பதினெண் மேற்கணக்கு நூல்களில் கதைப்பின்னல்
வ. மணிகண்டன்
முனைவர் பட்ட ஆய்வாளர் (முழுநேரம்), தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை.
சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழர் வாழ்வியலை உணர்த்தும் மூலங்களாகத் திகழ்கின்றன. அவர்களுடைய காதல், வீரம் ஆகிய உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளாக அவை விளங்குகின்றன. தனிமனித வாழ்வினையும் சமுதாய வாழ்வினையும் விளக்கும் திறம்பெற்றனவாக இருக்கின்றன. எனவே, பழந்தமிழர் வாழ்க்கை நிலைகளை ஆராயப்புகுவார்க்குச் சங்க இலக்கியங்களே முதன்மை மூலங்களாகத் திகழ்கின்றன.
தற்காலத்தில் புனைகதை (சிறுகதை, நாவல்) சிறந்ததொரு இடத்தைப் பெறுகின்றன. குறைந்த அடிகளைக் கொண்டும் ஒரு பாடலுக்குள் கதையையும் பொதிந்து வைத்திருப்பதால் ஒவ்வொரு பாடலும் சிறுகதைக்கான கருவைக் கொண்டு விளங்குகிறது. ஆகவே, சிறுகதைக்கு வித்தாக அமைகிறது. காப்பியங்களில் ஒவ்வொரு பாடலும் பல அடிகளைக் கொண்டு நீண்ட நெடிய கதைப்பின்னலோடு விளங்குகிறது. ஒவ்வொரு பாடலும் புதினத்திற்கான வித்தாக அமைவதைக் காணமுடிகிறது. எனவே, சிறுகதை, புதினத்திற்கானக் கூறுகளில் ஒன்றான கதைப்பின்னலைச் சங்க இலக்கியங்களிலிருந்து பிரித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
கதைப்பின்னல்
தலைப்பு தொடங்கி கதை முடியும்வரை கதையை அமைக்கும் முறை. கதையைச் சொல்லும் உத்தி. எந்த ஒரு சிறுகதைக்கும் அடிப்படையான மூலக்கருத்து ஒன்று உண்டு. இதைப் பல நிகழ்வுகளின் மூலம் விளக்கலாம். இவற்றைக் கலைஞர் ஒன்றன் பின் ஒன்றாக அமைக்கும் பொழுது கதைக்கு ஓர் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இப்படி அமைக்கும் முறையேக் கதைப்பின்னலை அமைக்கும் முறையாகும்.
'கதை என்பது - சிறுகதையாயினும் நெடுங்கதையாயினும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு. நிகழ்ச்சிகளை அவை நடந்த வரிசையில் சொல்லி வருவது கதைப்பொருள் (subject of the story) கற்போர் மனத்தில் தான் பதிவிக்க விரும்பும் உணர்வைத் தோற்றுவிக்கும் வகையில் கதை நிகழ்ச்சிகளை முறை மாற்றிக் கலைஞன் அமைத்த பின் முழுவடிவம் பெற்றுவிட்ட சிறுகதையில் நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ள நிரல்முறையே கதைப்பின்னலாகும்.” (மீனாட்சி முருகரத்தினம், கல்கியின் சிறுகதைக்கலை, ப.54) என்று மீனாட்சி முருகரத்தினம் கூறுகிறார்.
கதைப்பின்னல் சிறக்கும்படி அமைய உதவும் பாங்கை 'கதையில் வரும் நிகழ்ச்சிகள் திடீரென்று வந்து குதிப்பதுபோல் இல்லாமல் இயல்பாக நிகழவேண்டும். ஒரு நிகழ்ச்சியின் முடிவில் இன்னொரு நிகழ்ச்சி கருக்கொண்டிருக்க வேண்டும். நிகழ்ச்சிகளின் போக்கு எவ்வளவு புதுமையுடையதாகவும் இயற்கை இறந்ததாகவும் இருப்பினும் அதன் முடிவு பொருத்தமுடையதாய் இருத்தல் வேண்டும்.” (மா.இராமலிங்கம், நாவல் இலக்கியம், ப.58) என்று மா. இராமலிங்கம் குறிப்பிடுகிறார்.
