பெரியபுராணத்தில் வெளிப்படும் தமிழர் பண்பாட்டுக் கூறுகள்
பேராசிரியர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்,
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு
முன்னுரை
மனதில் தோன்றும் கருத்துக்களை மற்றவர்க்கு உணர்த்தும் கருவியாக மனிதன் படைத்துக் கொண்டது மொழி. அவனது வாழ்க்கையை, வழக்கங்களை, வளர்ச்சியை உணர்த்தும் ஒப்பற்ற நிலையை அடைந்தது. ஒவ்வொரு மொழியும் அம்மொழி பேசும் மக்களின் வாழ்வியலை உணர்த்துவதாயிற்று. தமிழனின் வாழ்வியலை, பண்பாட்டை, நாகரிகத்தை உணர்த்தக் கூடியக் கருவியாக நம் தமிழ் மொழியின் கண் அமைந்துள்ள இலக்கிய இலக்கணங்களிலே தொன்மை மிக்கது தொல்காப்பியம் ஆகும். மற்றவர்க்கு ஒன்றைச் சொல்ல விழையும் போது சொற்களின் பயன்பாட்டில் பண்பாடு காத்தத் தமிழனின் தனித்தன்மைக்குச் சான்றாக அமைந்துள்ளது.
“அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்” (1)
எனும் நூற்பா, “நன் மக்களிடைக் கூறப்படுவதல்லாத சொல்லை அவ்வாய்ப்பாடு மறைத்து பிற வாய்ப்பாட்டால் கூறுக” (2) என்று நச்சினார்க்கினியர் உரைக்கிறார். படிப்படியாகப் பழக்க வழக்கங்களில் சிறந்து வளர்ந்து மேம்பட்ட பண்பாட்டினால் உலகிற்கே உன்னதமான பண்பாட்டுச் சீர்மையை உணர்த்தும் உயர்நிலையை அடைந்த தமிழினம், மேலை நாகரிக மயக்கத்தினால், தன் பண்டைய நலம் மறைந்து, இசங்களின் (இயக்கம்) தாக்கத்தினால், யதார்த்தம் எனும் பெயரில் தகுதியில்லாத (சொல்) வழக்குகளைத் தன் கலைப்படைப்புகளில் பயன்படுத்தும் ஓர் அவலநிலை நிலவுகிறது. இந்த நேரத்தில் பழமைமிகு பண்பாட்டில் திளைத்துச் சிறந்த தமிழ்ப் பண்பாட்டை அதன்வழி பேச்சு வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் காத்தோம்பி வந்த சொல்லாட்சித் திறனை,பெரியபுராணத்தின் சில சான்றுகள் மூலம் விளக்க முனைவதே இவ்வியலின் நோக்கம். பண்பாடு இகவாத சொற்களால் தனது படைப்பாகிய திருத்தொண்டர் புராணத்தைப் பக்திச்சுவை சொட்டச் சொட்டப் பாடிய பெருமைக் குரியவர் சேக்கிழார் பெருமான். பக்தியொழுக்கத்தில் கடியப்பட வேண்டியதாகக் கருதப்படுவது மிகுகாமமாகும். தனது புராணத்தில் காமம் நுகர்தலாகிய தன்மையைக் கூற வேண்டிய இடங்களில் எல்லாம் அதை வெளிப்படக் கூறாமல், இனமான சொற்களால் கருத்தை உணாத்தும் பண்பாட்டினைக் கையாள்கிறார் சேக்கிழார்.
திருநீலகண்ட நாயனார்
திருநீலகண்ட நாயனார் பொய் கடிந்து அறத்தின் வழி வாழ்ந்து மெய்யடியார்கட்குப் பணி செய்யும் விருப்போடு மனையறம் புரிந்து வாழும் தொண்டர் ஆயினும் இளமை துள்ளும் காளைப் பருவத்தை மனைவியுடன் பெறும் இன்பத்தில் அமைவுறாது, பிற பெண்களிடமும், இன்பம் விழையும் இயல்பினராயிருந்தார். மெய்ப்பொருளை ஆய்ந்தறிந்து, நன்னெறி ஒழுகும் நல்லவராகிய திருநீலகண்டர், புற ஒழுக்கம் விழைதல் பொருந்தாததே சிவனடியார்க்கு இழுக்கினைத் தரக்கூடியதே. எனவே, அக் குற்றத்திற்கு அவரது “இளமை“ காரணமாயிற்று என்று கூறுகிறார். காரணம் எதுவாயினும் திருநீலகண்டரின் ஒழுக்கம் கடியப்பட வேண்டியதுதானே. எனவே தான் இன்பத்துறையில் எளியராயினார் என்று சுட்டுகிறார். மேலும், தங்களின் செயல் புறத்தார்க்குப் பலனாகாதவாறு