சங்க அகப்பாடல்களில் தலைவனின் தனிமொழி
கு. வளர்மதி
உதவிப்பேராசிரியர், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி.
முன்னுரை
மாந்தர் தனக்குத்தானே மனதுக்குள் பேசுவதும், தனக்குத்தானே வாய் திறந்து பேசுவதும் ‘ஒருமுகச் செய்திப் பரிமாற்றம்’ எனப்படும். சங்கப்பாடல்களில் காணப்படும் நெஞ்சொடு கிளத்தல் மற்றும் தனிமொழியில் அமைந்த பாடல்களை ஒருமுகச் செய்திப் பரிமாற்றம் எனும் நிலையில் ஆராய இயலுகின்றது. மாந்தர், நெஞ்சை விளிக்காமல் தமக்குத்தாமே பேசிக் கொள்வது ‘தனிமொழி’ ஆகும். கேட்போர் யாரும் இல்லாத சூழ்நிலையில் தனிமொழி அமையும். மாந்தர்களின் மனப்போராட்டமும் அகப்பண்புகளும் இதனால் புலப்படுகின்றன. சங்க அகப்பாடல்களைப் புறப்பாடல்களுடன் ஒப்பிடும் போது, மாந்தர்கள் தனக்குத்தானே பேசுவதாக அமைந்துள்ள பாடல்கள் அக இலக்கியங்களிலேயே மிகுதியாகக் காணப்படுகின்றன. சங்க அகப்பாடல்களில் ‘தலைவன், தலைவி, தோழி, செவிலி, நற்றாய், பாங்கன்’ ஆகியோர் தனிமொழி பேசுகின்றனர். தலைவன், தனிமொழி பேசும் சூழல்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
தலைவன்
தலைமைப் பண்புடன் தனித்து இயங்குதல் என்பது ஆடவரின் இயல்பாகும். ஆனால், தலைவியை எண்ணும் சூழலில் மட்டும் தலைவனின் இயல்பிலே மாற்றங்கள் நிகழ்கின்றன. இத்தகு மாற்றங்களால் தலைவன் தனிமொழி பேசுகின்றான். இதனைச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. தலைவனுக்கு அமையும் தனிமைச்சூழல், அவன் தனிமொழி பேசுவதற்கு வாய்ப்பாக அமைகின்றது. புறவாழ்வில் துணிவுடன் செயலாற்றும் தலைவன், அகவாழ்வில் தலைவியைப் பிரிந்து தனிமொழி பேசுவதைக் காணமுடிகிறது. தலைவன் ‘இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, காப்புமிகுதிக்கண் ஆற்றாமை, மணந்து கொள்வதற்கு முடிவு செய்தல், ஊடல் நீங்கி விருந்தோம்பல், இடைச்சுரத்தின்கண் பேசுதல், பாசறையில் பேசுதல்’ ஆகிய சூழல்களில் தனிமொழி பேசுகின்றான்.
இயற்கைப் புணர்ச்சி
தலைவன், தலைவி இருவரும் அவன், அவள் என்ற நிலை மாறி அவர்கள் என்று ஒன்றுபட வித்திடுவது, ‘களவு’ ஆகும். களவு முறையினை,
“அன்பின் ஐந்திணைக்குரியதான ‘காதல்’ உணர்ச்சிதான் இன்பத்திற்கு அடிப்படையாக இருப்பது. இத்தகைய உணர்ச்சியைச் சிறந்த முறையில் படைத்துக் காட்டும் இன்ப வாழ்விடுதல் முதன்முதலாக நடைபெறுவது இயற்கைப்புணர்ச்சி. அஃதாவது தலைவனும் தலைவியும் ஊழ்வலியால் ஒருவரையொருவர் கண்டு காதல் கொள்வது” (1)
என்று குறிப்பிடுகின்றனர்.
கொடுப்போரும் கொள்வோரும் இன்றித் தலைவனும் தலைவியும் நல்வினையால் தாமே கூடுவது இயற்கைப் புணர்ச்சியாகும். மனக்குறிப்பின்றி எதிர்பாராத நிலையில் இயல்பாக நிகழ்வது இயற்கைப் புணர்ச்சி என்னும் பெயர் பெற்றது. இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைவன், ஆயத்தோடு செல்லும் தலைவியைக் கண்டு தனிமொழி பேசுகின்றான்.