'சாதாரணமாகக் கதைப்பின்னல் உருவாகும் முறையில்
1. ஒரு சூழல், ஒரு தடை அல்லது சிக்கல் உருவாதல்
2. அச்சிக்கல் வளர்தல்
3. சிக்கல் இறுகுதல்
4. அவிழ்தல்
5. முடிவு
என்று ஐந்து நிலைகளைக் காணலாம்” (மீனாட்சி முருகரத்தினம், கல்கியின் சிறுகதைக்கலை, ப.57) என்று மீனாட்சி முருகரத்தினம் குறிப்பிடுகிறார்.
கதை என்பதும், கதைப்பின்னல் என்பதும் வேறுவேறு. ஒரு கதையின் வெற்றி அது சொல்லப்படும் முறையில்தான் அதாவது கதைப்பின்னலில்தான் இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. புனைகதைக் கூறுகளில் ஒன்றான கதைப்பின்னல் சங்க இலக்கியங்களில் உரையாடல் உத்தி, முன்னோக்கு உத்தி, பின்னோக்கு உத்தி பாத்திரங்களின் உணர்வுகளைக் கொண்டு விளக்கும் முறையாகவும், பயணஉத்தி, கற்பனை உத்தி நிகழ்ச்சிகளைக் கொண்டு விளக்கும் முறையாகவும் அமைவதைக் காணமுடிகிறது.
உரையாடல் உத்தி
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் நேரடியாகத் தன் கருத்தை மற்றவருக்குத் தெரிவிக்கும் முறையே உரையாடலாகும். புனைகதைக் கூறுகளில் ஒன்று உரையாடலாகும். உரையாடல் வாயிலாகக் கதைமாந்தரின் இயல்பை ஆசிரியர் எளிதில் உணர்த்தி விடலாம். கதை மாந்தரின் உரையாடல் படிப்போர்க்கு நேரில் காண்பதுபோல் ஓர் அனுபவத்தைப் பெற்றுத்தரும். சிறுகதையில் உரையாடல் இடம்பெறும் விதத்தைச் சொல்ல வந்த சாலை இளந்திரையன்.
'சிறுகதைகளில் உரையாடல் மிகுந்திருத்தலும் உண்டு. குறைந்து அமைதலும் உண்டு. கதைமாந்தரின் பண்பை விளக்குவதற்கோ கதை நிகழ்ச்சியைப் புலப்படுத்துவதற்கோ ஏற்ற அளவிற்கு உரையாடல் அமையலாம்.” (சாலை.இளந்திரையன், தமிழ்ச்சிறுகதை, ப.133) என்கிறார்.
உரையாடல் அளவைச் சொல்ல வந்த சு. பாலச்சந்திரன்,
'சிறுகதையில் உரையாடல் நீளமாக இருத்தல் கூடாது. செறிவும் தெளிவும் பெற்று நெகிழ்ச்சியின்றி அமைய வேண்டும். உரையாடலில் ஒவ்வொரு பகுதியும் கதையின் மையக்கருத்திற்கும், நோக்கத்திற்கும் இன்றியமையாததாய் இருத்தல் வேண்டும். மின்னல் வீச்சுப்போலக் கதையின் உயிர்ப்பொருளைப் பிரதிபலிக்கும் வண்ணம் அழகான சில சொற்கள் அமைவது சிறப்புடையது” (சு. பாலச்சந்திரன், இலக்கியத்திறனாய்வு, ப.328) என்கிறார்.
மேலும், உரையாடலின் சிறப்புப் பற்றி, 'உரையாடல் கதைமாந்தரின் பண்பை மட்டும் விளக்காமல் கருவின் வளர்ச்சி, கதையின் இயக்கம் முதலியவற்றையும் விளக்குகிறது.” (மா.இராமலிங்கம், நாவல் இலக்கியம், ப.95) என்று மா. இராமலிங்கம் கூறுகிறார்.
