திருக்குறளில் அறத்துப்பால் உணர்த்தும் அறிவுரைகள்
முனைவர் ச. சேவியர்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
இலயோலா கல்லூரி, மெட்டாலா, நாமக்கல் மாவட்டம்.
முன்னுரை
மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரை நூல் தான் திருக்குறளாகும். இது நாடு, மொழி, இனம், சமயம் கடந்த எக்காலத்திற்கு பொருந்துவனாய் அமைந்ததால் திருக்குறள் உலகப் பொதுமறை என அழைக்கப்பட்டது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிறாவிட்டால் தமிழ்மொழி என்னும் ஒருமொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது என்று கி.ஆ.பெ. விஸ்வநாதம் குறிப்பிடுகின்றார். ஆனால் இலக்கியங்களை அகவிலக்கியம், புறவிலக்கியம் எனப் பகுப்பது ஒரு மரபு. அவை அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப்பொருள் மூன்றனையும் உணர்த்தும். திருக்குறள் இம் மூன்றனையும் கூறுதலின் முப்பால் என்னும் பெயரையும் பெற்றுள்ளது. பொருளும், இன்பமும் அறத்தின் அடிப்படையில் வந்தால்தான் போற்றப்பெறும். அறத்தின் வழியில் வாராத பொருளும் இன்பமும் பழிக்கப்பெறும். இதனை;
“சிறப்புடை மரபிற் பொருள் மின்பமும்
அறத்து வழிப்படுஉந் தோற்றம் போல” (புறம்-31)
என்னும் பாடல் அடிகள் விளக்குகின்றன.
“அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல” (குறள்-39)
என்னும் குறளில் அறவழியில் வாழ்வதால் வரும் பயனே இன்பம். பிறவழிகளில் வரும் பயன் இன்பம் இல்லாததும் புகழற்றுதும் ஆகும்.
“அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்” (குறள்-754)
என்னும் குறளில் சேர்க்கும் திறம் அறிந்து தீமையற்ற முறையில் சேர்த்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் இன்பத்தையும் கொடுக்கும். ஆதலால் தான் திருக்குறள் அறநூல் என்னும் பெயரும் பெறுவதாயிற்று என்பதன் வாயிலாகக் குறிப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அறத்தின் பொருள்
அறம் என்ற சொல்லினை அறு + அம் எனப் பகுத்து அறு என்பதற்கு அறுதி - வரையறை - வாழ்க்கையில் மேற்கொள்ளத்தக்க கொள்கைகள் எனச் சிலர் பொருள் கூறுவர். சிலர் அறு என்னும் பகுதிக்குத் தீமையை அறுப்பதுஎன்று பொருள் தருவர். ஆனால், திருவள்ளுவர் அறத்துப்பாலில் அறன் வலியுறுத்தல் என்று ஓர் அதிகாரம் கூறியுள்ளார். அதன்கண் ஈதல், இனியவை கூறுதல் போன்ற அறச்செயல்களைக் குறிப்பிடாமல் பொதுவாக அறத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவ்வதிகாரத்தில்தான்;
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற” (குறள் - 34)
என்னும் குறளில் மனத்தில் குற்றமில்லாமல் இருந்தலே நல்ல அறமாகும் மற்றவை அனைத்தும் வெளி வேடங்களே ஆகும்.
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்” (குறள் - 35)
என்னும் குறளில் பொறாமை, ஆசை, சினம், கடுஞ் சொல் ஆகிய நான்கையும் நீக்கிச் செய்கின்ற செயலே அறச்செயல் என்று கூறுவர். ஆனால் அறன் வலியுறுத்தலில் வரும் இது போன்ற குறள்களைக் காணும் போது, தீமை நீக்கமே அறம் என்னும் சொல்லுக்குப் பொருளாகலாம் என்று எண்ண இடமுண்டு.
அறத்தின் பண்புகள்
அறம் என்பது பல நற்பண்புகளை அகத்தடக்கிய ஒரு சொல்லாகக் கொள்ளல் வேண்டும்.
“அகத் தானாம் இன்சொலினதே அறம்”
(குறள் - 93)
“அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலான்
பெண்மை நயவா தவன்”
(குறள் - 147)
“அறவினை யாதெனிற் கொல்லாமை”
(குறள் - 321)
என்னும் இக்குறள்கள் இனியவை கூறலையும், பிறர் மனை விழையாமையையும், கொல்லாமையையும் அறமெனக் கூறுதல் ஆகும்.
அறம் என்பதற்கு இலக்கணம் கூற வந்த பரிமேலழகர் “மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம்” என்பர். எனவே, தீமைகளை விலக்கி, நல்லன செய்தலே அறம் என்பதை;
“நல்லது செய்தல் ஆற்றீராயீனும்
அல்லது செய்தல் ஒம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படுஉம் நெறியுமா ரதுவே”
(புறம் - 195)
என்னும் புறநானூற்றுப்பாடல் “நல்லது செய்யா விடினும் தீயது செய்தலாகாது” என்று அறத்தை எடுத்துரைக்கின்றது.