“தொண்டி அன்னை பணைத்தோள்,
ஒண்தொடி, அரிவைஎன் நெஞ்சுகொண் டோளே!” (ஐங்.171: 3-4)
இவ்வடிகளில், ‘தொண்டி எனும் கடற்கரைப்பட்டினம் போன்ற பருத்த தோள்களையுடையவள் என் நெஞ்சு கொண்டவள் ஆவாள் என்கிறான்’ தலைவன். இதில் தலைவனின் தனித்து வருந்தும் மனநிலை புலப்படுகின்றது. இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைவனின் நெஞ்சம், தலைவியைப் பிரிந்து வந்த பின்னரும் அவளிடத்திலே இருக்கின்றது என்பதை,
“தான்அறிந் தன்றோ இலளே பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம் பின்னும் தன்உழை யதுவே!” (குறுந்.142: 3-5)
என்று கூறுகின்றான். இங்கு தலைவன், தலைவியுடன் கூடிப் பிரிந்த பின்னும் நள்ளிருள் சாமத்தில் படுத்திருக்கும் யானை பெருமூச்சு விட்டது போல, பெருமூச்சு விட்டுக் கொண்டு இருக்கின்றேன் எனவும், தன் உள்ளம் தலைவியிடமே உள்ளது எனவும் தனிமொழி பேசுவது புலனாகின்றது.
இவ்வாறாக, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன், எப்போதும் தலைவியை எண்ணியே கவலை கொள்ளும் நிலையைக் காணமுடிகிறது. இச்சூழலில் தலைவியை நினைத்துத் தலைவன், தனிமொழி பேசுகின்றான். தலைவனின் இம்மனநிலை அந்நேரத்திற்கு மட்டுமே உரியதாகும். ஆண்கள் அடுத்தடுத்து மாறிவிடும் மனநிலை கொண்டவர்கள். வினையே ஆடவருக்கு உயிரே என்பதால், தலைவனின் இவ்வருத்த மனநிலை நீண்டநேரம் தொடர்வதில்லை என்ற முடிவுக்கு வரலாம்.
இடந்தலைப்பாட்டில் கூறல்
இயற்கைப் புணர்ச்சியின் பின் தலைவன், முன்னர் தலைவியைக் கண்ட இடத்தை மீண்டும் அடைந்து அவளுடன் கூடி மகிழ்தல் ‘இடந்தலைப்பாடு’ ஆகும்.
“தெய்வம் தெளிதல் கூடல் விடுத்தல்என்று
இவ்ஓர் மூவகைத்து இடந்தலைப் பாடே” (2)
இதன் வழி இடந்தலைப்பாடு மூவகையில் அமையும் என்பது தெளிவாகின்றது. குறி வழியே சென்று தலைவியைக் கண்டு வந்த பாங்கன், தலைவி இருக்கும் இடத்தைக் கூற அவளைக் காணப் புறப்படும் தலைவன் தனக்குள்ளே பேசுகின்றான். தொண்டியைப் போன்ற மணம்கமழிடத்தில் குறியிடம் நல்கிய தலைவியை நினைத்துத் தலைவன் தனிமொழி பேசுவதை ஐங்குறுநூறு 174-ஆம் பாடலில் காணமுடிகிறது.
இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன், இடந்தலைப்பாட்டில் தலைவியைக் கண்ட மகிழ்ச்சியில் தனிமொழி பேசுகின்றான். தலைவி தரும் இன்பத்தை எண்ணித் தலைவன் தனிமொழி பேசுவதை ஐங்குறுநூறு 197-ஆம் பாடலில் காணமுடிகிறது. தனிமை வருடும் மாலைப்பொழுது முடிந்தவுடன் மிகுந்த இன்பம் பெற எண்ணும் தலைவனின் ஏக்க உணர்வும் இப்பாடலில் வெளிப்படுகின்றது.
தலைவியையும் தலைவி தரும் இன்பத்தையும் எண்ணும் தலைவனின் ஏக்கஉணர்வு இடந்தலைப்பாட்டில் தனிமொழியாக உள்ளது. இவ்வாறாகத் தலைவியை எண்ணும் சூழலில், தலைவி தரும் இன்பத்தைக் கருத்தில் கொண்டே தலைவன் தனிமொழி பேசுகின்றான். இடந்தலைப்பாட்டின் போது மீண்டும் தலைவியைக் கண்டு இன்பம் பெற வேண்டும் என்ற தலைவனின் எண்ணம் மேலோங்கி காணப்படுவதாலேயே தனக்குத்தானே தனியாகப் பேசுவது நிகழ்கின்றது.