உரையாடல் அல்லது கருத்துப் பரிமாற்றத்தின் முதன்மை நோக்கங்களாக, அறிந்ததை வெளிப்படுத்துதல், அறியாததைத் தெரிந்து கொள்ளல், தேவைகளைப் பெறுதல், உறவுகளை மேம்படுத்தல், சிக்கல்களுக்குத் தீர்வு காணல் ஆகியவற்றைக் கூறமுடிகிறது.
இருவர் உரையாடல்
தலைவன்-தலைவி, தலைவி-தோழி, தோழி-செவிலி என இருவர் மட்டும் கருத்தைப் பரிமாறிக் கொள்வது இருவர் உரையாடல் ஆகும். இருவர் தனித்தும் பிறர் முன்னிலையிலும் உரையாடுவர்.
குறளன்-கூனி உரையாடல்
அகப்பாடல்கள் உயர்ந்தோர் காதலைப் புனைந்துரைத்தல் மரபு. கலித்தொகை அடியோர் காதலைப் புனைந்துரைக்கிறது. உரையாடல் புலப்பாட்டு உத்தி இப்பாடலுள் சிறந்து விளங்குகிறது. பாடல் தொடக்கத்தில் அகமாந்தர் அறிமுகம் இடம்பெறுகிறது.
'நீருள் நிழல்போல் நுடங்கிய மென்சாயல்
ஈங்குருச் சுருங்கி
இயலுவாய் நின்னோ டுசாவுவேன் நின்றீத்தை”
எனக் குறளன் கூற,
'அன்னையோ காண்டகை யில்லாக்
குறளன்நாழிப் போழ்தினான்
ஆண்டலைக் கீன்ற பறழ் மகனே” (கலித்தொகை, 94:2-6)
எனக் கூனி கூறுகிறாள்.
ஒருவரையொருவர் இழித்தும் பழித்தும் வழக்குச் சொற்களைப் பயன்படுத்தி உரையாடல் நிகழ்த்துகின்றனர். காமக்குறிப்போடு குறளன் பேச, அதற்கு உடன்படாதவள் போலக் கூனி மறுமொழிகூற, உரையாடல் சுவையாக நடைபெறுகிறது. இறுதியில் இருவரும் கூடிக்களிப்பதாய் இவ்வுரையாடல் முடிகிறது. இதே போல் தோழி-செவிலி உரையாடலுக்கு ஐங். 243, தோழி-தலைவி உரையாடலுக்கு அகம். 260 ஆகிய பாடல்கள் சான்றாக அமைகிறது.
மூவர் உரையாடல்
தலைவன்-தலைவி-தோழி என இரண்டுக்கும் மேற்பட்டோர் உரையாடுவது மூவர் உரையாடல் (அ) பலர் உரையாடல் என்கிறோம். மூவர் உரையாடலுக்குக் கலித்தொகையில்,
தலைவி:
'ஒருஉநீ யெங்கூந்தல் கொள்ளல்யாம் நின்னை
வெரூஉதுங் காணுங் கடை”
தலைவன்:
'தெரியிழாய் செய்தவ றில்வழி யாங்குச்சினவுவாய்
மெய்பிரிந் தன்னவர் மாட்டு”
தலைவி:
'ஏடா, நினக்குத் தவறுண்டோ நீவீடுபெற்றாய்
இமைப்பின் இதழ்மறை பாங்கே கெடுதி
நிலைப்பா லறியினும் நின்நொந்து நின்னைப்
புலப்பா ருடையர் தவறு”
தலைவன்:
'அணைத் தோளாய் தீயாரைப் போலத்திறனின்றுடற்றுதி
காயுந் தவறிலேன் யான்”
(மருதனிளநாகநார், கலித், பா:87:1-10)
இவ்விருவரின் உரையாடல் மூலம் தலைவி பலமுறை சினந்து தலைவனைச் சீறினும், தலைவன் தன் தவற்றினை ஏற்றுக்கொள்ளாது, குற்றமற்ற தன்னைத் தலைவி காரணமின்றிக் காய்கின்றாள் என்பது போலப் பேசுகின்றாள். தலைவனது இயல்பை இதனால் அறியமுடிகிறது. தலைவனின் இயல்புணர்ந்த தோழி தலைவியை அமைதிப்படுத்த முனைகின்றாள்.
