கலியன் ஒலிமாலை விழா
முனைவர் இரா. மதன் குமார்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.
முன்னுரை
இறைவன், பரத்துவம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம் மற்றும் அர்ச்சை ஆகிய நிலைகளில் அருள்கின்றான். இவற்றுள் அர்ச்சை என்பது, திவ்யதேசங்களில் பெருமாள், உருவத்திருமேனி கொண்டு விளங்கியருள்கின்ற அருள்நிலையாகும். பிற நிலைகளைக் காட்டிலும், அர்ச்சையில், பெருமாளின் எளிமையும், அடியார்களின் பக்தியாகிய பெருந்திறமும் மிகச்சிறப்பாக வெளிப்படும். அதனாலேயே, திருமங்கையாழ்வார், பெருமாளின் அர்ச்சை நிலையினை மிகவும் விரும்பி, திவ்யதேசங்கள் தோறும் சென்றார். அங்கு, பெருமாளின் திருஉருவினைக் கண்ணாரக் கண்டு, வாயாரப் பாடி, மனமார, அவனது திருவருளைப் பெற்று இன்புற்றார்.
அன்று ஆழ்வார், திவ்யதேசங்கள் தோறும் சென்று பாடிப் பெற்ற பேரின்ப அனுபவத்தை, இன்றளவும் நாம் பெற்றுய்யக் கருவியாக, ‘கலியன் ஒலிமாலை விழா’ என்னும் ‘திருநாங்கூர் கருட சேவை விழா’ அமைகிறது. திருநாங்கூர் மணிமாடக்கோயில் உள்ளிட்ட, பதினொரு திவ்யதேசத் திருப்பாசுரங்களையும் மையமாகக் கொண்டு அமைகின்ற இப்பெருவிழாவின் அருள்நிகழ்வுகள் குறித்தும், அத்திருப்பாசுரங்கள் வழியே, திவ்யதேசங்களின் ஏற்றம் குறித்தும் இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.
திருநகரியிலிருந்து புறப்பாடு
தை அமாவாசை நாளின் முதல்நாள் இரவில், திருநகரியிலிருந்து திருமங்கையாழ்வார், குமுதவல்லியாரோடு புறப்பட்டுத் தான் பிறந்த திருத்தலமாகிய திருக்குறையலூரினை அடைகின்றார். ஐந்து நரசிம்மத் திருத்தலங்களுள், உக்கிரநரசிம்மத் தலமாகிய திருக்குறையலூரில் வீற்றிருக்கின்ற பெருமாளைச் சிங்கவேள்குன்றத்துக்குரிய பத்துத் திருப்பாடல்களாலும் ஆழ்வார் போற்றிப் பணிகின்றார்.
அதன் பின்னர், திருக்குறையலூருக்கு அருகே அமைந்துள்ள மங்கைமடமாகிய திருத்தலத்தை அடைகின்றார். ஆழ்வார், குமுதவல்லியாரின் திருச்சொல்லுக்கு இணங்கி, அன்றாடம் அடியவரின் பசிப்பிணி போக்கிய நிலையமாதலால் இவ்விடம் ‘மங்கைமடம்’ என்கின்ற திருப்பெயரில் விளங்குகிறது. மங்கைமடத்திலுள்ள, வீரநரசிம்மத் திருத்தலத்தினையும், சிங்கவேள்குன்றத்துக்கு உரிய திருப்பாடல்களால் ஆழ்வார் போற்றி மகிழ்கின்றார். பின்னர், மங்கை மடத்திலிருந்து புறப்படுகின்ற ஆழ்வார், திருக்காவளம்பாடியை அடைகின்றார்.
திருக்காவளம்பாடிக் கண்ணனைப் போற்றுகின்றார்
சத்தியபாமாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்திரனின் சோலையிலிருந்து பாரிசாத மலரினைக் கொணர்ந்தளித்த பெருமாளே, திருக்காவளம் பாடியில் உறைகின்றான் என்கின்றார் திருமங்கையாழ்வார்.
