எட்டுத்தொகையில் மருத்துவச் செய்திகள்
கு. வளர்மதி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி.
முன்னுரை
மனிதன் அறிவியல் துறையில் முன்னேறியுள்ள இன்றையக் காலகட்டத்தில் இயற்கையிலிருந்து விலகியே வாழ்வதால் நோய்கள் பெருகிக் காணப்படுகின்றன. மருத்துவக் கண்டுபிடிப்புகள் பல மனிதனின் ஆயுட்காலத்தைச் சிறிது நீட்டிக்கின்றன. இன்றைய கண்டுபிடிப்புகளின் அடித்தளம் நம் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரையுள்ள அனைத்து இலக்கியங்களிலும் உடல்நலத்தைப் பேணக்கூடிய மருத்துவச் செய்திகள் பொதிந்து கிடக்கின்றன. தமிழ் இலக்கியமானது, ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டும் மருத்துவத்தின் மகத்துவத்தினை நமக்குப் போதிக்கிறது. இங்கு, எட்டுத்தொகையில் காணப்படும் மருத்துவச் செய்திகள் ஆராயப்படுகிறது.
மருத்துவர் - குறிப்பு
‘நோவு, நோதல்’ போன்ற சொற்கள் நோயைக் குறிக்கின்றன. நோயை அறிந்து குணப்படுத்துபவரை ‘மருத்துவர்’ என்று அழைக்கிறோம். நோயுற்றோரின் உடல்நிலையை அறிந்து, அதற்குத் தகுந்தாற் போல பழங்காலத் தமிழ் மருத்துவர்கள் மருந்து கொடுக்கின்றனர். இதனை,
“பொருந்தியன் வேட்ட பொருளவின் நினைத்த சொல்
திருந்திய யாக்கையுடன் மருத்துவன் ஊட்டிய மருந்து” (கலி.17)
என்ற கலித்தொகைப்பாடல் எடுத்துரைக்கிறது.
அறத்தொழில் செய்யும் மருத்துவரை ‘அறவோன்’ என்று குறிப்பிட்டனர்.
“அரும்பிணி உறுநர்க்கு வேட்டவை கொடாஅது
மருந்து ஆய்ந்து கொடுக்கும் அறவோன்” (நற்.136)
இங்கு நோயினை அறிந்து, அதற்கேற்ற மருந்து கொடுத்த மருத்துவர்களை ‘அறவோன்’ என்று கூறிய செய்தி புலப்படுகிறது.
“பிறர் நோயும் தம்நோய் போல் போற்றி அறன்அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன்” (கலி.22)
இவ்வரிகளில் நோயாளிக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர், தன்னையே நோயாளியாகப் பாவித்துச் சிகிச்சையளிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. ‘மருத்துவன் தாமோதரனார்’ போன்ற சங்கப்புலவர்கள் பலர் மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
மருந்து - விளக்கம்
சங்ககால மக்கள் ஏராளமான மூலிகைகள் பற்றியும் அவற்றின் நோய் தீர்க்கும் பண்புகள் பற்றியும் நன்கு அறிந்திருந்தனர். இருப்பினும், இன்று போல் அன்றும் பலவிதமான நோய்களாலும் உடல் ஊனங்களாலும் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாரென்பதைத் தமிழ் இலக்கிய நூல்கள் நன்கு வெளிப்படுத்தியுள்ளன.
“அருந்துயர் அவலம் தீர்க்கும் மருந்து” (நற்.140:10-11)
இங்கு, நோயாளிகளின் துன்பத்தையும், வேதனையையும் துடைப்பது மருந்து என்று நற்றிணை கூறுகிறது.
“அருந்துயர் ஆரஞர் தீர்க்கும் மருந்து” (கலி.குறி.20-21)
என்று கலித்தொகையின் குறிஞ்சிக்கலியிலும் மருந்துக்கு இது போன்றதொரு வரையறை கூறப்பட்டுள்ளது. நோயாளியின் அருந்துயரையும் கடும் வேதனையையும் தீர்ப்பது மருந்து ஆகும்.
“இன்னுயிர் செய்யும் மருந்து” (கலி.பாலை.31:14)
இவ்வரியின் மூலம் ‘உயிர் காப்பது மருந்து’ என்று மருந்தினை உயிரைப் பாதுகாக்கும் பொருளாகப் பாலைக்கலி வரையறுத்துள்ளமையை அறிய முடிகிறது.
“திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்து போல் மருந்தாகி மனன் உவப்ப” (கலி.பா.16:19-21)
இவ்வரிகளில் நன்கு பாதுகாக்கப்பட்ட உடம்பினை நோயாளி கொண்டிருந்தால் மருத்துவர் தரும் மருந்து, நோயாளியின் பாதிக்கப்பட்ட உறுப்பினை விரைவாகச் சென்றடைந்து நன்கு வேலை செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இயற்கை மருத்துவம்
தமிழரின் மருத்துவமுறையில் இயற்கையில் கிடைக்கக்கூடிய மரம், செடி, கொடிகள் போன்றவை மருந்தாகப் பயன்படும் நிலையினைக் காணமுடிகின்றது.
“புளிங்காய் வேட்கை தந்து மலர்ந்த
இவள் வயா நோய்க்கே”
(ஐங்குறு.51)
இங்கு கர்ப்பக்காலத்தில் ஏற்படுகின்ற வேட்கையானது ‘வயா’ என்று இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
“பசும்புளி வேட்கைக் கடுஞ்சூல் மகளிர்”
(குறு.287:4-5)
இங்கு கருவுற்ற பெண்களுக்கு மசக்கை காலத்தில் ஏற்படுகின்ற வாந்தியெடுக்கும் உணர்வினைப் புளியங்காய் கட்டுப்படுத்தும் என்று புளியங்காயின் மருத்துவக்குணம் கூறப்பட்டுள்ளது. சங்ககாலத்தில் வயா நோயினால் துன்புற்ற கர்ப்பிணிப் பெண்கள் மண் போன்ற பொருட்களை உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
“வயவுறு மகளிர் வேட்டு நின்அல்லாது
பகைவர் உண்ணா அரும் மண்ணினையே”
(புறம்.20:14-15)
சேரமன்னன் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்து பாடும் பொருட்டு, குறுங்கோழியூர்கிழார் என்ற புலவர் அவருடைய நாட்டில் வயா நோயினால் துன்புறும் கர்ப்பிணிப் பெண்களன்றி அவரது எதிரிகளின் நாட்டைச் சேர்ந்த எவரும் அவரது நாட்டின் மண்ணை உண்டதில்லை என்று அவரது நாட்டின் பெருமையினைப் புகழ்ந்து பாடியிருப்பதைப் புறநானூற்றின் வாயிலாக அறிய முடிகிறது.
வேம்பு, கடுகு, கீரை வகைகள், நெல்லி போன்ற இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் மருத்துவக்குணம் இருப்பதைத் தமிழர்கள் அறிந்திருந்த செய்தியை எட்டுத்தொகை நூல்கள் புலப்படுத்துகின்றன.
“தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரி,
வாங்கு மருப்புயாழொடு பல்இயம் கறங்கக்
கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசைமணி எறிந்து காஞ்சிபாடி
நெடுநகர் வரைப்பின் புகைஇக்
காக்கம் வம்மோ!...
வேந்தறு விழுமம்…”
(புறம்.281)
இப்பாடலின் வாயிலாகப் போரில் விழுப்புண் பெற்ற தலைவனுக்கு மருந்திட்டுக் காக்க, இயற்கையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தியுள்ளமையை அறிய முடிகிறது.
“பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின் அகத்து அடங்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே”
(புறம்.91)
இங்கு அரிய மலைப்புறத்து உள்ள நெல்லிக்கனியைத் தான் உண்ணாது, ஔவையார் உண்டு நீடு வாழ வேண்டுமென்று அதியமான் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது. இதனால், ‘சாவா மருந்து’ என்ற பெருமைக்குரிய நெல்லிக்கனியின் மருத்துவப் பயன்பாட்டைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மரணத்தையேத் தள்ளி வைக்கும் வல்லமை கொண்ட நெல்லிக்கனியின் மகத்துவத்தை அன்றைய தமிழர்கள் அறிந்திருந்தனர். நெல்லிக்கனி தாகம் தீர்க்கப் பயன்பட்டதை அகநானூற்றுப் பாடல் (அகம்.271) ஒன்று எடுத்துக் காட்டுகின்றது. இன்றைய அறிவியலாளர்களால் நெல்லிக்கனியின் மருத்துவப் பண்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தமிழரின் மருத்துவ அறிவுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
அறுவை சிகிச்சை முறை
இன்றைய மருத்துவத்தின் உயரிய நிலையான அறுவை சிகிச்சை முறைக்கு முன்னோடி நம் தமிழ்ச் சான்றோர்களே ஆவர். போரிலே புண்பட்ட வீரர்களின் உடலானது, ஊசி கொண்டு தைக்கப்பட்டதாகப் பதிற்றுப்பத்து பறைசாற்றுகின்றது.
