இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
இலக்கியம்

பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளும் அகநானூறும் உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

பேராசிரியர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்,
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு


முன்னுரை

பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாக, இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், எதிர்பெய்து பரிதல், ஏதம் ஆய்தல், பசியட நிற்றல், பசலை பாய்தல், உண்டியிற் குறைதல், உடம்பு நனி சுருங்கல், கண் துயில் மறுத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக் கோடல், மெய்யே என்றல், ஐயஞ் செய்தல், அவர் தமர் உவத்தல், அறனழிந்துரைத்தல், ஆங்கு நெஞ்சழிதல், எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல், ஒப்புவழி உவத்தல், உறுபெயர் கேட்டல், கலக்கம் எனும் இருபதையும் கூறியுள்ளார் தொல்காப்பியர். (தொல்.மெய்.22) இம்மெய்பாட்டினையும் இதனை விளக்க உரையாசிரியர்கள் எத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் குறித்து இவ்வியல் ஆராயவுள்ளது.

பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளும் உரையாசிரியர்களின் உரையும்

பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் இங்கே தொல்காப்பியர் கூறியுள்ளதன் காரணத்தை,

“மேல் நடுவ ணைந்தினைப் பகுதியாகிய களவிற்கும் கற்பிற்கு முரிய மெய்ப்பாடு உணர்த்தி, அதன்பின் கைக்கிளைக் குரியவருமாறு உணர்த்தினான். இனி இச்சூத்திரத்தாற் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று” இவற்றுள், இன்பத்தை வெறுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட இருபதும் ஆராயின் நடுவணைந்திணை யல்வழி வரும் என்றவாறு” (இளம்.,மெய்.22) என இளம்பூரணர் கூறியுள்ளார். முதலில் எண்வகை மெய்ப்பாட்டினைக் கூறிய தொல்காப்பியர் அதனைத் தொடர்ந்து, அகத்திற்கும் புறத்திற்குமான மெய்ப்பாடுகளைக் கூறினார். அடுத்ததாக அன்பின் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகளாக ஆறு அவத்தைகளைக் கூறினார். அடுத்து பெருந்திணைக்குரிய இம்மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார்.

இன்பத்தை வெறுத்தல்

இன்பத்தை வெறுத்தலென்பது, “கோலஞ்செய்தல் முதலியனவற்றை வெறுத்தலும் தென்றலும் நிலவு முதலாயினவற்றை வெறுத்தலும் இவ்வாறு களவின்கண் வரிற் பிறர்க்கும் புலனாம். கற்பின்கண் வரிற் இயல்வழி மங்கல மின்றாம்” (மேலது) எனவும், “யாழுங் குழலுங் பூவுஞ் சாந்தும் முதலாக இன்பத்திற்கேதுவாகிய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல். அவை காமத்திற்கு ஒருவகையான் ஏதுவாகலின் ‘மன்னிய வினைய நிமித்த’ மெனப் படுமாகலான் அவற்றை வெறுத்தல் புணர்ச்சிக் கேதுவாகா தன்றேயாயினும் அதனை ஆராய்ந்துணரின் நிமித்தமென வேண்டுமென்பான் ‘நலத்தக நாடின் அதுவே’ என்றானென்பது” (பேரா.,மெய்.22) எனவும், “தனிப் படர்மெலியுங் காதலர், கூட்டத்தின் முன்னும் உடனுறைபொழுதும் தமக்கினி தாயவற்றையே பிரிந்து தனித்தவழி வெறுக்குங் குறிப்பு. நிலவு, தென்றல், ஆரம், ஆயம், மாலை, கண்ணி முதலிய இன்பப் பொருள்கள் பிரிவாற்றாக் காதலர்க்குத் துன்பமாதல் இம்மனவியல் பற்றியதாகும்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர் உரைகொள்வர். தலைவனோடு சேர்ந்திருக்கும் காலத்தில் இன்பத்தை ஏற்படுத்திய தென்றல், நிலவு முதலியன அவனில்லாத நேரத்தில் காணும்போது துன்பத்தை ஏற்படுத்தும். அதனால் இன்பத்தை ஏற்படுத்தியவற்றை வெறுத்து ஒதுக்குதலே இன்பத்தை வெறுத்தல் எனும் மெய்ப்பாடாகும்.

இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1127-ஐயும்; பாரதி குறள்.396 - ஐயும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம், இராசா ஆகியோர்,

“நின்வலித்த மைவென் மன்னோ வல்கற்
புன்கண் மதலையொடு பொருந்திக் கொடுங்கோற்
கல்லாக் கோவல ரூதும்
வல்வாய்ச் சிறுகுழல் வருந்தாக் காலே” (அகம்.74)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், “ஊதிப்பழகாத கோவலர்கள் (சிறுவர்கள்) ஊதுகின்ற வாயையுடைய சிறிய வேய்ங்குழலோசை வருத்தாக்கால். கல்லா - என்னை வருத்துமென்றறியாத எனினுமாம். என்பதில் கோவலர்கள் ஊதுகின்ற குழலின் ஓசையின் இன்பத்தை வெறுத்து தலைமகன் பிரிவின்கண் தன்நிலையைத் தோழிக்கு தலைவி சொல்லியது. இதில் ‘இன்பத்தை வெறுத்தல்’ எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது. இதனை, “ ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து ‘கல்லாக் கோவல ரூதும், வல்வாய்ச் சிறுகுழல் வருந்தாக் காலே’ என்புழி இன்பத்தை வெறுத்தனளாயினும் புணர்ச்சிக்கு ஏதுவாம் என்பது கருத்து என்றார் பேரா” (ந.மு.வேங்டசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை,ப.178) என ந.மு. வேங்கடசாமி கூறியுள்ளார். இது பேராசிரியர் கருத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாய் உள்ளது. மேலும் பேராசிரியர்,


