நகையெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியர்கள் - அகநானூற்றை முன்வைத்து
பேராசிரியர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்,
டி. எல். ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விள்ளப்பாக்கம்
முன்னுரை
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியர். (தொ.மெய்.3) அவற்றுள் நகைக்குரியவிரிகளாக எள்ளல், இளமை, பேதமை, மடமை என்பவற்றை விரித்துள்ளார். (தொ.மெய்.4). இக்கட்டுரை தொல்காப்பியர் விரித்துரைக்கும் நகைக்குரிய மெய்ப்பாடுகளில் அகநானூற்றுப் பாடல்கள் உரையாசிரியர்களின் உரைகளில் எவ்வாறு பொருத்தி ஆளப்பட்டுள்ளது என்பதனை ஆராய்கிறது.
மெய்ப்பாடு (தன்-பொது, பிறர்)
மெய்ப்பாட்டையும் அதன் உட்பிரிவுகளையும் தன்னிடம் நிகழ்தல், பொதுவாக நிகழ்தல், பிறரிடம் நிகழ்தல் என மூன்று வகையாகப் பிரிப்பர். அவற்றுள் இளம்பூரணர், பேராசிரியர், சோமசுந்தரபாரதி ஆகியோர் தன்னிடம் பிறரிடம் எனும் இந்தப் பிரிவுகளைக் கையாள்கின்றனர். ஆனால், கி. இராசா என்ற இலக்கண ஆசிரியர் பொதுவாகக் கூறுகின்றார். இக்கட்டுரை தன்னிடம் நிகழ்தல், பிறரிடம் நிகழ்தல், பொதுவாக நிகழ்தல் என்ற மூன்று கூறுபாடுகளையும் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நகை தோன்றும் களன்கள்
நகை எனும் மெய்ப்பாடு தோன்றும் களனைத் தொல்காப்பியர்,
”எள்ளல் இளமை பேதைமை மடனென்று
உள்ளப்பட்ட நகை நான்கென்ப”(மெய்.நூ.4)
என்கிறார்.
உரையாசிரியர்கள் பார்வையில் நகை
நகையெனும் மெய்ப்பாட்டினை விளக்க, எள்ளுதல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கு நகைக்குரிய பொருளாகும் எனவும் நகைப்படுபொருள் கண்ட வழிமுறுவலோடு தோன்றக் கூடிய மகிழ்ச்சிப் பொருளாவதும் நகை எனக் கொள்க. (இளம் மெய்.நூ.4 உரை) என்கிறார். இதனை விளக்க,
”நகையெனப்படுதல் வகையாதெனினே
நகையெனச் செய்வோன் செய்வகை நோக்கு
நகையொடு நல்லவை நனி மகிழ்வதுவே”
என்பதனைமேற்கோளாகஎடுத்தாண்டுள்ளார்.
”உடனிவை தோன்றும் இடமியாதெனினே
... ... ... ... ...
... ... ... ... ...
ஆன்ற மரபின் இன்னுழி எல்லாந்
தோன்றும் என்ப துணிந்தி சினோரே” (செயிற்றியம்)
எனும் செயிற்றிய நூற்பாவினில், முடவர் செல்லும் செலவு எள்ளுதற் பொருண்மையாயிற்று, மடவோர் சொல்லுஞ்சொல் மடமைப் பொருண்மையாயிற்று, கவர்ச்சி பெரிதுற்றுரைப்போர் கூற்றுப் பேதைமையாயிற்று, குழவி கூறு மழலை இளமை பொருளாயிற்று, ஏனையவெல்லாம் இவற்றின் பாற்படும் காண்க. புணர்ச்சி நிமித்தமாகக் கூற்று நிகழ்ந்துழிவரும் நகை இளமை என்பதாற் கொள்க. இப்பொருண்மை செயிற்றியத்தில் “வலியோர் கூறும மெலிவு” என்பதாற் கொள்க. (இளம் மெய்.நூ.4 உரை) என்கிறார் இளம்பூரணர். எள்ளல், இளமை, பேதைமை, மடன் எனக் கருதப்பட்ட நகையானது நான்கு என்கிறார் பேராசிரியர். இவை நான்கும் பொருளாகிச் சத்துவமும் குறிப்பும் சுவையுமென்னும் மூன்றற்கும் முதற்கண்ணவாகலான் மூன்றனையும் அடக்கிப் பொருட்பகுதியான் அவற்றைக் கூறுகின்றவாறு இதுவென்பது. இவை நான்கும் ஒன்று இரண்டாகி எட்டாதலும் உடைய. (பேரா. மெய்.நூ.4. உரை) என்கிறார் பேராசிரியர். நகைக்குரிய இயல்பும் அதன் வகை நான்கும் மேற்கூறிய நூற்பா எடுத்துரைக்கிறது (ச.சோ.பாரதி. மெய்.நூ.4. உரை) என்கிறார் ச. சோ. பாரதி. நகை என்னும் மெய்ப்பாடு எள்ளல், இளமை, பேதைமை, மடன் எனும் நான்கனையும் நிலைக்களனாகக் கொண்டு தோன்றும் (கி.இராசா மெய்.நூ.4. உரை) என்கிறார் கி. இராசா.