பாரிசாத மலருக்காக, இந்திரனோடு போரிட்ட கண்ணன், தான் உறைவதற்கு இயைந்த காவளத்தை (மலர்ப்பொழிலை) நாடி மண்ணுலகுக்கு வந்தான். கண்ணன் தனக்கு உவந்த காவளம் இடம் கொண்டிருந்த இத்திருத்தலத்திலேயே தங்கிவிட்டான். ஆதலால், இத்திருத்தலமானது, ‘ திருக்காவளம்பாடி’ எனப் போற்றப்பெறுகிறது.
“ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று
காவளம் கடிதி றுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கை
காவளம் பாடிமேய கண்ணனே! களைகண் நீயே”(பெரிய திருமொழி, 4:6:8)
எனத் திருமங்கையாழ்வார் காவளம்பாடிக் கண்ணனைப் போற்றியுள்ளார்.
மடவரல்மங்கை உறைகின்ற திருத்தலம்
இத்திருத்தலத்துத் தாயாரை ஆழ்வார், ‘மடவரல்மங்கை’ எனப் போற்றும் முகமாக,
“படஅரவு உச்சி தன்மேல் பாய்ந்து நடங்கள் செய்து
மடவரல் மங்கை தன்னை மார்வகத்து இருத்தி னானே” (மேலது, 4:6:5)
எனப் பாடியுள்ளார். அதன்பொருட்டு, இத்திருத்தலத்தில் தாயாருக்கு ‘மடவரல்மங்கை’ என்கின்ற திருப்பெயரும் வழங்கிவருகிறது. திருக்காவளம்பாடியில், ‘தா அளந்து உலகமுற்றும்’ என்று தொடங்குகின்ற திருப்பதிகச் சொல்மாலையினை இறைவனுக்குச் சூட்டி வழிபட்ட பின்னர், ஆழ்வார், இங்கிருந்து புறப்பட்டுத் திருமணிக்கூடத்தை அடைகின்றார்.
திருமணிக்கூடத்தில் திருமங்கையாழ்வார்
திருமணிக்கூடத்தின் வரதராசப்பெருமாளை ஆழ்வார்,
“தூம்புடைப் பனைக்கை வேழம் துயர்கெடுத்து அருளிமன்னு
காம்புடைக் குன்றம் ஏந்திக் கடுமழை காத்த எந்தை
பூம்புனல் பொன்னி முற்றும் புகுந்து பொன் புரண்ட எங்கும்
தேம்பொழில் கமழும் நாங்கூர்த் திருமணிக் கூடத்தானே” (மேலது, 4:5:1)
எனத் தொடங்குகின்ற திருப்பாசுரத்தால் போற்றுகின்றார்.
ஆழ்வார் திருமணிக்கூட நாதனைப் போற்றத் துணிந்த வேளையில், அவர்தம் சிந்தையில் கஜேந்திரக் களிறுக்கு அவன் இரங்கியருளிய அருள்நிலையினைக் குறித்த உணர்வு எழுகிறது. அதனால் அந்த அருள்நிலையினை மறவாமல் திருமணிக்கூடநாதனை,
“தூம் புடைப் பனைக்கை வேழம் துயர் கெடுத்து” (மேலது பாடல்)
எனப் போற்றிப் பாடியுள்ளார்.
திருமணிக்கூடநாதனைத் திருமங்கையாழ்வார், கஜேந்திரனைக் காத்தருளிய பெருமானாகப் போற்றியதால், அத்திருத்தலத்துப் பெருமாளுக்கு, ‘கஜேந்திரவரதன்’ என்கின்ற திருப்பெயரும் வழங்கிவருகிறது. திருமணிக்கூடத்தைப் போற்றி வழிபட்ட பின்னர், ஆழ்வார், திருப்பார்த்தன் பள்ளியை வழிபடப் புகுகின்றார்.
திருப்பார்த்தன் பள்ளியில் வழிபாடு
இத்திருத்தலம், அர்ச்சுனனின் நீர்வேட்கையினைப் போக்கியருளியது என்கின்ற அருட்சிறப்போடு விளங்குகிறது. அர்ச்சுனனாகிய பார்த்தனுக்காக உருவாகிய இத்திருத்தலத்தைத் திருமங்கையாழ்வார், ‘பார்த்தன் பள்ளி’ என்றே போற்றியமைகின்றார். இங்கு உறைகின்ற இறைவனை ஆழ்வார், ‘பார்த்தன்பள்ளிச் செங்கண்மால்’ எனப் போற்றுகின்றார். இத்திருத்தலத்து இறைவனுக்கு, ‘கவள யானைக் கொம்பொசித்த’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகச் சொல்மாலையினைச் சூட்டிக்களித்த பின்னர், ஆழ்வார், மஞ்சக்குளி மண்டபத்தை அடைகின்றார்.