“… … … … … … எல்லி,
மனைசேர் பெண்ணை மடிவா யன்றி
றுணையொன்று பிரியினுந் துஞ்சா காணெனக்
கண்ணிறை நீர்கொண்டு சுரக்கு
மொண்ணுத லரிவையா னென்செய்கோ வெனவே” (அகம்.50)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில், இரவில் மனையைச் சேர்ந்த பனையிலுள்ள மடிந்த வாயையுடைய அன்றில் தன் சேவலராகிய ஒன்று பிரியினுந்துயிலாது காண். அங்ஙனமாக நான் பிரிந்து யாது செய்வேனென்று கண்கள் நிறைந்த நீர்கொண்டு (பின் அதனை அழித்து) மறைப்பாளென தோழி பாணனை நோக்கி கூறுகின்றாள். ‘கண்ணிறை நீர்கொண்டு சுரக்கும் ஒண்ணுதல் அரிவையான் என்செய்கோ வெனவே’ என்பதில் கண்துயில் மறுத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளதேயொழிய இதில் இன்பத்தை வெறுத்தல் என்பது வெளிப்படவில்லை எனவே இஃது பொருந்தாது. “‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து, இன்பத்தை வெறுத்தல் என்பது இன்பத்திற் கேதுவாய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல் என்று கூறி, அதற்கு ‘எல்லி மனைசேர்….. என் செய்கோ எனவே’ என்னும் பகுதியை எடுத்துக்காட்டினார், பேரா.” (ந.மு.வேங்டசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை,ப.124) என ந.மு.வேங்டசாமி கூறியுள்ளார். இருப்பினும் இது எவ்வாறு பொருந்தாது என்பது மேலே கூறப்பட்டது.


துன்பத்துப் புலம்பல்

துன்பத்துப் புலம்பலென்பது, “துன்பத்தின் கண்ணே புலம்புறுதல்.” (இளம்.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாது துன்புறுங்காலை அவ்வாற்றாமை தலைமகற்கின்றித் தானே துன்புறுகின்றாளாகச் சொல்லுதல். அவை கூட்டத்தை வெறுத்த குறிப்பாயினும் அக்கூட்டத்திற்கே நிமித்தமாகும் ஆராய்ந்துணரினென்றவாறு.” (பேரா.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாமையான் படருற்று மெலிந்து வருந்துதல், இதுவும் அழுகைக்குப் பொருளாக வரும்” (பாலசுந்.,மெய்.22)எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகனின் பிரிவைத் தாங்க இயலாத தலைமகள் அதனை நினைந்து புலம்பல் துன்பத்துப் புலம்பலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும் குறள்.1162 ஐயும்; பாரதியும் பாலசுந்தரமும் குறள்.1167 ஐயும்; மேலும், பாரதி குறள்.1162 ஐயும் எடுத்தாண்டுள்ளனர். மேலும் பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர்,

“நின்னுறு விழுமங் களைந்தோ
டன்னுறு விழும நீந்துமோ வெனவே” (அகம்.170)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் நினது மிக்க துன்பை நீக்கினோள் தனது மிக்க துன்பத்தை நீக்குவாளோ? எனத் தலைவனிடம் கூறக்கேட்டு நண்டிடம் தலைவி கூறியது. இதில் ‘துன்பத்துப் புலம்பல்’ எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது இதனைக், “காக்கை பெடையோடு யாமத்து இறாக் கனவும் என்பதால், தலைவி, தலைவனுடன் கூடி, முன்பு பெற்ற இன்பத்தை நினைத்து வருந்துகிறாள் என்னும் பொருள் குறிப்பாகப் புலப்படுகிறது” (நா.மீனவன், அகநானூறு, மணிமிடைப் பவளம், ப.113) எனவும், “ ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னும் சூத்திர உரையினும் இச்செய்யுளைப் பேராசிரியர் காட்டினார்” (புலியூர் கேசிகன், அகநானூறு, மணியிடை, பவளம், ப.109) எனவும், “‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து ‘நின்னுறு விழுமங்களைத்தோள், தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே’ என்பது துன்பத்துப் புலம்பல் என்னும் மெய்ப்பாடு ஆகுமென்றும் … … … … … கூறினார் பேரா” (ந.மு. வேங்கடசாமி நாட்டார், அகநானூறு, மணிமிடை பவளம், ப.101) எனவும் அகநானூற்று உரையாசிரியர்கள் கூறியுள்ளனர். இதன்வழி இவ்வகப்பாடலில் இம்மெய்ப்பாடு பயின்று வந்துள்ளமைப் புலப்படுகிறது.

எதிர்பெய்து பரிதல்

எதிர்பெய்து பரிதலென்பது, “தலைமகன் முன்னின்றி அவனின்றாகப் பெய்துகொண்டு வருந்துதல்” (இளம்.,மெய்.22) எனவும், “உருவு வெளிப்பாடு; அது தலைமகனையும் அவன் தேர்முதலாயினவற்றையுந் தன்னெதிர் பெய்து கொண்டு பரிந்து கையறுதல்” (பேரா.,மெய்.22) எனவும், “உருவெளி கண்டிரங்குதல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகள் காதல் மிகுதியால் தலைமகன் தன்னெதிரே இல்லாத நிலையிலும் எதிரே இருப்பதாகக் கண்டு இரங்குதல் எதிர்பெய்து பரிதலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணர் குறள்.1123 ஐயும்; பாரதியும் பாலசுந்தரமும் ஐங்.418 ஐயும்; பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர், குறுந்.301.ஐயும்; தாசன் குறள்.1126 ஐயும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

ஏதம் ஆய்தல்

ஏதமாய்தலென்பது, “குற்றமாராய்தல்” (இளம்.,மெய்.22) எனவும், “கூட்டத்திற்கு வரும் இடையூறுண்டென்று பலவும் ஆராய்தல். அது நொதுமலர் வரையக் கருதுவர் கொல்லெனவும், பிரிந்தோர் மறந்து இனிவாரார் கொல்லெனவுந் தோன்றும் உள்ள நிகழ்ச்சி” (பேரா.,மெய்.22) எனவும், “கூட்டத்திற்கு இடையூறாம் தீமை பலவும் ஆராய்தலாம் ஆற்றிடைத் தலைவன் ஊற்றினுக் கழுங்கல், பிரிந்தவர் மறந்து துறந்தனர் கொல்லெனத் துயரல், ஏதிலர்வரைவின் தீதினையஞ்சல் போல்பவையெல்லாம் இதில்பாலடங்கும்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். ஏதமாய்தலென்பது குறியிடத்தே கூட்டத்திற்கு வரும் தலைவனுக்கு நேரும் இடையூறுகளை ஆராய்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1165 ஐயும்; பாரதி குறுந்.268, 217, 307, கலி.11 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், குறுந்.307 ஆம் பாடலையும்; பேராசிரியர், குழந்தை, இராசா ஆகியோர்,

“வாரார் கொல்லெனப் பருவருந்
தாரார் மார்பநீ தணந்த ஞான்றே” (அகம்.150)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தாரையணிந்த மார்பனே! நீ பிரிந்தகாலை வாரார்கொல் என்று துயருறுவாள் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை, “ ‘ஏதம் ஆய்தல்’ என்னும் மெய்ப்பாட்டிற்கு, ‘வாரார் கொல் எனப் பருவரும் தாரார் மார்ப நீ தனந்த ஞான்றே’ என்பதை ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்துப் பேராசிரியர் காட்டினார்” (புலியூர் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், பக். 67-68) எனப் புலியூர் கேசிகன் தமது உரையில் இதனை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், “ந.மு.வேங்கடசாமி” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, மணிமிடை பவளம், ப. 63), “மா.பரமசிவம்” (மா.பரமசிவம் அகநானூறு, ப. 186) ஆகியோரும் தமது அகநானூற்று உரையில் இதனை மேற்கோள் காட்டியுள்ளனர்.


