மணிமேகலை உருவாக்கத்தில் உலகவறவி
முனைவர் சு. மாதவன்
உதவிப்பேரசிரியர், தமிழ்த்துறை, மா. மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை - 622 001.
மணிமேகலைக் காப்பியத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றான பசிப்பிணி போக்குதற்குரிய இடங்களுள் ஒன்றாக இவ் ‘உலக அறவி’ விளங்குகிறது. அத்தோடு, பௌத்த மெய்யியலின் மேன்மையை உணர்த்தும் இடமாகவும் திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தகுந்த செய்தியாகும். இச்சொல்லும், இதன் பொருளும், இதன் இயக்கமும், பங்கேற்பும் மணிமேகலை எனும் பௌத்தப் பெருமகளையும், பெருங்காப்பியத்தையும் ஒருங்கிணைக்கும் இயைபிழையாக உள்ளமை ஆராயத்தக்கது என்னும் நோக்குநிலையில் இக்கட்டுரை அமையப் பெற்றுள்ளது.
இச்சொல் முதன்முதலில் மணிமேகலையில் ‘துயிலெழுப்பிய காதை’யில் இடம்பெற்றுள்ளது. மேலும், உலகவறவி புக்க காதை (17:78,86), உதயகுமரனைக் காஞ்சனன் வாளாலெறிந்த காதை (20:20-21), சிறைசெய் காதை (22:90), ஆபுத்திரன் நாடடைந்த காதை (24:161-162) போன்ற காதைகளிலும் இச்சொல் பயின்றுள்ளது.
‘உலக அறவி’யைக் குறிப்பிடும் பிற சொற்களாக ‘அம்பலம்’ என்ற சொல் சுமார் 16 இடங்களிலும் (பதிகம் : 67.69, 14:4, 65, 17:98, 18:62, 114, 19:151,20:87, 97, 22:184, 188, 196, 202, 25:141), ‘பொதியில்’ எனும் சொல் ஈரிடத்திலும் (20:79, 21:6-7), ‘அறவோர்க் கோட்டம்’ என்ற சொல் ஓரிடத்திலும் (20:105) இடம் பெற்றுள்ளன. ஆக, மொத்தத்தில் 27 இடங்களில் ‘உலக அறவி’ குறிப்பிடப்பட்டுள்ளது.
30 காதைகளையுடைய இக்காப்பியத்தில் முறையே, 7, 14, 17, 18, 19, 20, 21, 22, 24, 25-ம் காதைகளான துயிலெழுப்பிய காதை, பாத்திரமரபு கூறிய காதை, உலக அறவி புக்க காதை, உதயகுமாரன் அம்பலம்புக்க காதை, சிறைக் கோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை, உதயகுமரனைக் காஞ்சனன் வாளாலெறிந்த காதை, கந்திற்பாவை வருவதுரைத்த காதை, சிறைசெய் காதை, ஆபுத்திரன் நாடடைந்த காதை, ஆபுத்திரனோடு மணிபல்லவமடைந்த காதை என்ற 10 காதைகளிலும் உலக அறவியைத் தொடர்புப்படுத்தியே காப்பியம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து காப்பியத்தின் உருவாக்கத்தில் இயக்கத்தில் உலக அறவியானது உயிர்நாடியாகத் தொழிற்பட்டுள்ளமை தெள்ளிதின் துலங்குகிறது.
‘உலகவறவி’ என்னும் சொல்லுக்குக் கழகத் தமிழ் அகராதி, ‘எல்லாச் சாதியாரும் வந்து தங்குவதற்குரிய தருமசாலை’ (1984:153) என்று பொருள் கூறுகிறது. தமிழ் அகர முதலி, ‘எல்லா இனத்தாரும் வந்து தங்குவதற்குரிய அறச்சாலை’ (தமிழ் இணையக் கல்விக் கழக இணைய தளம்) என்கிறது.