மஞ்சக்குளி மண்டபத்தில் திருமஞ்சனம்
மஞ்சக்குளி மண்டபத்தில் ஆழ்வாருக்குத் திருவரங்கநாதன் அருளிய திருமஞ்சனக் காப்பும், திருநறையூர் பெருமாள் சூடிக்களைந்த பட்டு, மலர்மாலை முதலான சிறப்புகளும் வழங்கி வழிபாடு நிகழ்த்தப் பெறுகிறது. திருஅரங்கநகரில் ஆழ்வார், ஒரு திருக்கார்த்திகை நாளன்று, திருவரங்கனின் முன்னால் இருந்து, தமது திருநெடுந்தாண்டகம் முதலான அறுவகைப் பிரபந்தங்களையும் தேவகானத்தில் பாடி இன்புற்றார். ஆழ்வாரின் அருள்தமிழினை மெச்சி மகிழ்ந்த இறைவன், தம்மைப் பாடிப் புண்பட்ட ஆழ்வாரின் மிடறு குளிர்கின்ற வகையில் தனக்குரிய தைலக்காப்பினை அவருக்குத் தந்தருளினான். இச்செய்தியானது கோயிலொழுகு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
“ஒரு கார்த்திகை திவ்ய மஹோத்ஸவத்திலே பெருமாளும் நாய்ச்சிமார்களும் திருமஞ்சனம் கண்டருளி, உடுத்துப் பூசி முடித்து ஒப்பித்திருக்க, திருமங்கையாழ்வாரும் ‘திருநெடுந்தாண்டகம்’ என்று ஆறு ப்ரபந்தத்தை யிட்டருளி, பெருமாள் திருச்செவி சாத்தும்படி தேவகாநத்திலே ஏறிட்டு அபிநயித்து அநுஸந்திக்க பெருமாளும் போராவுகந்தருளி, ஆழ்வாருக்கு ஸகலவரிசைகளும் சாதிக்கத் திருவுள்ளம் பற்றி, . . . இக்கலியன் தேவகானத்திலே மிகவும் பாடுகையாலே அவர்மிடறு தொந்தது. இன்று நாம் சாத்தியிருந்த தைலக்காப்பை அவர் மிடற்றிலே தடவுங்கோள் என்று பரிநங்கை நியமிக்க பரிகரமும் அப்படியே செய்ய திருமங்கைமன்னன் கருத்தார்த்தராய் தம்மிடத்து எழுந்தருளினார்.” (கோயிலொழுகு, பக்கம்:8). என ஆழ்வார், தனது திருத்தமிழுக்காக இறைவனிடமிருந்து அருட்பேற்றினைப் பெற்றநிலையினைக் கோயிலொழுகு போற்றியுரைக்கிறது.
இந்நிகழ்வின்போது அரங்கநகர்ப் பெருமாள், திருமங்கையாழ்வாரிடம், நீர் வேண்டுவது யாதென? வினவ, ஆழ்வாரும், ‘நம்மாழ்வாரின் திருப்பாடல்களுக்கு வேதத்தகுதியினை வழங்கி, அவற்றை மார்கழித் திங்களின் அத்யயநப் பெருவிழாவின்போது கேட்டருள வேண்டும்’ என இறைவனிடம் வேண்டிக்கொள்ள, இறைவனும் அவ்வாறே அருள்செய்தார் என்ற செய்தியும் மேற்கூறிய நிகழ்வோடு தொடர்புடையதாக அமைகின்றது. இவ்வாறு, நம்மாழ்வாரின் திருப்பாடல்களுக்கு வேதத்தகுதியைப் பெற்றுத்தந்த திருமங்கையாழ்வாரே, தமிழ்வேதங்களாகிய திவ்வியப் பிரபந்தங்களை மார்கழியில் ஓதுகின்ற அத்யயநப்பெருவிழாவிற்கு அடித்தளம் அமைத்துத் தந்தார் என்பது குருபரம்பரை வழக்கமாகப் போற்றப்பெறுகிறது.