பசியட நிற்றல்

பசியட நிற்றலென்பது, “உண்ணாமை” (இளம்.,மெய்.22) எனவும், “பசிவருத்தவும் அதற்குத் தளராது உணவு மறுத்தல்” (பேரா.,மெய்.22) எனவும், “தனிமை ஆற்றார் ஊண் உவர்த்துப் பிறரை அடும் பசிப்பிணியை அறவே தாம் அடும் ஆற்றல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தனக்கு பசி உண்டாகியும் உணவை உண்ணாது தலைவனின் பிரிவை எண்ணி வருந்துதல் பசியட நிற்றலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும். குறள்.1128 ஐயும்; பேராசிரியர், பாரதி, குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர்,

“அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள்
பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு
நனிபசந் தனளென வினவுதி” (அகம்.48)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், அன்னாய் வாழீ! நான் சொல்வதை விரும்பு. அன்னையாகிய நின்மகள் பாலும் உண்ணுகின்றிலள். துன்பங்கொண்டு மிகவும் நிறம் வேறுபட்டாள், என்று வினவுகின்றாய் என்பதில் பாலும் உண்ணாள் என்பது பசியட நிற்றலை வெளிக்காட்டியது. இதனை, “பாலும் உண்ணாள் என்புழி உம்மை உயர்வு சிறப்பு பாலும் உண்ணாள் எனவே ஏதும் உண்டிலள் என்றாயிற்று ஈண்டுச் செவிலி கூற்றைத் தோழி கொண்டு கூறிய ‘பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள்’ என்பது புணர்ச்சிக்கு நிமிர்த்தமாகாதன போன்று காட்டி ஆராய்வார்க்குப் புணர்ச்சி நிமிர்த்தமாகத் தோன்றுகின்ற மெய்ப்பாடுகளாம். இங்ஙனமாதலை - துன்பத்துப் புலம்பல், பசியட நிற்றல், பசலை பாய்தல், என்றோதுவர் ஆசிரியர் தொல்காப்பியனார். இவற்றுள் பசியட நிற்றல் என்னும் ஒரு மெய்ப்பாட்டிற்கே பேராசிரியர் “அன்னாய்… … … … ... வினவுதி” என்னும் இவ்வடிகளை எடுத்துக்காட்டினர்” (பொ.வே.சோமசுந்தரம், அகநானூறு, பா.48 உரை) என பொ.வே. சோமசுந்தரம் கூறியுள்ளார். மேலும் இதனை, “ந.மு.வேங்கடசாமியும் தமது அகநானூற்று உரையில் எடுத்துக்காட்டியுள்ளார்” (ந.மு.வேங்கடசாமி நாட்டார், அகநானூறு, களிற்றியானைநிறை, ப.120) எனவே இம்மெய்ப்பாடு இவ்வகநானூற்றுப் பாடலில் வெளிப்பட்டுள்ளது.

பசலை பாய்தல்

பசலை பாய்தலென்பது, “பசலை பரத்தல்” (இளம்., (பேரா.,மெய்.22) எனவும், “கூட்டம் பெறாது ஆற்றாத் தலைவியர் காதற் நோயால் தம் மாமைக்கவின் இழந்தெய்தும் நிறவேறுபாடு” (பாரதி.,மெய்.22) எனவும், “பிரிவாற்றாமையான் மாமைக்கவின் மாறி மேனி பசப்பூர நிற்றல். (பாய்தல்-பரவுதல்) இதுவும் இளிவரலுக்குப் பொருளாக அமையும்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். பசியட நின்ற தலைவி உடல் வலியிழந்தமையால் மேனியில் பசலை பரவுதல் பசலை பாய்தலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1188-ஐயும்; பேராசிரியரும் குழந்தையும், குறுந்.27-ஆம் பாடலையும்; பாரதி, ஐங்.231, குறுந்.27 - ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், ஐங்.231-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

உண்டியிற் குறைதல்

உண்டியிற் குறைதலென்பது, “உணவு சுருங்குதல்” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “பசியட நிற்றலேயன்றிச் சிறிது உண்டி யூட்டியவழிப் பண்டுபோலாது கழியவுஞ் சிறிதுண்டல்” (பேரா.,மெய்.22) எனவும், “உற்றார் ஊட்டும் உணவை மறுப்பிற் கடுப்பரென்றஞ்சித் தன் வெறுப்பை மறைத்துட்கொண்டதுபோற் சிறிது உண்டுவைத்தல், முன் பசியட நிற்றல், தனிபடர் மெலிவால் பசிப்பிணியுணராத கை கடந்த காதல்நிலை குறிக்கும்; இது, ஆனாக்காதலால் ஊண் ஒல்லாமையால், பண்டையளவினும் உண்டி சுருங்குதலைச்சுட்டும் “தீம்பாலூட்டினும் வேம்பினும் கைக்கும்” (இ.வி.ப.573) எனும் பழைய பாட்டடி இவ்வியல்பை விளக்குவதறிக.” (பாரதி.,மெய்.22) எனவும், “தாயார் பரிந்து உணவு ஊட்டியவழி நனி உண்ணாது கழியவும் குறைத்துண்ணல்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். இயல்பாக உணவு உண்ணும் அளவினின்று தன் காதலர் பிரிவால் குறைத்து உண்ணுதல் உண்டியிற் குறைதலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும்,

“பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு” (அகம்.48)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் பாலும் உண்ணாமல் இருக்கிறாள் என்பது எதையும் உண்ண மறுக்கிறாள் என்பதை வெளிக்காட்டுகிறது. இது பசியட நிற்றலின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது சிறிதுண்ணல் எனவே இம்மெய்ப்பாட்டிற்கு இது பொருந்தாது. மேலும், இம்மெய்ப்பாட்டினை விளக்க பேராசிரியர், பாரதி, பாலசுந்தரம் ஆகியோர்,

