இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

சங்க இலக்கிய நிலவியல் பகுப்புகளின் அடிப்படையில் குறிஞ்சிநிலத் தொழில்கள்

த. வாசுகி
முனைவர்பட்டஆய்வாளர், தமிழ்த்துறை,
ராணிஅண்ணாஅரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி - 627 008.


முன்னுரை

நிலவியல் பகுப்புக்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற திணைகளில் சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து செயல்பட்டனர். தொல்காப்பியர் தொழில் என்பதனை வினை என்ற பொருளில் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். இதனை,

“வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை
இடைச் சுர மருங்கில் தவிர்தல் இல்லை” (1)

என்ற நூற்பாவின் மூலம் அறியலாம். மேலும் தொல்காப்பியர் ஒவ்வொரு திணைக்குமுரிய வாழ்க்கை முறையினைச் சுட்டிச் செல்கின்றார். அத்தகைய புரிதலை விரிவு படுத்துவதாகச் சங்க இலக்கியங்கள் அமைகின்றன. நிலவியல் பகுப்புகளின் அடிப்படையில் குறிஞ்சிநிலத் தொழில்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

குறிஞ்சிநிலத் தொழில்கள்

குறிஞ்சி நிலம் என்பது மலை சார்ந்த பகுதிகளைக் குறிக்கின்றது. மலைக்குன்றுகள், அடர்ந்த மரங்கள், படரும் கொடிகள், சுனைகள், அருவிகள், பறவைகள், விலங்குகள் போன்றவை மலையின் அங்கங்களாகும். இந்த நிலப்பகுதிகளுக்கு ஏற்ப மக்கள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டு, அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை, பருவ காலங்கள், அந்நிலத்தின் தன்மை போன்றவைகளை அறுதியிட்டு அதற்கு ஏற்பத் தங்களது தொழில்களை அமைத்துச் செழிப்புடன் வாழ்ந்தனர் என்பதனைச் சங்கப் பாடல்களின் மூலம் அறியலாம்.

உழவரால் உழுது விளைவிக்கப்படாத இயற்கை வளத்தை உடையது குறிஞ்சி என்பதனை,

“உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணிநிற வோரி பாய்தலின் மீது அழிந்து
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே” (2)

என்ற புறநானூற்றுப் பாடலின் மூலம் அறியலாம். இப்பாடலின் கருத்தானது, குறிஞ்சித் திணையானது உழவரால் உழுது விளைவிக்கப்படாத நான்கு விதமான பயனை உடையது. அவற்றுள் ஒன்று, சிறிய இலையையுடைய மூங்கிலினது நெல் விளையும். இரண்டு, இனிய சுளையுடைய பலாவினது பழம் ஊழ்க்கும். மூன்று, கொழுங்கொடியையுடைய வள்ளிக்கிழங்கு வீழ்க்கும். நான்கு, அழகிய நிறத்தையுடைய ஓரி பாய்தலான் அதன் மேற்கொடி அழிந்து, நெடிய மலை தேன் சொரியும் என்று குறிஞ்சி நிலத்தின் வளமையைச் சுட்டிச் செல்கின்றது.

வேளாண் தொழில்கள்

குறிஞ்சிநிலத் தொழில் என்பது மலைவளத்தையும், புன்செய் வேளாண்மையையும், வேட்டைத் தொழிலையும் அடிப்படையாய்க் கொண்டமைந்துள்ளன. தினை, ஐவனவெண்ணெல்லும், புல்லரிசியும், மூங்கிலரிசியும், அவரையும், கிழங்கும், தேனும், வேட்டைப் பொருள்களும் குறிஞ்சி நில மக்களின் அடிப்படை உணவுகள் ஆகும்.