தோழி:
'மான்நோக்கி நீயடி நீத்தவன் ஆனாது
நாணில னாயின் நலிதந் தவன்வயின்
ஊடுத லென்னா இனி”
(கலி.87:11-13)
தலைவனிடம் ஊடுவது பயனற்றது என்னும் தோழி கூற்றை உண்மை என உணர்ந்த தலைவியும்,
தலைவி:
'இனி, யாதுமீக் கூற்றம் யாமிலமென்னுந்
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனியானாப்
பாடிற்கண் பாயல் கொள”
(கலி, 87:14-16)
எனத் தன் நெஞ்சோடு கூறி ஊடல் தீர்க்கின்றாள்.
பரத்தையர் சேரியிடத்துச் சென்று மீண்ட தலைவனிடம் தலைவி உறழ்ந்து கூற, தோழி இடையிட்டுத் தலைவியை ஊடல் தீருமாறு வேண்டுவதாக இவ்வுரையாடல் அமைகிறது. புனைகதைக் கூறுகளில் ஒன்றான உரையாடல் சங்க இலக்கியங்களில் ஒருவர் மற்றொருவருடன் உரையாடுவதை இதன்மூலம் அறியமுடிகிறது.
முன்னோக்கு உத்தி
இலக்கியத்திற்குச் சுவையூட்டுவதற்கும், பொருண்மை வெளியீட்டுத் தொடர்பினுக்குத் துணையாவதற்கும், கவிஞர் கலைநுட்பத்திறனோடு ஆளும் உத்தியாகப் பின் நிகழ்வை முன் சுட்டுதல் திகழ்கிறது. கனவு, நிமித்தம், சகுனம், குறிப்புமுரண், பிறப்பு ஆகியக் கூறுகள் பற்றியவழி இவ்வுத்திப் பயன்பாடு அமைதலைக் காணமுடிகிறது.
கனவு
கனவு என்பது நனவிலிருந்து மாறுபட்டது, மனத்தை அடித்தளமாகக் கொண்டு அமைவது, தொடர்ந்து வரும் பிம்பங்களைக் கொண்டது, பொய்யானது, நித்திரையின் கண் எழுவது, சிந்தனை மனஎழுச்சி இவற்றால் செயல்படுவது என வரையறை செய்யலாம்.
தொல்காப்பியம்,
'காதல் கைம்மிகக் கனவின் அரற்றுலுந்
தோழியை வினவலும்” (களவியல், 1061)
'கனவும் உரித்தால் அவ்விடத்தான” (பொருளியல், 1143)
என்னும் நூற்பாக்களில் குறித்துள்ளது. அதாவது காதல் மிகுந்த நிலை, இடையீடுபடுதல், தலைவி தலைவனுடன் உடன்போக்குச் செல்லல் என்ற மூன்று சூழ்நிலைகளில் கனவுகள் இடம்பெறுவதாகத் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இக்கருத்துக்களைக் காணுகின்ற போது நிறைவேறாத ஆசைகள் மற்றும் பாலியல் உணர்வுகளே கனவிற்கு அடிப்படை என்ற உளவியலறிஞர் சிக்மண்ட் பிராய்டின் தத்துவத்தோடு பொருத்தமுடையதோ என்று எண்ணத் தோன்றுகிறது. தலைவி, தலைவனுடன் செல்கையில் நற்றாய்க்குக் கனவு வருவதாகக் குறிப்பிடும் நூற்பா மூலம், ‘கனவு என்பது மனத்தால் விளைவது’ என்ற உளவியலறிஞரின் கருத்தை உணரலாம். இலக்கணம் என்பது இலக்கியத்தினின்று பெறப்பட்ட வரையறை. எனவே, தொல்காப்பியத்திற்கு முற்பட்ட இலக்கியங்களில் கனவுகள் பற்றிய செய்திகள் விளக்கமாக இடம் பெற்றிருக்க வேண்டும் எனத் துணியலாம்.