இவ் ‘உலக அறவி’ சக்கரவாளக் கோட்டத்தில் அமைந்திருந்தது. உலக அறவியுடன் அங்கே சம்பாபதிக் கோயிலும், கந்திற்பாவையும் இடம் பெற்றிருந்தன. இச்சக்கரவாளக் கோட்டம் உவவனத்தைச் சூழ்ந்த மதிலின் மேற்குத் திசைவாயில் வழி வெளியே வரும் பகுதியில் அமைந்திருந்தது. இக்கோட்டம் தவமுனிவர்களின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்தது (6:21-24). இக்கோட்டம் மயன் எனப்படும் தெய்வத் தச்சனால் இழைக்கப்பட்டிருந்தது. (6: 200-203)
‘உலக அறவி’ இடம்பெறும் இடங்களாவன;
துயிலெழுப்பிய காதை (7:93)
புகாரில் இந்திரவிழா நடந்து கொண்டிருந்த ஒரு நாளில் மலர்கொய்ய சுதமதியுடன் உவவனம் (மலர்வனம்) சென்ற மணிமேகலை உதயகுமரனுக்கு அஞ்சி அங்கேயுள்ள பளிக்கறைக்குள் புகுகிறாள். அப்போது அங்கு தோன்றிய மணிமேகலை தெய்வம் ‘உதயகுமரனிடமிருந்து தப்ப வேண்டுமானால், சக்கரவாளக் கோட்டத்துள் போய்விடுங்கள்’ என்று உரைத்துக் கொண்டே சுதமதி அறியா வண்ணம் மணிமேகலையை எடுத்துச் சென்று மணிபல்லவத் தீவில் வைத்துவிட்டு மீண்டும் உவவனத்திற்கு வருகிறது. அங்கு துயின்று கொண்டிருக்கும் சுதமதியை எழுப்பி அவளுக்கு நிகழ்ந்தவற்றைக் கூறி சக்கர வாளக்கோட்டத்தின் வரலாற்றையும் இயல்புகளையும் அங்கு செல்லும் வழிகளையும் எடுத்துரைக்கிறது. அவ்வழி சென்று அங்கிருந்த ‘உலக அறவி’ யின் ஒரு பக்கத்தில் இருக்கிறாள் சுதமதி (7:88-93). இந்த இடத்தில் தான் முதல் முதலில் ‘உலக அறவி’ என்றும் பதிவு இடம் பெற்றுள்ளது.
பாத்திரமரபு கூறிய காதை (14: 4,56)
தென்மதுரை சிந்தாதேவி கோயிலின் முன்பிருந்த அம்பலம் (பலரும் தங்குதற்குரிய இடம் - இது உலக அறிவயன்று, (14:16) ஆபுத்திரன் முதலில் ஜயக் கடிகையோடும் பின்னர் அமுதசுரபியோடும் தங்கியிருந்த அம்பலம் (14:65-69).
உலக அறவி புக்க காதை (17: 78, 86, 98)
அமுதசுரபி பெற்றதும் காவிரிப்பூம்பட்டினத்திற்கு வந்த மணிமேகலையால் யானைத்தீ எனும் பசி நீங்கப் பெற்ற காய சண்டிகையின் கூற்றில் இடம்பெறும் உலக அறவி (17: 75-78). இது முனிவர்கள் பலர் உறையும் சக்கரவாளக் கோட்டத்தில் பலரும் வந்து புகுவதற்காகவே எப்பொழுதும் வாயில் திறந்துள்ள இயல்புடையது என்பது காயசண்டிகையின் கூற்றாகும்.