தினை (ஏனல்)

எக்காலத்திலும் புன்செய் நிலங்களில் வளர்வதற்கு ஏற்ற பயிராகத் தினை விளங்குகின்றது. புன்செய் நிலம் என்பது மழை நீரினால் விளைச்சலைத் தரக்கூடிய நிலத்தினைக் குறிக்கும். குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த இடமுமாக இருப்பதினால், அங்கு மழையின் அளவு அதிக அளவில் இருக்கும். இதனால் மனித முயற்சியின்றி இயற்கையாகவே நீராதாங்களைப் பெற்ற நிலமாக குறிஞ்சி நிலம் அமைகின்றது. இந்நிலத்தின் முக்கியப் பயிராகிய தினையினைப் பற்றியப் பல குறிப்புகள் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. தினை, தினை வகைகள், தினை விதைத்தல், கொல்லையில் விதைத்தல், தினை முளைத்தல், களை நீக்குதல், முதிர்ந்த தினைக் கதிர்கள், தினை விளைந்த பதம், தினைப்புனத்திற்கு வரும் பாதிப்புகள், யானை தினைப்புனம் புகுதல், பன்றிகள் தினையைச் சேதப்படுத்தல், கானங்கோழி, கிளி போன்றவை தினையினைக் கவர்தல், தினையைப் பாதுகாத்தல், பன்றியைப் பொறி வைத்துப் பிடித்தல், அம்பெய்து விரட்டுதல், விளக்கேற்றி விரட்டுதல், தொண்டகப் பறை முழக்குதல் போன்று பல விதமான உத்திகளைத் தினையினைக் கவர வரும் விலங்கு, பறவைகளை விரட்டப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், பரணில் இருந்து புனம் காத்தல், தினையின் அறுவடைக் காலம், தினையைக் காயவைத்தல், தினை இடித்தல் போன்ற தினையினைப் பற்றிய பல்வேறு செய்திகளைச் சங்கப்பாக்கள் குறிப்பிடுகின்றன.

நற்றிணைப் பாடலானது தினையினை,‘மலைப்பக்கத்தே முளைத்துச் செழித்தக் கரிய நிறமுடைய தினை’ என்று குறிப்பிடுகின்றது. இதனை,

“மலை அயற் கலித்த மைஆர் ஏனல்” (3)

என்ற பாடல் வரியின் மூலம் அறியலாம்.

தினை அறுவடைக்குப் பின் தினைத்தாளைக் கொண்டு குடிசை வேயப்பட்டது என்பதனை,

“இருவி வேய்ந்த குறுங்காற் குரம்பை” (4)

என்னும் குறிஞ்சிப்பாடலானது குறிப்பிடுகின்றது. இதன்மூலம் குறிஞ்சி நில மக்களின் நிலம் சார்ந்த வாழ்வியல் திறத்தினை அறிய முடிகின்றது.

ஐவனம் அல்லது மலைநெல்

குறிஞ்சி நிலத்தில் ஐவனநெல் என்னும் வெண்ணெல், தோரை என்னும் நெல், மூங்கிலரிசி போன்றவற்றை விளைவித்தனர். புல்லரிசியானது எறும்புப் புற்றிலிருந்து கிடைக்கபெற்ற உணவாக இருந்திருக்கின்றது. மதுரைக் காஞ்சியானது குறிஞ்சி நிலத்தில் விளையும் நெல் பற்றியும், அவற்றுடன் எவையெவை பிணைந்து வளரும் என்பதனை,

“நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை, நெடுங்கால் ஐயவி,
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி;
இஞ்சி, மஞ்சள், பைங்கறி, பிறவும்
பல்வேறு தாரமொடு, கல்லகத்து ஈண்டி” (5)

என்ற பாடல் வரிகள் குறிப்பிடுகின்றது. இப்பாடலானது, மணம் கமழும் அகிலையும், சந்தனத்தையும் வெட்டி, மேட்டு நிலங்களில் விதைக்கப்பட்ட குறிய கதிர்களையுடைய தோரை என்னும் நெல்லும், நெடிய தாளினையுடைய வெண்சிறு கடுகும், ஐவன நெல் என்னும் வெண்ணெல்லுடன் பிணைந்து வளர்ந்த இஞ்சியும், மஞ்சளும், பசுமை வாய்ந்த மிளகுக் கொடியும், ஒழிந்த பல்வேறு பண்டங்களும் கல் தரையில் குவிக்கப்பட்டிருப்பதனைச் சுட்டுகின்றது.

