வரலாற்று நோக்கில் பெண்களின் சமுக நிலையை நோக்கும் பொழுது சமுதாயத்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவர்களின் நிலை மேம்பட்டே இருந்தது என்று கருத முடிகிறது. தமிழ்நாட்டில் பெண்களின் நிலை பற்றிய ஆதாரங்கள் முதல் நூல்களான தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் பெண்களை ஆண்களுக்குச் சமமான நிலையில் காட்டவில்லை. அவை ஆண்களுக்கு என்று சில இயல்புகளையும் பெண்களுக்கு என்று சில குணங்களையும் வரையறுத்துக் காட்டுகின்றன.
‘பெருமையும் உரனும் ஆடூஉ மேன’
(தொல் 1044)
என்பதன் வழி குலப்பெருமையும், அறிவு மேம்பாடும் ஆடவர்க்குரிய பண்புகள் என்று உணர்த்துகிறது.
‘அவன் அச்சமற்ற செயல்பாடுடையவன்’
(தொல் - 1082)
ஆனால், அதற்கு நேர்மாறான பண்புகள் உடையவள் தலைவி. அச்சம், மடம், நாணம் என்ற பண்புகள் பெண்மைக்குரிய பண்புகளாகும்.
தொல்காப்பியர் காதல் பற்றிப் பேசும் போது
“ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ நாயினுங் கடிவரை இன்றே”
(தொல் - 1039)
என்று குறிப்பிடுகின்றார்.
ஒத்த என்பதற்கு
“பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ
டுருவு நிறுத்த காமவாயில்
நிறையே யருளே உணர்வொடு திருவென
முறையுறுக் கிளந்த ஒப்பினது வகையே”
(தொல் - 1219)
என்ற நூற்பா விளக்கம் தருகிறது. அதாவது பிறப்பு, குலம், ஆண்மை, வயது, அழகு, காமநாட்டம், ஒழுக்கம், அருள், உணர்ச்சி, செல்வம் என்ற பத்து நிலையிலும் ஒத்து இருக்க வேண்டும் என்று கூறும் நூற்பா இறுதியாக ஆண்மகன் இக்குணநலன்களில் மிகுந்து இருந்தாலும் கடியப்படாது என்று சுட்டுகின்றது. அதாவது, இந்தப் பத்துக் குண நலன்களில் ஏதாவது ஒன்றோ இரண்டோ அல்லது பத்திலும் தலைவன் தலிவியைவிட உயர்ந்தவனாக இருப்பது ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் இவற்றில் ஒன்றில் கூட தலைவி மிக்கவளாக இருக்கக் கூடாது அப்படி இருந்தால் அது அன்பின் ஐந்திணைப் பாற்படாது. என்கிறார் இளம்பூரணர். எனவே, தலைவன் தலைவி இருவரும் பிறப்பு முதல் செல்வம் ஈறாக ஒத்த நிலையில் இருப்பதும் தலைவன் மிக்கோணாக இருப்பதும் மட்டுமே சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறையாக இருந்திருக்கின்றது.
சங்க இலக்கியங்கள் அகம் புறம் என்னும் இருபெரும் பிரிவுகளில் அடங்கும், அகம், என்பது வீட்டிற்கு உட்பகுதிகளிலும், வெளியிடங்களிலும் நிகழும் ஆண் பெண் உறவுகளான காதல் இல்லறம், ஊடல், பிரிவு, மக்களைப் பேணுதல் போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பகுதிகளை விளக்குகிறது. இதனை,
“வினையே ஆடவர்க் குயிரே வானுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரென”
(குறுந் (135: l2அ))
என்று குறுந்தொகை கூறுகின்றது.
‘புறம் என்பது, ஆண்மகன் போரிடுதல், பொருளீட்டுதல் போன்ற நிகழ்வுகளை விளக்கிச் சொல்கிறது. ஆண் - பெண் இருபாலருக்கிடையே ஏற்றத்தாழ்வுகள் நிலைபெற இவைகளே காரணமாகின்றன. சங்க நூல்களும் அதன் பின்னர் தோன்றிய காப்பியங்களும் பெண்களின் கற்பின் மேன்மையைப் புகழ்துரைக்கின்றன.
தலைவி தன் காமத்தைத் தலைவனிடமோ! பிறிரிடமோ வெளிப்படையாகப் பேசுதல் கூடாது. குறிப்பாகவும், சூழ்நிலைக்கேற்பவும் வெளிப்படுத்த வேண்டுமேயன்றி நேரடியாக உணர்த்தக் கூடாது என்பதை
‘நாணமும் மடனும் பெண்மைய ஆதலின்
குறியினும் இடத்தினும் அல்லது வேட்கை
நெறிப்பட வாரா அவள் வாயினான
(தொல். கள:17)
என்ற நூற்பா சுட்டுகின்றது. தலைவி கூற்றுரைக்கும் போது நாணும் கற்பும் கடவாமை வேண்டும் என்பதை
“உயிரினும் சிறந்தன்று நானே; நாணினும்
செயிர்தீர்க் காட்சிக் கற்புச் சிறந்தன்று”
(தொல். கள : 22)
என்ற நூற்பா எடுத்துரைக்கின்றது.
