பக்தியிலக்கியக் காலத்தில் சிற்றிலக்கியங்கள் பரவலாகத் தோன்ற ஆரம்பித்தன. கைக்கிளைத் துறையும், பாடாண் திணையும் ஒருங்கமைத்து நாயக நாயகி மனோபாவனையில் தோன்றிய பல பாடல்கள் அகப்பொருள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்குக் காரணமாயின. பெரியாழ்வார் பாடிய கண்ணன் தாலாட்டுப் பாடல்கள் பிற்கால பிள்ளைத்தமிழ் வளர்ச்சிக்கு எவ்வாறு காரணமாக அமைந்தன என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
”குழவி மருங்கினும் கிழவதாகும்”
(தொல். பொருள். நூற்பா -84)
என்று தொல்காப்பியர் பிள்ளை பருவம் முடிவையும் முதுமை பருவம் வரைவையும் சிறப்பாகச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார்.
புறநானூறு பிள்ளைத் தமிழ்
“குழவி யிறப்பினும் ஊன்அடி பிறப்பினும்” (புறம் -74)
இவர் வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிக் கூறினாலும் குழவி என்ற சொல்லை தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாண்டியன் அறிவுடைநம்பி இவர் அரசர் மரபைச் சார்ந்தவரானாலும் குழந்தைப்பேற்றின் அருமையை தன் பாடலில் கூறியிருப்பது சிறப்புக்குறியதாகும்.
"படைப்பு பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் கிடைப்படக்
குறுகுறு நடந்து சிறகை நீட்டி
இட்டுந்தொட்டும் கவ்வியும் துழந்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழ நானே" (புறம் - 188)
இட்டும் தொட்டும் கவ்வியும், குழந்தை உணவைக் களைத்துச் சாப்பிடும் நிகழ்வைக் காணப் பெற்றோர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார். மேலும், இப்பாடலை ஒற்றுமைப்படுத்தி திருவள்ளுவர் கூறியிருப்பது பிள்ளைத்தமிழ் வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவுள்ளன.
திருக்குறள் பிள்ளைத் தமிழ்
"அமிழ் தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளவிய கூழ்" (குறள்-64)
தம் பிள்ளைகளுடைய சிறுகையால் அளாவப்பட்ட உணவு அமிழ்தத்தைக் காட்டிலும் பெற்றார்க்கு இனிமையாக இருக்கிறது என்கிறார். மேலும்,
"குழல் இனிது யாழ் இனிது என்பதாம் மக்கள்
மழலைச் சொல் கோளா தவர்" (குறள்-66)
தம் மக்களுடைய குதலைச் சொற்களை கேளாதவர்கள் குழலிசை இனிது யாழிசை இனிது என்று சொல்லுவர் என்று வள்ளுவர் பிள்ளைப் பருவத்தின் சிறப்புகளை எடுத்துரைத்துள்ளார். இனி, பெரியாழ்வார் பாடல்களில் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட சில பாடல்களையும் பருவங்களையும் கீழ்க்கண்ட பாடல் மூலம் காணலாம்.