குறுந்தொகையில் வரும் குறிஞ்சிப் பாடலொன்று,‘காந்தளை இயற்கை வேலியாக உடைய இச்சிறுகுடியில் வாழ்பவர், அருவியை உடைய பரந்த நிலத்தில் மலை நெல்லை விதைப்பர். அவற்றிடையே களையாக வளர்ந்துள்ள பருத்த இலையையுடைய காட்டு மல்லிகையையும், பசிய மரலை எனப்படும் ஒருவகை கற்றாழையையும் பறித்து எறிவர். இதனை,

“அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருஇலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி” (6)

என்ற பாடலின் மூலம் அறியலாம்.



எள்

எள் பற்றிய செய்தியானது சங்கப் பாடல்களில் காணக்கிடைக்கின்றது. கார் காலத்தில் முதலில் தோன்றும் மழை, புதுப்பெயல் எனவும், இளமழை எனவும் கூறப்படும். அக்காலத்தில் தொடர்ந்து பெய்யும் மழை,‘பழமழை’ எனப்படும். அப்பருவத்தின் இறுதியில் பெய்யும் மழை ‘சில் பெயல்’ எனப்பட்டது. எள்ளிற்கு அதிக மழை பெய்தால், காய்கள் பதனழிந்து, உள்ளீடின்றிப் போகும். உள்ளீடில்லாத காய்கள் ‘சிதட்டுக் காய்’ என்றும் கூறப்படும். இத்தகைய கருத்துக்களைத் தாங்கி நிற்கும் குறுந்தொகைப் பாடலொன்று, பழமழையால் பதம் கெட்டு உருகிய எள்ளின்காய், சின்மழையால் இனிதாய் விளங்கினாற் போல என்பதனை,

“பழமழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக்காய் எண்ணின் சில்பெயற் கடைநாள்” (7)

என்ற பாடல் வரிகளின் மூலம் விளக்குகின்றது. எள்ளிலிருந்து எண்ணெய் பிழிந்து எடுக்கப்பட்ட செய்தியை நற்றிணைப் பாடலானது,

“எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது” (8)

என்ற வரிகளில் குறிப்பிடுகின்றது. மேலும், மலைபடுகடாம் என்ற பாடலானது,‘பலவாகக் கிளைத்த பசிய எள்ளின் இலைகள் எல்லாம் நீலமணியின் நிறத்தையுடையனவாய் வளர்ந்தன. அவை விதைக்கப்பட்ட கொல்லையின் பக்கத்தில், நீர் இறைக்கும் சால் போன்ற வடிவத்தையுடைய நீர் நிறைந்த சுனைகள் விளங்கின. அக்காட்டின்கண் அரக்குப் பாயாமல், மழைத்துளி தழுவுதலால், இளங்காயாகிய தன்மை நீங்கி, ஒரு பிடியில் ஏழு காய்களைப் பெற்று, எள், நெய் உள்ளே கொள்ளும்படி வளர்ந்தன. இதனை,

“நீலத்து அன்ன விதைப்புன மருங்கில்
மகுளி பாயாது மலிதுளி தழாலின்,
அகளத்து அன்ன நிறை சுனைப் புறவின்
கௌவை போகிய கருங்காய் பிடிஏழ்
நெய்கொள ஒழுகின, பல்கவர் ஈர் எண்” (9)

என்ற பாடலின் மூலம் அறியலாம். இவற்றிலிருந்து குறிஞ்சி நில மக்களின் வாழ்வில் எள் இடம் பெற்றிருந்தது என்பதனை அறியலாம்.



