அற இலக்கியமான திருக்குறள், மொழி மற்றும் இலக்கியத் தொழில்நுட்பத்தைச் செவ்வனேக் கையாண்டு படைக்கப்பட்டுள்ளது. வாழ்வியல் விழுமங்களை விண்டுரைப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பினும், இலக்கிய உத்திகளும் நடையியல் நுட்பங்களும் திருக்குறளில் செறிந்து காணப்படுகின்றன. காலப்பழமையாலும் திருக்குறளின் இலக்கண / தொடர் அமைப்பு நுட்பங்களாலும் ஆர்வமுள்ள அன்பர்களால் கூடச் சில குறட்பாக்களுக்கு எளிமையாகப் பொருளுணர இயல்வதில்லை. குறட்பாக்களை முறையாகவும் முழுமையாகவும் உணர்ந்து கொண்டால்தான் படைப்பின் பெருமையும் விளம்பப்படுகின்ற விழுமியத்தின் சால்பும் தெளிவாகி, அறநெறியைப் பின்பற்றும் உள்ளார்வம் மக்களிடம் பிறக்கும். அதனால் திருக்குறளை முறையாக உணர்ந்துகொள்ள மொழி, இலக்கண அமைப்புகளின் பொருண்மைத் தகைமையை அறிந்திருக்கவேண்டியது தேவையாகின்றது.
திருக்குறள் புரிதிறனில் உள்ள கடினத்தன்மை / மருட்சி ஆகியவற்றை நீக்க இத்தகைய பொருண்மையியல் அணுகுமுறை உறுதுணையாகும். சான்றாக, திருக்குறளில் ஆளப்பட்டுள்ள துணை என்னும் சொல்லைக் கருதலாம். இச்சொல் நட்பு, கணவன், மனைவி, உதவி, வலிமை, ஒப்புமை, அளவு ஆகிய பொருளில் ஆளப்பட்டுள்ளது. அமைப்புச் சூழலுக்கேற்பவும் தொடர்ப் பொருண்மை நோக்கிலும் இத்தகைய சொற்களை நுணுகி ஆராய்ந்து கருத்துணரவேண்டும். அதாவது ஒரு சொல் சூழலுக்கேற்பப் பல பொருளுணர்த்தும் பல பொருளொரு சொல்லாகவும்; இலக்கண வகையாலும் வடிவத்தாலும் ஒன்றாயிருந்தும் வேறுபட்ட பொருளுணர்த்தும் ஒப்புருச் சொல்லாகவும் வழங்கப்படுவதுண்டு. துணை என்னும் சொல் திருக்குறளில் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறே இறை, குறிப்பறிதல் போன்றவற்றையும் கருதலாம். இக்கட்டுரை துணை என்னும் சொல்லை மாறுபட்ட பல கருத்துகளில் ஒப்புருச் சொல்லாகத் திருவள்ளுவர் ஆண்டுள்ள பாங்கைப் பகர்வதாக அமைகின்றது.
பன்மொழி மின்னணுக் கலைக்களஞ்சியமான விக்சனரி துணை என்னும் சொல்லின் பொருளாகப் பின்வருவனவற்றைச் சுட்டுகின்றது.
1. உதவி செய்பவர்,
2. திருதி (1) யோகத்தின் தனித்தமிழ் சொல்.
3. அளவு (2)
4. இணை , ஒப்பு
5. ஆதரவு , உதவி
6. காப்பு (3)
7. கூட்டு (4)
8. இரண்டு (5)
9. இரட்டை (6)
10. கணவன் (7)
11. மனைவி (8)
12. உடன்பிறப்பு (9)
13. புணர்ச்சி (10)
14. வரை (11)
15. ஆயுதமுனை
16. அம்பு (12)
17. நட்பினன் (ள்)
இந்தப் பின்னணியில் , முதலில் துணை என்னும் சொல் திருக்குறளில் வழங்கும் அட்டவணை வருமாறு:
குறள் எண் | வருகை | கருத்து |
22 | துறந்தார் பெருமை துணைக்கூறின் | அளவு |
36 | பொன்றாத் துணை | துணை |
41 | நின்ற துணை | துணை |
42 | இல்வாழ்வான் என்பான் துணை | துணை |
51 | வளத்தக்காள் வாழ்க்கைத் துணை | மனைவி |
51 | மறத்திற்கும் அஃதே துணை | துணை |
76 | இனைத்துணை, துணைத்துணை | துணை |
87 | இனைத்துணை, துணைத்துணை | அளவு, உதவி, அளவு |
104 | தினைத்துணை பனைத்துணை | அளவு |
132 | அஃதே துணை | துணை |
144 | எனைத்துணையர் , தினைத்துணை | சிறப்பு, அளவு |
156 | பொன்றுந் துணை | அளவு |
242 | அஃதே துணை | துணை |
