தொல்காப்பிய களவுக்கால மெய்ப்பாடுகளின் முதற்கூறு (காட்சி) - ஓர் ஆய்வு
முனைவர் பீ. பெரியசாமி
தமிழ்த்துறைத் தலைவர்,
டி.எல்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு
முன்னுரை
மெய்ப்பாட்டியலில் அகத்திற்குரிய நூற்பாக்கள் பதினான்காகும். இவற்றுள் 62 அகத்திணை மெய்ப்பாடுகள் தொல்காப்பியரால் சுட்டப்பட்டுள்ளது. அவற்றுள் களவிற்கு உரிய மெய்ப்பாடுகளில் காட்சி எனும் முதற்கூறு, அகநானூற்றுப் பாடல்களில் எந்தெந்த இடங்களில் இடம் பெற்றுள்ளன என்பதை வெளிக்கொணர்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
களவுக்கால மெய்ப்பாடுகள்
களவென்றது தலைவன் தலைவி ஒழுகலாற்றினைத் தாயாரும் தம் ஐயரும் அறியாவாறு மறைத்தலாகிய அவ்வளவேயாம். தலைவனும் தலைவியும் நல்லூழின் செயலால் தாமே எதிர்ப்பட்டு உலகத்தார் அறியாது மறைந்தொழுகுதல் ஆகும். பிறர் அறியாமல் உளங் கலந்து பழகும் பெருங்கேண்மையாதலால் இக்களவு அறத்தின் பாற்பட்டது. இக்களவினை மறைந்தொழுக்கம், மறை, அருமறை என்ற சொற்களால் வழங்குவர். புதுமுகம் புரிதல் முதலாகக் கையறவு உரைத்தல் வரை இருபத்து நான்கு மெய்ப்பாடுகளைக் களவுக்கால மெய்ப்பாடுகளாகத் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். இவை களவுக்காலத்தில் தலைவியிடம் தோன்றும் மெய்ப்பாடுகளாகும். இம்மெய்ப்பாடுகள் சந்திப்பு முதல் புணர்ச்சி வரை 12 மெய்ப்பாடுகளும், புணர்ச்சிக்குப்பின் களவு வெளிப்படுவது வரை 12 மெய்ப்பாடுகளுமாகும். இக்களவொழுக்கம் பற்றி வ. சுப. மாணிக்கம் கூறுகையில், “களவொழுக்கம் தூயது; களவொழுக்கம் தீயது. களவுக் காதலர் மாசற்றவர், மணந்துகொள்ளும் உள்ளத்தினர், வெளிப்பட்ட பின்பும் வாழ்வர். கள்ளக்காதலர் தம்முள் அன்பற்றவர், மணம் என நினையா வஞ்சகர், வெளிப்படின் மாய்பவர், அல்லது மாய்க்கப்படுபவர்” (1) என்கிறார்.
தொல்காப்பியச் சமூகம் தந்தை வழிச் சமூகத்தின் தொடக்க நிலையாதலால், தாய்வழிச் சமூகத்தின் மிச்சசொச்சங்கள் எஞ்சியிருந்த நிலையையே களவு மணம் குறித்த தொல்காப்பியப் பாடல்கள் உணர்த்துகின்றன. தாய்வழிச் சமூகத்தில் பெண்ணுக்குப் புணர்ச்சி சுதந்திரம் இருந்தது. அந்த வழியிலேயே தங்களுக்கான துணையையும் பெண்கள் தேர்வு செய்து கொண்டனர். இந்த களவுக் காதல் தெய்வத்தன்மை வாய்ந்தது என்றும், அறத்தின் பாற்பட்டது என்றும் தொல்காப்பிய பொருளதிகாரப்பாடல் 89 கூறுகிறது. களவொழுக்கத்தினைச் சமுதாயத்தின் கண்கள் பார்த்துக் கொண்டிருக்காது. அது காதலர்களை துன்பத்தில் ஆய்த்துதலில் குறியாய் இருந்தது. ஆகவே, களவுக் காதலுக்குச் சங்ககாலத்திலேயே புகலிடமில்லாமலே இருந்தது. ஆதலாலே தான் வெறியாட்டு, இற்செறிதல், உடன்போதல் போன்றவையெல்லாம் நடந்தேறியுள்ளன. இதற்கு வலுசேர்க்கும் விதமாய், “களவு நீடிப்பின் வெறியாட்டு, நொதுமலர் வரைவு முதலான பல தொல்லைகளுக்கு இடம் ஏற்படும் என வருவது அறிந்த அறிவுடைத்தோழி களவென ஒன்று நடந்தது என்பது வகையில் மணத்தை முடித்து வைக்கப் பாடுபடுவாள்” (2) எனத் தமிழண்ணல் கூறியுள்ளார்.
