பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
33. குட்டி
தமிழில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர் காரண காரியத்துடன் அமைந்துள்ளது சிறப்பிற்குரிய ஒன்றாகும். தொல்காப்பியர் மரபியலில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள் ஆகியவற்றிற்கு இளமை முதல் வழங்கும் பெயர்களையும், ஆண், பெண் ஆகியவற்றிற்குரிய பெயர்களையும் எடுத்தியம்பியுள்ளார். அவை பழந்தமிழரின் தாவர, விலங்கியல் குறித்த அறிவை உணர்த்துவதாக உள்ளது. பழங்காலத்தில் தமிழர்கள் நுண்மாண் நுழைபுலத்துடன் விளங்கியிருப்பது மரபியலில் வெள்ளிடை மலையாகப் புலப்படுகின்றது.
தொல்காப்பியர் குறிப்பிடும் இளமைப் பெயர்களில் குட்டி என்பது ஒன்றாகும். மாடு, புலி உள்ளிட்ட விலங்குகளின் இளமைப் பெயருள் குட்டி என்பது ஒன்றாகும். இதனை,
‘‘மூங்கா, வெருகு, எலி, மூவரி அணிலொடு
ஆங்கவை நான்கும் குட்டிக்குரிய’’ (தொல்.பொருள்.,மரபு.,1505)
என்ற மரபியல் நூற்பா தெளிவுறுத்துகின்றது. இக்குட்டி என்பது வழக்கில் ஆட்டுக் குட்டியையும், நாய்க்குட்டி, கன்றுக்குட்டி உள்ளிட்டவற்றைக் குறிக்கவும், சில நேரங்களில் பெண் குழந்தைகளைக் ‘குட்டி’ என்றும் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. குட்டி என்பதை வைத்து மக்கள் பல்வேறுவிதமான பழமொழிகளை வழங்கி வருகின்றனர். அப்பழமொழிகள் மக்களின் வாழ்வியல் நடைமுறைகளை விளக்குவதாக அமைந்துள்ளது.
ஆடும் குட்டியும்
பெரும்பாலும் மக்கள் குறியீடுகளை வைத்துக் கொண்டே வழக்கில் பேசுவர். சிலரது செய்கைகளைக் கண்டு மனதுக்குப் பிடிக்காமல் ஒருவர் ஒதுங்கி விடுவர். அல்லது ஏதோ ஒரு காரணமாக ஒருவரை ஒருவர் பகைத்திருப்பர். அங்ஙனம் பகைத்திருக்கும் நிலையில் வீட்டில் உள்ள பெரியவர்களைத் தவிர மற்றுள்ள பேர்கள் பகைத்துக் கொண்டவருடன் பேசி உறவாடுவர். இதனைப் பார்த்தவர்கள்,
‘‘ஆடு பகை குட்டி ஒறவா?’’
என்று கேட்பர்.
இங்கு ஆடு என்பது வீட்டில் உள்ள பெரியவர்களையும், குட்டி என்பது சிறியவர்களையும் குறிக்கும். பெரியவர்கள் ஒருவருடன் பகை என்றால் சிறியவர்களும் அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும். மாறாகப் பேசினால் அது தவறானதாகும். ஒருவருடன் பேசக் கூடாது என்றால் அவருடன் எத்தகைய தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பது குடும்பங்களில் இன்றும் எழுதப்படாத சட்டமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய பகை என்பது தலைமுறை தலைமுறையாகத் தொடருவதும் உண்டு. இந்த நிலையில் பகைவருடன் எந்தச் சூழலிலும் உறவு கொள்ளக் கூடாது என்பதை இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது. ஏனெனில் பகைவர் என்றும் வஞ்சக எண்ணத்துடனேயே இருப்பர். அவர்கள் மனதிற்குள் திட்டம் தீட்டிக் கொண்டே இருப்பர். அதனால் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை வாழ்க்கைச் சிந்தாந்தத்தையும் இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது.