அகமன உணர்வுகளைத் தலைவியை எண்ணி ஏங்கும் மனநிலையை வெளிப்படையாக யாரிடமும் கூற இயலாது. ஆதலால், தலைவன் தனிமொழி பேசுகின்றான் என்ற முடிவுக்கு வர இயலும்.
காப்புமிகுதிக்கண் ஆற்றாமை
தலைவியின் இல்லத்தே பாதுகாப்பு மிகுந்திருப்பதைத் தோழி, தலைவனுக்குக் கூறுதல் காவல் மிகவுரைத்தல் ஆகும். தலைவி இற்செறிக்கப்பட்டதை அறிந்து ஆற்றானாகிய தலைவன், அவளை நினைத்து,
“தடமென் பணைத்தோள், மடமிகு குறுமகள்
சுணங்கணி வனமுலை முயங்கல் உள்ளி,
மீன்கண் துஞ்சும் பொழுதும்,
யான்கண் துஞ்சேன்; யாதுகொல் நிலையே?” (நற்.319: 8-11)
என்று தனியாகப் பேசுகின்றான்.
தலைவியைத் தழுவ நினைத்துக் கண்ணுறங்காமல் இருக்கின்றான். இங்கு, தலைவனின் ஆற்றாமை புலப்படுகின்றது. ஆற்றாமை மிகும் சூழலில் தனக்குத்தானே பேசுவதைத் தவிர, வேறு வழியில்லை. அதிலும் அகமனவுணர்வினைப் பிறருக்குப் புலப்படுத்துதல் என்பது இயலாத ஒரு செயல் என்பதால், தலைவன் தனிமொழி பேசுகின்றான். தனிமொழி பேசுதல் என்பது, தலைவியை எண்ணி உறங்காமல் தனித்திருக்கும் தலைவனின் மனதிற்குத் தக்க வடிகாலாக அமைகின்றது. இதனால், தலைவனின் மனச்சுமை சற்றே நீங்கும்.
மணந்து கொள்வதற்கு முடிவு செய்தல்
திருமணத்தை விரைந்து நடத்துவதற்குரிய முயற்சியின் மிகுதியைக் கூறுவது ‘வரைவு மலிதல்’ ஆகும். திருமணத்தின் பொருட்டுத் தலைவி தெய்வம் தொழுவதைக் கண்ட தலைவன் மகிழ்தல் இயல்பாகும். இதனையே வரைவு மலிதல் எனும் இலக்கண நூலார்,
“வரைவுமுயல் உணர்த்தல் வரவுஎதிர் உணர்த்தல்
வரைவுஅறிந்து மகிழ்தல் பராவல்கண்டு உவத்தல்என்று
ஒருநால் வகைத்தே வரைவுமலிதல்” (3)
என்பர்.
ஐங்குறுநூற்றில் தலைவியை மணந்து கொள்வதற்கு முடிவுசெய்த தலைவன், மகிழ்ந்த உள்ளம் உடையவனாகத் தனித்துப் பேசுகின்றான்.
“மலர்ந்த காந்தள் நாறிக்
கலிழ்ந்த கண்ணள்எம் அணங்கி யோளே” (ஐங்.259: 5-6)
இப்பாடலடிகள், காந்தள் மலர் மணம் கமழும் மேனியள், கலங்கிய கண்களை உடைய தலைவியே தன்னை வருத்தியவள் என்று தலைவன் தனிமொழி பேசுவதை உணர்த்துகின்றன.
இங்கு, மணந்து கொள்ள முடிவு செய்த தலைவனுக்குத் தலைவி தன்னை வருத்துவது கூட இன்பமாகவே தெரிகின்றது. திருமணம் என்றாலே மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதனால்தான் இதுவரை தலைவி தன்னை வருத்தியதைக் கூடப் பெரிதாக எண்ணாமல், திருமண மகிழ்ச்சியில் தலைவன் அனைத்து கவலைகளையும் மறந்து, துன்பத்தைக் கூட இன்பமாகக் கருதும் மனநிலையில் தனிமொழி பேசுகின்றான். இதனால் வாழ்வில் இன்பமோ, துன்பமோ மிகும் சூழலில் தனக்குத்தானே தனிமொழி பேசுதல் இயல்பே என்பது புலப்படுகின்றது.