ஓர் இல்லிலேயெ வேறுவேறாக இருந்து வந்தனர். இந்நிலையில் திருநீலகண்டரிடம் ஓடு ஒன்றைப் பாதுகாப்பதாக வைத்துச் சென்ற சிவனடியார் மீண்டும் வந்து தன் ஓட்டினைத் தருமாறு வேண்ட, திருநீலகண்டர் அந்த ஓடு, தான் வைத்திருந்த இடத்தில் காணப்பெறாமையால் வேறொரு ஓட்டினைக் கொடுத்தார். சிவனடியார் தன் ஓடுதான் தனக்கு வேண்டும் என்று வற்புறுத்த, வகையறியாமல் கவன்றி நீலகண்டர் மீது சான்றோர் அவையிடத்து வழக்குத்தொடுத்தார். ஓடு தன்னால் கவரப்படவில்லை, காணாமல் போய்விட்டது என்ற நீலகண்டர் கூற்றை, ஏற்க மறுத்து, மனையாளின் கைப்பற்றி புனலில் மூழ்கி சத்தியம் செய்தால் நம்புகிறேன் என்று சிவனடியார் கூறுகின்றார். அப்போதும்,
“திருந்திய மனைவியாரைத் தீண்டாமை செப்ப மாட்டார்
பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன்” (3)
என்று திருநீலகண்டர் கூறி, மனையாளின் ஒரு கோலினைக் கொடுத்து அதன் மறுமுனையைத் தான் பற்றவாறு நீரில் மூழ்கிச் சத்தியம் செய்தார். சிவனடியார் இந்தச் சத்தியத்தை ஏற்கமறுக்கவே, தன்னுடைய ஒழுக்கக் கேட்டினைப் புற ஒழுக்கத்தை, அதனால் மனைவி கொண்ட கோபத்தையும் வைத்த ஆணையும் கூறினார் என்பதைச் சேக்கிழார் பெருமான்,
“பாரோர் கேட்கப் பண்டுதஞ் செய்கை சொல்லி மூழ்கினார்
பழுதிலாதார்” (4)
என்று சுட்டுகிறார்.
மெய்ப் பொருள் நாயனார் புராணம்
மெய்ப்பொருள் நாயனார் சேதி நன்னாட்டின் அறநெறி வழுவாமற் காத்து வந்தவர். சிவனார்க்கு அன்பராயின் சிவவேடத்தை நாளும் சிந்தையில் கொண்டுவாழ்ந்தவர். அவருடன் மாறுபாடு கொண்ட முத்தநாதன், பன்முறை படைபெருக்குடன் வந்து போரிட்டுத் தோற்று ஓடினான். மெய்ப்பொருளாரின் படை வலிமை காரணமாகப் பன்முறை தோற்றோடிய பகைவனாம் முத்தநாதன். அவரை இகலினால் வெல்ல முடியாமல், வஞ்சனையால் வெல்லக் கருதினார். பொய்த்தவ வேடம் புனைந்து, அரசரின் பள்ளியறையை அடைந்த உலகியல் இல்லாத ஆகமநூல் உரைக்க வேண்டும். அதற்கு நாமிருவர் மட்டும் தனித்திருக்க வேண்டும் என்று கூறிட அரசரும் இசைந்தார். அந்நிலையில் ஆகமம் அருள வேண்டிப் பணிந்து நின்ற அவரைப் பொய்த்தவ வேடத்தனாம் முத்தநாதன் வாட்படையால் குருதிசோரத் தாக்கினான். இதனைக் குறிப்பிடவந்த சேக்கிழார் முத்தநாதன் மெய்ப்பொருள் வேந்தனை வாளாள் குத்திக் கொல்ல முற்பட்டதை வெளிப்படையாக, அதாவது அமங்கலச் சொல்லைப் பயன்படுத்திடாமல் மிக மிக நாகரிகமாக,
“கைத்தலத்திருந்த வஞ்சக் கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தக மவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான் முன்னினைந்தவப் பரிசே செய்ய
மெய்த்தவ வேடமேமெய்ப் பொருளெனத் தொழுது வென்றார்” (5)
மடிமீது இருந்த சுவடியில் வைத்திருந்த ஆயுதத்தை, வாளினை வாங்கி தன் முன் நினைத்த செயலைச் செய்தனன் என்று செப்புகிறார்.
“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு” (6)
என்பதற்குச் சான்றான மெய்ப்பொருள் வேந்தனின் இறப்பைச் சொல்லவந்த சேக்கிழார், இன்னாச் சொற்களைத் தவிர்த்த சிறப்பினால் சொல்லாட்சித் திறத்தில் அவர் கையாளும் மரபுவழா நிலை நினைந்து போற்றற்குரித்தாம்.
