இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சங்கச் சமூக வளமையில் கோவூர்கிழார்

முனைவர் ப. சு. மூவேந்தன்

உதவிப்பேராசிரியர், தமிழியல்துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைநகர்-608002.


முன்னுரை

சங்க காலத் தமிழர்களின் அரச வாழ்வியலைப் பற்றி அறிந்துகொள்வதற்குரிய தரவாக அமைந்திருப்பது புறநானூறு ஆகும். இதில் சங்ககால மக்களின் வாழ்வியல் விளக்கப்பட்டுள்ளன. அவர்கள் தனிமனித நிலையிலும் சமூக ஆளுமை நிலையிலும் சிறப்புற்று விளங்கிய கூறுகள் புலவர்களால் பெரிதும் பேசப்பட்டுள்ளன. இதில் சங்கத் தமிழ்ச்சமூகத்தைத் தலைமை தாங்கி நடத்திய வேந்தர்கள், அரசர்கள், மன்னர்கள், சிற்றரசர்கள், சீறூர் மன்னர்கள், இனக்குழுத்தலைவர்கள், வேளிர்கள் பரவலாக இடம் பெற்றுள்ளனர். சங்கப்பாடல்களில் இத்தலைவர்களைப் புலவர்கள் தங்கள் பாத்திறத்தால் பாடிச் சிறப்பித்துள்ளனர். அரசர்களின் போர் வன்மையையும், கொடைச் சிறப்பையும், ஆட்சிச் சிறப்பையும் எடுத்துரைத்துள்ளதோடு, அவர்கள் பகைவர்களுக்கு அரியராக விளங்கிய தன்மையைப் புகழ்ந்துரைத்துள்ளனர். இத்தகு தலைவர்களே, சங்க அகப்பாடல்களுக்கும் தலைவர்களாக விளங்கினர் என்பது அறியத்தக்கதாகும். இதனால் புரவலர்கள் தங்களைப் புலவர்கள் பாடிச் சிறப்பித்தல் வேண்டும் என்ற பேரவா உடையவர்களாக விளங்கியிருந்துள்ளனர் என்பதனைப் பல்வேறு சான்றுகளின் மூலம் நிறுவலாம். (உ-ம். வஞ்சினப் பாடல்கள்) புலவர்களுக்குரிய சிறப்பியல்புகளைப் பெற்ற புரவலர்களும் இருந்துள்ளதனை அறியமுடிகின்றது. புலமைத்திறம் மிகுந்த புரவலர்கள் சங்கப் பாடல் மரபில் இடம்பெற்றுள்ளமை அறியத்தக்கதாகும்.

மனித வளம் என்பது ஒரு நாடு பெற்றிருக்கும் உறுப்புகளில் மிக முக்கியமானதாகும். மனித வளம் என்பது ஒத்திசைவு, கூட்டு முயற்சியின் விளைவு, அதனால் எழும் தாக்கம் ஆகியனவற்றை அடியொற்றியதாய் அமைந்திருந்தது. மனித வளத்தை சமூக வளர்ச்சி ஆக்கத்திற்குத் துணைசெய்யுமாறு கோவூர்கிழார் எடுத்துரைத்துள்ள திறத்தினை விளக்குவதாய் இக்கட்டுரை அமைகின்றது.

கோவூர்கிழார்

சங்கப் புலவர்களில் கோவூர்கிழார் ஒரு தனியிடத்தைப் பெற்ற தனிப்பெரும் புலவராகத் திகழ்கிறார். இவர் வேளாள மரபினராகவும், சோழ பரம்பரையினரால் ஆதரிக்கப்பட்டவராகவும் திகழ்கிறார். கோவூரழகியார் என்றும் வழங்கப்படுபவர். கோவூர் என்னும் ஊர் தொண்டை நாட்டில் உள்ளது. தொண்டை நாட்டில் பிறந்து சோழ நாட்டில் வாழ்ந்து அழியாப் புகழ் பெற்றார். இயல், இசை, கணித அறிவில் சிறந்து விளங்குபவர். மிகுந்த உலகியல் அறிவு மிக்கவர். அரசியலில் அறமும், அன்பும் அமைதியும் என்றும் நிலவ வேண்டும் என்ற எண்ணப் போக்குக் கொண்டவர். இவர் சங்க இலக்கியத்தில் புறநாDனூற்றில் பதினைந்து பாடல்களும், குறுந்தொகையில் (65) ஒரு பாடலும், திருவள்ளுவமாலையில் ஒன்றும், நற்றிணையில் (393) ஒரு பாடலுமாக, மொத்தம் பதினெட்டுப் பாடல்களைப் பாடியுள்ளார். இவரால் பாடப்பட்டோர் சோழன் நலங்கிள்ளி, சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, சிறுகுடிகிழான் பண்ணன் ஆகியோராவர்.