அதுபோன்றே, திருநறையூர்ப் பெருமானின் மீதும் ஆராத பேரின்பக் காதல் கொண்டு சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல் ஆகிய மடல் இலக்கியங்களைத் தந்த பேரன்பிற்குப் பரிசாக, திருமங்கையாழ்வாருக்கு, திருநறையூரிலுள்ள சீனிவாசப்பெருமாளின் மாலை, திருப்பட்டு முதலான அருட்பேறுகளும் வழங்கிச் சிறப்பிக்கப் பெறுகிறது.
இவ்வாறு, மஞ்சக்குளி மண்டபத்தில், தனது தமிழுக்காக அரங்கநகர்ப் பெருமாளும், திருநறையூர்ப்பெருமாளும் தந்த அருட்பேறுகளைப் பெற்றுக் கொண்ட களிப்போடு ஆழ்வார், திருநாங்கூர் மணிமாடக்கோயிலை அடைகின்றார்.
நந்தா விளக்கினைப் போற்றுகின்றார்
திருநாங்கூர் மணிமாடக்கோயிலில் உறைகின்ற நந்தாவிளக்குப் பெருமாளையும், புண்டரிக வல்லித் தாயாரையும், ‘நந்தாவிளக்கே! அளத்தற்கு அரியாய்’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி வழிபடுகின்றார் ஆழ்வார். திருநாங்கூரின் திருமணிமாடக்கோயிலில் உறைகின்ற இறைவனை, ‘நந்தா விளக்கே’ என விளித்துப் போற்றியதன் நிலையாக, அங்கு உறைகின்ற பெருமாளுக்கு ‘நந்தா விளக்கு’ என்னும் பொருள்படுகின்ற ‘நந்தாதீபன்’ என்கின்ற திருப்பெயரும் வழங்கி வருகிறது. திருநாங்கூர் மணிமாடக் கோயிலைப் பாடிப்பரவி இன்புற்ற பின்னர் திருமங்கையாழ்வார், திருத்தெற்றி அம்பலத்தினை அடைகின்றார்.
அம்பலத்து அரங்கனைப் போற்றுகின்றார்
வைணவ திவ்யதேசங்களுள், ‘அம்பலம்’ என்னும் பெயருடைய திருத்தலம், இது ஒன்றேயாகும். (திருத்தெற்றி அம்பலம் - தெற்றி - திண்ணை). இத்திருத்தலத்தில் இறைவனின் பள்ளிகொண்ட திருக்காட்சியானது விளங்குகிறது. ‘செங்கண்மால் அரங்கர்’ என்பது இத் திருத்தலத்தில் உறைகின்ற இறைவனின் திருப்பெயராகும். ‘செங்கமலவல்லி’ என்பது, தாயாரின் திருப்பெயராகும். கிழக்கு நோக்கியவாறு, ஆதிசேடனாகிய பாம்பணையில் துயில்கின்ற செங்கண்மால் அரங்கனைத் திருமங்கையாழ்வார்,
“திருத்தெற்றிஅ ம்பலத்துஎன் செங்கண் மாலே” (பெரிய திருமொழி, 4:4:10)
எனப் போற்றியுரைத்துள்ளார். இங்கு உறைகின்ற அரங்கனை ஆழ்வார், ‘மாற்றரசர் மணிமுடியும்’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி மகிழ்ந்த பின்னர் திருவண்புருடோத்தமத்தைச் சென்று சேர்கின்றார்.
புருடோத்தமனைப் போற்றுகின்றார்
அவதாரங்களின் வாயிலாகப் பல துன்பநிலைகளைத் தான் உற்றபோதிலும், இறைவன், அனைத்து உயிர்களுக்கும் நன்னிலை நல்கிக் காத்தருள்கின்றான். எடுத்துக்காட்டாக, குறளுருவாக வந்து மாவலியிடத்தில் மாயம்செய்து மண்ணளந்த பெருமாள், இராமாவதாரத்தில் தன் திருவடிகள் மண்ணில் தோயும்படிக் கானகத்தில் நடந்து திரிந்தான். இந்த அவதார நோக்கங்கள் அனைத்தும், மண்ணுலக உயிர்களுக்கு நன்னெறி காட்டுகின்ற வழியில் மேற்கொள்ளப்பட்டவையாகும். இவ்வாறு, உலக உயிர்கள் அனைத்தும் நன்னிலை பெறவேண்டி நற்செயல் புரிகின்ற அவனுக்கு, ‘உயர்குணமுடைய உத்தமன்’ என்ற திருப்பெயர் பொருத்தமுடையதாகும். அப்பொருள் அமைகின்ற வகையில், ‘புருஷோத்தமன்’ என்கின்ற திருப்பெயரோடு இறைவன் இத்திருத்தலத்தில் உறைகின்றான்.
