தூதிலக்கிய வளர்ச்சியில் வரன்முறை மாற்றங்கள்
முனைவர் ப. மீனாட்சி

சமூக நிகழ்வுகளை நிழலாய்த் தொடர்ந்து நிஜமாக்குபவை இலக்கியங்கள். இவ்விலக்கியங்கள் தனிப்பட்ட மக்களின் வாழ்விற்கும், சமூகத்திற்கும், அரசியலுக்கும் பயனுள்ளதாக விளங்குகின்றன. மனிதனது பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வியல் கூறுகளை வகைமையுடன் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. இவற்றைப் பேரிலக்கியமெனவும், சிற்றிலக்கியமெனவும் இரண்டாகப் பகுக்கலாம். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருட்களுள் ஒன்றோ, இரண்டோ குறைந்து வரக்கூடிய இலக்கியத்தைச் சிற்றிலக்கியம் எனலாம். இதற்குப் “பிரபந்த இலக்கியம்” என மற்றொரு பெயரும் உண்டு. காலகட்டத்திற்கேற்ப சிற்றிலக்கியம் தன் கிளையைப் பலவாக விரித்துப் பரப்பியுள்ளது. அக்கிளைகளுள் ஒன்றே “தூது”. இத்தூது, இலக்கியமெனத் தனித்து வளர்ச்சி அடையத் துவங்கிய பிறகு கடவுளர், ஆசிரியர், வள்ளல் இவர்களுள் யாரேனும் ஒருவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்டது. தூதிலக்கியங்கள் புலவர்களின் கற்பனைத்திறன், ஆளுமைத்திறன், கருத்துப் புலப்பாடு முதலானவற்றை வெளிக்கொணர்கின்றன. ஓர் இலக்கியம் செம்மையுற வேண்டுமானால், அதற்கான இலக்கண வரையறை அவசியமாகும். சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப வரன்முறையும் மாற்றங்களுக்கு உட்படுவது இயல்பென்பதை தூதிலக்கிய வளர்ச்சியின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்.
தமிழ் இலக்கியங்களில் தூது
சிற்றிலக்கியங்கள் தொல்காப்பியத்தில் வேர் கொண்டு சங்க இலக்கியத்திலும், காப்பியங்களிலும் தம் பயணத்தைத் தொடர்ந்து இன்று தனி இலக்கியமாக ஆலமர விழுதைப் போல் வளர்ந்துள்ளது. சிற்றிலக்கியத் தோற்றம் குறித்து ஆராய்ந்த இளங்குமரன், “தொல்காப்பியமே பல சிற்றிலக்கிய வகைகளுக்குக் கால்கோள் செய்தது” என்றார். “பாட்டு, தொகை, பாவிகம் ஆகியவை பல சிற்றிலக்கியங்களை உருவாக்கின. அரசியல், கலையியல், தொழிலியல், வாழ்வியல், இறையியல் முதலியன சிற்றிலக்கிய வகைகளை உருவாக்குவதோடு உரமிட்டு வளர்த்தன” என்றும் கூறுகின்றார்” (1)
இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள் தேசப்பற்று, நாட்டு விடுதலை, தீண்டாமை, பெண்ணடிமை என்பது போன்ற சமுதாய விழிப்புணர்ச்சிக் கருத்துக்களை உட்கொண்டே இலக்கியங்களாக முகிழ்த்துள்ளன.