புறநானூற்றில் கோவூர்கிழார் பாடிய புரவலர்கள்

1. சோழன் நலங்கிள்ளி

2. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்

இவர் சோழர் குலத்தின்பால் மிகுந்த பேரன்பு கொண்டு விளங்கியதை,

“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல
இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை“ (புறம். 31 1-3)

என்னும் அடிகளில் புலப்படுத்தக் காணலாம். அறத்தின் தலைமை போலச் சோழர்குடை உயர்ந்து விளங்குதல் வேண்டும் என்று வாழத்துவதனின்று இக்குடிபால் அவர் கொண்டுள்ள பற்றுதல் புலனாகும்.கோவூர்கிழார் பாடல்களின் பொருண்மை

கோவூர்கிழார் சோழ வேந்தர்களை மட்டும் பாடிச்சிறப்பித்துள்ளார். இவற்றுள் நலங்கிள்ளியைக் குறித்து 9 பாடல்களையும் (31, 32, 33, 68, 382, 400), கிள்ளிவளவனைக் குறித்து 11 பாடல்களையும் (41, 44-47, 70, 386) பாடியுள்ளார். இதனால் அவர் சோழரால் ஆதரிக்கப்பெற்ற புலவர் என்பது பெறப்படும். அதோடு மட்டுமல்லாது சோழ வேந்தர்களிடம் மிகுந்த உரிமை பூண்டவராகவும் விளங்கியுள்ளார். அவர் பாடிய புறப்பாடல்கள் வாகை, பாடாண், வஞ்சி என்னும் திணைகளிலும் மழபுலவஞ்சி, இயன்மொழி, அரசவாகை, கொற்றவள்ளை, துணைவஞ்சி, பாணாற்றுப்படை, மூதின்முல்லை, மறக்களவழி, கடைநிலை, வாழ்த்தியல் என்னும் துறைகளிலும் அமைந்துள்ளன. இப்பாடல்களைப் பகுத்தாராயின் அவர் சோழர்களின் வீரம், கொடைப்பண்பு, போர்ச்செயல், போரியல் வன்மை போன்ற நிகழ்வுகளையும், வேந்தர்களைச் சந்துசெய்வித்தல், பாணனை ஆற்றுப்படுத்துதல், வேந்தனை அமைதிப்படுத்துதல், புலவர்களின் இயல்புகளை எடுத்துரைத்தல், சங்க கால நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பதனை அறிய முடிகின்றது.

வீர உணர்வின் மேம்பாடு கூறல்

சங்கப் புலவர்கள் தம்மைப் புரந்த வேந்தர்களைப் பாடிப்பரவுகையில் அவர்களது வீரச்சிறப்பினை முதன்மையாக எடுத்துரைக்கின்றனர். சங்ககாலம் வீரயுகம் என்று அறிஞர்களால் போற்றப்படுகின்றது. வீரமே மிக உயர்வாகக் கருதப்பட்டது. வீரன் ஒருவனின் செயற்பாடுகளே புறப்பாடல்களின் பொருண்மையாக அமைந்துள்ளன. வீரம் பொருந்திய தலைவனே அகப்பாடல்களுக்கும் தலைவனாக அமைந்தான். அதனால் உயர்ந்த வீரனையே புலவர்கள் வாழ்த்திப் பாடினர். தங்கள் பாடல்களுக்குப் பொருளாக்கி மகிழ்ந்தனர். பொதுவாக நோக்குகையில் புறம் என்பது மறவுணர்வாகிய வீரத்தையே குறித்தது. மறஉணர்வு நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் தேவையானதொரு பண்பாக அக்காலத்தில் கருதப்பட்டது. இதனால் புனைந்துரை வழக்கு என்பது புறப்பாடலுக்கு இல்லாத ஒரு இயல்பானது. புறப்பாடல்களில் உலகியல் வழக்கையே புலவர்கள் பாடினர். ஒரு கூட்டம், மற்றொரு கூட்டத்தின்மேல் போரிட்டு வெற்றியுடன் ஆதிக்கம் செலுத்துவதும், அவர்களை அடிமை கொள்வதும் மிக இயல்பான ஒன்றாக இருந்துள்ளது என்பதனை,

“ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத் தியற்கை“(புற. 761-2)

என்னும் புறநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கக் காணலாம்.

கோவூர்கிழார் தமது பாடல்களில் தம்மைப் புரந்த மன்னர்களின் வீரவுணர்வினை, பிறருக்கு அச்சம் தரும் வகையில் படம்பிடித்துக் காட்டுகின்றார். அவரது காட்சியுரு சங்கப் போரியல் வாழ்வை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. சோழன் நலங்கிள்ளியின் வீரத்தைக் கண்டு வடபுலத்து அரசர் அஞ்சி ஒடுங்கிய நிகழ்வினை,

“... ... ... ... ... கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து
குணகடல் பின்னது ஆக, குடகடல்
வெண்தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப
வலமுறை வருதலும் உண்டு என்று அமைந்து
நெஞ்சு நடுங்கு அவலம் பாய
துஞ்சாக் கண்ண, வடபுலத்து அரசே“ (புறம். 31:11-17)

என்று எடுத்துரைக்கின்றார் கோவூர்கிழார்.

கல்லென்று ஆரவாரிக்கும் விழாக்களையுடைய பகைப்புலத்தின் இருப்பிடங்களில் தங்குவாய்: பின் நின் கீழைக்கடல் பின்னேருமாறு மேலைக்கடல் நோக்கிச் செல்வதால் வெண்மையான மேற்பரப்பையுடைய அலைகள் நின் குதிரைகளின் குளம்புகளை வருத்தும். அவ்வாறு வருந்த வலமுறையாக வடதிசைக்கும் வருவாய் எனத் தடுமாறி மனம் நடுங்குகிற துன்பமடைந்த வடபுலத்து அரசர்கள் உறங்காத கண்களையுடையர் ஆவர் என்ற குறிப்பு இப்பாடலில் இடம்பெற்றுள்ளதனைக் காணலாம்.