சங்க இலக்கியத்தில் கனவுகள்
சங்க இலக்கியம் என்பது பல புலவர்களால், பல்வேறு காலங்களில் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இப்பாடல்களைப் பாடிய புலவர்கள் பலரும் தம் மனக்கருத்துகளை வெளிப்படுத்தப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் கனவும் ஒன்று. இக்கனவு பல்வேறு பாடல்களில் இடம்பெற்றுள்ளது.
அகநானூற்றில் வண்டு, காக்கை ஆகிய இரண்டும் கனவு காண்பதாகப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. வண்டானது மலர்களில் சென்று தேனை உண்டு, பின்னர் மணம் மிக்க காந்தள் மலர்களில் சென்று உறங்குகிறது. அவ்வாறு உறங்கும்போது உறக்கத்தில் வெறிபிடித்த யானையின் மதநீரைக் கனவாகக் காண்கிறது. இதனை,
'துளிதலைத் தலைஇய சாரல் நளிசுனைக்
... ... ... ... ...
இருங் கவுள் கடாஅம் கனவும்” (அகம், 132:9-13)
என்ற தாயங்கண்ணனாரின் பாடல் அடிகள் உணர்த்துகின்றன. மற்றொரு பாடலில், பகலில் இரைகிட்டாது திரிந்து இரவில் உறங்கும் காக்கையானது கனவில் வெள்இறால் மீனைக் கண்டு மகிழ்கிறது என்ற செய்தியை,
'கடற் சிறு காக்கை மாமல் பெடையொடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
வெள்இறாக் கனவும் நள்ளென் யாமத்து” (அகம், 170:10-12)
என்ற அடிகள் மூலம் உணரமுடிகிறது.
மேற்கண்ட மருதக்கலி, அகநானூறு ஆகிய நூல்களில் இடம் பெற்ற பாடல்களின் மூலம் கனவு குறித்த கோட்பாடு ஒன்றை நன்கு உணரமுடிகிறது. அதாவது, கனவு என்பது நனவு என்பதினின்று வேறுபட்டது; கனவு என்பது பொய்யானது என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இவை அமைந்துள்ளன. இதேபோல் குறுந். 30:1-4, 147:3-4, 148:3-5, கலித். 147:57-60, 49:1-6, 53:16-19, 92, 126:15-17, 138, 142, ஐங். 234, பரி. 8:76-77, புறம். 41, 42, 198, 377, 387, அகம். 39:20-25, 141:3, 7:6-9, பதிற். 20:8-10 ஆகிய பாடல்கள் கனவு பற்றியச் செய்திகளை எடுத்துரைக்கின்றன.
கனவு என்பது உறங்கும் போது தோன்றுவது, கனவுக்காட்சிகள் மறையும் தன்மையன. கனவுகள் நீண்ட நேரம் நிலைக்காதன. நனவில் கண்டதை உள்ளத்தே பதித்து அதனை வெளிப்படுத்தும் தன்மையது. உள்ளம் விரும்புவதையே கனவாகக் காண்கிறது. இன்பத்தைத் தரக் கூடியது. கனவில் அரற்றல் நிகழும். கனவு மின்னல் மின்னும் நேர அளவே ஏற்படும். சங்க இலக்கியத்தில் கனவுகளைப் பற்றிய உளவியல் கருத்துகளை வெளிப்படுத்துவது கவிஞர்கள் நோக்கமல்ல. பாத்திரங்களின் மனவோட்டத்தை வெளிப்படுத்தும் ஓர் உத்தியாகவே கவிஞர்கள் கனவைப் பயன்படுத்தியுள்ளனர்.