சந்திப்பு முதல் புணர்ச்சி வரையிலான மெய்ப்பாடுகள்
களவுக்கால மெய்ப்பாடுகளில், சந்திப்பு முதல் புணர்ச்சி வரையில் நடைபெறும்; பன்னிரண்டு மெய்ப்பாடுகளை மூன்று நிலைகளாக அடுக்கலாம். அவை, காட்சி முதல் நிலைக்கண் நிகழும் மெய்ப்பாடுகள், வேட்கை இரண்டாம் நிலைக்கண் நிகழும் மெய்ப்பாடுகள், புணர்ச்சி மூன்றாம் நிலைக்கண் நிகழும் மெய்ப்பாடுகள் என்பனவாகும்.
காட்சி
முதலில் தலைவனும் தலைவியும் எதிர்ப்படும்போது தலைவியின் உள்ளத்தில் எழும் காதல் முதற்குறிகளை உணர்த்துவது இது. மேலும், இருவரும் புதிதாக எதிர்ப்பட்டதும் தலைவியின் உள்ள உணர்ச்சியால் தோன்றும் அம்மெய்ப்பாட்டுக் குறிப்பு (முதல்நிலை மெய்ப்பாடுகள்) நான்கினையும்,
“புதுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநய மறைத்தல், சிதைவுபிறர்க் கின்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப” (மெய்.13)
என ஆசிரியர் கூறியுள்ளார். தலைவனும் தலைவியும் முதல் சந்திப்பில் அன்புறும் போது, தலைவியின் உள்ளத்துத் தோன்றும் காதலின் வெளிப்பாடு புதுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நகுநய மறைத்தல், சிதைவு பிறர்க்கின்மை என நான்கு மெய்ப்பாடுகளாக வெளிப்படுகின்றன. இவற்றின் அமைப்பு முறையினை, “அவத்தை என்னும் வடச்சொல் உணர்வுநிலை என்னும் பொருளில் இங்கு வழங்குகின்றனது. காதலர் இருவர் தம்முன் கண்ட காட்சி முதலாக அவர்தம் உணர்வு நிலைகளைப் பத்து எனப் பகுத்துரைத்தல் மரபு. அவத்தை பத்தாவன; காட்சி, வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவவெல்லாம் அவையேபோறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பனவாம். இங்கு முதலவத்தை என்றது, தலைவனும் தலைவியும் எதிர்ப்படும் காட்சி விகற்பத்தை, முதற்காட்சியில் தலைவியின் குறிப்பினால் வரும் மெய்ப்பாடுகள் புகுமுகம் புரிதல் முதலிய நான்குமாகும்” (3) என்பர்.