“மீன் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தனை நெடுவள் ஊசி
நெடுவசி பரந்த வடுவாழ்
மார்பின் அம்புசேர் உடம்பினர்” (பதிற்று.42)
இப்பாடலில், ஊசி கொண்டு தைக்கும் அறுவை சிகிச்சை முறை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
“செருவா யுழக்கிக் குருதி யோட்டிக்
கதுவாய் போக்கி துதிவா யெஃகமொடு
பஞ்சியுங் களையாப் புண்ணார்” (புறம்.353)
இவ்வரிகளில் போரில் புண்பட்டு கிழிந்த தசையைத் தைத்துப் பஞ்சு கொண்டு கட்டிய செய்தி புலப்படுகிறது. ஊசியால் தைத்துப் பஞ்சினால் கட்டுப் போடுகின்ற இன்றைய அறுவை சிகிச்சை முறையைப் பழந்தமிழர்கள் அன்றே அறிந்து மேற்கொண்டனர்.
மனநல மருத்துவம்
பழந்தமிழ்ச் சான்றோர்கள் அக்காலத்திலேயே மனநோய், உளநோய் குறித்த விழிப்புணர்வுச் சிந்தனையுடன் செயல்பட்டனர் என்பதைப் பல்வேறு அகப்பாடல்களின் வாயிலாக அறிய முடிகிறது.
காதலில் அகப்படும் ஆணும் பெண்ணும் மனதளவில் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாவார்கள். அந்நோயைக் குணப்படுத்தும் வழிமுறைகளைச் சங்கத்தமிழர்கள் அன்றே தெரிந்து வைத்திருந்தனர். அக்கால மனநல மருத்துவத்தை எடுத்துரைக்கும் வண்ணமாக, குறுந்தொகையில் 71, 136-வது பாடல்கள் அமைந்துள்ளன. இதனால், பழந்தமிழர்கள் அன்றே உளவியல் மருத்துவர்களாகத் திகழ்ந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
மருந்து என்பது உடலை மட்டுமின்றி, மனதையும் குணப்படுத்துவதாக இருக்க வேண்டும். மனம் பாதிப்புக்குள்ளாவது நோயென்று தற்காலத்தில் கருதப்படுகிறது. உளவியல் மருத்துவர்கள் மனப்பாதிப்பிற்கான காரணங்களை நன்கறிந்து, அதற்குரிய சிகிச்சையினை அளித்து வருகின்றனர்.
தொகுப்புரை
மனிதன் தோன்றிய நாளிலிருந்தே நோய்களும் காணப்படுகின்றன. நோய்களுக்கான மருத்துவ முறைகள் மனிதனுடைய அறிவின் விளைவாக ஏற்பட்டவையாகும். மனிதனுடைய அறிவின் படிநிலை வளர்ச்சியாகப் படிப்படியாகவே மருத்துவ முறைகளும் வளர்ச்சி பெற்று வந்துள்ளன. பழந்தமிழர்கள் நோயால் அவதிப்பட்ட போது, அதனைத் தீர்க்கும் வழிமுறைகளைத் தேடிக் கண்டனர். இன்றைய மருத்துவ உலகின் முன்னோடியாகத் தமிழர்கள் கண்ட மருத்துவம் திகழ்கிறது. இன்றைய சித்த மருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் அன்றைய இயற்கை மருத்துவத்திலிருந்தே வளர்ச்சி பெற்றிருக்கின்றன.
துணைநூல் பட்டியல்
1. சங்க இலக்கியம், பாரிநிலையம், சென்னை-1.
2. சின்னசாமி, தமிழ்நாட்டு மருத்துவம், அறிவுப்பதிப்பகம், சென்னை (2000)
3. இராமநாதன்செட்டியார், எட்டுத்தொகை செல்வம், முத்தையா நிலையம், (1973)
4. கா. சுப்பிரமணியம், சங்ககாலச் சமுதாயம், நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ்(பி)லிட், சென்னை (1987)
5. அ. தட்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும் (பதிப்பகம், ஊர், பதிப்பாண்டு குறிப்பிட்டிருக்கலாம். - ஆசிரியர்)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.