ஊடல் நீங்கி விருந்தோம்பல்
விருந்து என்ற சொல் புதுமையைக் குறிப்பதாகும். நண்பரும் உறவினரும் அல்லாதவராக இல்லத்திற்குப் புதிதாக வருகை தருபவர், விருந்தினர் ஆவர். இல்வாழ்க்கைக்குப் பெருமை சேர்ப்பது ‘விருந்தோம்பல்’ ஆகும்.
தலைவன், தலைவி இருவருக்கிடையே இருந்த நீண்டநாள் ஊடல் நீங்கி இணக்கம் ஏற்பட விருந்தோம்பல் உதவுகின்றது. இதுகுறித்து கபிலர், விருந்தினர் உண்ட பின்பு மீதி உணவைத் தலைவியுடன் தலைவன் உண்பதே பெருமை என்கிறார். இதனால், விருந்தோம்பல் என்பது ஒரு வழக்கமாக நிற்காமல் ஓர் உறவுப்பாலமாக விளங்கும் சிறப்பு தெளிவாகின்றது.
ஊடல் கொண்டிருந்த தலைவி, ஊடல் நீங்கி விருந்தோம்புவதற்கு விருந்தினர் வருகை தர வேண்டுமென்று தலைவன் தனிமொழி பேசுகின்றான். இதனை,
“எமக்கே வருகதில் விருந்தே! சிவப்புஆன்று,
சிறியமுள் எயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகம்காண் கம்மே” (நற்.120: 10-12)
என்ற அடிகள் தெரிவிக்கின்றன.
தலைவி சினம் தணிந்து ஊடல் நீங்கி முள் போன்ற பற்கள் தோன்றும்படி, புன்னகை செய்ய விருந்தினரின் வருகை தேவை என்று தலைவன் தனிமொழி பேசுவது புலனாகின்றது. இதைப் போன்று, பாண்டியனின் கொற்கை நீராடுதுறையில் மலரும் நெய்தல் மலரைப் போன்ற அழகுடைய கண்கள், தன் காதலியின் கண்கள் என்று தலைவன் தனிமொழி பேசுவதை ஐங்குறுநூறு 188-ஆம் பாடலில் காணமுடிகிறது.
தலைவன் மீது ஊடல் கொண்ட நிலையிலும் தலைவி, விருந்தோம்பலினால் முகமலர்ந்து இன்முகத்துடன் செயலாற்றுகின்றாள். தலைவியின் ஊடல் நீங்க, விருந்தினரின் வருகையே தீர்வாகும். அதனால், விருந்தினரின் வருகையை எண்ணித் தலைவன் தனிமொழி பேசுகின்றான். தலைவியுடன் தான் கொண்ட ஊடல் நீங்க வேண்டுமென்ற தலைவனின் தன்முனைப்பினைக் காணலாகின்றது.
இடைச்சுரத்தின்கண் ஆற்றாமை
பொருள்வயிற் பிரிந்து சென்ற தலைவன், கடத்தற்கரிய சுரவழியில் தலைவியின் பண்புநலனை நினைத்துத் தனிமொழி பேசுகின்றான். இது ‘இடைச்சுரத்தின்கண் ஆற்றாமை’ ஆகும். தலைவியைப் பிரிந்து பொருளை நாடிச் சென்ற தலைவனின் உள்ளம், இடையிலேயே தலைவியை நாடுகின்றது. இச்சூழ்நிலையில் இடைச்சுரத்தின்கண் ஆற்றாமை மீதூர தலைவன் தனிமொழி பேசுவதைக் காணமுடிகிறது.
“கலங்குஅஞர் உறுவோள் புலம்புகொள் நோக்கே!” (நற்.113: 12)
இங்கு, பொருள்வயிற் பிரிவினைச் சொன்னதும் தலைவி அழுது கலங்கி, வருந்தித் துன்பமுற்ற கண்களால் தன்னைப் பார்த்தாள் என்று இடைச்சுரத்தில் தலைவன் தனிமொழி பேசுவது புலப்படுகின்றது. பொருளீட்டச் சென்று கொண்டிருக்கும் தலைவன், தலைவியை எண்ணி ஆற்றாமல் தன்னுள்ளே வருந்துவதை,
“அருஞ்சுரக் கவலை வருதலின், வருந்திய
நமக்கும் அரிய ஆயின் அமைத்தோள்
மாண்புடைக் குறுமகள் நீங்கி,
யாங்குவந் தனள்கொல்? அளியள் தானே!” (நற்.352: 9-12)
என்ற பாடலடிகள் காட்டுகின்றன.