வைணவ இலக்கியங்களில் பிள்ளைத்தமிழ்
பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள் பெரியாழ்வார் பிள்ளைத் தமிழ் எனப் போற்றப்படுகின்றன. பெரியாழ்வாரின் மகளான ஆண்டாள் பாடிய பாசுரங்கள் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களாக தோன்றுவதற்கு வழிகாட்டியாக அமைந்தன எனலாம். ஆண்டாள் பிள்ளைத்தமிழில் சிற்றில் இழைத்தல் தொடங்கும் பதிகத்தால் சிற்றில் சிதைத்தலைக் கூறினாள். பெரியாழ்வார் தன் மகளான ஆண்டாள் சிறுவயதில் சிற்றில் இழைக்காமல் மணலில் சங்கு, சக்கரம் முதலியன வரைவது கண்டு மகிழ்வார் இதனை,
”பொங்கு வெண் மணற்கொண்டு சிற்றிலும் முற்றத் திழைக்கலுறில்
சங்கு, சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்க லுறாள்"( பெரியாழ்வார் திருமொழி, பா..288)
என்ற பாசுரத்தால் அறியலாம். மேலும் தன் சிறுவயது முதல் கண்ணன் மேல் காதன்மை கொண்ட ஆண்டாளின் அன்பை உணரலாம். இத்தகைய சிற்றில் இழைத்தல் அனுபவமே சிற்றில் சிதைக்காமை வேண்டும் என்ற மூன்றாம் திருமொழியாய் அமைந்தது எனலாம். ஆய்ச்சியர்கள் சிற்றில் இழைத்த தன்மையை,
"இன்று முற்றும் முதுகுநோவ
இருந்திழைத்த இச் சிற்றிலை" (நாச்சியார் திருமொழி, பா.12)
என்றும்,
"வண்டல் நுண்மணல் தெள்ளியாம்
வளைக் கைகளாற் சிரமப்பட்டோம்" (நாச்சியார் திருமொழி, பா.12)
என்றும் குறிப்பிடக் காணலாம்.
சிற்றில் இழைப்பவர்கள் யாவரும் சிறுமியர் என்ற தன்மையை
"முற்றிலாத பிள்ளைகளோம்" (நாச்சியார் திருமொழி, பா.12)
என்ற தொடராலும் அறியமுடிகின்றது.
இத்தகைய சிற்றில் என்ற பிள்ளைத்தமிழ் கூறு பிற்காலத்தில் முழுமையான ஒர் இலக்கிய வகையாக உருகொண்ட போது ஆண்டாள் பிள்ளைத்தமிழுக்குரிய தாய் மாறியது ஈண்டு எண்ணத்தக்கதாகும்.
காப்புப் பருவம்
தாலாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டும் பருவம். குழந்தையின் எட்டாம் மாதத்தில் நடக்கும் நிகழ்ச்சி. தால் + ஆட்டு = தாலாட்டு. தாலு + நாக்கு, நாக்கை அசைத்து பாடும் பாடல் ஆகையால் தாலாட்டு என்று பெயர்பெற்றதாகும். கண்ணனையே குழந்தையாக எண்ணிப் பாடப்படும் தாலாட்டு என்பதால் திரு என்னும் சிறப்புத் தந்து திருத் தாலாட்டு என்கிறார் பெரியாழ்வார்.
"மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச்சிறு தொட்டில்
பேணி உனக்குப் பிரமன்விடு தந்தான்
மாலக்குறளனே தாலேலோ வையம் அளந்தானே தாலேலோ" (பெரியாழ்வார் திருமொழி. பா.44)
வாமனன் என்னும் குறுகிய வடிவம் எடுத்தவனே! உலகை அளந்தவனே! மிகவும் தூய்மையான தங்கத்தால் செய்யப்பட்டது. அந்த அழகான சிறுதொட்டில் மாணிக்கக் கற்களும் வயிரக்கற்களும் இடையிடையே பதிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட தொட்டிலைப் படைப்புக் கடவுளாகக் கருதப்படும் பிரம்மதேவன் உனக்குத் தந்தான் தாலேலோ என்று பெரியாழ்வார் பாடுவது முதன்முதல் பிள்ளைத் தமிழ் தோன்றுவதற்கு ஊன்றுகோலாய் இவர் பாடல் இருப்பது புலப்படுகிறது.
அம்புலிப் பருவம்
அம்புலிப்பருவம் - குழந்தையின் பதினாறாம் மாதத்தில் நிகழ்வது பதினெட்டாம் மாதத்தில் நிகழும் குழந்தையின் செயல்கள் என்று கூறுவதும் உண்டு. அம்புலி - நிலவு சந்திரன் அம்புலி என்னும் சொல்லும் சந்திரன் என்னும் சொல்லும் சங்க இலக்கியங்களில் பயின்ற வராத சொற்களாகும். திங்கள் (புறம் 112) என்னும் சொல்லும், மதியம் காட்டி (புறம் -160) என்னும் சொல்லும் நிலவைக் குறிக்கும் பழைய சொற்களாகும். பெரியாழ்வார் காலமாகிய கி.பி.8ஆம் நூற்றாண்டில் அம்புலி, சந்திரன் என்னும் சொற்கள் புழக்கத்தில் வந்துவிட்டன.
“தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்ப்
பொன்முகக் கிண்கிணியார்ப்பப் புழுதி யளைகின்றான்
என் மகன் கோவிந்தன் கூத்தினை இளமா மதீ
நின் முகம் கண்ணுள வாகில் நீ இங்கே நோக்கிப்போ” (பெரியாழ்வார் திருமொழி. பா.54)
என் மகன் கோவிந்தனாகிய கண்ணன் தனது நெற்றியிலுள்ள சுட்டி என்னும் அணிகலன் அசையத் தவழ்ந்து செல்லுகிறான். பொன்னால் செய்யப்பட்ட கிண்கிணி என்னும் தனது அணிகலன் ஓசையிடப் புழுதியைத் துழாவுகிறான். இளம் நிலவே உனக்குக் கண்கள் இருக்குமானால் இங்கே செய்யும் கூத்தினைப் பார்த்துவிட்டுப் போ என்று பெரியாழ்வார் அம்புலியாகிய நிலவிடம் பேசுவது போல் இப்பாடலை இயற்றியுள்ளார்.
செங்கீரைப் பருவம்
செங்கீரைப்பருவச் செயல்கள் குழந்தையின் ஐந்தாம் மாத்த்தில் நிகழ்பவை ஆகும். செம்மை + கீரை =செங்கீரை, கீர்+ ஐ =கீரை, கீரு - சொல் சிறந்த சொற்களைச் சொல்லும் பருவம். செங்கீரை ஆடுதல் - ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றிக் கொள்ளுதல் குழந்தை தலை நிமிர்ந்து முகம் அசைய ஆடுதல் ஆகும்.
“உய்ய உலகு படைத்து உண்ட மணி வயிறா
ஊழிதோ றூழிபல ஆலினிலை யதன் மேல்
பைய உயோகுதுயில் கொண்ட பரம்பரனே
பங்கய நீள் நயளத்து அஞ்சன மேனியனே
செய்யவள் நின்னகலம் சேமமெனக் கருதிச்
செல்வுபொழி மகரக்காது திகழ்ந்திலக
ஐய எனக்கு ஒரு கால் ஆடுக செங்கீரை
ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே” (பெரியாழ்வார் திருமொழி, பா.64)
அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்காக உலகைப் படைத்து பின்பு மீண்டும் ஊழிக் காலத்தில் படைத்த அனைத்தையும் தன்னுள் அடங்கிய அழகிய வயிற்றை உடையவனே! ஆலமரத்தின் ஓர்இலையின் மேல் பல ஊழிக் காலங்களுக்கு மெல்லிய யோகநிலை என்னும் உறக்கம் கொள்ளும் முழுமுதல் பொருளே! தாமரை மலர் போன்ற செந்நிறம் கொண்ட நீண்ட கண்களையுடையவளே! கண்மை போன்ற கரியநிறம் கொண்டவனே! செந்தாமரை மலரில் வீற்றிருக்கக்கூடிய இலட்சுமியானவள் உனது அகன்ற மார்பில் வாழ்வதே நன்று என்று கருதி இருக்கிறாள். தனது செல்வச் சிறப்பை உன் காதில் இருக்கக்கூடிய மரை குண்டலங்கள் அசையும்படி நீ செங்கீரை ஆடுவாயாக ஆயர்களின் போரிடும் காளையே ஆடுக என்று யசோதை கூறுவதுபோல் இப்பாடலை அமைத்துள்ளார் பெரியாழ்வார்.