புதுமுகம் புரிதல்
தலைமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது, நேருக்கு நேர் காதல் உணர்ச்சி ததும்புமாறு காணுவது, காதலர்கள் தனது மனக்குறிப்பை முகத்தில் வெளிப்படுத்துவது, தலைவனின் காதல் பார்வைக்குத் தலைவி மனம் இசைந்து தனது மனமும் கொண்ட முடிவை, விருப்பத்தை முகமலர்ச்சி என்ற உடல் மொழியால் தெரிவிக்கின்றாள். இரு மனமும் ஈர்க்கப்பட்டு இரண்டறக் கலக்கின்றன. விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவாக இது அமைகிறது. மன உணர்வுகளை முகத்தைப் போல் வெளிகாட்டும் திறமை வாய்ந்த கருவி வேறு எதுவும் இல்லை. இதனை, “இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவியிடம் தோன்றுவது இம்மெய்ப்பாடு. முதன் முதலில் தலைவனைச் சந்திக்கும்போது, ஒருவரை ஒருவர் நோக்கெதிர் நோக்குகின்றனர். தலைவன் எண்ணத்திற்குத் தலைவி உடன்படும் போது, அவன் நோக்கிய நோக்கெதிர் தன் மனவிருப்பத்தை மலரும் முகத்தால் வெளிப்படுதலே ‘புகுமுகம் புரிதல்’ என்னும் மெய்ப்பாடாகும்” (4) என்பர்.
மேலும், “இளையோர் பருவத்தில் இருபாலினமும் தங்களின் உடல் தோற்றத்தாலும், கவர்ச்சியாலும் ஒருவரையொருவர் கவரவும் ஈர்க்கவும் முனைகின்றனர்” (5) என அப்துல்கரீம் கூறியுள்ளார். உள்ளப்புணர்ச்சியில் ஈடுபடுவதற்குப் புகுமுகம் புரிதலெனும் மெய்ப்பாடு எவ்வாறு துணை நிற்கின்றது என்பதனை, “காட்சி என்னும் காதலின் முதல் கட்டத்தில் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்துக் காதல் கொள்கின்றனர். செம்புலப் பெயல் நீர் போலப் பார்வையால் தலைவனின் அன்பு உள்ளமும் தலைவியின் அன்பு உள்ளமும் ஒன்றையொன்று ஈர்க்கப்பட்டு இரண்டறக் கலக்கின்றன. இவ்வாறு தலைவனும் தலைவியும் உள்ளப் புணர்ச்சியால் ஒன்றுபட்டு காதல் கொள்வதற்கு அவர்களிடம் தோன்றும் பருகிய நோக்கென்னும் புகுமுகம் புக்க நோக்குத்தான் காரணமாகின்றது” (6) என மு. பொன்னுசாமி கூறியுள்ளார்.
தலைவனும் தலைவியும் எதிர்ப்பட்டபோது தலைவி, அவன் தன்னைக் காணவேண்டும் என்ற விருப்பத்தோடு நிற்பாள். அது புதுமுகம் புரிதல் என்னும் மெய்ப்பாடாகும். முகம் என்பது தன் இடம் என்னும் பொருள் உடையது. தலைவி தன் முகத்தைத் தலைவன் காணுதலை விரும்புதல் எனப் பொருள் கொள்ளலாம். முதலில் தலைவன் கண்டவுடன் தலைவியிடம் தோன்றுவது இவ்விருப்பமே. மேலும்,
“நின் மகள் உண்கண் பல்மாண் நோக்கிச்
சென்றோன் மன்ற அக் குன்று கிழஆவானே!
பகல்வாய் அந்திப் படுசுடர் அமையத்து
அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன்
மகனே தோழி! என்றனள்” (அகம்48(21-25))
எனும் அகநானூற்று பாடலில் ‘மலைநாட்டிற்கு உரியவனான தலைவன் குதிரைகள் வேகத்தை அடக்கி தேரினை மெதுவாகச் செலுத்தினான்; வந்த வழியே சென்றவன் நின் மகளது மையுண்ட கண்களையே எதிர்மறுத்துப் பல்முறை பார்த்துப் பார்த்துச் சென்றான். பகற் பொழுது நிறைவடையும் ஞாயிறு மறையும் அந்திப் பொழுதிலே அவன் சென்று மறையும் திசையை நோக்கித் ‘தோழியே! இவன் ஓர் ஆடவனே’ என்றாள்’ என்பதிலும், 28(1-5), 156(11), 356(5-7), 388(10-15), 390(13-15) எனும் பாலடிகளிலும் புகுமுகம் புரிதல் எனும் மெய்ப்பாடு அமையப் பெற்றுள்ளன.