நிமித்தம்
நிமித்தம் என்பது பின்னர் நிகழும் நன்மைத் தீமைகளை முன்னரே அறிவிக்கும் குறியாகும். பறவை நிமித்தம் பார்த்தலும், விரிச்சி கேட்டலும், நல்லநேரம் பார்த்து செயலைத் தொடங்குதலையும் வழக்கமாகக் கொண்டார்கள். இதைத்தான் தொல்காப்பியர்,
'நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்” (தொல்., நூ.1037)
என்கிறார்.
சங்க நூல்களுள் நிமித்தம் என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. நிமித்தம் - நன்மை, தீமை ஆகிய இரண்டையும் உணர்த்துவதாக அமைகிறது.
சங்க இலக்கியங்களில் சகுனம் என்ற சொல்லாட்சி காணப்பெறவில்லை. அஃறிணைப் பொருள்களைக் கொண்டே நிமித்தம் அறிதல் காணப்படுகின்றன. அது மனித இனத்தின் அறியாமையை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.
(i) கண் துடித்தல்
மகட்கொடை வேண்டித் தலைவன் அனுப்பிய பெரியோர்க்குத் தலைமகளின் தமர் உடன்படாமைக்கண்டு தலைமகள் வருந்துகிறாள். அப்போது தோழி தனக்கு நன்னிமித்தம் தோன்றியதால் தலைவன் விரைந்து வருவான் எனத் தலைமகளை ஆற்றுப்படுத்தி,
'நுண்ஏர் புருவத்த கண்ணும் ஆடும்
மயிர்வார்முன்கை வளையும் செறூஉம்” (ஐங். 218)
முன்கை வளையல்கள், உடல் பருத்தலால் இருக்கமாகிறது என்பதை ஓர் அறிகுறியாகவும், இடதுகண் துடிப்பதை ஓர் அறிகுறியாகவும் கொண்டு நிமித்தமாக நம்பினர். அது உளவியல் அடிப்படையுடன் உலக இயற்கையையும் ஒட்டியது என்பதைக் குறிஞ்சிப் பாடலடிகள் எடுத்துக்காட்டுகின்றன.
(ii) பறவை நிமித்தம் பார்த்தல்
பறவை நிமித்தம் பார்த்து செயல்பட்டமைக்கு,
'நாள் அன்றுபோகி, புள் இடை தட்ப,
பதன் அன்றுபுக்கு, திறன் அன்று மொழியினும்” (புறநானூறு, 124:1-2)
என்ற புறநானூற்றுப் பாடலே சான்றாக அமைகிறது.
(iii) விரிச்சி கேட்டல்
போர் மீது சென்ற தலைவன் எப்போது வீடு வருவான் என்று முதுபெண்டிர் கோயிலில் விரிச்சி (சகுனம்) கேட்டல் முல்லைப்பாட்டில்,
'முதுபெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்லைப்பாட்டு, 11 வரி)
என்பதனால் அறியக் கிடக்கின்றது.
(iv) நல்லநேரம் பார்த்துச் செயலைத் தொடங்குதல்
மன்னர்கள் போருக்குச் செல்வதற்கு முன்னர் தன் வெண்கொற்றக் குடையினையும், வாளினையும் நல்ல நாள் பார்த்துப் புறப்படச்செய்வர் என்பதைத் தொல்காப்பியர் புறத்திணை நூற்பா மூலம் எடுத்துரைக்கிறார். அக்காலத்தில் பயணம் செய்கின்றவர்களிடம் நிமித்தம் பார்த்துச் செல்லும் பழக்கம் இருந்திருக்கிறது. இதனை,
'புலரி விடியல் புள் ஓர்த்துக் கழிமின்” (மலை, 448)
என்ற பாடல்வரி எடுத்துரைக்கிறது.