குட்டியும் அழகும்
இளமையில் எந்த உயிரும் அழகாகத்தான் இருக்கும். அவை வளர வளர உருவம் மாறி பார்ப்பதற்கு வெவ்வேறு வடிவங்களாகிவிடும். அப்போது பார்ப்பதற்கு மனம் ஒப்பாது. இது இயற்கையானது. சிலர் இளமையில் உள்ள அழகைப் பார்த்து மயங்கி தங்களது நிலைமையைச் சிந்திக்காது தவறான பாதையில் செல்வர். அவர்கள் சென்ற சில காலத்திலேயே தங்களின் தவறை உணர்ந்து வருந்துவர். அப்போது அவர்களால் அதிலிருந்து மீளமுடியாத நிலை ஏற்படும். அதனால் இளமையில் உள்ள அழகினைப் பார்த்து ஏமாறி தன்நிலையிலிருந்து பிறழ்ந்து விடுதல் கூடாது என்பதை,
‘‘குட்டியில பன்னி கூட அழகாத்தான் இருக்கும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
பன்றி சாக்கடையிலும் அழுக்கிலும் வாழும். கழிவுகளை உண்ணும். அதன் குட்டி இளமையில் அழகாக இருக்கும். அதனைக் கண்டு மயங்கினால் பின்னர் வருந்த நேரிடும். அது போன்று சிலரின் இளமை அழகைக் கண்டு மயங்கி அவருடன் தொடர்பு கொண்டால் பின்னர் அத்தொடர்பே மிகுந்த பிரச்சனைக்குரியதாக ஆகி வாழ்க்கையினை இருட்டடிப்புச் செய்துவிடும். அதனால் உருவத் தோற்றத்தைக் கண்டு மயங்கி விடுதல் கூடாது என்பதை இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகின்றது.
தாயும் குட்டியும்
தாயின் வீரம் குட்டியிடம் அதிகமாக இருக்கும். ஆனாலும் தாயின் வேகத்தைவிட அதிகமாக இருக்கும். இதனை அனைத்து உயிரினங்களிலும் நாம் காணலாம். இதற்குத் தாய் எப்படி இருக்கின்றதோ அதைப் பார்த்துக் குட்டியும் கற்றுக் கொண்டு காலச் சூழல்களுக்கேற்ப வாழக் கற்றுக் கொள்ளும். இது இயற்கையாகும். மனிதர்களும் இவ்வாறே இருப்பர். திறமையானவரின் குழந்தையும் திறமையானவரை விட அதிகமான அளவில் திறமையானதாக விளங்கும். இதனை,
‘‘தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயும்’’
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
தாய்க்கு உள்ள வீரியம் குட்டிக்குப் பல மடங்கு அதிகமாக இருக்கும். மனிதனுக்கும் இது பொருந்தும். தந்தை சிறு சிறு குற்றங்கள் செய்தால் மகன் அதனை விடப் பலமடங்கு பெரியதாக உள்ள குற்றங்களைச் செய்வான். இது உலக இயல்பாகும். அதனால் குழந்தைகளை மிகவும் கவனமாகவும் நல்லவர்களாகவும் வளர்க்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் திறமையானவர்களாக வளர்ந்து இந்தச் சமுதாயத்திற்குப் பயன்படுவர் என்ற அரிய பண்பாட்டு நெறியையும் தெளிவுறுத்துவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.
குட்டியும் குடியும்
கிராமப் புறங்களில் வீட்டில் ஆடு, மாடுகள், கோழிகள் ஆகியவற்றை வளர்ப்பர். இவை வருமானம் தருகின்றவையாகும். மேலும் இக்கோழியோ, ஆடோ, மாடோ பகையாளிகளின் வீட்டிற்குச் சென்று விட்டால் அவர்கள் அவற்றைக் கல்லால் எறிந்து விரட்டிவிட்டு சண்டைக்கு வருவர். அதையும் மீறி பகைவருடைய வளர்ப்புப் பிராணிகள் வந்துவிட்டால் அவற்றைக் கொன்றுவிடுவர். இதனைக் கண்ட இழப்பிற்கு உரியவர்கள், அட வாயில்லா ஜீவன்களைக் கொல்றாங்களே அவங்க நல்லா இருப்பாங்களா? இதுனாலே நாங்க கெட்டுப் போக மாட்டோம்.
‘‘குட்டி செத்தா குடி நொடிக்கப் போகுது’’
என்னமோ ஆடு, மாடுன்னா போகத்தான் செய்யும். இதுக்குப் போயி அதைக் கொல்லுவாங்களா?’’ என்று கூறுவர்.
ஆட்டுக் குட்டியோ, நாய்க் குட்டியோ, அல்லது கன்றுக் குட்டியோ இறந்து போய் ஒரு குடும்பம் அழிந்து விடாது. அதனால் சிறிது பொருளிழப்பு நேரிடுமே தவிர, வேறொன்றும் நிகழாது. இதனை உணர்ந்து பகை உணர்வை விட்டு பிற உயிர்களிடத்தில் அன்பு பூண்டு வாழ வேண்டும். அதுவே நல்ல வாழ்க்கையாகும். அதை விடுத்து பகைவரைப் பழிவாங்குகிறேன் என்பதற்காக வளர்ப்புப் பிராணிகளை வதைத்தல் கூடாது என்ற கருத்தை மேற்குறித்த பழமொழி நமக்கு நல்குகின்றது.