சங்க இலக்கியம்
சங்க இலக்கியத்தில் தூது குறித்த செய்திகள் அகம், புறம் என்று பிரித்து அறியக்கூடிய வகையில் விரித்து உரைக்கப்படுகின்றன. “முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை” என்றார் தொல்காப்பியர். ஆனால், அரசரும் பிறவும் தூதுக்குரியர் என்ற நிலை மாறி அரசியலில் பெண்பாலரும் முக்கியப் பங்கு வகித்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. அதியமான் நெடுமானஞ்சிக்காகத் தொண்டைமானிடம் அரசியல் தூதாகச் சென்ற ஔவையாரின் பாடல்,
“இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்டிரள் நோன்காழ் திருத்தி நெய்யணிந்து
கடியுடை வியன்நகரவ்வே: அவ்வே
பகைவரைக் குத்தி கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதங்கொடுத்து
இல்லாயின் உடன்உண்ணும்
இல்லோர் ஒக்க்ல் தலைவன்
அண்ணல் எம்கோமான் வைந்நுதி கோலே” (2)
மேலும் தலைவன், தலைவி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் தூது போக்கும் நெறியும் சங்க .இலக்கியத்தில் காணப்படுவதை
“சூழ்கம் வம்மோ தோழிபாழ் பட்டுப்
பைதற வெந்த பாலை வெங்காட்டு
அருஞ்சுர மிறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்சு நீடிய பொருளே” (3)
என்னும் பாடல் வழி அறிந்து கொள்ள முடிகின்றது.
முன்னைய தூதுப் பாடலில் அறிவின் ஆழத்தையும், பின்னைய தூதுப் பாடலில் அன்பின் ஆழத்தையும் காண முடிகிறது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் கட்டுக்குள் வாழும் பெண்கள், தமது காமத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க இயலாது. அத்தகைய சூழ்நிலையில் தான் இத்தூது நிகழ்வு நடைபெறுகிறது. சங்கப் பாடல்களுள் அகத்துறைப் பாடல்களில்தாம் தூதுப் பாடல்கள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.
“நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன்துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
மறப்பு அரும் பணைத்தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே” (4)
என்னும் குறுந்தொகைப் பாடல் வரைந்து கொள்ளாமல் காலம் தாழ்த்திய தலைவனது செயலைக் கடிந்துரைப்பதாக உள்ளது. அவர் வருவார் என்று நம்பி இருக்கும் தலைவி, தன் மனப்பாட்டைத் தோழிக்கு எடுத்துரைத்து, தூது செல்லும் படி வேண்டுகிறாள். இதனைப் புலவர் பெருமக்கள் “புள்வாய்த்தூது” என்பர். இவ்வண்ணம் சங்க இலக்கியத்தில் தூது குறித்தச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.
திருக்குறள்
பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள், மனித வாழ்வியல் அறங்களைத் தொகுத்துரைக்கிறது. இதில் “தூது” என்னும் தனி அதிகாரமே உள்ளது. இதில் அரசியல் தூதுக்குரிய இலக்கணம் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் பொருட்பாலிலும், காமத்துப்பாலிலும் தூது பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
தூதுவர் பண்புநலன்
மனிதனாய் பிறப்பெடுத்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தனிப்பட்ட பண்புநலன்கள் உண்டு. இதில் தூதுவர்க்குரிய பண்பு நலன்களாகச் சிலவற்றை வள்ளுவர் வகுத்து உரைக்கிறார்.
“அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று” (5)
கனவுத்தூது
தமிழரது பழமைப் பண்புகளில் தலையாயது விருந்தோம்பல். கனவில் விருந்தினர் வந்தாலும் உபசரித்தல் வேண்டுமென்பதை,
“காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து” (6)
என்னும் குறள் வழி விளக்குகிறார்.
நெஞ்சுத்தூது
கடலாழத்தை அளவிட முடியும். ஆனால் ஒரு பெண்ணின் மன ஆழத்தை அளவி்ட முடியாது. அவளது உணர்வுகளும், எண்ண அலைகளும் நெஞ்சில் மட்டுமே பதிவாகியிருக்கும் என்பதால் “நெஞ்சனைத் தூதுப்” பொருளாகத் தேர்ந்தெடுக்கிறாள்.
“பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோள் பூசல் உரைத்து” (7)
“உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅ அய்வாழிய நெஞ்சு” (8)
எனத் தலைவி, தன் நெஞ்சினைத் தலைவனிடத்துத் தூது அனுப்பிய செய்தியை விளக்குகிறார்.
பக்தி இலக்கியம்
அரசியலிலும், காதலிலும் தூது விடுத்தது போன்றே அடியார்கள் பரம்பொருளிடமும் தூது விடுத்தனர். இறைவனை நாயகனாகவும், தம்மை நாயகியாகவும் பாவித்துப் பாடியவை அகப்பொருள் மரபுகளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. அகப்பொருளுக்கென்றிருந்த தூதின் நிலை, மாற்றம் பெற்றதோடு சமய இலக்கியங்களில் இறையருள் பெறுவதற்கும் இவ்விலக்கிய உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேவாரம்
சமயக்குரவர்களாகிய நால்வரது படைப்புகளிலும் தூது இடம் பெற்றுள்ளது. திருஞான சம்பந்தர் திருத்தோணிபுரத்து இறைவனுக்குத் தூது அனுப்பிய பதிகம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. அளி, குருகு, வாரணம், நாரை, கபோதகம், அன்னம், அன்றில், கிளி, குயில் முதலிய பொருட்களைத் தூது அனுப்புவதை,
“சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால்
முறையாலே யுணத் தருவன் மொய்பவளத் தொடுதளரந்
துறையாரு கடற்றோணி புரத்தீசன் துளங்குமிளம்
பிறையாளன் றிருநாம மெனக் கொருகாற் பேசாயே” (9)
என்னும் பதிகப் பாடல் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது.
திருவாசகம்
மாணிக்கவாசகரது “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்பது பழம் பெருமை வாய்ந்த கூற்றாகும். இத்தன்மை வாய்ந்த திருவாசகத்தில்,
“நீலவுருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவும்
கோல அழகிற் திகழும் கொடிமங்கை உள்ளுறைகோயில்
சீலம் பெரிதும் இனிய திருவுத்தர கோசமங்கை
ஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய்” (10)
என்னும் பொருட்டு தூதுச் செய்தி இடம்பெற்றுள்ளது.
நாச்சியார் திருமொழி
ஆண்டாள் மேகத்திடம் விடுக்குமட விண்ணப்பங்கள் அவள் தன் காதல் உளப்பாங்கைப் பாங்குடன் எடுத்துரைக்கின்றன.
“வான் கொண்டு கிளர்ந்தெளுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர்சிதறித் திரண்டேறிப் பொழிவீர்காள்
ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனையுட லிடந்தான்
தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே”(11)
இரண்யனை வதம் செய்த நரசிம்ம மூர்த்தியிடத்து தன் அன்பினை எடுத்துரைக்கும்படி மேகத்தை ஆண்டாள் தூது விடுவதாக உள்ளது.
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கையாழ்வாரால் படைக்கப்பெற்றது. பெரிய திருமொழி,
“திருத்தாய் செம்போத்தே
திருமாமகள் தன்கணவன்
மருந்தார் கொல்புகழ் மாதவனைவரத்
திருத்தாய் செம்போத்தே” (12)
செல்வத் திருமகளது மணாளனான திருமாலிடத்துத் தூது செல்லுமாறு பணிக்கும் நிகழ்வினை பெரிய திருமொழி வரிகள் உணர்த்துகின்றன.
திருவாய்மொழி
நம்மாழ்வரது படைப்பாகிய திருவாய்மொழியில்,
“தூதுரைத்தல் செப்புமின்கள் தூதுமொழிவாய் வண்டினங்காள்
போதிரைத்து மதுநுகரும் பொழில்மூழிக் களத்துறையும்
மாதரைத்தம் மார்பகத்தே வைத்தார்க்கென் வாய்மாற்றம்
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர்வளையும் கலையுமே” (13)
நன்கு மணம் வீசும் மலரினது தேனை உறிஞ்சி அதனுள் திளைத்திருக்கும் வண்டினை எம்பெருமானிடத்து தூது அனுப்புவதாக உள்ளது. இவ்வண்ணம் பக்தி இலக்கியங்களில் தூதுச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.