மனித நம்பிக்கையின் அடிப்படையிலான நிமித்தம், நிகழப்போவது யாது என்றுணரா நிலையில் மனித எண்ணத்திற்கு எட்டா நிகழ்வுகளை உணர்த்துகிறது.
சகுனம்
அகராதிகள் சகுனம் என்பதற்குப் பறவை, நிமித்தம், கிழங்கு, குறி, துன்னிமித்தம் என்ற பொருள்களைத் தருகின்றன. 'நன்மை, தீமைகளை முன்னறிவிக்கும் அறிகுறிகள்தான் சகுனங்கள்” (அபிதான சிந்தாமணி, ப.11) என்கிறது அபிதான சிந்தாமணி. இதை ஆங்கிலத்தில் Omen என்பர். உலகில் பல மக்களிடையே இச்சகுனம் பார்க்கும் பழக்கம் இருப்பதாகக் கூறுகின்றனர். இச்சகுனங்களைச் சுபசகுனம் (Good Omen), அபசகுனம் (Bad Omen) என இருவகையாகப் பிரிப்பர்.
'ஒருவர் தமக்குத் தாமே தன் எதிரில் நிகழும் இயற்கை நிகழ்ச்சிகளால் அறிந்து நடக்கப்போகும் நன்மை தீமைகளைக் கணித்துக் கொள்வது சகுனமாகும்.” (முருகு. இராஜேந்திரன், சகுனம் பார;ப்பது எப்படி?, ப.5) என்று முருகு இராஜேந்திரனும், 'மனிதன் ஆற்றப்புகும் செயல்களுக்கும், இயற்கையின் நிகழ்வுகளுக்கும் ஒருவிதத் தொடர்பு இருப்பதாக மனிதமனம் கற்பித்துக் கொண்ட நிலையில் நிமித்தக்கூறுகள் உருவாகத் தொடங்கின. காலப்போக்கில் வாழ்வியலில் தொடர்ந்து நிகழ்ந்த நிகழ்ச்சிகளோடு அவ்வியற்கை நிகழ்வுகளை இயைத்து நோக்கப்பட்ட நிலையில் அவை சகுனங்களாக வடிவெடுத்தன” (கா.காந்தி, தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், ப.109) என்று கா.காந்தியும் கூறுகின்றனர்.
(i) வண்டு ஒலித்தல்
தட்டான் தாழ ஒலித்தால் மழைவரும் என்ற சகுனம் இன்று மக்களிடையேயுண்டு. சங்ககாலத் தலைவி கணவனருகில் கவலையுற்றிருக்கையில் எப்போதும் நண்பகலில் ஒலிக்காத வண்டுகள் அப்பொழுது ஒலிக்கின்றன. இதுகேட்க மேலும் வருந்திய தலைவி,
'நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்” (புறம், 280)
எனத் தனக்கு அபசகுனம் நேர்ந்ததைக் குறிப்பிடுகிறார். இதனால் பகலில் வண்டுகள் ஒலிப்பதைச் சகுனமாகக் கருதியுள்ளமையை அறிய முடிகிறது.
வினை நிகழ்த்துவோர் அதன் முடிவை முன்கூட்டியே அறிய விழையும் உளவியல் தன்மையால் புறத்தே நிகழும் நம்பிக்கையின்பால் ஏற்படுத்திக் கொள்ளும் முடிவுகள் சகுனங்களாகின்றன. இச்சகுனங்களைச் சுபசகுனம், அபசகுனம் எனப் பிரித்துக் காணமுடிகிறது. சங்க காலத்திலும் தமிழரிடையே சகுனம் பார்க்கும் பழக்கம் இருந்ததைச் சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.
சங்க இலக்கியங்களில் காணப்படும் நிகழ இருப்பதை நினைக்கும் பொருளமைப்பு நினைவோட்ட உத்தியிலிருந்து வேறுபட்டிருப்பினும் இவ்வுத்திக்குரிய அடிப்படையான நினைவோட்டத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது.