இங்கு, கடத்தற்கரிய பாலைநிலக் காட்டுவழியில் வந்த தலைவியின் நிலைக்கு இரங்கித் தலைவன் தனிமொழி பேசுவதைக் காணமுடிகிறது. இங்கு, தலைவி இரங்கத்தக்கவள் என்று அன்பின் வயப்படத் தலைவன் தானாகவே நினைக்கின்றான்.
ஐங்குறுநூற்றில் இடம்பெறும் இடைச்சுரப்பத்துப் பாடல்கள், தலைவன் பேசும் தனிமொழிகளாகவே அமைந்துள்ளன.
“மொழிபெயர் பல்மலை இறப்பினும்,
ஒழிதல் செல்லாது ஒண்தொடி குணனே” (ஐங்.321: 4-5)
இப்பாடலடிகளில், பல மொழிகள் வழங்கும் நாட்டகத்தையும் மலைகளையும் கடந்து வந்த பின்பும் தலைவியின் இனிய பண்புகள் உள்ளத்திலிருந்து ஒழிதல் இல்லை என்று தலைவன் இடைச்சுரத்தில் தலைவியின் குணத்தை எண்ணித் தனிமொழி பேசுவது புலப்படுகின்றது.
சுரத்திடைச் செல்லும் வழியில் தலைவியின் குணத்தை நினைக்கத் தனக்குற்ற வெம்மை நீங்கியதைக் கண்ட தலைவன், தனிமொழி பேசுகின்றான். இதனை,
“ஒள்நுதல் அரிவையை உள்ளுதொறும்
தண்ணிய ஆயின, சுரத்திடை ஆறே!” (ஐங்.322: 4-5)
என்ற பாடலடிகள் தெரிவிக்கின்றன.
இங்கு, வெப்பம் கொடியதான காட்டுநிலப் பெருவழியும் தலைவியை நினைக்கும் போது குளிர்ச்சி பொருந்தியன ஆயின என்று தலைவன் தனிமொழி பேசுவது சுட்டப்படுகின்றது.
வழியில் வெயிலின் கொடுமையை நினைத்த தலைவன், தலைவியின் பண்போடு இயைத்துப் பேசும் பாடல் உள்ளது.
“இன்னா மன்ற சுரமே;
இனிய மன்ற,யான் ஒழிந்தோள் பண்பே!” (ஐங்.326: 4-5)
இப்பாடலடிகளில் காட்டுவழி கொடுமையானது. ஆனால், நீங்கி வந்த தலைவியின் பண்பு மிக இனிமையானது என்று இடைச்சுரத்தில் தலைவன் தனிமொழி பேசுவதைக் காணமுடிகிறது.
பாலைநில வழியில் தலைவன் தலைவியை நினைத்துப் பார்க்கின்றான். இதனை,
“வெயில்முளி சோலைய வேய்உயர் சுரனே;
அன்ன ஆர்இடை யானும்,
தண்மை செய்த, இத்தகையோள் பண்பே” (ஐங்.327: 3-5)
என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன.
மூங்கில்கள் நிறைந்த காடு வெம்மையைத் தந்த போதும் தலைவியின் பண்புகள் தண்மையைத் தந்தன என்றும்; புறநிலை வெம்மையாகவும், அகநிலை தண்மையாகவும் அமைந்தன என்றும் தலைவன் இடைச்சுரத்தில் தனிமொழி பேசுவதை இப்பாடலடிகள் புலப்படுத்துகின்றன.
இவ்வாறாக, இடைச்சுரத்தில் தலைவியை எண்ணும் தலைவனுக்குத் தலைவியின் பண்புகள் இனிமையைத் தருகின்றன. தலைவியின் இனிய பண்புகளால், வெம்மையான பாலைநில வழியும் தலைவனுக்கு குளுமையைத் தருகின்றது. இதற்குக் காரணம் தலைவன், தலைவி மீது கொண்ட மிகுதியான அன்பே ஆகும்.