குட்டியும் ஆழமும்
சிலர் ஒரு காரியத்தில் இறங்குவதற்கு யோசிப்பர். தாங்கள் முதலில் அதனைச் செய்ய மாட்டார்கள். மாறாக தம் கீழ் வேலை பார்ப்பவரையோ அல்லது தம்முடன் இருப்பவர்களையோ அந்தக் காரியத்தைச் செய்யுமாறு கூறிவிட்டுப் பின்னர் அவர்கள் இறங்கிச் செய்வர். இன்னும் சிலர் சில பொருள்களையோ, அல்லது பிறவற்றையோ பிறரை வாங்குமாறு கூறிவிட்டு அது நன்றாக உள்ளதா என்று அறிந்த பின்னர் அதனைத் தாங்கள் வாங்குவர். இவரின் செயலைக் கண்ணுறும் மற்றவர், என்னய்யா,
‘‘குரங்கு குட்டிய விட்டு ஆழம் பார்த்த கதையால்ல இருக்கு’’
என்று கூறுவர்.
ஒரு குரங்கானது தண்ணீரில் உடன் இறங்காது இளைய குரங்குகளை இறங்க வைத்து ஒன்றும் ஆகாது என்று தெரிந்து கொண்ட பின்னர் தண்ணீரில் இறங்கும். அது போன்றே சுயநலமிக்க மனிதர்கள் தாங்கள் நேரடியாக எந்த ஒரு செயலிலும் இறங்காது மற்றவர்களைத் தூண்டிவிட்டு அச்செயலைச் செய்யுமாறு கூறிவிட்டுப் பின்னர் அதன் விளைவுகளை அறிந்து கொண்டு பின்னர் தாங்கள் அந்தச் செயலில் இறங்குவர். இத்தகையவர்களை எந்த நிலையிலும் நம்புதல் கூடாது என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி நமக்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
குட்டியும் குலைப்பும்
ஒரு தவறு நேர்கின்ற போது அதனைப் பெரியவர்கள் பார்த்து அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். சிறியவர்களால் அதனைத் தடுத்தல் இயலாது. பெரியவர்களால் செய்ய இயலுகின்ற செயல்களைப் பெரியவர்களே செய்தல் வேண்டும். மாறாகச் சிறியவர்கள் தாங்கள் முடிக்கின்றோம் என்று மார்தட்டிக் கொண்டு இறங்கக் கூடாது. இதனை முழுமையாக உணர்ந்து நடந்து கொள்ளல் வேண்டும். அவ்வாறு செய்யாதிருந்தால் செயலானது முழுமையாக நிறைவுறாது. தோல்வியிலேயே முடியும். இதனை,
‘‘குட்டி கொலைச்சா (குலைச்சா) விடியப் போகுது’’
என்ற பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகின்றது.
இங்கு குட்டி என்பது சிறியவர்களைக் குறிக்கும். சிறியவர்களால் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்பதையே இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது. விடிதல் என்பது பிரச்சனைக்குத் தீர்வினைக் குறிக்கும். பெரியவர்கள் எளிதில் ஒரு பிரச்சனையையோ, அல்லது செயலையோ செய்து விடுவர். ஆனால் சிறியவர்களால் எதுவும் தெளிவுறச் செய்ய இயலாது என்பதையே இப்பழமொழி சுட்டுகின்றது.
பகை உணர்ச்சிகளைக் கைவிட்டு நிதானத்துடனும், நல்லெண்ணத்துடன் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து சமுதாயத்திற்க ஒப்படைக்க வேண்டும். சிறியவர்கள் நிதானத்துடன் நடந்து கொண்டு ஒரு செயலைச் செய்தல் வேண்டும். அப்போதுதான் எதிலும் வெற்றி பெற முடியும் என்பன போன்ற பல்வேறு பண்பாட்டு நெறிகளை குட்டி குறித்த பழமொழிகள் நமக்கு வழங்குகின்றன. நற்பண்புகளுடன் வாழ்ந்து வாழ்வை வசந்தமாக்குவோம். அவ்வாறு வாழ்ந்தால் இந்த வாழ்க்கை எப்போதும் பூத்துக்குலுங்கும் பூஞ்சோலையாகவே காட்சி தரும். வாழ்க்கையும் மணங்கமழும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.