ஏழு மதில்களால் சூழப்பட்ட பாண்டியனின் பெரிய வாயிலை அழித்துத் தன் கையகப்படுத்தி அதில் பெரிய வாயையுடைய புலிச் சின்னத்தைப் பொறித்தான் என்பதனை,

“தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்
ஏழ் எயிற் கதவம் எறிந்து கைக்கொண்டு நின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை
பாடுநர் வஞ்சி பாட...“ (புறம். 33:7-10)

என்னும் பாடலடிகளில் எடுத்துரைக்கக் காணலாம். பகைவரை வென்று அங்கு தம் இலச்சினையைப் பொறித்தல் அக்காலப் போரியல் வழக்காறாக விளங்கியதை இப்பாடலில் காணலாம்.சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனது வீரத்தைப் புகழ்ந்து பாடும் கோவூர்கிழார் அவனது போராற்றலை,

“காலனும் காலம் பார்க்கும் பாராது
வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டு இடத்து அடூஉம் வெல்போர் வேந்தே
திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்
பெருமரத்து இலை இல் நெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி தூற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும்
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்
களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்
வெள்ளிநோன் படை கட்டிலொடு கவிழவும்
கனவின் அரியன காணா நனவில்
செருச்செய் முன்ப ! நின் வருதிறன் நோக்கி
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி, மனையோட்கு
எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களொடு
பெருங் கலக்குற்றன்றாள் தானே-காற்றோடு
எரி நிகழ்ந்தன்ன செலவின்
செருமிகு வளவ! நிற்சினைஇயோர் நாடே“ (புறம். 41)

என்று பாடுகின்றார். கொற்றவள்ளைத் துறையில் அமைந்த இப்பாடலில், காலனும் தன்னால் உயிர் பறிப்பதற்கேற்ற காலத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பான். ஆனால் நீ காலம் பாராது வேண்டியபொழுது உயிர் வவ்வும் போரை உடையவனாக இருக்கின்றாய். எட்டுத்திசைகளிலும் எரிநட்சத்திரம் எரிந்து வீழும். பெரிய மரத்தின் இலையில்லாத பெரிய கிளை உயர்ந்து போகும். வெம்மையான கதிர்களையுடைய ஞாயிறு பல இடங்களில் செறிந்து தோன்றும். மேலும் அச்சம் தரும் பறவைகள் ஓசையெழுப்பும். இவ்வாறு நனவினில் பல தீய குறிகளைக் கண்டாய். நின் பகைவர் தம் வருத்தம் தரும் கண்ணீரை மறைப்பதற்காகத் தம் புதல்வருக்கு முத்தமிடுவது போல் நடித்துத் தம் மனைவியர்க்குத் துயரை மறைத்துக் காட்டுவர். நின்னைச் சினமுறச் செய்தோரின் நாடுகள் மிகுந்த கலக்கத்தை அடையும் என்ற குறிப்பு இப்பாடலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பகைவரை அழிக்கக் கருதிய பொழுதே சோழன் போருக்கு எழுவான் என்ற குறிப்பு இதில் உணர்த்தப்பட்டது.

போரியல் நம்பிக்கைகள் கூறல்

போருக்கு எழுகையில் நல்ல, தீய குறிகள் தென்படுகின்றனவா? அவற்றின் உட்பொருள் யாது என அறிதல் பண்டை மரபு. ஆனால் தீய குறிகள் கண்டாலும் போருக்கு எழுந்த மன்னன் பின்கொள்கையினின்று வழுவாது போர் புரிவான் என்பதை இப்பாட்டில் புலவர் உணர்த்தினார். நனவிலும் கனவிலும் பல தீய குறிகள் நிகழ்ந்தன. எரிகொள்ளி வீழ்தல், மரம் வற்றுமாறு ஞாயிறு பலவிடத்தும் தோன்றுதல், கோட்டான் முதலிய பறவைகள் ஒலியெழுப்புதல் ஆகியன நனவினில் கண்ட தீக்குறிகள். பல் வீழ்தல், எண்ணெய் பூசிக்கொண்டு நீராடுதல், கட்டில் கவிழ்தல் ஆகியன கனவில் கண்ட தீக்குறிகள் என்ற பண்டைக்கால நம்பிக்கைகள் இப்பாடலில் (புறம். 41) எடுத்துரைக்கப்பட்டன.

கொடைப்பண்பினைக் கூறல்

சங்கப் புலவர்களின் இயல்புகளில் ஒன்று தம்மைப் புரந்த மன்னர்களின் கொடைச் சிறப்பினைச் சிறப்பித்துக் கூறுவதாகும். தம்மைப் போல் மன்னர்களை நாடிச் சென்று வாழ்க்கையை நடத்தும் பாணர்கள், பொருநர்கள், கூத்தர்கள், விறலியர்கள் போன்றோரின் வயிற்றுப் பசியைத் தணித்து உண்ண உணவும், உடுத்த உடையும் தந்த வள்ளலை வாயாற வாழ்த்துவது பாண்மரபுகளில் ஒன்றாகும். இதனைக் கோவூர்கிழார் பாடல்களிலும் காணமுடிகின்றது.பரிசிலரை அழைத்தல் (புலவர் இயல்பு)

தாம்பெற்ற இன்பத்தைப் பிறரும் அறியச் செய்வது சான்றோர் இயல்பு. இதனைக் கோவூர்கிழார் தனது பாடல் மூலம் வெளிப்படுத்துகின்றார். சோழன் நலங்கிள்ளியின் வள்ளண்மையைப் புகழும் கோவூர்கிழார் அவனது வரையாது வழங்கும் பண்பினைப் பின்வரும் பாடலில் எடுத்துரைக்கின்றார்.