“தீம்பா லூட்டினும் வெம்பினுங் கைக்கும்
வாரா யெனினு மார்வமொடு நோக்கு
நின்னிற் சிறந்ததொன் றிலளே
யென்னினும் படாஅ லென்னிதற் படலே” (இ.வி.ப.௫௨௭)

எனும் இலக்கண விளக்கப் பழம்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், இனிய பாலை ஊட்டினாலும் அதனை வேம்பினைக் காட்டினும் கசப்பு என ஒதுக்குவாள். நீ வாராது போனாலும் உன்னுடைய வருகையை விருப்பத்தோடு நோக்குவாள். என் தலைவி நின்னைக் காட்டினும் சிறந்ததொன்று இல்லையென்பவள். எனது சொல்லினும் அமைகின்றிலள் - இதனைப்படுதலெப்படி? என்பதன்வழி இம்மெய்ப்பாடு வெளிப்படாது நின்றது. இது உணவை வெறுத்தல் என்பதை உணர்த்துதலால் பசியட நிற்றலென்பதின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது உணவை சிறிதளவு உண்ணுதல் இங்கு இப்பழம்பாடல் உணவு உண்ணாமையே உணர்த்துகிறது.


உடம்பு நனி சுருங்கல்

உடம்புநனி சுருங்கலென்பது, “உண்ணாமை காரணமாகத் தன்னுடம்பு மிகச் சுருக்கமுறுதல்” (இளம்., தாசன், மெய்.22) எனவும், “அவ்வுண்ணாமை உயிரிற் செல்லாது உடம்பிற் காட்டுதல்” (பேரா.,மெய்.22) எனவும், “உணவில்லாமையும் தணப்பொல்லாமையும் நலிய உடல் நாளும் மெலிதல்” (பாரதி.,மெய்.22) எனவும், “பசியட நிற்றலானும் உண்டியிற் குறைதலானும் மேனி மெலிவுறுதல்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். உண்ணாமை காரணமாகவும், சிறிதுண்ணலினாலும் உயிர்போகாது உடம்பு தன்னளவின்றி சுருங்குதல் உடம்புநனி சுருங்கலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1234-ஐயும்; பாரதியும் பாலசுந்தரமும் குறுந்.290-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

கண்துயில் மறுத்தல்

கண்துயில் மறுத்தலென்பது, “உறங்காமை” (இளம்., தாசன், மெய்.22)., எனவும், “இரவும் பகலுந் துஞ்சாமை” (பேரா., குழந்தை, இராசா, மெய்.22), (பாரதி.,மெய்.22) எனவும், “உடம்பு சோர்வுற்ற காலையும் உள்ளம் உறங்க ஒருபடாமையின் கண்துஞ்சாதிருத்தல்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். கண்துயில் மறுத்தலென்பது தலைவனை காணாததால் உண்டியிற் குறைந்து உடம்புநனி சுருங்கிய தலைவி உணவு மறுத்து உறக்கம் பெறாமல் தவித்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1168-ஐயும்; பாலசுந்தரம் குறுந்.6 ஆம் பாடலையும்; பாரதி குறள்.1179, குறுந்.6, 11, 329, 5, 365, கலி.6 ஆகிய பாடல்களையும்; பேராசிரியரும் குழந்தையும்,

“புலர்குர லேனற் புழையுடை யொருசிறை
மலர்தார் மார்ப னின்றோற் கண்டோர்
பலர்தில் வாழி தோழி யவரு
ளாரிருட் கங்கு லணையொடு பொருந்தி
யோர்யா னாகுவ தெவன்கொ
னீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே” (அகம்.82)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தோழியே! முற்றிய கதிரையுடைய தினைப்புனத்தின் ஒருபக்கத்தில் நின்றோனாகிய பரந்த தாரையணிந்த மார்பனைக் கண்டோர் பலர்தில். அவருள் ஆரிய இருட் கங்குலிலே படுக்கையொடு பொருந்தி நீர்வடியுங் கண்ணோடு நெகிழ்ந்த தோளையுமுடையேன் யானொருத்தியேயாகுதல் என்னையோ! என்பதில் படுக்கையில் உறங்காது தவிக்கும் தலைவியின் நிலை கூறப்பட்டுள்ளமையின் இது கண்துயில் மறுத்தலானது. மேலும் இதனை, “ ‘இன்பத்தை வெறுத்தல்’ என்னுஞ் சூத்திரத்து ‘கண்டுயில் மறுத்தலென்பது’ இரவும் பகலுந் துஞ்சாமை; அது ‘புலர்குர லேனல் … … … … … நெகிழ்தோளேனே’ எனவரும் எனவும் உரைத்தார் பேரா.” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை, ப.82) என ந.மு.வேங்கடசாமி தமது அகநானூற்று உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.


கனவொடு மயங்கல்

கனவொடு மயங்கலென்பது, “கனவை நனவென மயங்குதல்” (இளம்., தாசன், மெய்.22), எனவும், “அரிதினில் துயிலெய்திய வழித் தலைமகனைக் கனவிற்கண்டு பின்னர் அவனன்மையின் மயங்கும் மயக்கம்” (பேரா., குழந்தை, இராசா, மெய்.22), எனவும், “நயந்தோர் பிரிவால் அயர்ந்தகாதலர் கனவிற்றுணைவரைக் கண்டுகளித்து விழித்தபின் காணாது வெருளுதலாகும்” (பாரதி.,மெய்.22) எனவும், “தண்ணுணர்வின்றி ஒருகால் துயிலெய்தியவழி நேர்ந்த கனவிடத்துக் காதலனைக் கண்டு களித்து விழித்த விழிக் காணாமையின் கலங்குதல்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். காதலுணர்வு மேலோங்கிய காரணத்தால் கனவில் தலைவனைக் காணும் தலைவி அவனை நேரில் காண்பதாக நினைத்து மயக்கமுறுதல் கனவொடு மயங்கலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1217-ஐயும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர், கலி.128-ஆம் பாடலையும்; பாரதி குறுந்.30, குறள்.1213 மற்றும்,

“… … … … … … யாழ, நின்
கோடேந்து புருவமொடு குவவுநுதல் நீவி
நறுங்கதுப் புளரிய நன்னர் அமையத்து
வறுங்கை காட்டிய வாயல் கனவின்
ஏற்றேக் கற்ற உலமரல்” (அகம்.39)

எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், நான் உன்னுடைய அழகிய புருவங்களையும், சிறிய நெற்றியையும், நறுமணக் கூந்தலையும் தடவ நினைத்து முயன்றேன். உன்னைத் தழுவுதல் போன்ற என் கையை வெறுங்கை ஆக்கிய பொய்யான அக்கனவை நினைத்து ஏற்பட்ட மனச் சுழற்சியை நீ அறியவில்லை. அதனால் நீ என்னை நினைத்ததும் உண்டோ? என்று ஊடல் கொள்கிறாய்! எனத் தலைவியை நோக்கி தலைவன் கூறுகின்றான். இதில் அவன் கனவை நனவாக மயங்கியமை வெளிப்பட்டுள்ளது.