இறைவனின் உத்தம அருள்குணத்தைப் போற்றுகின்ற வகையில் அமைந்த, ‘புருஷோத்தமன்’ என்கின்ற திருப்பெயரினை ஆழ்வார், ‘புருடோத்தமன்’ என்று தமிழ்ப்படுத்திக் கொண்டும், இத்திருத்தலத்தினை ‘வண்புருடோத்தமம்’ என்றும் போற்றியமைகின்றார். ‘நாங்கூர் வண்புருடோத்தமம்’ என்பது திருமங்கையாழ்வாரின் திருமொழியாகும். இத் திருவண்புருடோத்தமத்தைத் திருமங்கையாழ்வார்,
“கம்ப மாகடல் அடைத்துஇலங் கைக்குமன் கதிர்முடி அவைபத்தும்
அம்பினால் அறுத்து அரசுஅவன் தம்பிக்கு அளித்தவன் உறைகோயில்
செம்பலா நிரை செண்பகம் மாதவி சூதகம் வாழைகள் சூழ்
வம்புலாம் கமுகு ஓங்கிய நாங்கூர் வண்புரு டோத்தமமே” (பெரிய திருமொழி, 4:2:1)
எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி மகிழ்ந்த பின்னர், திருவைகுந்த விண்ணகரைத் தொழப்புகுகின்றார்.
பரமபதநாதனைப் போற்றுகின்றார்
இறைவன், பரமபதத்தில் நித்யசூரிகளுக்கு அருள்செய்வதாகிய திருக்கோலத்தில் காட்சிதருவதாகிய திருவைகுந்தவிண்ணகரை ஆழ்வார்,
“சங்குமலி தண்டு முதல் சக்கர முனேந்தும்
தாமரைக்கண் நெடிய பிரான் றானமருங் கோயில்” (பெரிய திருமொழி, 3:9:10)
எனப் போற்றியுள்ளார். திருவைகுந்தவிண்ணகரை, ‘சலங்கொண்ட இரணியனது அகல்மார்வம் கீண்டு’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி மகிழ்ந்த பின்னர் ஆழ்வார், திருச்செம்பொன் செய்கோயிலை அடைகின்றார்.
செம்பொன் அரங்கரைப் போற்றுகின்றார்
இராவணனைக் கொன்றொழித்த பின்னர், இராமபிரான் தங்கத்தால் ஆன பசுவினை வழிபட்டு வந்தார். அந்தணர் ஒருவர் அதனைத் தானமாகப் பெற்று, இறைவனுக்கு இத்திருக்கோயிலை அமைத்ததாகக் கூறப்படுகிறது. இத்திருத்தலத்தின் செம்பொன் அரங்கரையும், அல்லிமலர் நாச்சியாரையும் திருமங்கையாழ்வார், ‘பேரணிந்து உலகத் தவர்தொழு தேத்தும் பேரருளான்’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றிய பின்னர் திருஅரிமேய விண்ணகரைப் போற்றப்புகுகின்றார்.
திருஅரிமேய விண்ணகரில் வழிபாடு
‘அடியவர்க்கு அருளவேண்டி, அரியாகிய பெருமாள் விரும்பி உறைகின்ற திருத்தலம்’ எனத் திருமங்கையாழ்வார், இத்திருத்தலத்தினைப் போற்றியுரைக்கின்றார்.
“திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத்
தீவினைகள் போயகல அடியவர்கட்கு என்றும்
அருள்நடந்து இவ் ஏழுலகத்தவர் பணியவானோர்
அமர்ந்தேத்த இருந்த இடம் ” (பெரிய திருமொழி, 3:10:1)
எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் திருஅரிமேயவிண்ணகரைப் போற்றி வழிபட்டபின்னர், ஆழ்வார், திருநாங்கூர் மணிமாடக்கோயிலை அடைகின்றார்.