“கடும்பின் அடுகளம் நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ!
வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள்
ஒள்நுதல் விறலியர் பூவினைப் பெறுக என
மாடமதுரையும் தருகுவன், எல்லாம்
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்“ (புறம். 32:1-4)

சோழன் நலங்கிள்ளி தான் வெற்றியாகப் பெற்ற மாட மாளிகைகள் நிறைந்த மதுரையையும், சேரர்களின் வஞ்சியையும் இரவலர்க்குப் பரிசிலாகத் தருகுபவன். ஆகவே பரிசிலரே ! வாரீர்! எல்லோரும் அவன் புகழைப் பாடுவோமாக என்று பரிசிலர்களை ஒருசேர அழைத்து அவன் புகழைப் பாடுவதனைக் காணலாம். நலங்கிள்ளி பகைவரை வென்று அவர் நாட்டைப் பரிசிலாகத் தருபவன் என்பது கருத்து. அவ்வாறு சேர நாட்டையும், பாண்டிய நாட்டையும் பரிசிலாகத் தருவது பகைவர்களால் இயலாது. எனவே அது சோழனின் கருத்தாகவே அமையும் என்ற குறிப்பும் இதில் உணர்த்தப்படுகின்றது. இதில் சோழனின் போராற்றலும், கொடையாற்றலும் ஒருசேர எடுத்துரைப்பதனைக் காணலாம்.

போரியல் அறம் கூறல்

சங்க மன்னர்கள் தங்களுக்குரிய வலிமையைப் பயன்படுத்தித் தவறு இழைக்கும் போதோ, அல்லது அறத்திலிருந்து வழுவி நிற்கும் போதோ அவர்களை நன்னெறிப்படுத்தும் சான்றாளர்களாகச் சங்கப் புலவர்கள் விளங்கியுள்ளனர். மன்னர்களிடம் நேருக்கு நேராகச் சென்று எடுத்துரைத்து, அவர்களது செயலைத் தடுத்து நிறுத்தும் வல்லமை எல்லாப் புலவர்களுக்கும் கிட்டவில்லை. தலைமைத் தன்மையுடைய, நெஞ்சுரமிக்க புலவர்களுக்கே இது சாத்தியமாயிருந்தது. இத்தகு நெஞ்சுரம் மிக்க புலவராகக் கோவூர்கிழார் விளங்கியுள்ளார் என்பதனை அவரது பாடல்களின் மூலம் அறியமுடிகின்றது.

நலங்கிள்ளி ஆவூரை முற்றியிருந்த காலத்தில், மதிற்கதவை அடைத்து உள்ளே இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடி, போரியல் அறத்தை எடுத்துரைத்தது அவரது அறம் கூறும் மாண்புக்குத் தகுந்த சான்றாகும்.

“இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ
திருந்து அரைநோன் வெளில் வருந்த ஒற்றி
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து
அலமரல் யானை உரும் என முழங்கவும்
பால்இல் குழவி அலறவும் மகளிர்
பூஇல் வறுந்தலை முடிப்பவும் நீர்இல்
வினைபுனை நல்இல் இனைகூஉக் கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
துன்அருந் துப்பின்வய மான் தோன்றல்;
அறவை ஆயின் நினது எனத் திறத்தல்;
மறவை ஆயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லையாக
திறவாது அடைத்த திண்நிலைக் கதவின்
நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே“ (புறம். 44)

நெடுங்கிள்ளி மதிற்கதவு அடைத்து உள்ளே இருந்து வெளியே வராது இருந்தது போர் அறத்திற்கு மறுதலையாக இருந்தது. அவன் அறவுணர்வு உடையவனும் அல்லன்; மற உணர்வு உடையோனும் அல்லன் என அவனியல்பினைப் பழித்துக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

இதில் மதிற்கதவம் அடைத்ததனால் யானைகள் உணவின்றிப் பெருமூச்சு விடும்படியாகவும், பாலி்ல்லாது குழந்தைகள் அழும்படியாகவும் நிலை ஏற்பட்டதனையும், மகளிர் வெறுங்கூந்தலை முடியும் படியான நிலை ஏற்பட்டதனையும், வீட்டிலுள்ளோர் குடிக்க நீரின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டதனையும் எடுத்துரைக்கின்றார். இவ்வாறிருந்தும் இங்கு நீ இனிதாகத் தங்கியிருத்தல் இன்னாதது. “நீ அறமுடையவனாயின் மதிலை முற்றுகை யிட்டிருக்கும் நலங்கிள்ளியிடம் ‘உன்னுடையது இவ்ஊர்‘ என்றுகூறி, மதிலைத் திறந்துவிடுக. வீரமுடையவனாயின் போரின் பொருட்டு மதிலைத் திறப்பாயாக!. நீயோ அறவுணர்வு இல்லாதவனாயும், வீரஉணர்வு இல்லாதவனாயும் திறவாமல் அடைத்த கதவினை உடையவனாய் இருக்கின்றாய். உனது செயல் நாணத் தக்கதாய் இருக்கின்றது“ என்ற கருத்தினைப் புலப்படுத்தியுள்ளதனைக் காணலாம். இதில் சங்கப் போரியல் நிகழ்வுகள் எடுத்துரைத்து இருப்பதனை அறியலாம்.போரைத் தவிர்க்குமாறு கூறுதல்

சங்கப் புலவர்கள் மன்னர்களிடையேயும் மக்களிடையேயும் நல்லுறவு விளங்க வேண்டுமென்றே விரும்பினர். அவர்கள் போரில்லாத சமுதாயத்தையே பெரிதும் போற்றினர். தாங்கள் இன்பமுற்று வாழவேண்டும் என்பதற்காகப் பிறரை அவர்கள் வருத்தவில்லை. மன்னர்கள் அறநெறிப்படி அறத்தைப் பின்பற்றியும் போற்றியும் வாழவேண்டும் என்பதையே தங்கள் கருத்தாக்க் கொண்டிருந்தனர்.

