சங்க கால நூல்களான எட்டுத்தொகையில் அரசர்களுக்கும், புலவர்களுக்கும் இடையேக் காணப்பட்ட மாசற்ற, சுயநலமற்ற, இழிவற்ற நட்பினை அதியாமான் - ஔவையார், கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார், பாரி - கபிலர் போன்றோரின் வரலாறு படம் பிடித்துக் காட்டுகின்றன. சங்க காலத்தையடுத்து தோன்றிய கீழ்க்கணக்கு நூல்கள் நட்பு எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? என்பனவற்றைத் தெளிவாகக் கூறுகின்றன.
“நட்பு” என்னும் சொல்லுக்கு “கேண்மை”, “சிநேகம்”, “உறவு” போன்ற பல பொருள்களைத் தற்கால தமிழ்ச்சொல்லகராதி தருகிறது. இரு உயிரினங்களுக்கு இடையேக் காணப்படும் ஒன்றுபட்ட எண்ணங்களால் ஏற்படும் ஓர் உறவு என நட்பிற்கு இலக்கணம் வகுக்கலாம். மேலும், நட்பானது ஒருவரிடம் காணப்படும் செல்வத்தையோ, பதவியையோ மையமாகக் கொள்ளாது, இறுதி மூச்சு வரை அவரது இன்ப துன்பங்களில் பங்கிடத் தூண்டும் ஓர் உணர்வு என்றே கூறலாம்.
தெய்வப்புலவர் தனது தமிழ்மறையில், ஒருவனது குணம், குடிப்பிறப்பு, குற்றம் ஆகியவற்றை அறிந்தே நட்பு கொள்ள வேண்டும் என்பதை,
“குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இன்னும் அறிந்தியாக்க நட்பு”
(திருக்குறள். 793)
என்ற ஈரடிக் குறளால் விளக்குகிறார்.
1. நற்குணமுடையோர் நட்பு
தம்மோடு நட்பு கொண்டவர் தீமை செய்தாலும், அதனைப் பொறுத்துக் கொள்ளுதல் இருவருக்கும் இடையில் நட்பு வளரக் காரணமாக அமையும் என்ற கருத்தை,
“ஒருவர் பொறை இருவர் நட்பு”
(பழமொழி. 247) & (நாலடியார். 223)
என்ற அடி வாயிலாக, பொறுமை குணமுடையேராக நண்பர்கள் இருக்க வேண்டுமென நானூறு பாடல்களைக் கொண்டுள்ள இரு நூல்களும் உரைக்கின்றன.
பொறுமையில்லாது தனது நண்பரின் குற்றத்தைக் கடிந்து உரைப்பதால் இருவருக்கும் இடையேயான நட்பு கெடக் காரணமாகும் என்பதை,
“நா அன்றோ, நட்பு அறுக்கும்?”
(நான்மணிக்கடிகை. 79)
என்ற அடி நட்பு கெடாமலிருக்க நாவடக்கம் இன்றியமையாதது என்பதன் வழியாக விளக்குகிறது.
சுயநலமிக்க குணத்தையுடைய மனிதரோடு கொண்டுள்ள நட்பைக் கைவிடாதிருத்தல் துன்பத்தை உண்டாக்கும் எனக் கபிலர் கூறியுள்ளார்.
“… … … … … … ஆங்கு இன்னா,
யாம் என்பவரோடு நட்பு”
(இன்னா நாற்பது. 24)
பிற உயிர்களுக்கு கருணை (அன்பு) காட்டும் குணமில்லாதவனின் உள்ளத்தில் நட்பும் உறவும் தோன்றுவதில்லை எனக் கூடலூர்க்கிழார் கூறுகிறார்.
“ஈரம் அல்லாதது கிளை நட்பு அன்று”
(முதுமொழிக் காஞ்சி. 43)
ஒற்றுமையாக வாழக்கூடியக் குணத்தை பெறாதவரின் நட்பானது, துன்பத்தை மட்டுமே தரவல்லது என சமண முனிவர்களின் வேளாண் வேதம் கூறுகிறது.
“… … … … … … இன்னாதே,
ஒற்றுமை கொள்ளாதார் நட்பு”
(நாலடியார். 237)
2. நற்குடிப்பிறப்பினரின் நட்பு
குடிப்பிறப்பை அறிந்தே நட்பு கொள்ள வேண்டும் எனக் கூறிய வள்ளுவர், எக்குடியில் பிறந்தோரின் நட்பைக் கொள்ள வேண்டும் என்பதை,
“குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு”
(திருக்குறள். 794)
என்ற குறளில் தன்மீது பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பைப் பொருள் கொடுத்தாவது பெற்றிட வேண்டும் என்கிறார்.