ஏனாதி நாதர்
ஏனாதிநாத நாயனார் வாளின்படை பயிற்சிப் பெற்ற பெருவளத்தை நாளும் வளர்கின்ற மிக்க பெருங்காதலினால், கறைக் கண்டப் பெருமான்பால் மாறாக் காதல் கொண்ட அன்பர்க்கு அளித்துவைக்கும் இயல்பினர். அவருடைய தாயாதியாகிய அதிசூரன், தன் பொருள் வருவாய் குறைந்தமைக்கு ஏனாதி நாதர் தான் காரணம் எனக் கருதினான். அதனால் அவரை எதிர்த்துப் போருக்கு வந்து பன் முறையும் தோற்றோடி, வஞ்சனைப் புரிந்தாலன்றி ஏனாதி நாதரை வெல்லுதல் இயலாது என்றறிந்து, இதுவரை திருநீற்றைப் பயன்றறியாத, அவன், நீறுபூசி தன்கைப் பலகையால் மறைத்து வந்து போர்க் களத்துள் நின்றான். ஏனாதி நாதர் போரிட்டு அவனைத் தாக்கமுற்பட்டபோது கைப்பலகையை நீக்கி நீறு பூசிய கோலத்தைக் காட்டினான். திருநீறு கண்டவுடன் ஏனாதிநாதர் அவனைத் தாக்காமல் விடுத்ததோடு, உள்ளன்பின்றி வஞ்சமாக நீறணிந்து அடியார் தன்னைக் கொல்லும் பாவம் வந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணம் மீதூர, தன் கைப்பலகையை நீக்காது நின்றார். அந்நிலையை,
“முன்னின்ற பாதகனும் தன் கருத்தே முற்றுவித்தான்” (7)
என்று சேக்கிழார் செப்புகிறார். பாதகன் செய்த கொலைத்தொழிலைக் கூட ஷகொலை’ என்ற கடுஞ்சொல் பயன்படுத்தாமல், தன் கருத்தை முற்றுவித்தான் என்று மிகவும் நயமாக நாகரிகமாகச் சுட்டுகிறார்.
பெரியபுராணத்தில் வேடவர் குல மரபுகளும் பண்பாட்டுப் பதிவுகளும்
நாயன்மார்களில் காளத்தி வேடரான கண்ணப்பர் மட்டமே வேடவர் குலத்தில் தோன்றியவர். கண்ணப்பர் அருள் பெற்ற வரலாற்றை 186 பாடல்களில் சேக்கிழார் இலைமலிந்த சருக்கத்தில் கண்ணப்ப நாயனார் புராணம் எனப் பாடியுள்ளார். கண்ணப்பர் ஆறு நாட்களில் இறைவனின் திருவடிப் பேற்றைப் பெற்றவர். கண்ணப்பர் புராணம் சிவபெருமானின் அருட்திறனை எடுத்தியம்பும் வரலாறாக அமைந்த போதும் கண்ணப்பர் பிறந்து வளர்ந்த வேடர்குலத்தின் பழக்க வழக்கங்களையும், மரபுகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் பதிவு செய்துள்ள இலக்கிய ஆவணமாக அமைந்துள்ளது.
மரபுகள்
ஒரு குழுவினர், ஒரு இனமக்கள், கூட்டத்தின் காலங்காலமாக பின்பற்றி வரும் பழக்க வழக்கங்களை மரபுகள் எனக்கூறலாம். மரபுகள் சமுதாயத்தின் எழுதாச் சட்டங்கள், “மனிதனுக்கு மனநிறைவையும் வெற்றியையும் இன்பத்தையும் தரும் செயல்களை அவன் திரும்பத் திரும்பச் செய்வதால், அவை பழக்கங்களாகின்றன. காரணமின்றிச் செய்பவை வழக்கங்களாகும். ஆனால், விரும்பியோ விரும்பாமலோ பண்டுதொட்டு செய்து வருவனவெல்லாம் மரபுகள் ஆகின்றன” (8) என்னும் திறனாய்வாளரின் கருத்து பழக்கவழக்கங்கள், மரபுகள் பற்றிய விளக்கமாக அமைந்துள்ளது. வேடர் குலத்தலைவன் நாகனின் மகனாகப் பிறந்த கண்ணப்பர் சிவனருள் அடையும் நாள் வரையில் சமூக அக்கறையுள்ள வேடர் குல மாமனிதராகவே காட்சியளிக்கின்றார். அவரிடமும் அவரது சுற்றத்தின் இடையேயும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் வேடர் குலத்தின் மரபுக் கூறுகளைக் காட்டுகின்றன.
குழந்தை வரம் வேண்டல்
குழந்தை இல்லாத வேடர் குலமக்கள் இறைவனிடம் குழந்தை வரம் வேண்டும் பழக்கத்தினை உடையவராகத் திகழ்ந்துள்ளனர். இது போன்ற செயல்கள் சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளன. வேடவர் குலத்தின் தலைவனாக இருந்த நாகன் தத்தை இருவருக்கும் குழந்தைப்பேறு இனி இல்லை. அரிது என எல்லோருக்கும் பேசும் நிலையில் அவர்கள் முருகப்பெருமானிடம் சென்று வேண்டிக் கொள்ள திண்ணன் பிறப்பதாகப் புராணம் கூறுகின்றது.
“பொருவருஞ் சிறப்பின் மிக்கார் இவர்க்கினிப் புதல்வர்ப் பேறே
அரியதென் றெவரும் கூற அதற்படு காதலாலே
முருகலர்அலங்கற் செவ்வேல் முருகவேல் முன்றிற் சென்று
பரவுதல் செய்து...” (9)
என்னும் பாடல் வேடவர் தலைவன் நாகனும் தத்தையும் குழந்தை வரம் வேண்டி முருகப் பெருமானிடம் நின்றமையை உணர்த்துகின்றது. வேடர்களின் தலைவன் பின்பற்றும் இவ்வழக்கம் வேடர் குல மக்களுக்கும் பொருந்தும் மரபுக் கூறாக இருப்பதை அறியமுடிகின்றது.