சப்பாணிப் பருவம்
சப்பாணிப் பருவம் என்பது குழந்தையின் ஒன்பதாம் மாதத்தில் நிகழும் செயலாகும். சப்பாணி கொட்டுதல் குழந்தை தனது இரு கைகளையும் சேர்த்துக் கொட்டுதல் ஆகும். பாணி - இசைப் பாட்டாகும்.
“மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப மருங்கின்மேல்
ஆணிப் பொன்னால் செய்த ஆய் பொன்னுடையமணி
பேணிப் பவளவாய் முத்திலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி
கருங்குழல் குட்டனே சப்பாணி” (பெரியாழ்வார் திருமொழி, பா.64)
மாற்றுக்குறையாத பொன்னால் செய்யப்பட்ட மணிகள் பதிக்கப்பட்ட உடை இடுப்பில் காணப்படுகிறது. மாணிக்கப் பரல்கள் உள்ளீடாக இடப்பட்ட கிண்கிணி ஒலி செய்கிறது. பவளத்தில் சிவந்த நிறமுள்ள வாயில் முத்துப் பற்கள் காணப்படுகின்றன. கரிய தலைமயிர் உள்ள சிறு குழந்தையே! முன்பொரு சமயம் (மாவலி மன்னனிடமிருந்து அவனால் எள்ளும் நீரும் வார்க்கப்பெற்று நிலத்தில் கைகளால் சப்பாணி கொட்டுவாயாக என்று பெரியாழ்வார் பிள்ளைப் பருவங்களையும் அதன் சிறப்பியல்புகளையும் விரிவு செய்துள்ளார்.
முடிவுரை
பாட்டும், தொகையுமாய்க் கிடைக்கும் சங்க இலக்கியங்கள் பலவற்றுள் சிற்றிலக்கியங்களுக்குரிய இலக்கண, இலக்கிய மரபுகளைக் காணலாம். இவ்வகையில் உலா, தூது, மடல், குறவஞ்சி, கோவை, பாவை முதலியன தோன்றின. ஆண்டாள் பாடல்களில் பாவை, பிள்ளைத்தமிழ், தூது போன்ற சிற்றிலக்கியக் கூறுகள் அமைந்துள்ளன. பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள் பெரியாழ்வார் பிள்ளைத் தமிழ் எனப் போற்றப்படுகின்றன. பெரியாழ்வாரின் மகளான ஆண்டாள் பாடிய பாசுரங்கள் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களாக தோன்றுவதற்கு வழிகாட்டியாக அமைந்தன எனலாம். இவைகள் இறையனுபவ வெளிப்பாட்டிற்கும் துணை நிற்கின்றன. இவற்றுள் கைக்கிளைத் துறையும், பாடாண் திணையும் ஒருங்கமைந்து நாயக - நாயகி மனோபாவனையில் தோன்றிய பல பாடல்கள் அகப்பொருள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கும் ஆண்டாள் பாடிய பாசுரங்கள் பாவை, பிள்ளைத்தமிழ், தூது போன்ற சிற்றிலக்கிய வளர்ச்சிக்கும் வித்திட்டன. அதேபோல் பெரியாழ்வார் பாசுரங்களும் பிற்கால பிள்ளைத்தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்டன என்பதை இக்கட்டுரை எடுத்துரைத்தது.
துணைநூற்பட்டியல்
1. பரிமேலழகர்(உ.ஆ) திருக்குறள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1975.
2. திருவேங்கட ராமானுஜதாசன். த., நாலாயிர திவ்ய பிரபந்தம்,உமா பதிப்பகம், சென்னை-2012.
3. இளம்பூரணர்(உரை), தொல்காப்பியம் (பொருளதிகாரம்), கழக வெளியீடு, சென்னை.பதி.1967.
4. குருநாதன் (ப.ஆ), புறநானூறு, வடிவேல் பதிப்பகம், தஞ்சாவூர்-4. பதி.2003.
5. இணையத்தில் காண்க: http://naachiyaarthirumozhi.blogspot.com/
6. இணையத்தில் காண்க: http://www.dravidaveda.org/
7. இணையத்தில் காண்க: http://www.tamilvedham.org/%20
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.