இழிவான தொழிலைச் செய்து வரும் குடியில் பிறந்தவரோடு நட்பு கொள்ளக்கூடாது எனக் கபிலர் தனது நூலான இன்னா நாற்பதில் கூறியுள்ளார்.
“இழித்த தொழிலவர் நட்பு இன்னா”
(இன்னா நாற்பது. 34)
3. குற்றமற்றவரின் நட்பு
பொருள் கொடுத்தாவது நற்குடிப்பிறந்தவரின் நட்பை பெறுதல் வேண்டும் எனக் கூறிய வள்ளுவர், குற்றமுடையவரின் நட்பையும் அவ்வாறேப் பொருள் கொடுத்தாவது கைவிட வேண்டும் என்பதை,
“மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு”
(திருக்குறள். 800)
என்ற குறளால் குற்றமற்றவரையே நட்பாகப் பெறுதல் வேண்டும் என்கிறார்.
மேலும், மருத்துவ நூல்களுள் ஒன்றான சிறுபஞ்சமூலமும், வேளாண் வேதமான நாலடியாரும் குற்றம் புரியும் தீயவர்களின் நட்பைத் தவிர்க்க வேண்டும் என்பதை,
“வெறுமின், வினை தீயார் கேண்மை”
(நாலடியார். 172)
“கருங் குணத்தார் கேண்மை கழிமின்”
(சிறுபஞ்சமூலம். 25)
ஆகிய அடிகள் வாயிலாக, தீயோரின் நட்பை வெறுத்தொதுக்கி, குற்றமற்ற நல்லோரின் நட்பை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.
4. அறிவுடைய சான்றோரின் நட்பு
நற்பண்புகள் நிறைந்த பெரியோர்களுடைய நட்பானது கேடு விளைவிக்காது, பல நன்மைகளைக் கொடுக்கும் என மூவாதியார் தனது பாடல் வரிகளால் விளக்குகிறார்.
“சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி,
வலி ஆகி, பின்னும் பயக்கும்”
(ஐந்திணை எழுபது. 5)
சான்றோருடன் கொள்ளும் நட்பானது, பிறைத் திங்களைப் போல, ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே வருமெனக் குறளடியும் நாலடியும் சான்றோரின் நட்பை வளர்கின்ற பிறைநிலவுக்கு ஒப்பாகக் கூறுகின்றன.
“நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு”
(திருக்குறள். 782)
“பெரியார் கேண்மை, பிறை போல, நாளும்
வரிசை வரிசையா நந்தும்”
(நாலடியார். 125)
தெளிவில்லாத அறிவையுடையோரின் நட்பைக் காட்டிலும், பகையே மேலானது என நாலடி நானூறு விளக்குகிறது.
“தெளிவு இலார் நட்பின் பகை நன்று”
(நாலடியார். 219)
அறிவில்லாத மக்களோடு ஏற்படுகின்ற நட்பானது, தீராத துன்பத்தை விளைவிக்க வல்லது என்பதை மூன்றுரையரையனார் பின்வரும் வரியால் கூறியுள்ளார்.
“பின் இன்னா, பேதையார் நட்பு”
(பழமொழி. 113)
“ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்” என்பது அனைவரும் அறிந்த பழமொழியே. அத்தகைய ஆபத்தான (துன்பமான) நேரங்களில் நண்பனைக் கைவிடாது தக்க உதவி புரிவதேச் சிறந்த நட்பிற்கு அடையாளமாகும். இதனையே,
“சோரா நல் நட்பு உதவியின் அறிப” (முதுமொழிக் காஞ்சி. 13)
என்ற பாடலடி, நட்பின் ஆழமானது நண்பனுக்கு செய்யும் உதவியின் அளவைப் பொருத்தது என எடுத்தியம்புகிறது.
1. திவான் பஹதூர் ச. பவானந்தம்பிள்ளை,(1925), தற்கால தமிழ்ச்சொல்லகராதி, மாக்மில்லன் & கம்பெனி லிமிடெட், சென்னை.
2. சுப்பிரமணியன் ச. வே., தமிழச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600018. (2008).
3. ஜமால் முகமது கல்லூரி வெளியீடு,(2012), தமிழ் இலக்கிய வரலாறு, தி பிரிண்டிங் ஹவுஸ், திருச்சி-620023.