திருநாங்கூரில் பதினொருவரும் எழுந்தருளல்
ஆழ்வார் போற்றிப் பணிந்த ஒன்பதுத் திருத்தலங்களின் உற்சவப் பெருமாள்களும் பல்லக்கில் எழுந்தருளித் திருநாங்கூர் மணிமாடக் கோயிலை அடைகின்றனர். திருநாங்கூர் திருப்பதிகளில் அமைந்த, எஞ்சிய இரு திருத்தலங்களாகியத் திருவெள்ளக்குளம் மற்றும் திருத்தேவனார்த் தொகை ஆகிய திருத்தலங்களின் பெருமாள்களும் பல்லக்கில் எழுந்தருளித் திருநாங்கூர் மணிமாடக்கோயிலை அடைகின்றனர். அங்குப் பதினொரு பெருமாள்களுக்கும் திருமஞ்சனமும், திருஒப்பனையும் நடைபெறுகிறது. அப்பொழுது, திருமங்கையாழ்வாருக்கும், குமுதவல்லிநாச்சியாருக்கும், ஆழ்வாரின் ஆன்மார்த்த வழிபாட்டு மூர்த்தியாகிய சிந்தனைக்கு இனிய பெருமானுக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
பதினொரு திருத்தலத்துப் பெருமாளையும் பாடிய திருப்பதிகங்களின் முதலாவது திருப்பாசுரம் மட்டும் அங்கு பாடப்பெற்றுப் பதினொரு பெருமாள்களுக்கும் கற்பூர வழிபாடு நிகழ்கிறது. அதன்பின்னர், இரவு பதினொரு திருத்தலத்துப் பெருமாள்களும் பெரியதிருவடியில் எழுந்தருளித் திருக்காட்சி நல்குவதைத் திருமங்கையாழ்வார் குமுதவல்லியாரோடு அன்னவாகனத்தில் வீற்றிருந்தவாறு கண்டு இன்புறுகின்றார்.
பதினொருவரின் திருக்காட்சி
மணிமாடக்கோயிலின் திருவாயிலில், அன்னவாகனத்தில் திருமங்கையாழ்வார், குமுதவல்லி நாச்சியாரோடு கூப்பிய கரத்தோடு வீற்றிருப்பார். திருமங்கையாழ்வாரின் இன்பத்தமிழை மெச்சி, அவருக்குப் பதினொரு திருத்தலத்துப் பெருமாள்களும் பெரிய திருவடியாகிய கருடவாகனத்திலிருந்து காட்சியருள்வது, காண்பதற்கரிய திருக்காட்சியாகும்.
இத்திருநாளின்போது, திருவண்புருடோத்தமத்திலிருந்து, மணவாள மாமுனிகளும் திருநாங்கூர் மணிமாடக்கோயிலுக்கு எழுந்தருளி திருமங்கையாழ்வாரின் அருட்பொலிவினைக் கண்ணாரக் கண்டு மகிழ்கின்றார்.
வடுகநம்பி மண்டபத்தில் திருமங்கையாழ்வார்
திருநாங்கூர் மணிமாடக்கோயிலில் பதினொரு கருடசேவையினையும் கண்டின்புற்ற பின்னர், திருமங்கையாழ்வார், மூன்றாம் நாள் காலையில் வடுகநம்பி மண்டபத்தை அடைகின்றார். அங்கு தங்கித் திருமஞ்சனம் கண்டருளிய பின்னர், கருடசேவைக்கு முன்னதாகப் பாடாமல் எஞ்சியுள்ள இரு திருத்தலங்களில் ஒன்றாகிய திருவெள்ளக்குளத்தை அடைகின்றார்.