வலப்புறமாக மும்முறை வலம்வந்து மணிமேகலை வணங்கிய உலக அறவி (17:83-86). வணங்கிய பின் இது ஆபுத்திரன் கை அமுதசுரபி: இதிலிருந்து உணவுண்ண அனைவரும் வருக என அழைத்து அனைவருக்கும் உணவிட அவ்விடத்தில் ஊணொலி அரவத்து ஒலி எழுந்தது என்னும் இடத்தில் இடம்பெறும் அம்பலம் (17:93-98)
உதயகுமரன் அம்பலம் புக்க காதை (18: 62-114)
‘மணிமேகலையின் பிக்குணிக் கோலத்தை ஒழித்து உதயகுமரனிடம் சேர்ப்பேன்’ என்று சித்திரபதி சூளுரைத்த கூற்றில் இடம்பெறும் அம்பலம் (உலக அறவி) (18: 59-62). மணிமேகலையாகிய மலர், மிக்க பெருமையுடைய பூம்புகாரின் கண்னே பாழிடமாகிய புறங்காட்டைச் (சக்கரவாளக் கோட்டம்) சார்ந்த ‘உலக அறவி’யில் உள்ளது என்று சித்திராபதி உதயகுமரனிடம் கூறுகிறாள்.
உதயகுமரன் மணிமேகலையை மீண்டும் கண்ட இடமாகக் குறிப்பிடப்படும் அம்பலம் (உலக அறவி) (18:112-114).
சிறைகசகோட்டம் அறக்கோட்டமாக்கிய காதை (19:151)
சக்கரவாளக் கோட்டத்து அம்பலத்தில் (உலக அறவி) தீவதிலகை என்னும் தெய்வம் சொல்லக் கோமுகிப்பொய்கை அமுதசுரபியை மணிமேகலைக்குத் தந்தது (19:150-152). இங்கு ‘அம்பல மருங்கோர் தெய்வம் தந்தது’ என்று மட்டுமே மணிமேகலை குறிப்பிடுகிறாள்.
அம்பலத்தில் (உலக அறவி) இருந்த தெய்வம் தீவதிலகை என்பது பாத்திரம் பெற்ற காதையில் முன்னரே (11:39-54) பதிவு பெற்றுள்ளது.
ஆபுத்திரன் மதுரையிலோர் அம்பலத்தில் (பொது இடம்) இருந்தபோது அங்கிருந்த சிந்தாதேவி என்னும் தெய்வம் அமுதசுரபியைக் கொடுத்தது (14: 1-6).
மணிமேகலையிடம் கொடுத்தது பூம்புகாரிலுள்ள ‘உலகஅறவி’ என்னும் அம்பலத்திலிருந்த தெய்வமான தீவதிலகை. ஆபுத்திரனிடம கொடுத்தது தென் மதுரையில் அம்பலம் என்னும் பொதுவிடத்திலிருந்த தெய்வமான சிந்தாதேவி இரட்டையும் ஒருசேரக் குறிக்கும் உத்தியில்தான் ‘தெய்வம் தந்தது திப்பியமாயது’ என்று பொருப்படக் கூறியுள்ளார் சாத்தனார்.
உதயகுமரனை வாளாலெறிந்த காதை (20: 15, 21, 79, 87, 97)
மணிமேகலை வெளியே வரும் நேரத்தில் உதயகுமரன் சென்ற இடமாகக் குறிப்பிடப்படும் பொதியில் (பொதியில் ஸ்ரீ பொது ஸ்ரீ இல் ஸ்ரீ பலருக்கும் பொது ஸ்ரீ உலக அறவி) (20:15-16).
மணிமேகலையைக் காண உதயகுமரன் உலக அறவியனுள்ளே ஏறிச் செல்வதைக் குறிப்பிடுமிடத்தில் இடம்பெறும் உலக அறவி (20:17-21).
காயசண்டிகை வடிவில் உதயகுமரனுக்கு அறமுரைப்பது மணிமேகலை என்பதறியாத காஞ்சனன் (விஞ்சையன்) காயசண்டிகை ஒரு புதிய காதலனோடு அளவாளவுகிறாள்: எனவே, அவனைக் கொல்லவேண்டும் என்றெண்ணிக் காஞ்சனன் ஒளிந்திருந்த இடமெனக் குறிப்பிடப்படும் மன்றப் பொதியில் (பொதுஇல் - அம்பலம் - உலக அறவி) (20:77-80).