இவற்றின் வழி நகை என்பது எள்ளல், இளமை, பேதைமை, மடன் எனும் நான்கு நிலைக் களன்களைப் பற்றித் தோன்றும் என்பதும் இவை ஒவ்வொன்றும் தன்னளவே இரட்டித்து நான்கானது (பொது) எட்டாதலும் (தன்னிடம், பிறரிடம்) இயல்பே என்றதும் அறிய முடிகின்றது.
எள்ளல்
எள்ளல் என்பது தன்னிடமும் பிறரிடமும் நிகழுமென இளம்பூரணரும், எள்ளலென்பது தான் பிறரை நகுதலினாலும் பிறர் தன்னை நகுதலினாலும் பிறக்கும் எனப் பேராசிரியரும், நகைமொழிஅதாவது கேலி என ச. சோ. பாரதியும், இகழ்ச்சிக்குரிய குறிப்பு, நகைமொழி, கேலி பேசுதல் என கி. இராசாவும் கூறியுள்ளனர். எள்ளலென்பதுதான் எள்ளுதற்குரிய பொருளாகுமிடத்து பிறனிடமும் பிறன் எள்ளுதற்குரிய பொருளாகுமிடத்து தம்மிடமும் எள்ளல் தோன்றும் என்பது அறியப்படுகிறது. எள்ளல் என்பதனை விளக்க “நகையாகின்ற தோழி” எனும் அகநானூற்றுப் பாட்டினுள்,
”தண்துறை ஊரன்திண்தார் அகலம்
... ... ... ... ...
... ... ... ... ...
மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே” (அகம்.56)
எனும் அடிகளை இளம்பூரணர் எடுத்துக் காட்டியுள்ளார். இப்பாடலடிகளில் தலைவனைப் பரத்தையின் இல்லத்தில் சேர்த்துவிட்டுத் திரும்பிய அழகிய யாழினையுடைய பாணன் வீதி வழியாகச் சென்றான். அப்போது புதிதாகக் கன்றினை ஈன்ற பசுவானது அவனைப் பாய்ந்தமையால் பயந்து யாழினைக் கீழேப் போட்டுவிட்டு என் இல்லம் புகுந்தான், அப்போது என்னிடம் தோன்றிய உவகையினையும் மறைத்துக் கொண்டு அவனை நோக்கி இதுவல்ல உம்மனை அதோ உள்ளது உம்மனை என்றேன். அப்போது அவன் என்னை கைதொழுத நின்ற செயலானது நினைக்க நினைக்க எனக்கு நகைதான் விளைகின்றது தோழி! எனத் தலைவி தோழியினை நோக்கிக் கூறும் முகமாக இப்பாடல் அமைந்துள்ளது. தன் கண் நிகழ்ந்த எள்ளல் பொருளாக நகை பிறப்பதனை விளக்கப் புகும் பேராசிரியர் கலி. 61 ஆம் பாடலை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், பிறரெள்ளியது பொருளாகத் தன் கண் நகை பிறப்பதனை,
”நல்லைமன்னெனநகூஉப் பெயர்ந்தோளே” (அகம்.248)
எனும் பாடலினைக் கொண்டு விளக்கியுள்ளார். இப்பாடலடிகளில் தன் இல்லத்தில் வந்து நின்ற அவனைக் கண்ட அன்னை! விரைந்து என் முகத்தினையும் பார்த்தனள் “நீ மிகவும் நல்லவள்“ என்றும் நகை தோன்றச் சொல்லிச் சென்றாள் எனத் தலைவி தோழியிடம் கூறுமுகமாகச் சிறைப்புறமிருக்கும் தலைவனுக்குக் கூறியது. எள்ளலினை விளக்கப் புகும் ச. சோ. பாரதி குறுந்.8, கலி.61, குறுந்.384, அகம் 56 ஆகிய பாடல்களைக் கொண்டு விளக்கியுள்ளார். எள்ளல் பொருளாகப் பிறந்த நகைக்கு கலி.61, குறுந்.8 ஆகிய பாடல்களை மேற்கோள்களாக் கி. இராசா எடுத்தாண்டுள்ளார்.