நல்லது செய்தல் ஆற்றீராயினும் என்பதிலுள்ள உம்மை நல்லது செய்ய வேண்டியதான இன்றியமையாமையைச் சுட்டும். தீமையை விலக்குதல் மட்டுமன்றி நல்லது செய்தலும் அறத்தின் பாற்படும். வயலிலுள்ள பயிர் செழிக்க வேண்டும் எனின் அதன் கண் உள்ள களையை களைந்து எறிதல் வேண்டும். அதுபோல மனத்தில் அறம் தழைக்க வேண்டும் எனின், அதில் உள்ள மாசு மறுக்களை அகற்றல் வேண்டும். திருக்குறளில் வரும் அறத்துப்பாலில் வரும் இன்னா செய்யாமை, கள்ளாமை, பயனிலசொல்லாமை, புறங்கூறாமை, வெகுளாமை, வெஃகாமை முதலிய அதிகாரங்கள் இடம் பெறுகின்றன. மேலும், செய்தல் ஆகாது என்ற அடிப்படையில் விலக்கறங்கள் கூறுகின்றன. இனியவை கூறல், ஈகை, செய்நன்றியறிதல், விருந்தோம்பல், நடுவுநிலைமை முதலிய அதிகாரங்கள் நல்லது செய்தல் வேண்டும் என்ற அடிப்படையில் (செயலறங்கள்) கூறுகின்றன.
அறத்திற்கு அடிப்படை அன்பே. அறத்திற்குச் சிறந்தது அன்பாகும். அன்பின் முதிர்ச்சியில் பிறப்பது அருளாகும். அருளின்றிச் செய்யும் அறவினை பயன்படாது இதனை;
“தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்”
(குறள் - 249)
என்னும் குறளில் அருள் சிந்தை இல்லாதவன் அறத்தை ஆராய்ந்தால் அது, அறிவுத் தெளிவில்லாதவன் நூலின் மெய்ப் பொருள் தெரிந்தது போலாகும். ஆனால் அறத்திற்கு அடிப்படையாய் விளங்குவது அருள் என்பது கருதத்தாகும். இதில் திருமாலின் பல பண்புகளைக் கூற வந்த பரிபாடற் புலவர் கடுவனிள வெயினனார். இதனை;
“அறத்தினுள் அன்பு நீ
மறத்தினுள் மைந்து நீ”
(பரிபாடல் - 3.65)
என்னும் பாடல் அடியில் அறத்தினுள் அன்பு நீ என்று கூறுதலின் பல்வகை அறப்பண்புகளுக்கும், அன்பே தலையாயது என்பதின் பொருளாகும். எனவே, அன்பின் முதிர்ச்சியாகிய அருள் என்னும் அறத்தின் அடிப்படையில்தான் வேறு பல அறங்களும் தோன்றுகின்றன.
“மெல்லென் அருளிற் பிறக்கும் அறநெறி”
(நான்மணிக்கடிகை -7)
“சீர்சான்ற மென்கண் பெருகின் அறம் பெருகும்”
(நான்மணிக்கடிகை -92)
என்னும் நான்மணிக்கடிகைப் பாடல் அடிகள் விளக்குகின்றன.
“அறனும் அருளுடையான் கண்ணதே யாகும்
நெகிழ்ந்த அருனினா னாகும்”
(சிறுபஞ்சமூலம் - 5)
என்னும் சிறுபஞ்சமூல அடிகளும் இக்கருத்தை வலியுறுத்தும்.
ஒருவர் மற்றொருவரை நம்புதலால்தான் உலகம் இயங்குகிறது. ஒருவர் பிறரிடம் பேசும்போது, வாய்மை மொழியாது அன்பின்றி வஞ்சகமாகப் பொய்மொழியின் அது காரணமாகப் பல தீமைகள் நிகழும். ஆதலால் தான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பொய்மை கடிந்து வாய்மையினை வலியுறுத்துவர் வள்ளுவர்.
“பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று”
(குறள் - 297)
என்னும் குறளில் பொய்யாமை பொய்த்துப் போகாமல் வாழ முடியுமானால் பிற அறங்களைச் செய்யாதிருந்தாலும் நன்மை உண்டாகும்.
“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத் தொன்றும்
வாய்மையின் நல்ல பிற”
(குறள் -300)
என்னும் குறளில் யாம் உண்மையறிந்து கண்டவற்று எல்லாம் உண்மை பேசுதலைப் போல் நன்மையுடையது வேறு எதுவும் இல்லை.
“ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று”
(குறள் -323)
என்னும் குறளில் தனக்கு இணையில்லாத நல்ல அறம் கொல்லாமை, அதற்கு அடுத்துவைக்கத் தகுந்தது பொய் பேசாதிருத்தல்.
மேலும், பிறரை வஞ்சித்து ஏமாற்றி ஒழுகலாகாது என்னும் அன்பின் அடிப்படையில் வாய்மை அறமும், பிற உயிர்கள் ஊறின்றி வாழ வேண்டும் என்னும் அன்பின் அடிப்படையில் கொல்லாமையறமும் அமைய வேண்டும். எனவே, விழுமிய அறங்களாகக் கூறப்பெற்றுள்ள கொல்லாமை, வாய்மை என்னும் இரண்டும் அன்பின் அடிப்படையில் எழுந்தனவேயாம் என்று தெளிதல் வேண்டும். ஆகவே அறத்தில் தலையாயது அன்பு என்னும் கருத்து ஆழமாக எடுத்துரைக்கப்படுகின்றன.
அறத்தின் வழி மனத்தூய்மை
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள்- 322)
என்னும் குறளில் இருப்பதைப் பகிர்ந்து தானும் உண்டு பல உயிர்களையும் காத்தல் அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களில் எல்லாம் முதன்மையானது. எனவே உயிரோம்பலைச் சிறந்த அறமாக வள்ளுவர் கூறுகிறார். எச்செயல் செய்தாலும், எம்மொழி பேசினாலும் அடிப்படையான மனம் தூய்மையாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தூய மனத்தின்வழி வரும் மொழியும் செயலும் தூயனவாக இருக்கும். வினைத்தூய்மை, மொழித் தூய்மைகளைக் காப்பதற்காகத்தான் மனத்தூய்மையைப் பெரிதும் வற்புறுத்துகின்றார் வள்ளுவர். ஆகவே, மனத்தை எவ்வகை மாசும் படியாமல் காக்க வேண்டும். இல்லறமாயினும், துறவறமாயினும் திருவள்ளுவர் மனத்தூய்மையையே வற்புறுத்துகின்றார். இதனை;
“மனத்துக்கண் மாசிலனாதல்” (குறள் -36)
“உள்ளத்தால் பொய்யா தொழுகின்” (குறள் -294)
“தன்னெஞ்சறிவது பொய்யற்க” (குறள் -293)
“மனத்தொடு வாய்மை மொழியின்” (குறள் - 295)
“மனத்தது மாசாக மாண்டார் நீராடி” (குறள் -278)
என்னும் பல குறளால் வள்ளுவர் மனமாசு கூடாது என்பதை வலியுறுத்தல்.
முடிவுரை
திருக்குறள் தமிழர்களுக்கு மட்டுமல்லாது, உலக மக்கள் அனைவருக்குமே நல்வழி காட்டும் ஒப்பற்ற ஒரே நூல். உலகின் பல்வேறு மொழிகளில் அதிகமான அளவில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் இலக்கிய நூல் என்ற பெருமை திருக்குறளுக்கேப் பொருந்தும். மேலும், “தமிழர் வாழ்வே திருக்குறள்; திருக்குறளே தமிழர் வாழ்வு” எனும்படியான இன்றியமையாச் சிறப்பினையுடைய நூல் திருக்குறள். திருக்குறளின் நோக்கம் என்பது உள்ளதை உள்ளபடியே உயரிய முறையில் எடுத்துரைக்கும் உண்மையான நூல். திருக்குறளில் அறத்துப்பாலில் உணர்த்து அறிவுரைகளைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது, மனமாசின்றி அன்பு அடிப்படையில் பகுத்துண்டு, பல்லுயிரோம்பி, தமக்குரிய வாழ்வியற் கடமைகளை நன்றாற்றி, வாய்மைமொழிந்து, அருள் கனிந்து ஒழுகுதலே அறம் எனக் கூறலாம்.
துணை நின்ற நூல்கள்
1. சங்க இலக்கியம் புறநானூறு தொகுதி 1, (உரையாசிரியர்) கு.வெ.ப பாலசுப்ரமணியன்,
2. திருக்குறள், தமிழ் வேட்பன்,
3. பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும், உ.வே. சாமிநாதையர்,
4. செம்மொழி இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பாகம் 1, பாலசங்கர்,
(குறிப்பு: கட்டுரை வழங்குபவர்கள், கட்டுரைக்கான துணைநூற்பட்டியல் அளிக்கும் போது, நூலின் பெயர், நூலாசிரியர், பதிப்பகத்தின் பெயர், பதிப்பகத்தின் முகவரி, பதிப்பு ஆண்டு எனும் வரிசையில் தொகுத்து வழங்கிட வேண்டும். அப்போதுதான் கட்டுரை முழுமையடையும் - ஆசிரியர்)
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.