பின்னோக்கு உத்தி
நடந்த நிகழ்ச்சிகளை அவ்வப்போது கூறாது பிறகு ஒரு கூட்டத்தில் பின்னோக்கு முறையில் காட்டப்படும் முறை பின்னோக்கு உத்தியாகும். இக்காலச் சிறுகதை, புதினம் போன்றவற்றிலும் இத்தன்மை மிகுந்துள்ளது. நிகழ்ச்சிப் பின்னலில் செறிவை ஏற்படுத்திப் படைப்பின் கட்டமைப்பிற்கு உதவுகிறது. மீலியற்கைக் கூறுகளும் இதற்குக் கருவியாகப் பயன்படுகின்றன.
‘நிகழ்ந்தது கூறுதல்’ என்பது ஒரு பாத்திரம் மற்றொரு பாத்திரத்திற்கு நடந்த நிகழ்ச்சியைக் கூறுவதாக அமைவது. இதனைப் ‘பின்னோக்கு உத்தி’ எனவும் கூறலாம். சங்க இலக்கியங்களைப் பொறுத்தவரை இத்தன்மை பொருளமைப்பில் கையாளப்பட்ட உத்தியாகும். சங்க இலக்கியங்களில்,
தோழி முன்பு இதுபோன்ற சூழ்நிலையில் தலைவியும், தானும் ஊசல் விளையாட்டு: நிகழ்த்தும் போது தலைவனது கொடுமையையும், நன்மையையும் மாறிமாறிப் பாட அதை அவன் கேட்டுவந்து தானே ஊசலை ஆட்டினான் என்ற செய்தியை அகம்.131வது பாடல் விளக்குகிறது.
'குறுந்துறை வினவி நின்ற
நெடுந்தோ ளண்ணற் கண்டிரும் யாமே”(ஐ. 198:3-4)
என்ற பாடலடிகள் வினவி நின்ற நெடுந்தோள் அண்ணல் என்று களவுக்காலத்து நிகழ்ந்தது கூறி தோழி தலைவியின் ஊடலைத் தீர்ப்பதாக அமைகிறது.
வாயில் மறுத்த தோழியிடம் தலைவன், தனக்கும் தலைவிக்கும் நடந்த திருமணத்தில் இடம் பெற்ற சடங்குகள் குறித்து நினைவுபடுத்துவதாக அகம்.86வது பாடல் அமைகிறது.
வினைமுடிந்து மீள்கின்ற தலைவன் தன் தேர்ப்பாகனை நோக்கிச் சென்ற முறை நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறுவதாக நற்.42வது பாடல் அமைகிறது.
இது நடந்ததை மட்டும் கூறுதல், நடந்ததைக் கூறி இதனால் இன்னது நிகழும் என எதிர்காலத்தையும் கூறுதல் என்ற இரு தன்மைகளில் விளக்கப்படுகின்றன.
'தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்கும் நிலையின் தன் களவொழுக்கத்தை உணர்த்த நடந்ததை மட்டும் கூறும் கலித்தொகை 51வது தோழி தலைவியை ஆற்றுவிப்பதற்குச் சான்றாக அமைகிறது.
'தோழி தலைவிக்கு நடந்ததைக் கூறி இதனால், ‘தலைவன் விரைய வந்து வரைந்து கொள்வான்’ எனக் கலித்தொகை 39வது பாடல் தோழி தலைவியின் ஊடலைத் தீர்ப்பதற்குச் சான்றாக அமைகிறது.
நடந்த நிகழ்ச்சியைக் கூறும் இவ்வமைப்பில் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடத்தக்க ஒன்று. இதில் நடந்த நிகழ்ச்சியை விளக்கி நீண்ட காவிய அமைப்புடைய பாடலை உருவாக்குவதற்கு ‘அறத்தொடுநிலை’ கருவியாகக் கையாளப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள நிகழ்ந்ததைக் கூறும் பொருளமைப்பு பின்னோக்கு உத்திக்கு நிலைக்களனாக உள்ளது.
(தொடரும்...)

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.