பெண்களின் கற்பின் திறம் பற்றியும், அதன் மூலம் பெண்கள் கற்பைத் தங்கள் தனிப்பெரும் குணமாகப் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. எனினும் அவை பெண்களுக்கேயுரிய தனிப்பெரும் குணமாகிய கற்பை ஆண்களும் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தவில்லை. அதற்கு மாறாக ஆண்கள் எத்தனை பெண்களோடும் உறவு கொள்ளலாம் என்ற பரத்தையர் ஒழுக்கத்தைக் காட்டுகிறது. இவ்வாறு ஆண்கள் நடந்துக் கொள்வது அவர்களது தனித்த உரிமையாகவும், இதற்கும் மேலாக அவர்களுக்குப் பெருமை அளிக்கும் செயலாகவும் கருதப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டு புலவராகிய பாரதியார் தான்
“கற்புநிலை யென்று சொல்லவந்தால் - அதை
இருகட்சிக்கும் பொதுவில் வைப்போம்”
என்கிறார். ‘கற்பு’ என்பது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அவற்றில் பங்குண்டு. இருவரும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒழுக்கம் கற்பு என்கிறார்.
சங்க நூல்களில் காணப்படும் களவொழுக்கம் அக்காலச் சமூகம் பெண்களுக்குத் தங்கள் கணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளது. தங்கள் விருப்பத்திற்குப் பெற்றோர் உடன்படவில்லை எனில் தாங்கள் விரும்பிய ஆண் மகனுடன் உடன் போக்கு மேற்கொண்டு தங்கள் உரிமையை நிலைநாட்டினர் இதைப் போலவே வீரத்திலும் பெண்கள் சிறந்து விளங்கினர் என்பதற்குச் சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. ஆயினும் ஆணுக்கொரு நீதி; பெண்ணுக்கொரு நீதி என்ற சமுக நீதிமுறையும் ஆண் உயர்ந்தவன்; பெண் தாழ்ந்தவள் என்ற கருத்தும் சங்ககாலம் முதலே சமூதாயத்தில் காணப்படுகின்றன. இவை, காப்பிய காலங்களில் வலிமையுற்று பெண்களின் நிலை வீழ்ச்சியுரக் காரணமாயின, நீதி நூல்கள் ஆண் - பெண் ஏற்றத் தாழ்வுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி ஆண்களால் அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள் என்றும் வலியுறுத்துகின்றன. இவ்வாறு இலக்கியத்தில் ஆண் - பெண் ஏற்றத்தாழ்வு நிலையாக காணப்படுவதை பார்க்க முடிகிறது.
சங்க காலம் முதல் பெண்ணுக்கு வகுக்கப்பட்டு வந்த கற்புக் கோட்பாடுகளைப் பிற்கால நீதி நூல்களிலும் காணமுடிகிறது.
“கற்பு எனப்படுவது சொல்திறம் பாமை”
என்கிறது கொன்றை வேந்தன்.
ஒரு பெண்ணைப் பிற ஆடவன் நெஞ்சில் நினைத்து விட்டாலே அப்பெண் கற்பிழந்து விடுவாள் என்று கருதிய சமுதாயத்தில் பெண் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டும் என்று கற்புடைமையைப் பெண்ணிற்கு மட்டும் உரியதாக்கியிருப்பதை.
“காவல் தானே பாவையர்க்கு அழகு”
என்று கூறுவதிலிருந்து அறிய முடிகிறது. அதாவது பெண் தன்னை அழகு படுத்திக் கொள்ளக் கூடாது, வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது, பிற ஆடவனின் கண்ணில் படக்கூடாது என்பன போன்ற கருத்தாக்கங்களை இவ்வரிகள் மறைமுகமாகப் பெண்ணுக்கு அறிவுறுத்தியிறுக்கிறது.
கணவனுக்கு பணிவிடை செய்தும் அவனைத் தொழுதும் வாழ்பவள் தான் கற்புடைய பெண் என்ற கருத்து நிலவியதை,
“குலமகட்டு அழகு தன் கொழுநனைப் பேனுதல்”
என்று குமரகுருபரரும் கூறியுள்ள கருத்துகளிலிருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.
கற்புக் கோட்பாட்டுக்குள் சிக்கிப் பெண்கள் தங்கள் சுயம் இழந்திருப்பதை மேற்கூறிய கருத்துக்கள் அறிய வைக்கின்றன.
இவ்வாறு பிள்ளைப் பருவத்திலிருந்து, ஆண் - பெண் வேறுபாடுகளைக் கற்பித்தும் பெண்களை அடக்குமுறைக்கு உட்படுத்தியிருப்பதனையும் நாம் சங்க இலக்கியங்கள் வழியாக அறிந்து கொள்ள முடிகின்றது.