திருவெள்ளக்குளத்துப் பெருமாளை, ‘கண்ணார் கடல்போல’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றியநிலையில், அவ் இறைவனை ‘அண்ணா’ என ஆழ்வார் போற்றியுள்ளார். திருவேங்கடநாதனை ‘அண்ணா’ எனப் பாடிய திருமங்கையாழ்வார், இத் திருத்தலத்தில் உறைகின்ற பெருமாளையும், ‘அண்ணா’ என விளித்துப் போற்றியுள்ளார். ஆதலால், இத்திருத்தலமானது திருவேங்கடத்துக்கு இணையானதாகப் போற்றப்பெறுகிறது. ஆழ்வாரிடமிருந்து ‘அண்ணா’ என்ற அமுதமொழி எழுந்த இத்திருத்தலமானது ‘அண்ணங்கோயில்’ என்று போற்றப்படுகிறது.
ஆழ்வார், திருவேங்கடமலையில் உறைகின்ற பெருமாளைத் திருவெள்ளக்குளத்தில் கண்டு வழிபட்டு இன்புற்றதாகக் கூறுவது வழக்கம்.
“கண்ணார் கடல்சூழ் இலங்கைக்கு இறைவன்தன்
திண்ணாகம் பிளக்கச் சரம்செல உய்த்தாய்
விண்ணோர் தொழும் வேங் கடமாமலைமேய
அண்ணா! அடியேன் இடரைக் களையாயே” (பெரிய திருமொழி, 1:10:1)
எனத் திருவெள்ளக்குளத்துப் பெருமாளை ஆழ்வார், திருவேங்கடநாதனாகவே எண்ணிப் போற்றியுள்ளார். ஆழ்வார், திருவேங்கடவனை எண்ணியவாறு, இத்திருத்தலத்துப் பெருமாளை, ‘அண்ணா!’ என்று அழைத்ததன் காரணமாக, இத்தலத்துப் பெருமாளை திருவேங்கடநாதனுக்கு அண்ணன் என்று கூறுகின்ற வழக்கம் உண்டு. அவ்வழக்கத்தினால் இத்திருத்தலமானது, அண்ணங்கோயில் என்னும் பெயராலும் வழங்கப்பெறுகிறது.
திருவெள்ளக்குளத்தைப் போற்றி வழிபட்ட பின்னர் ஆழ்வார், திருத்தேவனார்த் தொகையாகிய திருத்தலத்தை அடைகின்றார்.
‘வானவர் அனைவரும் இறைவனைப் பணிவதற்கு புகுந்த இடம்’ என இத்திருத்தலமானது திருமங்கையாழ்வாரால் போற்றப் பெறுகிறது. இங்கு உறைகின்ற இறைவன், தெய்வநாயகன் எனப் போற்றப்பெறுகின்றார். தாயார், ‘மாதவநாயகி’ என்கின்ற திருப்பெயரோடு போற்றப் பெறுகின்றார். இத்திருத்தலத்தைத் திருமங்கையாழ்வார், ‘போதலர்ந்த பொழில்சோலை’ எனத் தொடங்குகின்ற திருப்பதிகத்தால் போற்றி வழிபட்ட பின்னர், திருவாலி திருத்தலத்தை அடைகின்றார். திருநகரித் திருத்தலத்துக்குரிய முப்பதுத் திருப்பாடல்களையும் திருமங்கையாழ்வார் திருவாலி திருத்தலத்திலேயே பாடி அங்கு உறைகின்ற பெருமானை வழிபடுகின்றார்.
திருவாலித் திருத்தலத்தினை வழிபட்ட பின்னர், ஆழ்வார் திருநகரியை அடைகின்றார். அதுகாறும், திருநாங்கூர்த் திருப்பதிகள் அனைத்தையும் பாடிப் பரவிய திருமங்கையாழ்வாருக்கு, திருநகரியில் உறைகின்ற வயலாலி மணவாளன், பெரியதிருவடியில் எழுந்தருளி, எதிர்வந்துத் திருக்காட்சி தருகின்றார். அங்கு இறைக்காட்சியைக் கண்டவுடன், தான் பரமபதஅனுபவத்தைப் பெற்றுவிட்டதாக ஆழ்வார் பாடுகின்றவகையில் ‘கற்றார் பரவும்’ எனத் தொடங்குகின்ற திருக்கண்ணபுரத்துக்கு உரிய திருப்பாடலானது பாடப்படுகிறது.