பொய்யாக்கோடல்

பொய்யாக் கோடலென்பது, “தலைவன் கூற்றுத் தன்னைப் பொய்யாகக் கோடல்” (இளம்., தாசன், குழந்தை, இராசா, மெய்.22) எனவும், “மெய்யைப் பொய்யாக் கோடல்” (பேரா.,மெய்.22) எனவும், “காதல் மிகையால் மெய்யைப் பொய்யாகத் திரித்துக்கோடல்” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவன் தண்ணளி செய்யவும் பிரிவச்சத்தான் அதனைப் பொய்யாகக் கற்பித்துக் கொண்டு இனைதல்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைவன் கூறும் கூற்றையும்; அவன் செய்யும் தண்ணளியையும் பொய்யாகக் கொள்ளுதல் பொய்யாக் கோடலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.88 - ஆம் பாடலையும்; பாரதி, குறள்.1311, கலி.88 ஆகிய பாடல்களையும்; குழந்தை கலி.68 ஆம் பாடலையும்; பாலசுந்தரம் கலி.68, 41 ஆகிய பாடல்களையும்; பேராசிரியர், கலி.68, 41 ஆகிய பாடல்களும்; மேலும் பேராசிரியரும் இராசாவும்,

“வருது மென்ற நாளும் பொய்த்தன
வரியே ருண்கணீரு நில்லா” (அகம்.144)

எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், தலைவன் வருவேனென்ற நாளும் பொய்த்தன; வரி பொருந்திய மையுண்ட கண்களில் நீரும் நிற்கின்றில எனும் செய்தி கூறப்பட்டுள்ளது. இதில் தலைவன் ஒரு காலத்தைக் குறிப்பிட்டு இக்காலத்தில் நான் திரும்பி வந்துவிடுவேன் எனக்கூறி தலைவியிடம் விடைபெற்று சென்றிருப்பான் அக்காலத்தின் வரவை இயற்கை உணர்த்திய உடனே அவன் வருவேனென கூறிய காலம் வந்துவிட்டது அவன் வரவில்லையே என அவன் கூறிய கூற்றைப் பொய்யென நினைத்தல் பொய்யாக் கோடல் ஆகும். எனவே இப்பாடலில் பொய்யாக் கோடலென்பது பொருத்தியாளப்பட்டுள்ளது. மேலும், இதனை, “பேரா. ‘பொய்யாக் கோடல்’ என்ற பகுதிக்கு உதாரணமாக “வருதுமென்ற நாளும் பொய்த்தன, வரியே ருண்கணீரு நில்லா” என்பதனைக் காட்டியுள்ளார்” (மா. பரமசிவம், அகநானூறு, பக்.172-173) என மா. பரமசிவம் தமது உரையில் எடுத்தாண்டுள்ளார். இதனை மேலும், “புலியூர் கேசிகன்” (புலியூர் கேசிகன், அகநானூறு, மணிமிடை பவளம், ப.56,), “ந.மு.வேங்கடசாமி” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, மணிமிடை பவளம், ப.52) ஆகியோரும் தமது உரையில் எடுத்துக் காட்டியுள்ளனர்.

மெய்யே என்றல்

மெய்யே என்றலென்பது, “உரைத்த மாற்றத்தை மெய்யேயெனக் கூறுதல்” (இளம்., தாசன், மெய்.22), எனவும், “பொய்யை மெய்யென்று துணிதல்” (பேரா.,மெய்.22) எனவும், “இது முன்னதற்கு மாறாகப் பொய்ப்பினும் தலைவன் சொல் மெய்யெனத் துணியும் தலைவியியல்பு” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவன் தன்னிடம் சொன்ன பொய்யை மெய்யாகக் கருதல். இது பெரும்பாலும் தலைவன் வாயில் வேண்டி நிற்கையில் அவன் சொல்லும் பொய்மொழிகளின் மேல்வரும் மெய்ப்பாடு” (இராசா,மெய்.22) எனவும், “தலைவன் மாட்டுப் பொய்ம்மை நிகழினும் தன் காதன் மிகுதியான் அதனை மெய்ம்மையாகக் கருதிக் கொள்ளுதல்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். முன்னர் தலைவன் கூறும் மெய்ம்மைகளைப் பொய்யெனக் கொண்ட தலைவி. இங்ஙனம் பொய்மையை மெய்யே என்று காதல் மிகுதியால் கொள்ளுதலே மெய்யே என்றலாகும். இதனை விளக்க இளம்பூரணர், குறுந்.121 ஆம் பாடலும்; பாலசுந்தரம், குறுந்.21 ஆம் பாடலும்; தாசன், குறுந்.121, 21 ஆகிய பாடல்களையும்; பாரதி, குறுந்.21, 288 ஆகிய பாடல்களும்; மேலும் பேராசிரியர், பாரதி, குழந்தை ஆகியோர்,

“கழங்கா டாயத் தன்றுநம் மருளிய
பழங்கண் ணோட்டமு னலிய
வழுங்கின னல்லனோ வயர்ந்ததன் மணனே” (அகம்.66)

எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், கழங்காடலை ஆடும் நம்மாயத்தார் நடுவே அன்று நமக்கு அருளிய பழங்கண்ணோட்டம் தன்னை வருத்தலால், செய்த தன்மணத்தைச் சிறிது தவிர்த்தானல்லனோ என பொய்யை மெய்யாகக் கொண்டாள் தலைவி. இதனை, “இன்பத்தை வெறுத்தல் என்னுஞ் சூத்திரத்து, ‘மெய்யே யென்றல்’ என்பதற்குப் பொய்யை மெய்யென்று கூறுதல் என்று பொருள்கூறி அது, ‘கழங்கடாயத்து … … … … … … … … … அயர்ந்தனன் மணனே’; என்பது: தானே தன் மகனை வாயில் கொண்டு புக்கானாயினும், அதனைப் பழங்கண்ணோட்டமும் நலிதரப் பொய்யே புகுந்தானென்று மெய்யாகத் துணிந்து கோடலால் அப்பெயர்த்தாயிற்று என்றார் பேரா.” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை, ப.159) என ந.மு.வேங்கடசாமி தமது அகநானூற்று உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