தாம் ஓரே குடியினராய் இருந்தும் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் பகை கொண்டனர். நலங்கிள்ளி பகை காரணமாக நெடுங்கிள்ளி ஆளும் உறையூரை முற்றுகை யிட்டான். இதனால் விளையும் பழியுணர்த்திக் கோவூர்கிழார் போரை நீக்கிய நிகழ்வினை,

“இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்
கருஞ்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்
நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே;
ஒருவீர் தோற்பினும் தோற்ப நும்குடியே
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே! அதனால்
குடிப்பொருள் அன்று நும்செய்தி; கொடித்தேர்
நும்ஓர் அன்ன வேந்தர்க்கு
மெய்ம் மலி உவகை செய்யும் இவ்இகலே.“ (புறம். 45)

என்னும் பாடல் எடுத்துரைக்கின்றது. நின் பகைவன் பெரிய பனையின் வெண்மையான தோட்டினை அணிந்த சேரனுமல்லன். கரிய கிளைகளையுடைய வேம்பின் மலர்களை மாலையாக அணிந்த பாண்டியனும் அல்லன். உன்னுடைய மாலையும் ஆத்தி மலர்களால் தொடுக்கப்பட்டது. உன்னுடன் போரிடுவோன் மாலையும் ஆத்தி மலர்களால் தொடுக்கப்பட்டது. உம்முள் எவர் ஒருவர் தோற்றாலும் தோற்பவர் உம் சோழர் குடியினரே. நீங்கள் இருவரும் ஒருசேர வெல்லுதல் உலக இயல்புமன்று. எனவே, உம் செயல் உம்முடைய குடிப்-பெருமைக்கு உரியதன்று. நீங்கள் செய்யும் இப்போர் உம்மைப் போன்று கொடியமைந்த தேருடைய மன்னர்களுக்கு உடல் பூரிக்குமாறு பெருமகிழ்ச்சியைச் செய்யும். ஆகவே நீவிர் போரைத் தவிர்த்தல் வேண்டும் என்ற கருத்தினை இப்பாடலில் கோவூர்கிழார் எடுத்துரைக்கக் காணலாம்.

சோழர் குடியினர் தம்முள் பகைத்தால் சோழன் ஒருவன் தோற்றான் என்ற பழி சோழர் குடிக்கு நேரும். எனவே, குடிப்பொருள் அன்று என்றார். தாயத்தாரின் உட்பகை அயலவர்க்கு மகிழ்ச்சியைத் தரும். அதனால் கேடு நிகழும். எனவே, போரைத் தவிர்க்க என்று வற்புறுத்தினார்.

அறவுரை கூறி மக்களைக் காத்தல்

மலையமான் மக்களைக் காத்தமை

சங்கப் புலவர்களின் சொல்லுக்குச் சங்க காலத்திய மன்னர்கள் பெருமதிப்பளித்து உள்ளனர் என்பதற்குக் கோவூர்கிழாரின் பாடல்கள் சான்றாக உள்ளன. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்காலால் இடறச் செய்தபோது, கோவூர்கிழார் பாடி, அவர்களது உயிர்களைக் காத்ததனை,

“நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி
தமது பகுத்து உண்ணும் தண்நிழல் வாழ்நர்
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி
விருந்தின் புன்கணோ உடையர்
கேட்டைனை யாயின் நீ வேட்டது செய்ம்மே!“ (புறம். 46)

என்னும் பாடலில் எடுத்துரைக்கக் காணலாம். இதில், “நீ புறாவின் துன்பம் மட்டுமின்றிப் பிற உயிர்களின் துன்பத்தையும் தீர்த்த சோழனின் வழித்தோன்றியவன். மெல்லிய தலையை உடைய இச்சிறுவரோ, அறிவால் உழுதுண்ணும் புலவர்களின் வறுமைக்கு அஞ்சித் தம் பொருளைப் பகுத்துண்ணும் மரபில் வந்தவர்கள். புல்லிய தலையை உடைய சிறுவர்களாகிய இவர்தாம் (தம்மைக் கொல்ல வரும்) யானையைக் கண்ட அளவில், அதனைக் கண்டதும் அழுகையை மறந்தனர். பலரும் கூடிய பொதுமன்றத்தில் அச்சத்துடன் நோக்கிப் புதியதொரு வருத்தமும் அடைந்தனர். எம்மொழி கேட்டாயானால் நீ விரும்பியது செய்க” என்கிறார் புலவர். ‘வேட்டது செய்ம்மே‘ என்றதால் என் சொல் கேட்டால் நீ விரும்பியதைத் தவிர்வாய் என்ற குறிப்பு இதில் இடம்பெற்றுள்ளதனைக் காணலாம். இதில் புலவர்களின் இயல்பும் புரவலர்களின் இயல்பும் ஒருசேர எடுத்துரைக்கப்பட்டுள்ளதனைக் காணலாம்.

கிள்ளிவளவனது சினத்திற்குக் காரணமான மலையமான் யாரென்று சரியான குறிப்புகள் கிட்டவில்லை என்பது வரலாற்றாய்வாளர்களின் கருத்து.

