பனைத்திறன் மிக்கவையாகும். பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்துச் சென்ற தலைவன் தலைவியைக் காண இன்னும் வரவில்லை. தலைவன் எவ்விடத்தில் உள்ளாரோ என்று தலைவியைப் பார்த்துக் கேட்பது போல முல்லைக் கொடியானது அரும்புகளையே பற்களாகக் கொண்டு தலைவியைப் பார்த்து சிரிக்கும் என்பதை ஒக்கூர் மாசாத்தியார்,
” பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொடு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே-தோழி-நறுந்தண் காரே!“ (குறுந். 126)
என்ற பாடலில் தலைவியை முல்லைக் கொடியாகவும், கார்காலத்தைத் தலைவனாகவும் கொண்டு, முல்லை வளம் பெற்றுப் பூத்துப் பொலிந்திருக்க தலைவி நலிந்திருத்தலை நினைத்து ஏங்குவது ஒக்கூர் மாசாத்தியாரின் கற்பனைத் திறனை பறைசாற்றுகின்றன.
காட்சி அமைப்பு
புலவர் தம் பாடலைப் பாட சூழல் என்பது முக்கியமானதாகிறது. சங்க இலக்கியப் பாடல்களை நாம் படிக்கும்போது, அச்சூழல் நம் கண்முன்னே காட்சி அமைப்பாகின்றது. பெண்பாற் புலவர்களும் தங்கள் பாடல்களை அவ்வாறே அமைத்துள்ளனா். முல்லைத் திணையின் சூழலை “அழகியல்“ தன்மைகளோடு நம் முன் படம் படித்துக் காட்டுகின்றார் ஒக்கூர் மாசாத்தியார். முல்லை நிலமும் அதற்குரிய கருப்பொருள்களும் உரிப்பொருளுமே கவிதைச் சூழல்களாக அமைந்துள்ளன. ஆற்றியிருத்தல் என்பது முல்லை நிலத்திற்கே உரிய தனித்தன்மையாகும். அதுவே ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களில் முதன்மை பெறுகின்றது. பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் தலைவியிடம் குறித்த காலத்தில் வருவதாகக் கூறிச் செல்கின்றான். ஆனால், அவனால் குறித்த காலத்திற்குள் வரவியலவில்லை. அதனால் தலைவியின் உள்ளம் தவிக்கின்றது என்பதை,
“ஆர்கலி ஏற்றொடு கார்தலை மணந்த
... ... ... ... ...
துயில்துறந் தனவால்-தோழி!-எம் கண்ணே (குறுந். 186)
என்ற பாடலின் மூலம் அற்றியிருத்தலை நம் கண்முன்னே காட்சிபடுத்தியுள்ளார் புலவர்.
கருப்பொருள்
நிலத்தில் காலத்தால் தோன்றுவது கருப்பொருளாகும். கருப்பொருள் என்பது ஒவ்வொரு நிலத்திற்கும் உரித்தான தெய்வம் முதலாகத் தொழில் ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கு ஆகும் என்கிறது நம்பியகப்பொருள். கருப்பொருள் பற்றிய செய்தியை ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களிலும் காணமுடிகிறது என்பதை,
“பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்“ (குறுந். 126)
“மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகினம் மாலை உற்றெனப்” (குறுந். 139)
”கொல்லைப் புனத்த முல்லை மென்கொடி” (குறுந். 186)
“பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
... ... ... ... ...
வண்டுசூழ் மாலையும் வாநார்” (குறுந். 220)
“முல்லை ஊர்ந்த கல் உயர்வு ஏறிக் “ (குறுந். 275)
“தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த
... ... ... ... ...
வண்டு உண் நறுவீ துமித்த நேமி“ (அகம். 324)
“முயற்பறழ் உகளும் முல்லை அம் புறவில்
கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண்“ (அகம். 384)
“யாவை எறிந்து, களத்து ஒழிந்தனனே
... ... ... ... ...
பெருநிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே (புறம். 279)
என்ற பாடல்களின் மூலம் ஒக்கூர் மாசாத்தியார் தாம் பாடிய எட்டு பாடல்களிலும் முல்லை மலா், கோழி, காட்டுப் பூனை, வண்டு, கிளி, சிச்சிலிப் பறவை, யானை, பசு போன்ற கருப்பொருள்களை பயன்படுத்தியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.