குரவைக் கூத்தாடுதல்
‘குழந்தைவரம் வேண்டுதல்’ என்பதும் நிலைப்பாடோடு இல்லாமல் அதற்காக இறைவனுக்குச் சேவலையும், மயிலையும் நேர்ந்து விடுவதும் மணிகளை வழங்குவதும், மாலைகளைச் சூட்டுவதும் வேடர்குல மக்களின் வழிபாட்டு முறையாகவும் நேர்த்திக் கடனாகவும் இருந்தமையைக் கண்ணப்பர் புராணம் உணர்த்துகின்றது. மேலும், முருகக் கடவுளின் பொருட்டாக குரவை என்னும் கூத்தினை நிகழ்த்துவதும் வேடவர்களின் குலவழக்கமாக இருந்துள்ளது. இதனை,
“வாரணச் சேவலோடும் வரிமயிற் குலாங்கள் விட்டுத்
தோரண மணிகள் தூக்கிச் சுரும்பணி கதம்பம் நாற்றிப்
போரணி நெடுவே லோற்குப் புழ்புரிகுரவை தூங்க” (10)
என்னும் பாடல்வரிகள் விளக்குகின்றன.
தானங்கள்
திண்ணன் பிறந்தது அறிந்த வேடர் குலமக்கள் முத்துக்களையும், மணிகளையும் தானமாகப் பலருக்கும் வழங்குகின்றனர்.
“கரிப்படு மருப்பின் முத்தும் கழைவிளை செழுநீர் முத்தும்
பொருப்பினின் மணியும் வேடர் பொழிதரு மழையே” (11)
குழந்தைபேறு நிகழ்தலின் காரணமாக வேடர் குல மக்கள் மகிழ்ந்து மணிகளையும் முத்துக்களையும் தானங்களாக கொடுக்கும் வழக்கம் இருந்தமையை அறிய முடிகிறது.
காப்பிடுதல்
குழந்தை பிறந்ததும் அதற்குப் பெயரிட்டுக் காப்பிடும் வழக்கம் வேடர் குல மரபாக இருந்துள்ளது. திண்ணனுக்குக் ‘காப்பிடுதல்’ என்னும் குலமரபுபடி வேம்பிழைகளைக் கோத்து அரைஞாண் கயிற்றில் இடுதலும் இளந்தளிர்களைக் கோத்து அணிவித்தும் காப்பிடுகின்றனர். நோய்களில் இருந்து குழந்தையைக் காக்கும்படி இறைவனிடம் வேண்டிக் கொண்டு செய்யும் குலமரபாக காப்பிடுதலைக் காண முடிகின்றது. இதனை,
“விரையிளந்தளிருஞ் சூட்டி வேம்பிழைத் திடையே கோத்த
அரைமணிக் கவடி கட்டி அழகுற வளர்க்கும் நாளில்” (12)
என்னும் பாடல் அடிகள் காட்டுகின்றன.
எயிற்றுத்தாலி
வேடர் குலத்தினர் அவர்களது தொன்று தொட்டு வரும் குலமரபுகளுக்கு ஏற்ப குழந்தைகளுக்குப் புலியின் பற்களைக் கோத்து மாலையாக இடுதல் என்னும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். திண்ணனுக்கும் இத்தகைய தாலி என்னும் அணியை அணிவித்தனர். இவ்வணி முள்ளம் பன்றியின் முற்களையும் புலியின் பற்களையும் கொண்டதாக அமைக்கப்படுதல் மரபு என்பதை,
“மூண் டெழு சினத்துச் செங்கண் முளவமுள் அரிந்து கோத்தி
நண்டாம் எயிற்றுத்தாலி நலங்கினர் மார்பில் தூங்க” (13)
என்னும் பாடல் வரிகள் உணர்த்துகின்றன.
விற்பயிற்சி
வேடர் குலமக்கள் தமது குழந்தைகள் வளர்ந்து ஐந்தாண்டுகளைக் கடந்த நிறைவில் விற்பயிற்சியளிப்பதைக் குலவழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை, கண்ணப்பர் புராணம் காட்டுகின்றது. விற்பயிற்சி அளிப்பதினை ஒரு பெரும் விழாவாக வேடர்கள் எடுத்துள்ளனர்.
* விற்பயிற்சி செய்தியை உடுக்கையடித்துத் தெரிவித்தல் (கண்ணப்பர் - 29-1-3)
* ஊர்மக்கள் மலைவிளை பொட்களைக் கொண்டு வந்து கொடுத்து வாழ்த்துதல் (கண்ணப்பர் - 30-1-4)
* குலமக்கள் அனைவருக்கும் விருந்து அளித்தல் (கண்ணப்பர் - 34-1-4)
* தேவராட்டி குழந்தைக்கு அச்சதைச் சார்த்துதல் (கண்ணப்பர் - 66-1-4)
போன்ற குலமரபு வழக்கங்களைச் செய்து திண்ணனுக்கு விற்பயிற்சி அளிக்கப் பெற்ற செய்திகளைக் கண்ணப்பர் புராணத்தில் காண முடிகின்றது.