அவரை

குறிஞ்சி நில மக்கள் தினைக்கு ஊடுபயிராக அவரையைப் பயிரிட்டுப் பயன்பெற்றனர் என்பதனைச் சங்கப்பாக்கள் அறிவிக்கின்றன. மலைபடுகடாம் என்ற பத்துப்பாட்டு நூலானது, ‘அவரைகள், தினை அரிந்த தாள்களில் முற்றிய தயிரின் பிதிர்ந்த சிதறல் போன்ற பூக்கள் உதிர்ந்து, அரிவாள் போன்ற வளைந்த காய்களைக் கொண்டன’ என்றுக் குறிப்பிடுகின்றது. இதனை,

“விளைதயிர்ப் பிதிர்வின் வீஉக்கு, இருவி தொறும்,
குளிர் புரை கொடுங்காய் கொண்டன, அவரை” (10)

என்ற பாடலின் மூலம் அறியலாம். மேலும்,குறுந்தொகைப் பாடலொன்று இதே செய்தியைக் கீழ்க்கண்டவாறு பதிவிடுகின்றது.

“பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால்
கொழுங்கொடி அவரை பூக்கும்” (11)

என்பதில், தினைப் புனத்தில் விதைத்த அவரை, அதன் மறுதாளில் படர்ந்து, பூத்துக் காய்களை உண்டாக்கும். அதாவது, குறவன் ஒருமுறை விதைத்த தினையின் கதிர்களைப் பெற்று மகிழ்வதோடு, அவற்றின் மறுகாலில் விளையும் அவரைக் காய்களையும் பெற்று இன்பம் நுகர்வான் என்பதனை அறியலாம்.



கிழங்கு அகழ்தல்

சங்ககால மக்களின் உணவுப் பொருளாகக் கிழங்கு வகைகள் இருந்துள்ளன. கவலைக் கிழங்கு, வள்ளைக் கிழங்கு, பனங்கிழங்கு, நூற் கிழங்கு, சேமங்கிழங்கு போன்ற பல கிழங்கு வகைகளைப் பற்றிய செய்திகளும், அவை உணவாகப் பறிமாறப்பட்டன என்ற செய்திகளும் சங்கப் பாடல்களில் காணக்கிடைக்கின்றன. கிழங்கினைப் பண்டமாற்றுப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தியுள்ளனர் என்பதனையும் அறிய முடிகின்றது. கிழங்கு அகழ்வதற்காக வெட்டப்பட்ட குழி, முதலில் அகழ்ந்தவர்க்கு உரித்தாதலும், அதனைப் பிறர் அகழாமையும் மலைவாழ் மக்களிடம் காணப்படும் இயல்பாக இருந்துள்ளதனை அறியமுடிகின்றது. இத்தகைய ஒழுங்குமுறையினைக் காணும் பொழுது, குறிஞ்சி நில மக்கள் கிழங்கினைப் பயிர் செய்யாமல் இயற்கையாகவே மலைகளில் கிடைக்கப்பெற்ற உணவுப் பொருளாக இருந்துள்ளதை ஒருவாறு உணரமுடிகின்றது. கானவன், அகழ்ந்த குழியில் கிழங்கு முற்றாமை கண்டு, பிற்றை நாள் அகழ்ந்ததை,

“… … … … … குன்றத்துப்
பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு” (12)

என்ற வரிகளில் குறுந்தொகைப் பாடலானது குறிப்பிடுகின்றது. கானவர் கிழங்ககழ்வதற்கு நெடுங்குழி தோண்டிய செய்தியினை ஐங்குநுறூற்றுப் பாடலானது,

“… … … … … கானவர்
கிழங்ககழ் நெடுங்குழி மல்க வேங்கை” (13)

என்று குறிப்பிடுகின்றது.

தேனெடுத்தல்

குறிஞ்சி நிலத்தில் மரங்கள் மிகுதியாகக் காணப்பட்டதால் தேன் மிகுந்து காணப்பட்டது. குறிஞ்சி நில மக்கள் தேனெடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். தேன் என்பது மலையின் வளத்தினைக் குறிக்கும் ஒரு பொருளாகத் திகழ்ந்திருக்கின்றது. தேன் சிறந்த உணவுப் பொருள் என்பதனை நற்றிணைப் பாடலானது, வண்டுகள் உண்ணுமாறு மலர்ந்த கரிய அடிப்பகுதியைக் கொண்ட வேங்கை மரத்தின் பெரிய கிளையிலே தொடுத்த கொழுவிய கண்களையுடைய தேனடையில் தேனீக்கள் மொய்த்தலால் தேன் கசிந்து கல்லின் குழிகளிலே வடியும். குறவர்களின் இளமகார் அதனை வழித்துண்பர். அவர் உண்டது போக எஞ்சியதை மெல்லிய தலையுடைய மந்தியின் வலிய குட்டிகள் சென்று உண்ணும் என்பதனை,