பொறிநுதல் வியர்த்தல்
தலைவன் விருப்பத்துடன் நோக்கிய நோக்குக்கு எதிர்ப்பார்வை பார்த்த தலைவி நாணம் கொள்கிறாள். அவள் உள்ளத்தில் காதல் உவகையாய் ஊற்றெடுக்கிறது. காதல் மனப்போராட்டத்தில் அடுத்து என்ன பேசுவதென்ற திகைப்பில், அச்சத்தில், ஒரு வகையான பயத்தில் மேனி பரவசமடைகின்றன. இந்நிலையில் அவளது நெற்றியில் குறு வியர்வைத் துளிகள் தோன்றி அவள் காம உணர்வை வெளிப்படுத்துகின்றன. இங்கு வியர்த்தல் என்ற உடல்மொழி பெண்மையின் ஒருமித்த பண்புகளை வெளிப்படுத்துவதுடன் தலைவனைப் போல் உடனடியாக வெளியிடமுடியாத நிலையையும் சுட்டுகிறது. இதனை, “பிற இடங்கள் ஆடையால் மறைக்கப்படுதலின் வெளிப்படையில் நுதல் வியர்ப்பே தோன்றுதலின் பொறிநுதல் வியர்த்தல் மெய்ப்பாடு கூறப்பட்டது” (7) எனவும், “இதுவரை காணாமல் ஒருவன் புணர்ச்சி குறிப்பினாக நோக்கும்போது அக்காலக் கற்புடைய பெண் புணர்ச்சியையும் விரும்புகிறாள். அதே நேரம் நாணத்தைவிட மணமில்லை. தவறு செய்யப் புகுமுன் ஏற்படும் அச்சத்தினால் நுதல் வியர்த்தல் இயல்பன்றோ” (8) எனவும் கூறியுள்ளனர். “அகத்திணையில் காதலர் இருவருக்கும் ஒருவர் அன்பை ஒருவர் புரிந்துக்கொள்ள வாயிலாக நிற்பது கண்களே அங்கு வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாது போகின்றது. கண்களே ஒரு மிகப்பெரிய காவியத்தை எழுதிவிடுகிறது. அதனால்தான் அது செய்யும் தவற்றை அதனருகில் உள்ள நுதல் வியர்த்துக்காட்டுகின்றது. இந்த அவத்தை கைக்கிளைக்கண் ஏற்படுகிறது” (9) என்பர்.
பொறிநுதல் வியர்த்தல் என்பது தலைவன் தன்னைப் பார்க்கும் நிலையில் அச்சமும், நாணமும் வருவதால் வியர்வை அரும்பிய நெற்றியை உடையவளாதல். இதனை,
“பெரும்புழுக் குற்ற நின் பிறைநுதற் பொறிவியர்
உறுவளி ஆற்றச் சிறுவரை திற” (அகம்.136(21-22))
எனும் அகநானூற்று பாடலில் ‘அதிகமான புழுக்கத்தால் உனது பிறை போன்ற நெற்றியில் வியர்வை அரும்பியது; அதனைக் காற்று வீசி ஆற்றுவதற்காய், போர்த்திய ஆடையைச் சிறிது பொழுது திறவாய்’ எனத் தலைவன் தலைவியிடம் வேண்டுகின்றான். என்பதிலும், 48(15-16), 190(6-10), 217(13) எனும் பாலடிகளிலும் பொறிநுதல் வியர்த்தல் எனும் மெய்ப்பாடு அமையப் பெற்றுள்ளன.