புலவர் உயிர் காத்தமை

சோழன் நலங்கிள்ளியிடமிருந்து நீங்கி நெடுங்கிள்ளியின் உறையூரை இளந்தத்தன் என்ற புலவன் அடைந்தான். அவனை நெடுங்கிள்ளி ஒற்றன் எனக் கருதிக் கொல்லத் துணிந்தான். அப்பொழுது அப்புலவனைக் கொல்லாதவாறு நெடுங்கிள்ளியைத் தடுத்தார் கோவூர்கிழார். இதனை,

“வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின்போகி
நெடிய என்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடி
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பது வீசி
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ? இன்றே; திறப்பட

நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்க இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்
மண்ஆள் செல்வம் எய்திய
நும்ஓர் அன்ன செம்மலும் உடைத்தே“ (புறம். 47)

என்னும் பாடல்வழிப் புலப்படுத்துகின்றார் கோவூர்கிழார். இரவலர் பழுத்தமரம் நாடிச் செல்லும் பறவைகள் போலக் கொடைக்குரியவரைக் கருதிச் செல்வர். நீண்டவழி எனக் கருதாது கடந்து பல பகுதிகளையும் கடந்து செல்வர். அவர்கள் குற்றமில்லாத தெளிந்த சொற்களால் தமக்கியன்றவாறு பாடிப் பரிசில் பெறுவர். அப்பரிசிலைத் தம் சுற்றத்தினருக்குத் தந்தும், தம்மிடம் மறைத்துக் கொள்ளாது தாமும் உண்டும், தம் உள்ளம் மலரப் பிறர்க்கு வழங்கியும் வாழ்வர். தம்மை ஆதரிப்பார் தமக்குச் செய்யும் சிறப்பின் பொருட்டு வருந்தும் பரிசில் வாழ்க்கையை உடையவர். இத்தகைய வாழ்க்கை, பிறருக்குத் தீமை புரிய, அறியுமா எனில் அறியாது. பல நுட்பம் அமைந்த கல்வியின் சிறப்பால் தம்மை எதிர்ந்தோர் நாணும்படி பெருமையுடன் தலையுயர்த்திச் சென்றவிடத்தும் இனிதாக நடக்கும் இயல்புடையது. அதுவேயன்றி உயர்ந்த புகழுடைய நிலமாளும் செல்வத்தை அடைந்த உம்மைப் போன்ற மன்னர்களின் தலைமையையும் உடையது என்ற கருத்தினை இப்பாடலில் எடுத்துரைக்க்க் காணலாம். தாம் பெற்ற பொருளைப் பலருக்கும் தரும் பண்பினால் மன்ன்னுடன் ஒப்பிட்டு நும்மோரன்ன செம்மல் என்று புலவர்களை வாழ்த்தியதை அறியலாம். இதனால் அரசர் வாழ்விலுள்ள பெருமிதம் புலவர் வாழ்விலும் உண்டு என்ற கருத்தினை அஞ்சாது எடுத்துரைக்கும் திறம் போற்ற்ற்குரியது. பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருந்தும் பண்பையும் இதில் புலப்படுத்தக் காணலாம்.பண்ணனைப் போற்றுதல் (பாணாற்றுப்படை)

கிள்ளிவளவன் காலத்தில் சோழ நாட்டின் காவிரி வடகரையில் சிறுகுடி என்னும் வளமிக்க ஊர்த் தலைவனாக விளங்கியவன் பண்ணன் என்பான். அவன் உணவுக் கொடையில் சிறந்து விளங்கினான். இது கண்ட புலவர்கள் தமது பாடல்களால் அவனுக்குச் சிறப்புச் செய்தனர். புலவர் பலரால் பாராட்டப்பெற்ற அவனது கொடைத்திறன், “கைவள் ஈகைப் பண்ணன்“ (புறம். 70), “கொடைமேற் தோன்றல்“ (புறம். 388), “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்“ (அகம். 54) எனப் போற்றப்பட்டுள்ளது.

அக்காலத்தில் இவனுக்குப் பெருவேந்தனாய் விளங்கிய கிள்ளிவளவன் இவன் செய்யும் அருந்தொண்டை நினைந்து போற்றி, “யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய“ என்றும், “பசிப்பிணி மருத்துவன்“ (புறம். 173:11) என்றும் பாராட்டிச் சிறப்பித்துள்ளான். அதன் சிறப்புக் கருதி கோவூர்கிழாரும் அவனது சிறப்பினைப் பாணர்வழி நின்று பாடுகின்றார்.

கிள்ளிவளவனின் ஆட்சியின்கீழ் வாழ்ந்தவனும், கிள்ளிவளவனாற் புகழ்ந்து பாடப்பட்டவனும் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனுமாகிய பண்ணனின் ஈகைச் சிறப்பினை,

“தேஎம் தீம்தொடைச் சீறியாழ்ப் பாண
கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன
நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
இனிய காண்க; இவண் தணிக எனக் கூறி
வினவல் ஆனாமுது வாய் இரவல
தைஇத் திங்கட் தண்கயம் போல
கொளக் கொளக் குறைபடாக் கூழுடை வியல்நகர்
அடுதீ அல்லது சுடுதீ அறியாது
இரு மருந்து விளைக்கும் நல்நாட்டுப் பொருநன்
கிள்ளி வளவன் நல்இசை உள்ளி
நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
சிறுவெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒள்நுதல்
இன்நகை விறலியொடு மென்மெல இயலிச்
செல்வை ஆயின் செவ்வை ஆகுவை
விறகு ஓய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்
தலைப்பாடு அன்று அவன் ஈகை
நினைக்க வேண்டா வாழ்க! அவன் தாளே!“ (புறம். 70)

என்று போற்றியுரைக்கின்றார். இது பரிசில் பெற்றுத் திரும்பிய பாணன் தன்னையொத்த பாணன் ஒருவனுக்குக் கூறுவதாக அமைந்த ஆற்றுப்படைப் பாடலாகும்.