ஐயஞ் செய்தல்

ஐயஞ் செய்தலென்பது, “தலைவன் குறிப்புக் கண்டு ஐயப்படுதல்” (இளம்., தாசன், மெய்.22) எனவும், “இது, காதல் மிகையாற் கடுக்குமியல்பு” (பாரதி.,மெய்.22) எனவும், “நம்மை வரையாது விடுவாரோ என வாளாதே ஐயம் செய்தல். வரையாது - மணக்காது. வாளா - சும்மா” (குழந்தை, மெய்.22) எனவும், “ ‘நம்மை இம்மைப் பிறப்பினுள் துறப்பார் கொல்’ எனத் தலைவி காரணமின்றி ஐயங் கொள்ளுதல்” (இராசா, மெய்.22) எனவும், “தலைவன் சொல்லையும் செயலையும் ஐயுற்றுக் கருதுதல்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். ஐயஞ் செய்தலென்பது தலைவனின் செயலைக் கண்டு அவன் தன்னை மணக்காது போய்விடுவானோ? என ஐயுறுதலாகும். இதனை விளக்க இளம்பூரணர், பாலசுந்தரம், தாசன் ஆகியோர் கலி.4 - ஆம் பாடலையும்; பேராசிரியரும் குழந்தையும், கலி.33 ஆம் பாடலையும்; பாரதி கலி.4, 24 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

அவன்தமர் உவத்தல்

அவன்தமர் உவத்தலாவது, “தலைவன் தமரைக் கண்டவழி உவத்தல்” (இளம்.,மெய்.22) எனவும், “அவன் தமரைக் கண்டு உவந்தது. இது முனிவெனப் படாவோவெனின், அது தலைமகனைப் புலந்தாற்போல்வதோர் முனிவாயினல்லாது பகைப்பட நிகழாக்குறிப்பெனப்படும்; அல்லாக்கால், அது பெண்டண்மையன்றாமாகலின்” (பேரா.,மெய்.22) எனவும், “தலைவனுடைய தமரான பாணன் முதலியோரைக் கண்டு மகிழ்தல். தமர்-சுற்றம்” (குழந்தை, மெய்.22) எனவும், “தலைவனைச் சார்ந்தாரைக் கண்டுழியும் அவர் சொற்கேட்டுழியும் உளம் மகிழ்தல். (எ-டு) வந்துழிக் கண்டுகொள்க. அவன் தமரேயன்றி அவன் நாட்டுப்பொருள் முதலியவற்றை உவத்தலையும் இதன்கண் அடக்கிக் கொள்க” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அவன்தமர் உவத்தலென்பது, தலைவனின் உறவினர்களையும் அவன் நாட்டுப் பொருளையும் கண்டவழி மகிழ்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.83-ஆம் பாடலையும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர், குறுந்.361 - ஆம் பாடலையும்; பாரதி கலி.82 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர்.

இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

அறனழித்துரைத்தல்

அறனழித்துரைத்தலென்பது, “அறத்தினையழித்துக் கூறுதல்” (இளம்., தாசன், மெய்.22) எனவும், “அறனழிய வெறுப்பது போல வெறுத்துக் கூறல்” (பாரதி.,மெய்.22) எனவும், “பிரிவுத் துன்பத்தான் உளம் நொந்த தலைவி தலைவன் முதலானோரிடத்து அறமில்லை என வெறுத்துப் பேசுதல்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இளம்பூரணர், தாசன், இராசா, பாரதி பாலசுந்தரம் ஆகியோர் இம்மெய்ப்பாட்டினை அறனழித்துரைத்தல் எனவும், பேராசிரியர், குழந்தை ஆகியோர் அறனளித்துரைத்தல் எனவும் பொருள் கொள்வர். அறனளித்துரைத்தலென்பது, “அறக்கிழவனை அன்பு செய்தல்” (பேரா.,மெய்.22) எனவும், “அறத்தினை அன்பு செய்து பரவுதல். அறன் -ஞாயிறு, திங்கள் முதலியனவும், பல்லி சொல்லல், காக்கை கரைதல் முதலியனவுமாம். தலைவி, ஞாயிறு திங்கள் முதலியனவற்றைத் தலைவன் வரும் வழியை இனிது செய்யும்படி வேண்டுதலும், தனது ஆற்றாமையால் தலைவன் விரைவில் வரவேண்டும், எனப் பல்லியைச் சொல்லும்படியும், காக்கையைக் கரையும்படியும் வேண்டுதலுமாம். அளி- அன்பு. அன்புடன் பரவுதலாம்” (குழந்தை, மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இங்கு அறனழிந்துரைத்தலென்பது தனது நிலையினை உணராமல் பிரிந்துச் சென்ற தலைவனிடம் அறனில்லை என வெறுத்துக் கூறுதலாகும். இங்கே அறன் அளித்துரைத்தல் என்பது அறத்திற்கு அன்பு செய்தலாகும். இதனை, “ “அறனளிந் துரைத்தல் எனப் பாடங்கொண்டு அதற்கேற்ப விளக்கந்தருவார் பேரா. அது பொருந்தாமையை ஆங்கு நெஞ்சழிதல் எனப் பின்வருதலான் அறியலாம்” (பால. பதிப்பு.83. பக்.315) “நெஞ்சு அழிந்த வழியே அறன் அழிந்துரைத்தல் நிகழுமாதலின் அறனளித்துரைத்தல் என்ற பாடமே சிறக்கும் என்று தோன்றுகிறது” (தி.வெ.கோ. மேலது, xxxi) , (கே.எம். வேங்கடராமையா, தொல்காப்பிய மூலம் பாடவேறுபாடுகள் - ஆழ்நோக்காய்வு, ப.281.) என வேங்கடராமையா கூறியுள்ளார். இவற்றுள் அறனளிந்துரைத்தல் பொருந்தாமையைப் பேராசிரியரே ஆங்கு நெஞ்சழிதலில் கூறியுள்ளமையின் அறனழிந்துரைத்தலென்பதே இங்கு பொருந்தும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும் குறள்.1209.ஐயும்; பாரதி, குறுந்.191; 25, 262, ஐங்குறு.385, குறள்.1154, 1209 ஆகியவற்றையும்; பாலசுந்தரம், கலி.143, 144 குறுந்.262 ஆகிய பாடல்களையும்; பேராசிரியரும் குழந்தையும்,

“பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
கன்றுபுகு மாலை நின்றோ ளெய்தி” (அகம்.9)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், பக்கத்தே பல்லி சொல்லுந்தோறும் கடவுளை வணங்கி கன்றுகள் மன்றிற்புகும் மாலைக் காலத்தே நின்றோளையடைந்து வணங்கி நின்றோளையெய்தி என்க என்பதில் அறனளித்துரைத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.