நகுநயம் மறைத்தல்
தலைவனைக் கண்ட தலைவி அவன் கூறுவதைக் கேட்டோ (அ) அவன் பால் தோன்றும் குறிப்பினை அறிந்தோ தன் உள்ளக் குறிப்பினை உணர்த்த முற்படும்போது சிரிப்பு வருகிறது. இருந்தாலும் சிரிப்பை அடக்கிக்கொண்டு, அதனை அவர் அறியாது மறைப்பாள். இதுவே நகுநய மறைத்தல் எனும் மெய்ப்பாடாகும். இம்மெய்ப்பாடு உள்ள மகிழ்ச்சியின் வெளிப்பாடாகும். நகுநயமறைத்தல் என்பது தலைமகனிடம் தோன்றிய குறிப்புகளால் அவனுடன் பேசி மகிழ வேண்டும் என்ற விருப்பம் தலைவியின் உள்ளத்தே தோன்றிய போதும், அதனையும், அப்போது ஏற்படும் சிறு நகைப்பையும் தலைவி மறைப்பாள் என்பதாகும். இதனை,
“நுண்ணிதின் இயைந்த காமம், வென்வேல்
மறம்மிகு தானை பசும்பு+ண் பொறையன்” (அகம்.303(3-4))
எனும் அகநானூற்றுப் பாடலில் ‘நாமும் இரகசியத்தைப் பிறர் அறியா வண்ணம் மறைக்கின்றோம்’ என்பதிலும், 32(9-14), 390(15) எனும் பாடலடிகளிலும்; நகுநயம் மறைத்தல் எனும் மெய்ப்பாடு அமையப் பெற்றுள்ளன.
சிதைவு பிறர்க்கின்மை
ஒரு பெண் தன் காம உணர்வை வெளிப்படுத்துவது என்பது இயல்பான ஒன்று அல்ல. பெண்மைக்குரிய சாயலே அதனை வெளிக்காட்டா வண்ணம் வாழ்வின் அம்சங்களை ஒழுகுவது ஆகும். தனது உள்ளச்சிதைவை மற்றவர்க்குப் புலனாகாமல் மறைக்க, கூந்தலில் மறைத்தல், தலைகுனிதல், கால்விரல்களால் நிலத்தைக் கிளறுதல் போன்ற செயல்களினால் முகத்தை வெளிக்காட்டாமல் மறைப்பாள். வேண்டிய மட்டும் மறைத் தொழுகுதல் பெண்ணின் இயல்பு. பெண்மைக்குச் சிறப்பு, இவ்வாறு மறைத்த வழியும் தலைவன், தலைவியின் காதலுணர்ச்சியைச் சிதைவு பிறர்க்கின்மை மெய்ப்பாட்டால் அறியலாம். இதனை, “துன்பத்தைப் பொறுத்துத் தாங்கிக் கொள்ள உள்ளம் மேற்கொள்ளும் முயற்சியாக அடக்கி மறைத்தலும் உள்ளது” (10) என்பர் உளவியலார். இதனை,
“அன்னை அறியின் இவண் உறைவாழ்க்கை,
எனக்கு எளிது ஆகல் இல் எனக் கழற்கால்” (அகம்.203(8-9))
எனும் அகநானூற்றுப் பாடலில் ‘நாம் இங்கே தலைவனுடன் களவில் கூடி வாழும் வாழ்க்கையைத் தாய் அறிந்தால், இவ்வாழ்க்கை நமக்கு அரிதாகிவிடும்’ என்பதிலும், 52(15), 86(28-29), 236(11-21), 230(13-16), 321(15-17), 356(8-11) எனும் பாலடிகளிலும் சிதைவு பிறர்க்கின்மை எனும் மெய்ப்பாடு அமையப் பெற்றுள்ளன.