காய சண்டிகை வடிவிலிருந்த மணிமேகலை உதயகுமரனுக்கு நிலையாமைக் கோட்பாட்டை அறிவுறுத்தவும் மணிமேகலைதான் வேற்றுருக் கொண்டுள்ளாள் என உதயகுமரன் அறிந்து கொண்டபோது குறிப்பிடப்படும் அம்பலம் (உலக அறவி) (20:85-88).
வேற்றுருக் கொண்டுள்ளது மணிமேகலை தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக மாலை நேரத்தில் அரண்மனை சென்றுவிட்டு மீண்டும் நள்ளிரவில் உதயகுமரன் வந்ததைக் குறிப்பிடுமிடத்தில் இடம்பெறும் அம்பலம் (உலக அறவி) (20:89-97)
கந்திற்பாவை வருவதுரைத்த காதை (21: 6-7, 105)
உதயகுமரன் இறந்ததால் மயக்கமுற்ற மணிமேகலை எழுந்து விஞ்சையனுக்குக் கந்திற்பாவை கூறிய மொழிகளைக் கேட்டபோது குறிப்பிடப்படும் மன்றப் பொதியில் (பொதுஇல் - அம்பலம் - உலகஅறவி) (21:1-9).
உதயகுமரன் இறந்ததும் ‘பழம்பிறப்பில் கணவனாக இருந்தவனாயிற்றே’ என்று மணிமேகலை வருந்த, ‘பிறவித் துன்பத்தை ஒழிப்பதற்கு முயலும் நீ துன்பப்படாதே’ என்று கந்திற்பாவை உரைக்குமிடத்தில் இடம்பெறும் அறவி (உலக அறவி) (21:105-109).
சிறைசெய் காதை (22: 98, 184, 188, 196, 202)
சக்கரவாளக் கோட்டத்து முனிவர்கள் அங்கு கந்திற்பாவையையும் சம்பாதியையும் வழிபட வந்தவர்களிடம் மணிமேகலை வரலாற்றைக் கூறுமிடத்து இடம்பெறும் அம்பலம் (உலக அறவி) (22:180-184). புல இல்லங்களில் பிச்சையேறு அம்பலம் (உலக அறவி) அடைந்தாள் மணிமேகலை என்று முனிவர்கள் இங்கு குறிப்பிடுகின்றனர்.
சக்கரவாளக் கோட்டத்து முனிவர்கள் உதயகுமரன் மணிமேகலையின் பொருட்டுக் காமமிகுதியால் வந்தடைந்ததாகக் குறிப்பிடும் அம்பலம் (உலக அறவி) (22:185-188).
உதயகுமரன் வந்து கண்டபோது காய சண்டிகை உருவில் மணிமேகலை இருந்த இடம் அம்பலம் (உலக அறவி) (22: 188-196). உதயகுமரனைக் கண்டதும் மணிமேகலை காயசண்டிகை உருவில் மாறி இருந்தது உதயகுமரனின் தீவினப்பயன் என்கிறார் சாத்தனார்.
காயசண்டிகையின் கணவன் விஞ்சையன் உதயகுமரனை வாளாலெறிந்த இடம் இவ் அம்பலம் (உலக அறவி) (22:197-204).