வேட்டைத் தொழில் மரபுகள்
வேட்டைக்குச் செல்லும் வேடர்கள் பின்பற்றும் பல்வேறு குலமரபுச் செய்திகள் கண்ணப்பர் புராணத்தில் இடம் பெற்றுள்ளமையை அறிய முடிகின்றது. அவை,
* வைகறைப் பொழுதில் வேட்டைக்குச் செல்லுதல் (கண்ணப்பர் - 56:3)
* வேட்டை நாய்களை உடன் கொண்டு செல்லுதல் (கண்ணப்பர் - 3:1)
* வேட்டைக்கான வலைகள், வார்கள் போன்ற கருவிகளைக் கொண்டு செல்லுதல் (கண்ணப்பர் 70:1-2)
* பொய் விலங்குகளையும் பழக்கிய விலங்குகளையும் கொண்டு செல்லுதுல் (கண்ணப்பர் 71:2-4)
* வேட்டையில் அறநெறிகளைச் சிலவற்றைப் பின் பற்றுதல் (கண்ணப்பர் 86:1-4)
வேட்டையின் போது, வேடர்கள் பின்பற்றிய அறநெறிகள் வேடர்குல மக்களின் கருணை, இரக்கம் போன்ற உயரிய நெறிகளைப் பண்புகளைக் காட்டுகின்றன. விலங்குகளின் குட்டிகள், யானைக் கன்றுகள் கர்ப்பமுற்ற விலங்குகள் போன்றவற்றை வேட்டையாடாது விட்டு விடும் குலவழக்கம் வேடர்களிடம் இருந்தமையை அறிய முடிகிறது. வேட்டையாடி விலங்குகளின் ஊனை உண்ணும் மக்களான வேடர் குலத்தினர் சில அறநெறிகளையும், நீதிகளையும் பின்பற்றி வாழ்ந்தனை அவர்களது செம்மைத் திறத்தைக் காட்டுகின்றது.
வேடர்களின் பண்பாட்டுக் கூறுகள்
மனித இனத்தின் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் நம்பிக்கைள், வழக்கங்கள், நிறுவனங்கள் அனைத்தையும் பண்பாடு என்பர். ஒரு சமுதாயத்தில் உள்ள மக்கள் வாழ்க்கையை நடத்தும் முறையே பண்பாடாகும். (கலைக் களஞ்சியம்: 6:690-692) என்னும் கருத்துக்களைப் பண்பாடு என்பதன் விளக்கமாக கொள்ளலாம். கண்ணப்பர் புராணத்தில் வேடர்குல மக்களின் வாழ்க்கை முறைகள், பண்பாட்டுக் கூறுகள் பலவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை,
* ஆண் ஒரு பெண்ணை மனைவியாகக் கொண்டு அவளோடு வாழ்க்கை நடத்துதல்.
(கண்ணப்பர் - 8:3-4)
* புலியின் பற்களைக் கோர்த்த தாலி அணிதல்
(கண்ணப்பர் - 8:2-3)
* சிறுவர் சிறுமியர்க்கென தனித்தனியான விளையாட்டுகளைப் பின்பற்றுதல்
(கண்ணப்பர் - 41-4)
* இறை நம்பிக்கைகள்
(கண்ணப்பர் - 10:3-4)
* உணவு முறைகள்
(கண்ணப்பர் - 6:4-1)
* அணிகலன்கள்
(கண்ணப்பர் - 20:1-4)
வேடர் குலமக்கள் குறிஞ்சி நிலப்பகுதியில் வாழும் சமூகத்தினராக இருந்தனர். அவர்கள் சிறுசிறு குழுக்களாக வாழ்ந்தனர். அவர்களது குழுவிற்கு வலிமையும் உரனும் மிக்க ஒருவனைத் தலைவனாகக் கொண்டிருந்தனர். ஆண்கள் தனக்கென ஒரு துணையைத் தேர்ந்து அவளோடு இல்லறம் நடத்தினர். புலிப்பற்களை மங்கல நாணாக அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். சிறுவர்கள் புலி, யானை போன்றவற்றின் குட்டிகளோடு கன்றுகளோடும் விளையாடுவதையும் சிறுமிகள் மான் பிணைகளோடு விளையாடுவதையும் அருவி நீராடுதலையும் விளையாட்டுகளாகக் கொண்டிருந்தனர். மலைநாட்டு மக்களான வேடர்கள் முருகப் பெருமானையே வழிபடு கடவுளாகக் கொண்டனர். குலத்தில் வயதில் மூத்தவளான மூதாட்டி ஒருத்தியைத் தேவராட்டியாகக் கொண்டிருந்தனர். வேடர்கள் ஆறலைத் தொழியையும் ஆனிரைகவர்தலையும், வேட்டையாடுதலையும் தொழில்களாகக் கொண்டிருந்தனர். பன்மணிச் சதங்கை, காப்பு, அரைஞான் தண்டை போன்றவற்றை ஆண்களும், மயில் தோகை, குழை