பாடுபொருள்
இலக்கியக் கூறுகளில் ஒன்றாகக் கருதப்படுவது பாடுபொருளாகும், ஒரு செய்யுள் எந்தக் கருத்தினை முன் வைத்து பாடப்படுகிறதோ அவை பாடுபொருளாகும். சங்ககாலப் பாடுபொருள் என்பது காதல், வீரம் என்பனவாகும். வீரம் என்னும் நிலையில் குறிப்பிட்ட மன்னனின் ஆட்சிப் பெருமை, வீரத்தின் பெருமை, கொடைப் பெருமை போன்றவற்றைப் பறைசாற்றுகின்றது. போர்த் தொழிலே முதன்மையாக விளங்கிய அக்காலக்கட்டத்தில் வீரத்தினை நிலை நிறுத்தும் பாடல்கள் தோன்ற அதனைப் பொருளாகக் கொண்டு பாடல்கள் பல அமைக்கப்பட்டன.
அந்தவகையில் ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களிலும் வீரத்தைப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.
ஒரு பெண்ணானவள் முதல் நாள் நடந்த போரில் தன் தந்தையை இழந்தும், நேற்று நடந்த போரில் தன் கணவனை இழந்தும், இன்று போர்ப்பறை சத்தம் கேட்டதும் தன் குடிக்கு ஒரே மகனான அச்சிறுவனுக்கு தலையில் எண்ணெய் தடவிக் குடுமியை ஒப்பனை செய்து, அறையில் இருந்த வெண்மையான ஆடையை அவனுக்கு உடுத்தி வேலொன்றை எடுத்து, அவனது கையிலே கொடுத்து மகன் முகத்தை தன் முகத்துக்கு நேரே திருப்பி, “மகனே உன் தந்தையும் தன்னையரும் போர்செய்து தமது கடனைக் கழித்து நம் மறக்குடியின் புகழை நிறுவினர்.
நீ இப்போது போர்க்களம் நோக்கிப் போய்வா என்று அனுப்பி வைத்த நிகழ்ச்சியை,
“கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
... ... ... ... ...
செருமுகம் நோக்கிச் செல்க என வடுமே” (புறம். 279)
என்ற பாடலின் மூலம் ஒக்கூர் மாசாத்தியார் வீரத்தைப் பாடுபொருளாக வைத்து பாடியிருப்பதை பார்க்க முடிகிறது.
மொழிநடை
மனிதன் தன் எண்ணங்களையும் கருத்துக்களையும் மொழியின் வாயிலாக வெளிப்படுத்துகின்றான். ஒவ்வொருவரும் மொழியினை கையாளும் போது அவரவர்க்கு என்று தனியான ஒரு நடை உருவாகிறது. அவையே மொழிநடையாகும்.
ஒக்கூர் மாசாத்தியாரும் தனக்கென்று ஒரு மொழிநடையை அமைத்துக் கொண்டு தன்னுடைய பாடல்களில் எளிய நடையை அமைத்தும், உரையாடல் தன்மை பெற்றும், சிறப்பான பின்புலக் காட்சி அமைப்பினைக் கொண்டும், மண்சார்ந்த உவமைகள் நிறைந்தும் இயற்றியிருப்பதை நம்மால் காணமுடிகிறது.
முடிவுரை
மேற்கண்டவற்றின் வாயிலாக, ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களில் பாடுபொருளாக கற்பனை நயம் மிகுந்துள்ளதையும், இயற்கைச் சூழல் நிறைந்துள்ளதையும், தலைவி காத்திருத்தலையும் காண முடிகின்றது. கிராமிய மக்களின் மண் வாசனையை பதிவு செய்துள்ளார் என்பதையும் பார்க்கமுடிகிறது. உவமை, கற்பனைநயம், காட்சி அமைப்பு, கருப்பொருள், மொழிநடை போன்றவை ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களுக்கு இலக்கிய வளமை சேர்ப்பனவாக அமைந்துள்ளது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.