ஆங்கு நெஞ்சழிதல்

ஆங்கு நெஞ்சழிதலென்பது, “அறனழிந்துரைக்குமிடத்து நெஞ்சழிந்து கூறுதல்” (இளம்.,மெய்.22) எனவும், “அங்ஙனம் உரைக்குங்கால் நெஞ்சழிந்துரைத்தல்; எனவே, அறனளிந்துரைத்தல் அழிவின்றொன்றாமென்பது சொல்லினானாம்” (பேரா.,மெய்.22) எனவும், “சொல்லளவில் அறனழிவது போலக் கூறிய தலைவி பின் அவ்வளவிற்கு உளம் உளைந்து வருந்துதல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். அறனழிந்து உரைக்கும்போது தன் நெஞ்சினையும் யழித்துக் கூறுதல் ஆங்கு நெஞ்சழிதலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1295-ஐயும்; பேராசிரியரும் குழந்தையும், கலி.143-ஆம் பாடலையும்; பாரதி, கலி.143, குறுந்.93 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், கலி.144, 114 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல்

எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலென்பது, “யாதானுமோர் உடம்பாயினுந் தன்னோடு ஒப்புமை கோடல் என்றவாறு” (இளம்.,மெய்.22) எனவும், “யாதானும் ஒரு பொருள் கண்டவிடத்துத் தலைமகனோடொப்புமை கோடல்” (பேரா.,மெய்.22) எனவும், “இதுகாணும் பொருள் எதுவும் தலைவன் வடிவுவண்ணம் பண்பு வினைகளுள் ஒன்றுக்கு ஒப்பெனக் கருதும் காதலியல்பு” (பாரதி.,மெய்.22) எனவும் “பிரிவாற்றாது புலந்த தலைவி நெஞ்சழிந்த நிலையில் தான் காணும் பொருள் எல்லாம் தன்னைப் போலத் துன்புறுவதாகக் கருதிக்கோடல். மெய் என்றது பொருளை உருவப்பொருளும் அருவப் பொருளும் அடங்க “எம்மெய்யாயினும்” என்றார்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலென்பது காதல் மிகுதியால் தான் காணும் பொருட்களிலெல்லாம் தன் காதலரின் ஒப்புமையைத் தேடலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1222.ஐயும்; பேராசிரியரும் குழந்தையும் கலி.20ஆம் பாடலையும்; பாரதி, குறள்.1111, 1112, 1116, கம்ப.மிதிலை.செய்.56, 57 ஆகியவற்றையும்; பாலசுந்தரம், கலி.129, 55, குறள்.1116 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.


ஒப்புவழி உவத்தல்

ஒப்புவழி உவத்தலென்பது, “தலைமகனோடு ஒக்குமெனப் பிறிதொன்று கண்டவழி யுவத்தல்” (இளம்., தாசன்,மெய்.22) எனவும், “ஒப்புமை யுண்டாகிய வழியே உவமைகொண்டு அதனானே உவகை தோன்றுவது. எனவே, முன்னது ஒப்பின்றி ஒப்புமை கொண்டதாயிற்று; என்னை? எம்மெய்யாயினு மென்றமையின்” (பேரா., குழந்தை,மெய்.22) எனவும், “இஃது அவ்வாறு ஒப்புமை கண்டவழி மகிழும் காதலியல்பாம்” (பாரதி., இராசா,மெய்.22) எனவும், “தம் நிலைமைக்கேற்ப ஒப்ப நிற்கும் பொருள் கண்டவழி உவப்புறுதல்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். தலைவனோடு ஒப்பன கண்டு மகிழ்தல் ஒப்புவழி உவத்தலாகும். இதனை விளக்கப் பேராசிரியர் கலி.80, 86 ஆகிய பாடல்களையும்; பாரதி கலி.86 ஆம் பாடலையும்; குழந்தை கலி.80 ஆம் பாடலையும், பாலசுந்தரம் குறுந்.315, 162, கலி.86 ஆகிய பாடல்களையும்; இளம்பூரணர்,

“யாவருங்… … … … … …
… … … … … … …
… … … … … … …
காணுநர் இன்மையிற், செத்தனள் பேணி” (அகம்.16)

எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், யாரும் பார்க்காததை அறிந்து அவன் அருகே சென்று அவனைத் தூக்கித் தன் தலைவன் போன்று இருக்கின்றதை எண்ணி இளமார்பையுடைய பொன் அணிகள் அணிந்த பெண், வருக என் உயிரே என அன்போடு அழைத்து மகிழ்ந்து தூக்கிக் கொஞ்சியதை, நான் பார்த்தேன் என்பதில் தலைமகனோடு ஒப்புடைய மகனை பரத்தை கொஞ்சியது வெளிப்பட்டுள்ளமையால், இஃது ஒப்புவழி உவத்தலாயிற்று.

உறுபெயர் கேட்டல்

உறுபெயர் கேட்டலென்பது, “தலைவன் பெயர்கேட்டு மகிழ்தல்” (இளம்.,தாசன்,மெய்.22). எனவும், “தலைமகன் பெரும்புகழ் கேட்டு மகிழ்தல்” (பேரா., குழந்தை, இராசா,மெய்.22) எனவும், “இது தலைவன் பீடார் பெரும்புகழ் பிறர்வாய்க்கேட்டு மகிழ்தல்” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவனது பெருமை பற்றிய புகழினைத் தலைவி விரும்பிக் கேட்டல்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகன் பெயரையும் புகழையும் கேட்டு உவத்தல் உறுபெயர் கேட்டலாகும். இதனை விளக்க, இளம்பூரணரும் தாசனும், குறள்.1199.ஐயும்; பேராசிரியரும் பாலசுந்தரம், கலி.41, 142 ஆகிய பாடல்களையும்; பாரதி, குறள்.1199, கலி.142, கம்ப.பால.கார்முகப்.செய். 59, 60, 62 ஆகியவற்றையும்; குழந்தை, கலி.142-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