எயிற்றுத் தாலி, போன்றவற்றைப் பெண்களும் அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். தொண்டகப்பறை, கொம்பு, உடுக்கை, வேய்குடல் போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தும் திறன் பெற்றிருந்தனர். தேன் நறவு, ஊன், பழங்கள், தானியங்கள் முதலியவற்றை உணவாகக் கொண்டனர். குழுவின் தலைவன் கூட்டத்தினைக் காக்கும் கடமை பெற்றவனாக இருந்தான் போன்ற வேடர்குல வாழ்க்கை முறைகளும் பண்பாட்டுக் கூறுகளும் கண்ணப்பர் புராணத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. கண்ணப்ப நாயனர் புராணம் வேடர் குல மக்களின் வாழ்வியலைக் காட்டும் இலக்கிய ஆவணமாகத் திகழ்கின்றது. வேடர்கள் சிறு குழுக்களாகவும் குழுவிற்கு ஒரு தலைவனையும் கொண்டு தமக்கென சில அறநெறிகளை வகுத்துக் கொண்டு வாழ்ந்தனர் என்பதை அறிய முடிகிறது. முருகனை வழிபடு கடவுளாகக் கொண்டிருந்தமையும் இறைபொருட்டாக குரவைக் கூத்து, வெறியாடல் போன்ற நிகழ்வுகளைப் பின்பற்றி வந்த குலமரபுகளும் கண்ணப்பர் புராணத்தில் பதிவாகியுள்ளன.
பெரியபுராணம் கூறும் பண்பாட்டு மரபுகள்
பெரியபுராணம் தமிழ்நாட்டின் பண்பாட்டை பக்தி அடிப்படையில் விளக்குகிறது. அடியவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் உலக இயல்புக்கு ஒத்தும் ஒவ்வாமலும் இருந்தபோதிலும் அவை பக்தியும் பண்பாடும் கலந்தவை என்பது நூல் முழுவதும் இழையோடுகின்றது.
பண்பாடும் சமுதாயமும்
மனிதன் ஒரு சமுதாய விலங்கு, அவன் கூடிவாழப் பிறந்தவன். எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ இயலாது. வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒருவர் உதவி மற்றவர்களுக்கும் தேவைப்படுகிறது. இவ்வாறு கூடிவாழும் வாழ்க்கையே சமுதாயம் எனப்படுகிறது. “கூட்டமாகக் கூடிவாழும் வாழ்க்கை மனிதனுக்கு இன்றியமையாத ஒன்று, மனிதன் கூட்டமாகக் கூட வாழ முற்பட்ட போது சிற்றூர்கள், பேரூர்கள், சிறு நகரங்கள் ஆகியவை திட்டமிடப்பட்டன” என்பர் கேரல் அந்நோவியல். இவை மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்டன. எனவே, மனிதப்பண்பாட்டின் அடிப்படையிலேயே சமுதாயம் உருவாக்கப்பட்டது. ஆகவே, பண்பாடு இல்லாமல் சமுதாயம் இல்லை.
மக்களின் பொதுப் பண்பாடு
சோழ நாட்டு மக்களைப் பற்றித் தொடக்கத்தில் திருநாட்டுச் சிறப்பில் அறிமுகப்படுத்திப் பாடுகிறார் சேக்கிழார். அதில் பண்பாடு முதலிடம் பெறுகிறது. வற்றாத நீர் பெருகிப் பாயும் காவிரியாறு பொங்குத் தீம்புனலை எங்கும் பொழிந்து வளத்தைப் பெருக்குகின்றது. மலைத் தலைய கடற்காவிரி, ஆறானது எந்த நாளிலும் வற்றாமல் நீர் பெருகிப் பாய்வதால் சோழநாடு நீர் நாடு எனப் பெயர் பெற்றுத் திகழ்கின்றது. நீர்வளம் நிறைந்தமையின் பல்வகை வளங்களும் நிறைந்து மலைநிகர் மாடங்கள், வீதிகள் தோறும் எழுந்து பொலிகின்றன. அம்மாடங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையை,
“அரசுகொள் கடன்கள் ஆற்றி
மிகுதி கொண் டறங்கள் பேணிப்
பரவரும் கடவுள் போற்றிக்
குரவரும் விருந்தும் பண்பின்
விரவிய கிளையும் தாங்கி
விளங்கிய குடிகள் ஏங்கி
வனபுரை மாடம் நீடி
மலர்ந்துள பதிகள் எங்கும்” (14)
என்பது போன்ற பாடல்களின் வாயிலாக மக்களின் பண்பாட்டு நெறிமுறைகளை எடுத்துரைக்கின்றார்.