முடிவுரை
முதலில் தலைவனும் தலைவியும் எதிர்ப்படும்போது தலைவியின் உள்ளத்தில் எழும் காதல் முதற்குறிகளை உணர்த்துவது காட்சி. தலைமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது நேருக்கு நேர் காதல் உணர்ச்சி ததும்புமாறு காணுவது காதலர்கள் தனது மனக்குறிப்பை முகத்தில் வெளிப்படுத்துவது புதுமுகம் புரிதல். இம்மெய்ப்பாடு அகநானூற்றுப்பாடல்கள் 28 (1-5), 48(21-25), 156(11), 356 (5-7), 388 (10-15), 390 (13-15) ஆகியவற்றில் வெளிப்பட்டுள்ளது. என்பதையும், தலைவன் விருப்பத்துடன் நோக்கிய நோக்குக்கு எதிர்ப்பார்வைப் பார்த்த தலைவி நாணம் கொள்கிறாள். அவள் உள்ளத்தில் காதல் உவகையாய் ஊற்றெடுக்கிறது. காதல் மனப்போராட்டத்தில் அடுத்து என்ன பேசுவதென்ற திகைப்பில், அச்சத்தில், ஒரு வகையான பயத்தில் மேனி பரவசமடைகின்றன. இந்நிலையில் அவளது நெற்றியில் குறு வியர்வைத் துளிகள் தோன்றி அவள் காம உணர்வை வெளிப்படுத்துகின்றன இவை பொறிநுதல் வியர்த்தல். இம்மெய்ப்பாடு அகநானூற்றுப்பாடல்கள் 48(15-16), 136(21-22), 190 (6-10), 217 (13) ஆகியவற்றில் வெளிப்பட்டுள்ளது. தலைவனைக் கண்ட தலைவி அவன் கூறுவதைக் கேட்டோ (அ) அவன் பால் தோன்றும் குறிப்பினை அறிந்தோ தன் உள்ளக் குறிப்பினை உணர்த்த முற்படும்போது சிரிப்பு வருகிறது. இருந்தாலும், சிரிப்பை அடக்கிக்கொண்டு, அதனை அவர் அறியாது மறைப்பாள், இது நகுநயம் மறைதல். இம்மெய்ப்பாடு அகநானூற்றுப்பாடல்கள் 32(9-14), 303(3-4), 390(15) ஆகியவற்றில் வெளிப்பட்டுள்ளது. சிதைவு என்பது மனம் நிறைதளர்தல். தலைமகள் தனது விருப்பத்தினை மறைத்தாலும், அவளது மனம் தலைவனின்பால் ஈடுபட்டுநிறை தளர்தலின் அதனை அவள் பிறர்க்குப் புலனாகாமல் மறைப்பாள் இதனைச் சிதைவு பிறர்க்கின்மை என்பர். இம்மெய்ப்பாடு அகநானூற்றுப்பாடல்கள் 52(15), 86(28-29), 203(8-9), 236(13-16), 321(15-17), 356(8-11) ஆகியவற்றில் வெளிப்பட்டுள்ளது. பிறர்க்கு என்றது தலைவனைத் தவிர்த்துக் காண்போர்க்கு எனப்பொருள் கொள்ளவேண்டும். அதனால் தலைவியின் சிதைவைத் தலைவன் அறிவான் எனலாம். மேற்கூறப்பட்ட நான்கு மெய்ப்பாடுகளையும் களவிற்குரிய முதற் கூறுகளாகத் தொல்காப்பியர் வகுத்துரைத்துள்ளார். இவற்றின்வழி தொல்காப்பிய களவுக்கால மெய்ப்பாட்டின் முதற்கூறான காட்சி எனும் மெய்ப்பாடு நான்கு பிரிவுகளைக் கொண்டது என்பதும் அவை அகநானூற்றில் எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்பதும் இவ்வாய்வுக்கட்டுரையின் வழி அறியப்பட்டது.
அடிக்குறிப்புகள்
1. வ. சுப. மாணிக்கம், தமிழ்க்காதல், பக். 67.
2. மேலது, ப.82.
3. க. வெள்ளைவாரணன், மெய்ப்பாட்டியல் உரைவளம், ப.104
4. மு.பொன்னுசாமி, சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.91.
5. அ.அப்துல்கரீம், இளையோர் உளவியல், தொகுதி -1, ப.5.
6. மு.பொன்னுசாமி, சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.94.
7. ஆ.சிவலிங்கனார், தொல்காப்பியம் (மெய்ப்பாட்டியல்)உரைவளம், ப.57.
8. பா.மாலினி,(க.ஆ), செவ்வியல் மொழிகள், இலக்கியங்கள், இலக்கணங்கள், ப.641.
9. மேலது, ப.64.
10. து. சிவராஜ், சங்க இலக்கியத்தில் உளவியல்,ப.67.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.