“சுரும்பு உண விரிந்த கருங் கால் வேங்கைப்
பெருஞ் சினைத் தொடுத்த கொழுங் கண் இறாஅல்,
புள்ளுற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக்
குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப்
புன் தலை மந்தி வன் பறழ் நக்கும்” (14)

இந்தப் பாடலானது விளக்குகின்றது. தேனை எடுப்பதற்குக் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதனை மலைபடுகடாம் பாடலானது, முசுக்கலை தன்னால் ஏறமுடியாது என்று செயலற்றுப் போகக் காட்சிக்கு இனிய உயர்ந்த மலையில் நிலைபேறுண்டாகக் கூட்டி நட்ட கண் ஏணி வழியாகச் சென்று, பெரிய பயன் உண்டாகுமாறு, தேனீக்கள் திரட்டிவைத்த தேனை அழித்துக் கொண்டு வந்ததனை,

“கலை கையற்ற காண்புஇன் நெடு வரை,
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக,
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை” (15)

என்று குறிப்பிடுகின்றது. இதனைப் போன்றே, மலையின் பக்கத்தில் உயர்ந்த மரங்களிலும், பாறைகளிலும் உள்ள தேனடைகளை எடுப்பதற்குக் கண்ணேணி மற்றும் தமாலம் என்னும் கொடியினைப் பயன்படுத்தி ஏறியுள்ளனர் என்பதனைக் கீழ்வரும் இருபாடல்களின் மூலம் அறியலாம்.

“நெடுந் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த
பசுங் கேழ் இலைய நறுங் கொடித் தமாலம்
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும்” (16)

“தேனின் இறால் என ஏணி இழைத்திருக்கும்” (17)



வேட்டையாடுதல்

ஆதிகாலத்தில் உணவிற்காக வேட்டையாடிய மனிதன், உணவினை உற்பத்தி செய்யக் கற்றுக் கொண்ட பின்னரும் இன்றுவரை வேட்டையாடுதல் என்னும் செயலானது தொன்மமாகத் தொடர்கின்றது. வேட்டைத் தொழில் என்பது வீரத்தினை வெளிப்படுத்தும் கலையாக இன்று விளங்குகின்றது. குறிஞ்சி நில மக்கள் வேட்டைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதைச் சங்கப்பாக்கள் எடுத்துரைக்கின்றன. அவர்கள் புலி வேட்டை, யானை வேட்டை, மான் வேட்டை போன்ற பல வேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர். நாய்களைப் பழக்கி வேட்டைக்குப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், வலையைப் பயன்படுத்துதல், பொறி வைத்தல் போன்ற நுட்பமான முறைகளையும் கையாண்டுள்ளனர்.

யானை வேட்டை

இரும்பை உருக்கி வார்த்துத் திருத்தமாகச் செய்தது போன்ற வலிமை மிக்கக் கையினையுடைய வேட்டுவன், கையிற்கொண்ட அம்பினை ஆய்ந்து எடுத்து, வரிகள் பொருந்திய நெற்றியையுடைய யானையின் அரிய மருமத்தில் எய்து கொல்லுவான்; போரில் கொல்லும் ஆற்றல் மிக்க அதன் வெண்ணிறக் கொம்பினைக் கொண்டு வந்து, புல்லால் வேயப்பட்ட தனது சிறு குடிசையில் புலால் நாற்றம் வீச அதனை ஊன்றி வைப்பான் என்று யானை வேட்டையைப் பற்றி அகநானூற்றுப் பாடலானது,