இளமை
இளமை என்பது தன் மாட்டும் பிறர் மாட்டும் நிகழுமென இளம்பூரணரும், தான் இளமையால் பிறரை நகுதலும், பிறரிளமை கண்டுதான் நகுதலும் என இரண்டு எனப் பேராசிரியரும், மழவு அஃதாவது பிள்ளைத்தன்மை என ச. சோ. பாரதியும், பிள்ளைத்தன்மை என கி. இராசாவும் கூறியுள்ளனர். இதனை விளக்கப் புகும் உரையாசிரியர்களுள் இளம்பூரணர், ச. சோ. பாரதி ஆகியோர் மேற்கோள் காட்டவில்லை. கி. இராசா கலி.13 ஆம் பாடலை மேற்கோள் காட்டியுள்ளார். பேராசிரியர் கலி.13, கலி.86 ஆகியப் பாடல்களைத் தன் இளமை காரணமாக நகை பிறந்தது என்பதற்கு எடுத்துக் காட்டியுள்ளனர். மேலும்,
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்” (அகம்.16)
எனும் பாடலைப் பிறரிளமை காரணமாக நகை பிறந்தலுக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.
பேதைமை
பேதைமை என்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாகப் போடல் என இளம்பூரணரும், பேதைமை என்பது அறிவின்மை எனப் பேராசிரியரும், சோமசுந்தர பாரதியாரும், கி. இராசாவும் கூறியுள்ளனர். பேராசிரியர் தன் பேதைமைப் பொருளாக நகை பிறத்தலுக்கு
”நகைநீகேயாய்தோழீ!” (அகம்.248)
எனும் பாடலையும், பிறன் பேதைமை காரணமாக நகை பிறத்தலுக்கு,
”நகையாகின்றே தோழி
மம்மர்நெஞ்சினன் தொழுத நின்றதுவே” (அகம்.56)
(*பிழையாகப் பாடல் எண் அகம்.59 என க.வெ. மெய். உரைவளத்தில் குறிப்பிட்டுள்ளார்)
எனும் பாடலையும் மேற்கோள் காட்டியுள்ளார். கி. இராசா அகம்.248 ஆம் பாடலை மேற்கோள் காட்டியுள்ளார்.
மடன்
மடனென்பது பொருண்மையறியாது திரியக்கோடல் என இளம்பூரணரும், தன் மடமையால் நகுதலும் பிறன் மடமையால் நகுதலுமென இவ்விரண்டாம் எனப் பேராசிரியரும், ஏழைமை என ச. சோ. பாரதியும், ஏழைமை(எளிதில் நம்பும் இயல்பு) அறிவிக்க அறிதலும் அவ்வாறு அறிந்ததைப் பிறர்க்கு அறிவிக்க இயலாததும் என கி. இராசா கூறியுள்ளார். இவற்றை நோக்கும் போது மடம் - அறிவின்மை எனும் முடிவிற்கு வரலாம். தன் மடத்தான் தோன்றிய நகைக்குப் பேராசிரியர் குறுந்.168, குறள்.1095 ஆகியவற்றையும் பிறன் பொருளான் நகை தோன்றியதற்கு,
”நாம்நகையுடையம்நெஞ்சே!