உதயகுமரனின் தீவினை மணிமேகலையைக் காயசண்டிகை உருவில் மாற்றியதோடு மட்டுமின்றி அவள் கணவன் விஞ்சையனையும் அங்கு அழைத்து வந்தது என இயைக்கிறார் சாத்தனார். இதையெல்லாம் சக்கரவாளக் கோட்டத்து முனிவர்கள் உதயகுமரனின் தந்தையான மாவண்கிள்ளியிடம் உரைத்தனர் என்கிறது காப்பியம்
ஆபுத்திரன் நாடடைந்த காதை (24:161)
உதயகுமரன் இறந்ததால் தன்மேல் பழியுண்டாகும் என நினைத்த மணிமேகலை பூம்புகாரை விடுத்து ஆபுத்திரன் நாட்டுக்குச் செல்லும்முன் கந்திற்பாவையையும் சம்பாபதியையும் உலக அறவியையும் வலங்கொண்டு வணங்கும் போது குறிப்பிடப்படும் உலக அறவி (24: 160-163).
இவ்வாறு, காப்பியத்தை இயக்கும் மைய அச்சாக ‘உலக அறவி’ விளங்குகிறது. காப்பியக் கதையின் அடிப்படைகளான பௌத்த சமய வினைக் கோட்பாடு. பழம்பிறப்பு உணர்தல், மறுபிறப்பு அறிதல், பசிப்பிணி நீக்குதல், பரத்தமை ஒழித்தல், பௌத்த அறவியல், பௌத்தப் பிரபஞ்சவியல், பௌத்தத் தருக்கவியல் என்றவாறு அனைத்தையும் உலகஅறவியை மையப்படுத்தியே விவரித்துள்ளார் சாத்தனார். காப்பியத்தின் அடிப்படை நோக்கங்களை நிறைவு செய்யும் உயர்நிலையில் ‘உலகஅறவி’யை சாத்தனார் ஏன் முதன்மைப் படுத்தியுள்ளார் என்பது ஆராய்வதற்குரியது.
மணிமேகலை இயற்றப்பட்ட காலகட்டமான கி.பி.1-3ஆம் நூற்றாண்டுகளில் பெரும்பான்மையான தமிழக மக்களிடம் மிகுந்த ஈர்ப்புப் பெற்றிருந்த சமயமாகப் பௌத்தம் விளங்கியது.
பிற சமயங்களான வைதீகமோ சைவ, வைணவமோ பெரும்பான்மையான மக்களின் ஈர்ப்பைப் பெற்றிருக்கவில்லை. ஏனெனில், அவை மக்களைச் சாதிகளாகவும், அவ்வச் சாதிகளுக்குரிய நியமங்களின்படி ஒழுகும் பொம்மைகளாகவும் ஆக்கி வைத்திருந்தன. இதனால், அவற்றால் ஒரு பொதுவிடத்தில் எல்லா மக்களையும் ஒன்று திரட்ட முடியவில்லை: முயலவும் இல்லை. அப்படி முயற்சியெடுப்பதற்கான தத்துவப் பின்புலமும் அவற்றுக்கு இல்லை. ஆனால், பௌத்த சமயமோ அனைத்துச் சாதி மக்களையும் புத்தம், சங்கம், தம்மம் என்ற மும்மணிக் சரணத்துக்குள் கொண்டு வந்திருந்தது. இத்தகைய பொதுமை ஈர்ப்பு மிக்கது பௌத்தம் என்பதைப் படிப்போரின் நெஞ்சில் ஆழப் பதிவுசெய்வதற்கான குறியீடாகத்தான் இவ் ‘உலக அறவி’ இக் காப்பியம் முழுமையும் விரவி நிற்கிறது எனலாம்.
பயன்பட்ட நூல்கள்
1. தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைய தளம்,
2. உ. வே. சா., 2008, மணிமேகலை - அரும்பதவுரை, டாக்டர் உ வே. சா. நூல்நிலையம், சென்னை -90.
3. நாட்டார். ,ந. மு. வே. துரைசாமிப் பிள்ளை., ஔவை சு.1964, மணிமேகலை, தி. சை. சி. நூ. ப. கழகம், சென்னை.
4. 1985, கழகத் தமிழ் அகராதி, தி. சை. சி. நூ. ப. கழகம், சென்னை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|