கலக்கம்

கலக்கமென்பது, “மனங்கலங்குதல். மேற் ‘கலங்கி மொழிதல்’ என்பது ஒருகாற் சொல்லின்கண் வந்து பெயர்வது. இது மனங்கலங்கி நிற்கும் நிலை” (இளம்.,மெய்.22) எனவும், “சொல்லத்தகாதன சொல்லுதல். ‘கலக்கமு நலத்தக நாடி னதுவே’ (270) என்னாது கலக்க மென்பதை வேறுபெயர்த்து வைத்ததென்னையெனின் இக்காலத்து அதனினூங்கு நிகழும் மெய்ப்பாட்டுக் குறிப்புளவல்ல தலைமகட்கென்பது அறிவித்தற்கென்பது. இன்னும் அதனானே தலைமகற்காயின் அதினினூங்கு வருவதோர் கலக்கமும் உளதாமென்றது; அவை, மடலூர்தலே வரைபாய்தலே என்றற்றொடக்கத்தக்கன” (பேரா.,மெய்.22) எனவும், “நன்றாகத் தகுதிநோக்கி யாராயின் மயக்கமென்பதும் மேலது போலவே காதற்றிணை நிமித்தமாகும் மெய்ப்பாடேயாம் முன் குறித்த 19ம் அமையாவழியே, அவற்றினிறுதியில் கலக்கம் எழும் என்னும் அதன் சிறப்பியல் குறித்தற்கு அது இறுதியில் வேறு பிரித்துக் கூறப்பட்டது” (பாரதி.,மெய்.22) எனவும் “ஆற்றாமையான் மதிதிரிந்து சொல்லுதற்காகாதன சொல்லுதலும் செய்தற்கொவ்வாதன செய்தலுமாம்” (பாலசுந்.,மெய்.22) எனவும், உரையாசிரியர்கள் உரை கொள்வர். காதலர் மனங்கலக்க முறுவதால் செய்யத்தகாதன செய்தலும்; சொல்லுதலும் கலக்கமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் பேராசிரியரும், கலி.142, 144 ஆகிய பாடல்களையும், பாரதி, குறுந்.152 ஆம் பாடலையும்; குழந்தை, கலி.142, குறுந்.17 ஆகிய பாடல்களையும், பாலசுந்தரமும் இராசாவும் கலி.142ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.


பேராசிரியருரையில் சுட்டப்படும் புறநடைகள்

சாதல் எல்லையாகக் கூறுதலும் கலக்கத்தின் பாற்படும் இதனை விளக்க பேராசிரியர் குறுந்.17 ஆம் பாடலையும்; தானே துன்புறுமாறு உரைத்தலும் துன்பத்துப் புலம்பலாகும் என்பதனை விளக்க குறுந்.19ஆம் பாடலையும்; முற்காலத்து எதிர்ப்பட்டமை, பிற்காலத்துச் சொல்லுதலும் எதிர்பெய்து பரிதலாகும் என்பதனை விளக்க,

“அந்தீங் கிளவி யாயிழை மடந்தை
கொடுங்குழைக் கமர்த்த நோக்க
நெடுஞ்சே ணாரிடை விலங்கு ஞான்றே” (அகம்.3.)

எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளார். இதில் அக்கானகத்தைக் கடந்து பொருள்தேட முன்பொரு காலத்தில் சென்றபோது சிவந்த வாயினையும் இனியமொழியையும் அழகிய அணிகலன்களையும் உடைய தலைவியின் பார்வையானது சிந்தையில் தோன்றிக் கானகத்தைக் கடந்து செல்லாதவாறு தடுத்ததன்றோ! ஆதலால் பொருளுக்குப் புரியவேண்டும் என்று கூறும் நெஞ்சே; உன் உண்மை போன்ற பொய்ம் மொழியை நம்பி நான் மீண்டும் சென்றால் முந்தைய துன்பந்தானே வரும். எனவே இத்துன்பம் போக வழியாது? என தன் நெஞ்சிடம் தலைவன் கூறினானெப்பது முன்பு நடந்ததை பின்பு கூறிச் செல்கின்றான் இதுவும் எதிர்பெய்து பரிதலாகும்.

முடிவுரை

1. இன்பத்தை வெறுத்தலென்பதை விளக்க, பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம், இராசா ஆகியோர், அகம்.74 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் கண்துயில் மறுத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளதே யொழிய, இன்பத்தை வெறுத்தல் என்பது வெளிப்படவில்லை எனவே இஃது பொருந்தாது.

2. உண்டியிற் குறைதலெனும் மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணரும் தாசனும் அகம்.48 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் “பாலும் உண்ணால்” என கூறுவதால் பசியட நிற்றலின் பாற்படும். மேலும், பேராசிரியரும் பாலசுந்தரமும் இலக்கண விளக்க பாடல் 527 ஐ எடுத்தாண்டுள்ளனர். இது உணவு உண்ணாமையே உணர்த்துகிறது. எனவே இதுவும் பசியட நிற்றலின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது சிறிதுண்ணல் எனவே இம்மெய்ப்பாட்டிற்கு இவை பொருந்தாது.

3. இளம்பூரணர், தாசன், இராசா, பாரதி பாலசுந்தரம் ஆகியோர் அறனழித்துரைத்தல் எனவும், பேராசிரியர், குழந்தை ஆகியோர் அறனளித்துரைத்தல் எனவும் பொருள் கொள்வர். இவற்றுள் அறனளிந்துரைத்தல் என்பது பொருந்தாமையை ஆங்கு நெஞ்சழிதல் எனப் பின்வருதலான் அறியலாம்.

4. சாதல் எல்லையாகக் கூறுதலும் கலக்கத்தின் பாற்படும்; தானே துன்புறுமாறு உரைத்தலும் துன்பத்துப் புலம்பலாகும்; முற்காலத்து எதிர்ப்பட்டமை, பிற்காலத்துச் சொல்லுதலும் எதிர்பெய்து பரிதலாகும்.

5. இவ்வியலில் கூறப்பட்டுள்ள பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் இருபதில், இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், ஏதமாய்தல், பசியட நிற்றல், உண்டியிற் குறைதல், கண்துயில் மறுத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக்கோடல், மெய்யே என்றல், அறனழிந்துரைத்தல், ஒப்புவழி உவத்தல் எனும் பதினோரு மெய்ப்பாடுகளை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். ஏனைய ஒன்பது மெய்ப்பாடுகளை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை மேற்கோளாக எடுத்தாளவில்லை.

குறிப்பு:

(இக்கட்டுரைக்கு ‘துணைநூற்பட்டியல்’ சேர்த்து அளித்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும். துணைநூற்பட்டியல் அனுப்பி வைத்தால், இங்கே இடம் பெறச்செய்யலாம். - ஆசிரியர்)


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p242.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்

முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License