பாசறையில் தனிமொழி
பகைவர்களுக்கு எதிராகத் திட்டம் தீட்டும் படைகள் தங்கும் இடமே ‘பாசறை’ ஆகும். இப்பாசறையின்கண், பிரிவுத்துயரினால் ஆற்றானாகி வருந்துகின்ற தலைவன், தன்னுடைய தனிமைத்துயரைத் ‘தனிமொழி’ மூலம் வெளிப்படுத்துகின்றான். ஐங்குறுநூற்றில் இடம்பெறும் பாசறைப்பத்துப் பாடல்கள், தலைவன் பேசும் தனிமொழிகளாகவே அமைந்துள்ளன.
மன்னனுக்குரிய வினைமுடிப்பதற்குச் சென்ற தலைவன், கார்கால வருகையிலும் வினை முடியாததால் பாசறையில் இருந்தவாறே தலைவியை நினைத்து வருந்துகின்றான்.
“பெருஞ்சின வேந்தன் அருந்தொழில் தணியின்,
விருந்துநனி பெறுதலும் உரியள் மாதோ!”
(ஐங்.442: 1-2)
இங்கு, மன்னனின் போர்த்தொழில் முடிந்தால் தலைவி விருந்தினை எதிரேற்று விருந்தினரைப் பேணும் பெரிய இன்பத்தினைப் பெறுவாள் என்று பாசறையில் தனிமொழி பேசித் தலைவன் வருந்துவதைக் காணமுடிகிறது. இதுபோன்று, கார்காலம் வந்தும் வினைமுடியாத காரணத்தால் பாசறையில் தலைவன், தலைவியை எண்ணித் தனிமொழி பேசுகின்றான். தலைவியை நினைக்கும் போதெல்லாம் கண்துயில் கொள்ளாமல் தலைவன் தனிமொழி பேசுவதை ஐங்குறுநூறு 448-ஆம் பாடலில் காணமுடிகிறது.
“நனிசேய்த்து என்னாது, நல்தேர் ஏறிச்சென்று,
இலங்கு நிலவின் இளம்பிறை போலக்
காண்குவெம் தில்லஅவள் கவின்பெறு சுடர்நுதல்”
(ஐங்.443: 1-3)
இப்பாடலடிகளில் மன்னன் போர்த்தொழிலைக் கைவிட்டால், நெடுந்தொலைவினைப் பாராமல் தேரில் ஏறிச்சென்று தலைவியின் இளம்பிறை போன்ற நெற்றியைக் காண்பேன் என்று தலைவன் பாசறையில் தனிமொழி பேசுவதைக் காணமுடிகிறது. இங்குப் போர்த்தொழில் காரணமாகத் தலைவன் தலைவியின் சந்திப்பு தடைப்படுகின்றது. இந்நிலையில் அன்புமிகுதியான தலைவன், தலைவியை எண்ணித் தனிமொழி பேசுகின்றான். இதே செய்தியை ஐங்குறுநூறு 447-ஆம் பாடலும் தெரிவிக்கின்றது. மன்னன் போர்த்தொழிலை விட்டு நாட்டிற்குத் திரும்பினால், காதல்நோய் தணிந்து தலைவனின் கண்கள் இனியதுயிலை மேற்கொள்ளும் என்று தலைவன் தனிமொழி பேசுவதை ஐங்குறுநூறு 450-ஆம் பாடல் சுட்டுகின்றது. இங்ஙனம், வினைமுற்றாமையின் காரணமாகப் பாசறைக்கண் இருந்து தம் மனக்கருத்துகளைத் தலைவியின் அழகுணர்ச்சியோடு தலைவன் எடுத்தியம்புகின்றான்.
மன்னன் பகைமை தணிந்து தன் நாட்டிற்குச் செல்வதைக் கருதினால், பெரியதோளை உடைய தலைவியைக் காண்பேன் என்று தலைவன் பாசறையில் தனிமொழி பேசியதை ஐங்குறுநூறு 444-ஆம் பாடல் எடுத்துரைக்கின்றது.
வேந்தன், மாற்றரசன் கொடுத்த திறைப்பொருளைப் பெற்றுக் கொள்ளாதவனாக, கோபத்துடன் மீண்டும் போர் செய்ய, பாசறையின்கண் இருக்கும் தலைவன், தலைவியை நினைத்து ஏங்கி வருந்துகின்றான். தலைவி அவளுடைய ஊரிலும் தான் இங்குப் பாசறையிலுமாக இருவரும் தனித்தனியே பிரிந்திருக்கின்றோமே என்று தலைவன், தனக்குத் தானே பேசுவதை அகநானூறு 84-ஆம் பாடல் உணர்த்துகின்றது. பாசறையின்கண் தலைவன் பேசும் தனிமொழியில் விரைவாகப் போர் முடிய வேண்டும் என்ற எண்ணமும், தலைவியைக் காண வேண்டும் என்ற ஏக்க உணர்வும் வெளிப்படுகின்றது.