... ... ... ... ...
... ... ... ... ... நம்மொடு
தான்வரும்என்ப, தடமென்தோளி” (அகம்.121)
எனும் பாடல் மிகுந்த வருந்துதலை ஏற்படுத்தக் கூடிய கோடைக் காலமானது நீடித்த மிகவும் உயர்ந்த ஏற்ற வழியிலே, நாளுக்குநாள் வறுமைப்பட்டுக் கொண்டிருக்கும் மண் கலந்த நீரையுடைய சிறிய குளத்திலே தோண்டப்பட்டக் குழியின் பக்கத்திலேயுள்ள பருக இயலாத கலங்கிய நீரினைக் கொண்டு, கன்றுகளையுடைய மடப்பம் பொருந்திய பிடியின் மெல்லிய தலைப்பகுதியினைக் கழுவிவிட்டுத், சேற்றினைக் கொண்டுதான் நீராடியதினாலே பிடியோடும் கன்றோடும் வேறுபட்ட வலிய களிறு, சிவந்த காம்பினையுடைய வெள்ளியகொத்து அசையத் தன் துதிக்கையினால் பற்றிச் சொறி பொருந்திய தன் முதுகினை உராய்த்துக் கொண்ட, வழிக்கு அயலதாகவுள்ள மாமரத்தின் தங்குவதற்கென அமைந்த வரிவரியாகவுள்ள நிழலிலே தங்கி, பருத்த மென்மையான தோளினையுடைய தலைவி, நம்மோடு தானும் வருவள் என்னா நின்றாள், நெஞ்சே! இது கேட்க நாம் நகையினை உடையேமாய் இரா நின்றோம் எனத் தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியது.
முடிவுரை
எள்ளல் எனும் மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர் - அகம்.56 ஆம் பாடலையும் பாரதி அதே பாடலினைப் பிறரிடம் தோன்றும் எள்ளலினை விளக்கவும், பேராசிரியர் அகம்.248 ஆம் பாடலைப் பிறரிடம் தோன்றும் எள்ளலுக்கும் எடுத்துக் காட்டியுள்ளார். இளமை எனும் மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர், பேராசிரியர், ச.சோ.பாரதி, கி.இராசா ஆகியோர்அகநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டவில்லை. பேதைமை எனும் மெய்ப்பாட்டினுள் தன்னிடம் தோன்றும் பேதைமையினை விளக்கப் பேராசிரியர் அகம்.248 ஆம் பாடலையும், பிறனிடம் தோன்றும் பேதைமையினை விளக்க அகம்.56 ஆம் பாடலினையும் எடுத்துக் காட்டியுள்ளார். கி. இராசா பொதுவாகப் பேதைமையினை விளக்க அகம்.248 ஆம் பாடலை எடுத்துக் காட்டியுள்ளார். இளம்பூரணர், ச. சோ. பாரதி ஆகியோர் மேற்கோள்களை எடுத்தாளவில்லை. மடன் எனும் மெய்ப்பாட்டினுள் பிறரிடம் தோன்றும் மடனை விளக்கப் பேராசிரியர் அகம்.121 ஆம் பாடலை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். இளம்பூரணர், ச. சோ. பாரதி, கி. இராசா ஆகியோர் இம்மெய்பாட்டினை விளக்க மேற்கோள்களை எடுத்தாளவில்லை. நகையெனும் மெய்ப்பாட்டினை விளக்க மேற்கண்ட நான்கு உரையாசிரியர்களும் சேர்ந்து 11 பாடல்களை மேற்கோள்களாக எடுத்தாண்டுள்ளனர். அவற்றுள் அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை ஆகிய நூல்களில் தலா 3 பாடல்களையும், புறநானூறு, திருக்குறளில் தலா 1 பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இவற்றினை நோக்கி ஆராயும்போது மெய்ப்பாட்டியல் உரையாசிரியர்களின் நகையெனும் மெய்ப்பாட்டிற்கான உரையில் அகநானூறு ஒரு முதன்மையிடத்தினைப் பெற்றுத் திகழ்ந்துள்ளது என்பது இக்கட்டுரையின் முடிபாகும்.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.