“கற்றார் பற்றறுக்கும் பிறவிப் பெருங்கடலே
பற்றா வந்தடியேன் பிறந்தேன் பிறந்த பின்னை
வற்றா நீர்வயல்சூழ் வயல்ஆலி அம்மானைப்
பெற்றேன் பெற்றதுவும் பிறவாமைப் பெற்றேன் ” (பெரிய திருமொழி, 8:9:8)
எனப் பாடி, தான் பிறவாத பெருநிலையைப் பெற்றுவிட்டதனை எண்ணியும், பெரிய திருவடியில் இறைவனின் திருக்காட்சியினைக் கண்ட பேற்றினை வியந்தும், ஆழ்வார் இன்புறுகின்றார். ஆழ்வாரின் இத்திருக்காட்சிப் பேற்றினை, அடியார்கள் வணங்கி மகிழ்வதுடன், கலியன் ஒலி மாலை விழாவானது இனிதே நிறைவுறுகிறது.
திருமங்கையாழ்வாரால் போற்றிப் பாடப்பெற்ற திருநாங்கூர் திவ்யதேசங்கள் இன்றளவும், அவர்தம் பெரியதிருமொழியில் சுட்டப்பெற்றவாறு ஏற்றம் பெற்று விளங்குகின்றன. இதற்கு, அந்தந்த திவ்யதேசங்களிலும் விளங்குகின்ற பெருமாள் மற்றும் தாயாரின் திருப்பெயர்கள், ஆழ்வாரின் அருந்தமிழ்ப் பாசுரத் தொடர்களாகவே அமைந்துள்ளமை எடுத்துக்காட்டாகும். திருவரங்கத்தில் நிகழ்கின்ற பகல்பத்து மற்றும் இராப்பத்து உற்சவத்தில், ஆழ்வார்களின் திவ்யப்பிரபந்தப்பாசுரங்கள் அரையர் சேவையெனப் போற்றப்பெறுவது வழக்கம். அதுபோன்றே, ஆழ்வாரின் அருந்தமிழைக் கொண்டாடுகின்ற தனிப்பெரும் விழாவாக இக்கருடசேவைப் பெருவிழாவானது ஆண்டுதோறும் நிகழ்த்தப்பெறுகிறது.
இப்பகுதியானது, காவிரி பாய்கின்ற வயல்வெளிகள் நிறைந்தது. இப்பகுதியிலுள்ள பாமரமக்கள், ஆழ்வாரின் பிரபந்தப்பாசுரங்களைச் சொற்பொருள் தெளிவுடன் குற்றமறக் கற்றுத் தெளிந்த அறிவுடையவர்கள் அல்லர். ஆயினும், குறையாத அன்பினால் ஆழ்வாரைத் தம்மவராக வரித்துக்கொண்டவர்கள். அவரையே பெருமாளாகக் காணுகின்ற பக்தித்திறம் உடையவர்கள். அறிவுக்கண் கொண்டல்லாமல், அன்புக்கரம் கொண்டு ஆழ்வாரை வணங்குபவர்கள். அதனால், ஒவ்வொரு ஆண்டும் கருடசேவைக்காகத் திருமங்கையாழ்வாரும், குமுதவல்லி நாச்சியாரும் தங்களது வயல்வெளிகளின் வழியாகக் கடந்து செல்வதையே பெரும்பேறாகக் கருதுபவர்கள். அதனால், ‘தமது வயல்வெளியில் விளைச்சல் பெருகும்’ என்று நம்புபவர்கள்.
‘அன்பு குறையாத, நிலையான நம்பிக்கையே பக்தி’ என்னும் தத்துவத்தைத் திருமங்கையாழ்வார், அவர்கள் வழியாக உணர்த்தியுள்ளார் என்பதற்கு, ‘கலியன் ஒலிமாலை விழா’ பெருஞ்சான்றாக உள்ளது.
1. நாலாயிரத் திவ்ய பிரபந்தம், எம். நாராயண வேலுப்பிள்ளை (உரையாசிரியர்), முல்லை நிலையம், சென்னை -17. முதல் பதிப்பு: 2000.
2. கோயிலொழுகு, கிருஸ்ணஸ்வாமி அய்யங்கார் (பதிப்பாசிரியர்), ஸ்ரீரங்கநாச்சியார் அச்சுக்கூடம், திருவரங்கம், திருச்சி- 6. பதிப்பு ஆண்டு: 1976.