இங்ஙனம், தலைவியை விட வினையே பெரிது என்று எண்ணிச் சென்ற தலைவனின் ஆழ்மனதில் தலைவியின் நினைவுகளே முழுமையாகக் காணப்படுகின்றன. இதனைப் பாசறையில் தலைவன் பேசும் தனிமொழிகள் உணர்த்துகின்றன. கார்ப்பருவம் வந்தும் வினைமுடியாததால் தலைவியை எண்ணித் தலைவன் பாசறையிலேயே ஏங்குகின்றான். தலைவியின் அழகு, அன்பு காரணமாக அவளின்றித் தலைவனால் இயங்க இயலாது எனும் சூழ்நிலை உருவாகும் போது மட்டுமே தலைவன் பாசறையில் தனிமொழி பேசுகின்றான்.
தொகுப்புரை
சங்கப்பாடல்களில் பேசுவோரைத் தவிர பிறமாந்தர் எதிர்மொழிதல் இல்லாத தனிமொழிப் பாடல்கள் உள்ளன. ஆற்றாமை மிகும் சூழலில் தனக்குத்தானே பேசுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், தலைவன் தனிமொழி பேசுகின்றான். தனிமொழி பேசுதல் என்பது, தலைவியை எண்ணி உறங்காமல் தனித்திருக்கும் தலைவனின் மனதிற்குத் தக்க வடிகாலாக அமைகின்றது. இதனால், தலைவனின் மனச்சுமை நீங்கும். கேட்போர் இன்றியும், கேட்போர் இருப்பினும் எதிர்மொழி இல்லாமல் ஒருமுகமாகவே செய்திப்பரிமாற்றம் நிகழும் என்பது இங்கு தெளிவாகின்றது. பெரும்பாலும் துன்ப மனநிலையில் மட்டுமே தனிமொழி நிகழும் என்பது சங்கப் பாடல்கள் வழி இக்கட்டுரையில் கண்டறியப்பட்டுள்ளது.
சான்றெண் விளக்கம்
1. ந.சுப்புரெட்டியார், அகத்திணைக் கொள்கைகள், ப.48.
2. நம்பியகம்.களவு., நூ.134
3. மேலது,வரைவு., நூ.173
துணைநூற் பட்டியல்
1. அறவாணன், க.ப., அற்றைநாள் காதலும் வீரமும், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், முதல் பதிப்பு - 2002.
2. அமிர்த கௌரி, ஆ., சங்க இலக்கியத்தில் உரையாடல், கவின்கலை அச்சகம், சென்னை - 41, முதல் பதிப்பு, டிசம்பர், 1989.
3. இராமகிருட்டிணன், ஆ., அகத்திணை மாந்தர் - ஓர் ஆய்வு, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, முதல் பதிப்பு - 1982.
4. சிவராஜ், து., சங்க இலக்கியத்தில் உளவியல், சிவம் பதிப்பகம், வேலூர், 1994.
5. சுப்பிரமணியன், ந., சங்ககால வாழ்வியல், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி)லிட், சென்னை - 98, 2010.
6. சுப்புரெட்டியார், ந., அகத்திணைக் கொள்கைகள், பாரி நிலையம், சென்னை - 04, முதல் பதிப்பு - 1981, மறுபதிப்பு - 2016.
7. மாணிக்கம், வ.சுப., தமிழ்க்காதல், பாரி நிலையம், சென்னை, 1962.
ஆய்வுக் கோவைகள்
1. குருமூர்த்தி. இராம., சங்க இலக்கியக் கட்டுரைகள் தொகுதி, மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2007.
2. சண்முகதாஸ், அ., சங்க இலக்கிய ஆய்வுகள், (தொ.ஆ.) (க.கைலாசபதி நினைவுக் கருத்தரங்கக் கட்டுரைகள்), தேசிய கலை இலக்கியப் பேரவை, 2002.
3. சுப்பிரமணி, இரா., தூது இலக்கியங்களில் தொடர்பாடல் - சங்க இலக்கியத்தில் தொடர்பியல், கட்டுரைத் தொகுப்பு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 2014.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.