சிறிய யாழைக் கொண்ட பாணனே! குளத்தின்கண் வாழும் ஆமையைக் கோலில் பிணைத்தது போன்ற நுண்ணிய கோலில் பிணித்த பெரிய உடுக்கையின் ஓசை இனிது காண்க. இவ்விடத்தில் தங்கிச் சிறிது வருத்தம் தணிக என்று கூறி, நல்ல வாய்மையை உடைய பாணனே! தைத்திங்களின் குளிர்ந்த குளம்போலப் பலரும் கொண்ட பின்னும் குறையாத சோறுடைய அகன்ற நகரம். அது உணவிற்கென உண்டாக்கப்பட்ட நெருப்பைத் தவிர ஊர் சுடுகின்ற நெருப்பினை அறியாதது. தண்ணீரும் உணவுமாகிய இரு மருந்தைப் பசிப்பிணிக்குத் தரும் நல்ல நாட்டையுடைய கிள்ளிவளவன் அவனுடைய நல்ல புகழினைக் கருதுவாய். கொடையில் மிகச்சிறந்த பண்ணனின் குடிவழியே விறலியுடன் மெல்ல மெல்ல நடந்து சென்றால் செல்வத்தை அடைவாய். விறகுகளைக் காட்டினின்று எடுத்துச் செல்லும் மக்கள் பொன் பெறுவது போன்ற தன்மையில் அவனுடைய ஈகை அமையாது. அவனுடைய கொடைப்பொருள் பெறுவமோ என நினைக்க வேண்டா. உறுதியுடன் பெறுவாய். அவன் தாள் வாழ்க என்ற கருத்தினை இப்பாடலில் எடுத்துரைக்கக் காணலாம். இதேபோன்று, பாணனை விளித்துச் சோழன் நலங்கிள்ளி பால் ஆற்றுப்படுத்துவதாகப் புறநானூற்றின் 68வது பாடலும் அமைந்துள்ளது.

பொருநர் இயல்பு கூறல் (பரிசில் வேண்டுதல்)

நலங்கிள்ளியின் கொடைச்சிறப்பினை விதந்துரைக்கும் கோவூர்கிழார் புறநானூற்றின் 382வது பாடலில் அவனது கொடைவன்மையைத் திணைப்பொருநன் கூற்றில் நின்று பாடுகின்றார். ஒருநாள் நலங்கிள்ளியிடமிருந்த பொருநர் சிலரைக் கண்டார் புலவர். அவர்கள் வறுமை சிறிதுமின்றி மகிழ்ச்சியுடன் இருப்பதனைக் கண்டார். அவர்களோடு கோவூர்கிழார் உரையாடினார். பொருநர் தலைவன் தான் சோழநாட்டு மறம்பாடும் பொருநன் என்றும் தானும் தன் சுற்றத்தினரும் சோழன் நலங்கிள்ளியின் போர்க்களம் பாடும் பொருநர் ஆவோம் என்றும் கூறி,

“கடற்படை அடல்கொண்டி
மண்டுற்ற மலிர்நோன்தாள்
தண் சோழ நாட்டுப் பொருநன்
அலங்குஉளை அணி இவுளி
நலங்கிள்ளி நசைப்பெருநரேம்
அவற்பாடுதும் அவன்தாள் வாழிய என
நெய்குய்ய ஊன்நவின்ற
பல்சோற்றான் இன் சுவைய
நல்குரவின் பசி்த்துன்பின் நின்
முன்னாள் விட்டமூதுஅறி சிறாரும்
யானும் ஏழ்மணி அம்கேழ் அணிஉத்தி
கண்கேள்வி கவைநாவின்
நிறன்உற்ற அராஅப் போலும்
வறன்ஒரீஇ வழங்குவாய்ப்ப
விடுமதி அத்தை கடுமான் தோன்றல்
நினதே, முந்நீர் உடுத்த இவ்வியன் உலகு, அறிய
எனதே கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை
கண்அகத்து யாத்த நுண்அரிச் சிறுகோல்
எறிதொறும் நுடங்கி யாங்குநின் பகைஞர்
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென்
வென்ற தேர் பிறர் வேந்தனை யானே“ (புறம். 382)

என்னும் பாடலைப் பாடியுள்ளார். அவன்பாற் செல்லின் நின் பசித்துன்பம் நீங்க அவன் நெய்யில் பொரித்த ஊனும், பல்வகைச் சோறும் சுவையுடைய பிறவும் நல்குவான் என்று பொருநர் கோவூர்கிழாரை ஆற்றுப்படுத்தினர். இதனால் வியப்பு மிகக்கொண்ட கோவூர்கிழார் சோழனையடைந்து, “பெரும! நின்பொருநர் இவ்வாறு கூறுகின்றனர். அது கேட்டு நீ முன்னாள் பரிசில் நல்கிச் செலவிட்ட பொருநராகிய சிறாருடனே யான் வழிவினாய் வந்துள்ளேன. என்னைப் பாம்புபோல் தீண்டி வருத்தும் வறுமை நீங்க, யானும் என்பால் வருவோர்க்கு வழங்குவதற்கு ஏற்ப, பாம்பு தன் தோலை உரித்து நீங்கினாற்போல என் வறுமையை நீக்கி வளம் பல தந்துதவாயாக! இவ்வுலகு பலரும் அறிய நினதேயாகும். அவ்வாறே கிணைப்பறை எனதாகும்“ என்று கூறிப் போற்றுவதனை இதில் காணலாம்.