முடிவுரை
* கி.பி.12 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.19ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை சிற்றிலக்கிய வளர்ச்சிக்காலம் எனலாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அன்றைய சமூக நிகழ்வுகளை வெளிக்கொணர்வதாகப் படைப்புகள் பல உருவாயின.
* சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த தூது தொல்காப்பியர் காலந்தொட்டே சங்க இலக்கியம், சங்கம் மருவிய கால இலக்கியமென முகிழ்த்து, இன்று தகவல் தொழில் நுட்பத்தில் வானளாவிய வாகை சூடியுள்ளது.
* புலவரது ஆளுமைத் திறனையும், கற்பனைத் திறனையும் காலப் போக்கினையும், சமூக நிகழ்வினையும் தூதிலக்கியங்கள் வெளிக் கொணர்கின்றன.
* தூதிலக்கிய நோக்கும் பயனும் சமுதாய விழிப்புணர்ச்சியை மையமாகக் கொண்டது என்பதை இலக்கியப் பதிவுகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
அடிக்குறிப்புகள்
1. தமிழ்ப் போராசிரியர்கள், தமிழ் ஆராய்ச்சி வரலாறு, ப.144.
2. ஔவை. துரைச்சாமிப்பிள்ளை (உ.ஆ), புறநானூறு, பா.எ.35.
3. ஔவை துரைச்சாமிப்பிள்ளை (உ.ஆ) ஐங்குறுநூறு, பா.எ.317
4. வி. நாகராஜன், குறுந்தொகை மூலமும் உரையும், பா.எ.266.
5. மு. கருணாநிதி, (உ.ஆ), திருக்குறள், ப.141.
6. மேலது, ப.249.
7. மேலது, ப.253.
8. மேலது, ப.245.
9. ஞானசம்பந்தன், தேவாரத் திருப்பதிகங்கள், 1:14:10.
10. வி. கரு. இராமநாதன் (பதி.ஆ), திருவாசகம் மூலமும் உரையும், ப.223.
11. ராஜகோபாலன் (உ.ஆ), நாச்சியார் திருமொழி, ப.85.
12. அ. மணவாளன் (தொ.ஆ) தமிழில் பக்தி இலக்கியம். ப.80.
13. அரங்கராஜன் (பதி.ஆ) திருவாய்மொழி,ப.27.
துணைநூற்பட்டியல்
1. தமிழ் பேராசிரியர்கள், தமிழ் ஆராய்ச்சி வரலாறு, பச்சையப்பன் ஆய்வரங்கம், தமிழ்த்துறை, பச்சையப்பன் கல்லூரி, சென்னை, 1998.
2. துரைச்சாமிபிள்ளை.ஔவை (உ.ஆ), புறநானூறு, கழகவெளியீடு, சென்னை, 1947.
3. துரைச்சாமிபிள்ளை.ஔவை(உ.ஆ), ஐங்குறுநூறு, கழகவெளியீடு, சென்னை, 1947.
4. கருணாநிதி. ஆ (உ.ஆ), திருக்குறள் தெளிவுரை, திருமகள் பதிப்பகம், சென்னை.
5. நாகராஜன். வி., குறுந்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.
6. இராமநாதன் வி. கரு. (பதி.ஆ), திருவாசகம், ஸ்ரீ இந்து பதிப்பகம், சென்னை, 7 ஆம் பதிப்பு - 2010.
7. அரங்கராஜன், திருவாய்மொழி, அமுதா நிலையம், சென்னை, 1986.
8. மணவாளன் அ. அ. (தொ.ஆ), தமிழில் பக்தி இலக்கியம், சாகித்திய அகாதெமி வெளியீடு, புதுதில்லி, 2004.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.