310 | துறந்தார் துறந்தார் துணை | ஒப்புமை |
397 | சாந்துணையுங் கல்லாதவாறு | வரையிலும் (அளவு) |
414 | ஊற்றாந் துணை | துணை |
433 | தினைத்துணை பனைத்துணை | அளவு |
433 | தினைத்துணை பனைத்துணை | அளவு |
460 | துணையில்லை | துணை |
471 | துணைவலி | நட்பு / துணை |
497 | துணை வேண்டா | துணை |
635 | தேர்ச்சித் துணை | துணை |
651 | துணை நலம் | துணை |
688 | தூய்மை துணைமை துணிவுடைமை | துணை |
862 | ஆன்ற துணையிலன் | துணை |
875 | தன்துணை , இன்துணை | துணை |
1222 | நின் துணை | துணை |
1234 | துணை நீங்கி | கணவன் |
1263 | உள்ளம் துணையாக | துணை |
1282 | தினைத்துணை பனைத்துணை | அளவு |
1289 | யாரே துணையாவார் | துணை |
மேற்கண்ட அட்டவணையால் அறியப்படும் செய்திகள் வருமாறு :
அ. துணை என்னும் சொல் திருக்குறளில் முப்பது குறட்பாக்களில் 36 முறை பயில்கின்றது. 25 குறட்பாக்களில் ஒரு முறையும் 04 குறட்பாக்களில் இரண்டு முறையும் 01 குறளில் மூன்று முறையும் வழங்குகின்றது.
ஆ. துணை என்னும் சொல் திருக்குறளில் அறம், பொருள், காமம் ஆகிய மூன்று பால்களிலும் பயில்கின்றது. அறத்துப்பாலில் 13 குறட்பாக்களில் மொத்தம் 17 முறையும், பொருட்பாலில் 11 குறட்பாக்களில் மொத்தம் 11 முறையும்; காமத்துப்பாலில் 06 குறட்பாக்களில் மொத்தம் 08 முறையும் வழங்குகின்றது.
அறத்துப்பாலில் அதிக அளவில் துணை என்னும் சொல் பயின்றுவருவதால், தனிமனித ஒழுக்கத்தில் இது கூடுதல் மதிப்புப் பெறுவது தெளிவாகும். 688ஆம் குறட்பாவில் துணையாகும் தன்மையை ‘துணைமை’ என்று ஆண்டுள்ளார்.
இவற்றுள் அறத்துப்பாலின் விருந்தோம்பல் அதிகாரத்திலுள்ள 87ஆவது குறட்பா விதந்து அறியத்தக்கதாகும். இதில் அளவு, உதவி என்னும் இரண்டு கருத்தில் மூன்று முறை ஆளப்பட்டுள்ளது. இது குறித்து குறள் திறன் இணைய விளக்கியின் சுட்டுரை இங்கு ஒப்பத்தக்கது.
முதலில் 'இனைத்துணைது ஒன்றில்லை' என்று விருந்தின் பயன் இன்ன அளவினது என்று சொல்லவியலாது என்று கூறிவிட்டு அடுத்து வேள்விப் பயன் 'விருந்தின் துணைத்துணை' என்று அளவு சொல்லப்படுகிறது. ஏன்? இதற்கு விளக்கமாக திரு வி க இவ்விதம் கூறுகிறார்:
'முன்னையது அளவிறந்தது போலத் தோன்றுகிறது. பின்னையது அளவுடையது போலத் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றே. முறை மட்டும் வேறு. இறைவன் பெருமை அளவு கடந்ததென்று மறை முழங்குகிறது. அவனை வேறு முறையிலுங் கூறுதல் கூடும். எப்படி? இறைவன் பெருமை மறைமுழங்கும் அளவினதன்று. இதன் பொருளென்ன? அளவிறந்ததென்பதே. இது போன்றதே இத் திருக்குறளின் நுட்பமுமென்க'
துணை என்ற சொல்லுக்கு உதவி என்றும், அளவு என்றும் பொருள் உள. இங்கு துணைத்துணை என்றதால் உதவியின் அளவு எனக் கொண்டு உதவியின் அளவு பயன் என அதற்குப் பொருள் கொள்ளலாம். விருந்தினருக்கு எந்த அளவு உதவியதோ அந்த அளவு விருந்தின் பயன் உண்டு என்பது பெறப்படும்.
குறள் நடையை நோக்கும் போது பயன் கருதி விருந்து செய்யப்படுவதில்லை என்ற கருத்தும் எல்லா விருந்தளித்தலும் பயன் தருவதே; விருந்தினர் எந்த அளவு உதவி பெற்றாரோ அந்த அளவு பயன் என்ற கருத்தும் பெறப்படுகின்றன.