இதேபோன்று புறநானூற்றின் 400வது பாடலிலும் பொருநர் கூற்றாக நின்று நலங்கிள்ளியின் கொடைச்சிறப்பினை எடுத்துரைக்கின்றார்.சங்க வீர உணர்வும் மனித வள மேம்பாடும்

புறநானூற்றின் மூதின்முல்லைத் துறையில் அமைந்த 308வது பாடலில் பாணர்களின் வாழ்வியலும் சங்ககாலப் போராற்றலும் ஒருசேர எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

“பொன் வார்த்தன்ன புரி அடங்கு நரம்பின்
மின்நேர் பச்சை மிஞிற்றிக் குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
வேந்துணர் யானை ஏந்து முகத்ததுவே
வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை
சாந்துஆர் அகலம் உளம் கழிந்தன்றே
உளம்கழி சுடர்ப்படை ஏந்தி, நம் பெருவிறம்
ஓச்சினன் துரந்த காலை மற்றவன்
புன்தலை மடப்பிடி நாண
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே“(புறம். 308)

மறவர்களின் போர் வீரத்தைப் பாடும் பாணனிடம் ஒரு வீரனின் வீரத்தை எடுத்துக் கூறி, அதனை யாழில் இசைக்க வேண்டிக் குறிப்பினையுடைதாக இப்பாடல் அமைகின்றது.

சிறிய ஊரின் தலைவனாகிய குறுநில மன்னன் கையில் ஏந்திய சிறிய இலைத் தொழிலையுடைய வேல், பெருநில மன்னன் ஊர்ந்து வருகின்ற யானையின் எடுத்த முகத்தில் தைத்தது. அதனால் அவ்வரசன் சினம் கொண்டு எறிந்த வேல், என் தலைவனுடைய சந்தனம் பூசிய மார்பினுள் புகுந்து சென்றது. பெரிய வலிமையையுடைய நம் தலைவன், தன் மார்பினுள் சென்ற அவ்வொளி பொருந்திய வேற்படையைப் பறித்து எடுத்து வீசிய காலத்து, அப்பெரு வேந்தனின் புல்லிய தலையையுடைய இளைய பெண் யானைகள் நாணம் கொள்ளுமாறு, களிறுகள் எல்லாம் புறங்காட்டி ஓடலாயின.

சீரிய யாழின் நரம்பும், அதனைப் போர்த்திய போர்வையும், அவ் யாழினின்று வெளிப்படும் வண்டின் ஓசை போன்ற குரல் என்ற இசையும் இதில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. தன் கணவனின் வீரமற்ற செயல்கண்டு நாணமடையும் மகளிர்போலப் பெண் யானைகள் புறங்காட்டிச் சென்ற தம் களிற்றினத்தைக் கண்டு நாணமடைந்ததாக இப்பாடலில் குறிக்கப்பட்டுள்ளது. பேரரசனை நோக்கி வீசிய சிற்றரசனின் வேல் அம்மன்ன்ன் ஊர்ந்து வந்த யானையின் மத்தகத்தில் தைத்தது என்றும், அவ்வீரன் தன் மார்பில் தைத்த வேலைப் பறித்து வீசிய காலத்துப் போர்க்களத்தில் இருந்த களிறுகள் எல்லாம் புறங்காட்டி ஓடின என்றும் போர்க்களத்தின் நிகழ்ச்சி இப்பாடலில் ஒரு தொடர்நிகழ்வாகக் கூறப்பட்டுள்ளது.

முடிவுகள்

* சங்கப் புலவர்களிடையே சமூகவியல் பண்பே மேலோங்கி இருந்துள்ளது. இதனைக் கோவூர்கிழார் பாடல்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

* சங்ககால மன்னர்களின் செயல்பாடுகளை அறிவதற்கும், புலவர்களின் நிலைப்பாட்டை அறிவதற்கும் கோவூர்கிழார் பாடல்கள் துணைசெய்கின்றன. சோழர் குடிப்பெருமையை நிலைநிறுத்திக் கூறும் வல்லாண்மை மிக்க புலவராகக் கோவூர்கிழார் திகழ்கின்றார்.

* கோவூர்கிழார், தனது பாடல்களில் தன்னை ஒரு பாணனாகவும், பொருநனாகவும் கருதிப் பாடியுள்ளார். பாடல்களில் கூற்று முறையும் பின்பற்றப்பட்டுள்ளது. கோவூர்கிழார் பாடல்களில் சங்கப் பாண்மரபினைக் காணமுடிகின்றது. இதனால் அவரது பாடல்கள் தொன்மையானவையாக இருக்கலாம் என்று கருதமுடிகின்றது.

* சங்க அகப்பாடல்களுக்குரிய கூற்று மரபு கோவூர்கிழார் பாடல்கள் காணமுடிகின்றது. பாணன் கூற்றாகவும், பொருநன் கூற்றாகவும் தம்மைப் புரந்த புரவலர்களின் புகழினைப் பாடிச் சிறப்பிக்கின்றார்.


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p167.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License