அடியார் பெருமக்கள் பண்பாடு
அக்காலத்தில் திருவாரூர் பெருஞ் சிறப்புப் பெற்றிருந்தது. அச்சிறப்புக்குக் காரணம் தில்லையில் நடனம் புரியும், எல்லையற்ற பரம்பொருள் திருவாரூரிலும் தங்கி மிகத் தொன்மையான காலம் தொட்டு ஆனந்த நடனம் புரிந்து வருவது தான். இறைவன் தில்லையில் ஆடிய நடனம் முந்தியதரி, திருவாரூரில் எழுந்தருளி ஆடிய திருநடனம் முந்தியதரி என்ற ஐயம் அப்பரடிகளுக்கே ஏற்பட்டு விட்டது. இதனை,
“பாடகம்சேர்மெல்லடிநற் பாவை யாரும்
நீயும் போய்ப் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில்லாங்கி எய்த நாளோர்
விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற
..... நாளோ” (15)
என்று தொடரும் அவரது பாசுரத்தால் அறியலாம். திருவாரூர் பூங்கோயிலுக்குத் தேவாசிரிய மண்டபம் பெருமை தரும் வகையில் அமர்ந்திருந்தது. அம்மண்டபத்தில் அடியார் பெருமக்கள் கூட்டமாக அமர்ந்திருந்தனர். அவ்வடியார்களின் பெருமை பேசுதற்கரியது. அத்திருக் கூட்டத்தினரின் அகப்பண்பாட்டினைச் சேக்கிழார்.
“கோதுஇலாத குணப்பெருங் குன்றனார்,
பூசுநிறு போல் உள்ளம் புனிதர்கள்,
ஈர அன்பினர்,
கைத்திருத் தொண்டு செய் கடப்பாட்டினர்” (16)
என்று பாராட்டுகிறார்.
‘வீடும் வேண்டாத விறல்’ என்பது அகப்பண்பாட்டின் உச்ச நிலை எனலாம். வீடு அடைதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அடியார்கள் ஆண்டவனை வழிபடுவர். இவ்வடியார்களோ வீடு அடைதலை துறக்கும் மனப்பண்பாடு உடையவராகக் காட்சியளிக்கின்றனர். திருத்தொண்டர் புராணத்துள் பேசப்பெறும் தொண்டர்கள் பிறவா நிலையாகிய வீட்டின்பத்தை விரும்பாது மன்பதைக்குத் தொண்டாற்றி மகிழ்தலையே விரும்பி நின்றனர்.
“மனிதப் பிறவியும் வேண்டுவதே
இந்த மாநிலத்தே” (17)
என்று பாடுவர் திருநாவுக்கரசர்.
நாவரசின் பண்பாடு
பெரியபுரணாத்தைப் பொறுத்தவரை சமணர்களை எதிர்த்து முதன்முதலில் செய்யப்பட்டவர் நாவரசரே என்பது அறியப்படுகிறது. நாவரசர் சைவ-சமணப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல்வர் என்ற போதிலும் அவர் சமணர்களை எதிர்த்து போராடவோ, தண்டனை தரவோ முயலவில்லை. இது அவரது குருதியோடு கலந்த தமிழர் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாகும். பல்லவ மன்னன் சமணர்களின் தீய செயல்களையும், தவற்றையும் உணர்ந்தான். அவர்களது பள்ளிகளையும், பாழிகளையும் இடித்துக் கொண்டு வந்து கோயில்களைக் கட்டினான். அந்நிலையில் நாவரசர் எண்ணியிருந்தால் சமணர்களைப் பழிவாங்கி இருக்கலாம். பழிவாங்க வில்லை என்பதை அறியலாம். போரில் ஈடுபடும் தலைவர்கள் தான் தண்டனை வழங்குவதைச் செய்ய வேண்டும். திருநாவுக்கரசர் தம்மைத் தொண்டராக கருதினாரேயன்றித் தலைவராகக் கருதவில்லை. மன்னன் சைவ சமயத்தைத் தழுவிச் சமண்பாழிகளை இடித்து பொருள்களைக் கொண்டு வந்து சிவன் கோயில் கட்டியதற்காக மகிழவில்லை. அவன் செயலைப் போற்றியதாகவோ ஏற்றுக் கொண்டதாகவோபெரியபுராணம் பாடவில்லை. இதற்குக் காரணம் பகைவனுக்கும் அருளும் பண்பாடேயாகும் என்பது அறியத்தக்கது.
உயிருக்கு உயிர் அளிக்கும் சமுதாயப் பண்பாடு
தாம் கூறிய வார்த்தைகளிலிருந்தும் தவறாமல் அதைக் காப்பாற்றுவதற்காகத் தம் உயிரையும் துறந்த சான்றோர்களைப் பற்றி தமது புராணத்துள் கூறுகின்றார் சேக்கிழார். பண்புடையாளர் இயல்பைக் கூறும்போது தம் இயல்பைக் காப்பதற்காக அவர்கள் உயிரையும் கொடுப்பார் என்று புறநாநூற்றுப் பாடலொன்று கூறுகின்றது.
“துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்” (18)
தம் பெருமை குன்ற நேருமாயின் அதன்பின் உயிர் வாழ்தல் இழிந்தது. உயிர்துறப்பதே பெருமை என்பது தமிழர் கோள்,
“மருந்தோ மற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்து விடத்து” (19)
என்ற குறள் இதனை உணர்த்தும். இப்பண்பாடு 12-ஆம் நூற்றாண்டில் நிலவியது என்பதைப்பெரியபுராணம் புலப்படுத்துகிறது.
தனிமனிதப் பண்பாடு
மக்கள் கூடி வாழ்வது தான் சமுதாயம். ஒருவர் உதவி மற்றவர்க்கு எந்த நிலையிலும் தேவைப்படுகிறது. அந்நிலையில் ஒரு மனிதன் பிறர்க்கு உதவி வாழ வேண்டுமே தவிரத் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பது பண்பாடாகாது.
பண்பாட்டின் முதிர்ச்சி
திருப்பூந்துருத்தி அருகில் சம்பந்தர் சிவிகையில் வரும் போது நாவரசர் ’தாமும் உடல் கொண்டு காங்குகவன்யான்’ எனக்கூறி அச்சிவிகையைத் தாங்கு வாருடன் தாமும் தாங்கிச் சென்றார். சிவிகையில் அமர்ந்திருந்த சம்பந்தர், அப்பர் எங்குற்றார் எனக் கேட்க அதுகேட்டு உருகிய அப்பர். ’உம் அடியேன் உம் அடிகள் தாங்கி வரும் பெருவாழ்வு எய்தப்பெற்று இங்குற்றேன்’ என்று கூறினார். பிள்ளையார் உடனே கீழிறங்கி அவரை வணங்கினார் என்று சேக்கிழார் விளக்குகின்றார். இச்செயல் பண்பாட்டின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
இல்லறப் பண்பாடு
தமிழர் அன்று முதல் இன்று வரை கண்ட வாழ்வியல் நெறி இல்லறம். ஒரு குடும்பத்தில் கணவன் - மனைவி இருவரும் கருத்து அன்பு கலந்து இன்ப வாழ்வு நடத்துவதால் தான் இல்லறம் சிறக்கிறது. கண்கள் இரண்டும் ஒரு பொருளை நோக்கும் போது ஓரிடத்தில் அவற்றின் பார்வை குவிவது போல இருவர் கருத்தும் ஒரே தன்மையாக அமைய வேண்டும். இதனை,
“காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதல் ஒருகருமம் செய்யவே - ஒது கலை
என் இரண்டும் ஒன்றும்மதி என்முகத்தாய் நோக்குமால்
காண் இரண்டும் ஒன்றையே காண்” (20)
என்ற சிவப்பிரகாச பாடல் புலப்படுத்தும். இவ்வாறு தவறு ஏதும் இன்றி பிறரால் பழிக்கப்படாமல் நடத்தும் இல்லறமே துறவறத்தை விடச் சிறந்தது என்பதை,
“அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல்லாயின் நன்று” (21)
என்ற குறள் வலியுறுத்துகிறது. இல்லறத்தை நல்லறமாகக் கொண்டு தானும் வாழ்ந்து பிறரும் வாழ உதவிய இல்வாழ் மாந்தர்களைப் பற்றிபெரிய புராணம் புலப்படுத்துகின்றது.
முடிவுரை
கரடுமுரடான நிலத்தைச் சீர்த்திருத்திப் பண்படுத்துவது போலக் கருத்து வளமற்ற அறியாமை நிறைந்த உள்ளத்தைப் பண்படுத்துவNது பண்பாடு என்பதை இவ்வியல் தெளிவுப்படுத்துகிறது. திருத்தொண்டர் புராணத்தில் பேசப்படும் அடியவர்கள் வீடுபேற்றை விரும்பாது இறைவனுக்குத் தொண்டாற்றி மகிழ்வதையே விரும்புவதாகச் சேக்கிழார் பாடுவiதையும் வைணவ ஆழ்வார்கள் பாடலிலும் இக்கருத்தைக் காண முடிகிறது என்பதையும் இவ்வியல் வெளிப்படுத்தியுள்ளது.
அடிக்குறிப்புகள்
1. தொல்காப்பியம், நூ - 46.
2. நச்சினார்க்கினியர் உரை, ப - 70.
3. பெரியபுராணம் மூலம், ப - 35.
4. மேற்படி, ப - 70.
5. மேற்படி, ப - 80.
6. திருக்குறள், குறள் - 116.
7. பெரியபுராணம் மூலம், ப - 80.
8. மேற்படி, ப - 81.
9. மேற்படி, ப - 76.
10. மேற்படி, ப - 94.
11. மேற்படி, ப - 96.
12. மேற்படி, ப - 98.
13. மேற்படி, ப - 105.
14. மேற்படி, ப - 120.
15. மேற்படி, ப - 140.
16. மேற்படி, ப - 80.
17. திருநாவுக்கரசர் தேவாரம், ப - 86.
18. பெரியபுராணம் மூலம், ப - 99.
19. திருக்குறள், குறள் - 120.
20. சிவப்பிரகாச சாமிகள், ப - 110.
21. திருக்குறள், குறள் - 36.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.