“இரும்புவடித் தன்ன கருங்கைக் கானவன்
விரிமலர் மராஅம் பொருந்தி, கோல்தெரிந்து,
வரிநுதல் யானை அருநிறத்து அழுத்தி,
இகல்அடு முன்பின் வெண்கோடு கொண்டு, தன்
புல்வேய் குரம்பை புலர ஊன்றி” (18)

என்று குறிப்பிடுகின்றது. மேலும் மற்றுமொரு அகநானூற்றுப் பாடலானது யானை வேட்டையைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

“பெருமலைச் சிலம்பின் வேட்டம் போகிய
செறிமடை அம்பின் வல்வில் கானவன்
பொருதுதொலை யானை வெண்கோடு கொண்டு” (19)

புலி வேட்டை

புலியை வேட்டையாடி அதன் தோளினை உரித்து அதில் படுத்துறங்கியக் காட்சியினை,

“காடு தேர் வேட்டத்து விளிவு இடம் பெறாஅது,
வரி அதள் படுத்த சேக்கை” (20)

என்ற அகநானூற்றுப் பாடலானது சுட்டிக்காட்டுகின்றது.



மான் வேட்டை

மானின் இறைச்சிக்காக மான் வேட்டையானது நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. நாயுடன் சென்று, வில்லைப் பயன்படுத்தி புனத்திலே மேயும் மானை வேட்டையாடிய செய்தி சங்கப் பாக்களில் காணப்படுகின்றது. இதனை,

“கோடு துவையா, கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு
வயவர் மகளிர் என்று ஆயின்” (21)

என்ற நற்றிணைப் பாடலானது குறிப்பிடுகின்றது. இதனைப் போன்றே குறுந்தொகைப் பாடலானது,

“… … … … … தன்னையற்
சிலைமான் கடுவிசைக் கலை நிறுத்து அழுத்தி” (22)

என்று குறிப்பிடுகின்றது.

தொகுப்புரை

* குறிஞ்சிநிலப் பகுதிகளுக்கு ஏற்ப மக்கள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டு, அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை, பருவ காலங்கள், அந்நிலத்தின் தன்மை போன்றவைகளை அறுதியிட்டு, அதற்கு ஏற்பத் தங்களது தொழில்களை அமைத்துச் செழிப்புடன் வாழ்ந்தனர் என்பதனைச் சங்கப்பாடல்களின் மூலம் அறிய முடிகின்றது.

* குறிஞ்சிநில மக்களின் முக்கியத் தொழிலாக தினை இருந்துள்ளதால், அந்நில மக்களின் முதன்மை உணவுப் பொருளாக தினை இருந்துள்ளதை அறிய முடிகின்றது.

* ஐவன நெல் என்னும் வெண்ணெல்லுடன் ஊடுபயிர்களாக இஞ்சியும், மஞ்சளும், பசுமை வாய்ந்த மிளகுக் கொடியும், வெண்சிறு கடுகும் பயிரிட்டுப் பயனடைந்தனர் என்பதிலிருந்து குறிஞ்சிநில மக்களின் வேளாண் உத்திகளைப் பற்றி அறிய முடிகின்றது.

அடிக்குறிப்புகள்

1. தொல்.பொருள்.அகம். நூ.1140

2. புறம்.109 : 3-8

3. நற்.108 : 1

4. குறிஞ்சிப்பாட்டு, வரி. 153

5. மதுரைக்காஞ்சி, வரி. 286-290

6. குறுந்.100 : 1-3

7. குறுந். 261 : 1-2

8. நற்.328 : 8

9. மலைபடுகடாம், 102-106

10. மலைபடுகடாம், 109-110

11. குறுந்.82 : 4-5

12. குறுந்.379 : 1-2

13. ஐங்.208 : 1-2

14. நற்.168 : 1-5

15. மலைபடுகடாம், 315-317

16. நற்.292 : 1-3

17. கலி. 39 : 9

18. அகம்.172 : 6-10

19. மேலது, 282 : 1-3

20. அகம். 58 :3-4

21. நற்.276 : 1-3

22. குறுந்.272 : 4-5

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p205.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License