விருந்தோம்பலை இங்கும், இதற்கு அடுத்த பாடலிலும் வேள்வி என்ற சொல்லால் குறிக்கிறார் வள்ளுவர். தீ வளர்த்துத் தேவர்களுக்கு விருந்து படைப்பதும் வேள்வி என்றேச் சொல்லப்படுகிறது. கண்காணாத தேவர்களுக்குச் செய்யும் வேள்வியை விடக் கண்கண்ட மானிடர்க்குச் செய்யும் விருந்தாம் வேள்வி சிறந்ததென்பது வள்ளுவர் கருத்து' என்பார் தமிழண்ணல்:
இதனால் திருக்குறளின் கருத்தியல் சார்ந்த நடைநலம் வெளிச்சமாகும். அறங்களில் மிகுபயன் தருவது விருந்தோம்பல் என்பதை வலியுறுத்த இந்த நடையமைப்பு வாய்ப்பாகின்றது. அதோடு விருந்தோம்பலை 87 & 88 ஆகிய குறட்பாக்களில் வேள்வி என்று ஆக்கிக்கொண்டுள்ளார். அதனால் விருந்தோம்பலைச் சமூக வேள்வியாக ஒவ்வொருவரும் ஆற்றிப் பயனூக்கவேண்டும் என்னும் வள்ளுவரின் வேணவா வெளிப்படுகின்றது. மேலும் மேற்கண்ட குறட்பாக்களில் அறம் தோன்றாத் துணையாக, வழித்தோன்றலாகக் கைகொடுக்கும் என்று வள்ளுவம் வழிமொழிந்துள்ளது. அதோடு அறத்தை அளவிட்டுச் செய்யலாகாது என்றும் இயல்பூக்க அடிப்படையில் மானுடப் பண்பாக அறம் அமையவேண்டும் என்னும் நன்னெறிக் கோட்பாட்டையும் திருக்குறள் எடுத்துரைக்கின்றது. இங்கு,
"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறியென,
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே"
இந்தப் பிறவியில் அறம் செய்தால் அது மறுபிறவியில் பயன் தரும் என்று எண்ணிக்கொண்டு அறச்செயலை விலைக்கு விற்கும் ‘அறவிலை வணிகன்’ ஆய் அல்லன். சான்றோர்கள் சென்று காட்டிய ஒரு வழிமுறை என்று எண்ணிக்கொண்டு கொடை வழங்குபவன் ஆய்.
என்னும் புறநானூற்றின் 134ஆம் பாடல் கருதத்தக்கது.
இனைத்துணை, தினைத்துணை, பனைத்துணை ஆகிய தொடர்களில் அளவைக் குறிப்பதாகத் துணை என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மானுட எண்ண விரிவு வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் துணை நீங்கி போன்ற வழக்காற்றில் உதவி செய்பவர், மனைவி/ கணவன் ஆகிய கருத்துகளில் ஆளப்பட்டுள்ளது. அதனால் இதை ஒப்புருச் சொல்லாக அறியலாம்.
திருக்குறளை நிறைவாகவும், முறையாகவும் புரிந்துகொள்ளத் திருக்குறளில் ஆளப்பட்டுள்ள சொற்களின் கருத்தைச் சூழலுக்கேற்பவும் தொடர்ப் பொருண்மை நோக்கிலும் நுணுகி ஆராய்ந்துணரவேண்டும்.
1. https://ta.wiktionary.org/s/76o1 - விக்சனரி - திருதி
2. https://ta.wiktionary.org/s/y0c - விக்சனரி - அளவு
3. https://ta.wiktionary.org/s/42iz - விக்சனரி - காப்பு
4. https://ta.wiktionary.org/s/z2k - விக்சனரி - கூட்டு
5. https://ta.wiktionary.org/s/a9j - விக்சனரி - இரண்டு
6. https://ta.wiktionary.org/s/15he - விக்சனரி - இரட்டை
7. https://ta.wiktionary.org/s/yh3 - விக்சனரி - கணவன்
8. https://ta.wiktionary.org/s/1dw5 - விக்சனரி - மனைவி
9. https://ta.wiktionary.org/s/mo - விக்சனரி - உடன்பிறப்பு
10. https://ta.wiktionary.org/s/1ho8 - விக்சனரி - புணர்ச்சி
11. https://ta.wiktionary.org/s/12s3 - விக்சனரி - வரை
12. https://ta.wiktionary.org/s/mg8 - விக்சனரி - அம்பு
1. http://kuralthiran.com/ - குறள் திறன் இணைய விளக்கி - வலைத்தளம்
2. புறநானூறு, அருணா பதிப்பகம், சென்னை, 1958.
3. திருக்குறள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 2008.