பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
40. ஊர்கள்
உலகில் பல ஊர்கள், நாடுகள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும், நாட்டுக்கும், தனித்த பெருமை உண்டு; சிறப்பு உண்டு. ஒரு ஊருக்கோ, நாட்டிற்கோ நாம் சென்றால் அதற்கென்று என்ன சிறப்பு உண்டு என்பதைத் தெரிந்து கொள்வோம். பின்னர் அதற்கேற்றாற் போன்று அவ்வூரில் கிடைக்கும் பொருள்களை நினைவாக வாங்கி வருவது அனைவருடைய இயல்பாக உள்ளது. நாம் ஒரு ஊருக்குச் சென்றால் இந்த ஊருல என்ன சிறப்பு? என்று கேட்பதும் வழக்கமாக உள்ளது என்பது நோக்கத்தக்கது.
மதுரை மல்லிகை, மணப்பாறை முருக்கு என்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு உள்ளது. அச்சிறப்புகளைக் குறித்த பதிவுகள் பழமொழிகளில் காணக்கிடக்கின்றன. இப்பழமொழிகள் அவ்வூரின் சிறப்பை எடுத்துரைப்பவையாக அமைந்துள்ளன.
திருவாரூர்த் தேர்
ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு அழகு உண்டு. அதனை விரும்பிப் பார்ப்பவர்களின் கண்களுக்கு மட்டுமே அவ்வழகு நன்கு புலப்படும். ஓர் ஊரில் ஒன்று சிறப்பானதாக இருந்தால் அது குறித்து அனைத்து ஊர்களிலும் மக்கள் பேசுவர். திருவாரூர் தேர் மிகப் பெரியது. அத்தேர் நகர்ந்து வருவதைப் பார்ப்பதே தனி அழகாகும். இத்திருவாரூர்த் தேர் குறித்துத் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அறிந்துள்ளனர். அதன் சிறப்பை நமது முன்னோர்கள்,
“திருவாரூர்த் தேர் அழகு”
என்றும்,
“தென்னைக்குத் திருவாரூர்த்தேர் ஓட”
என்றும் பழமொழிகளில் கூறியுள்ளனர். இத்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரியது என்று கூறுவர். அதன் தோற்றமும் கம்பீரமும் பார்ப்பவரை வியப்படையச் செய்யும். ஒவ்வொரு பயிருக்கும் எவ்வாறு இடைவெளி விட்டு நட்டுப் பராமரிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றபோது தென்னையைப் பயிரிடும் போது திருவாரூர்த் தேர் போகக் கூடிய அளவிற்கு இரு தென்னைகளுக்கிடையே இடைவெளிவிட்டு நட்டுப் பராமரிக்க வேண்டும் என்று தெளிவுறுத்தியுள்ளனர். அப்போதுதான் நல்ல மகசூல் கிட்டும் என்பதை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் மொழிந்துள்ளனர்.
திருவாரூரும் பிறப்பும்
திருவாரூர் இறையருள் பெற்ற சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்த ஊர். அவ்வூரில் பிறந்ததனால் அவரை நம்பி ஆரூரர் என்று அழைப்பர். இத்திருவாரூர்த் தலம் சிவபெருமானின் அருள் நிரம்பிய தலமாகும். அதனால் இத்தலத்தில் பிறந்தாலே முக்தி, வீடுபேறு கிட்டும் என்று ஆன்மீகச் செல்வர்கள் குறிப்பிடுகின்றனர். நமது முன்னோர்கள் இதனை,
“திருவாரூரில் பிறக்க முக்தி”
என்று பழமொழி வாயிலாகக் கூறியுள்ளது நோக்கத்தக்கது.
திருவாரூரில் பிறந்தாலே ஓர் உயிரானது சிவபெருமானின் அருளைப் பெற்று அவரது திருடிப்பேறைப் பெறும். அத்தகைய புனிதமான மண்ணாக, திருத்தலமாக இவ்வூர் விளங்குகின்றது என்பதை இப்பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.
காசியும் முக்தியும்
திருவாரூரைப் போன்றே இந்துக்களுக்கு காசி முக்கியமான நகரமாகும். கங்கைக் கரையில் உள்ளதாலும் சிவபெருமான் அத்தலத்தில் எழுந்தருளி இருந்து அனைவருக்கும் அருள்பாலிப்பதாலும் இத்தலம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகின்றது. எங்கு பிறந்தாலும் வாழ்வின் இறுதியில் காசிமாநகருக்கு வந்து இறப்பதை அனைவரும் பெரும்பேறாகக் கருதுகின்றனர். காசியில் இறப்பதற்குக் கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கை மக்களிடையே காலங்காலமாக நிலவி வருவது நோக்கத்தக்கது, காசியின் சிறப்பினை,
“காசியில் இறக்க முக்தி”
என்ற பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகிறது.
காசியும் கருமமும்
பிறவிகளுக்குக் காரணம் நாம் செய்யும் கருமங்களே ஆகும். அதாவது நாம் செய்யும் வினைகளே நமது பிறப்பிற்குக் காரணமாகின்றது. நல்வினை செய்தால் நன்மையும், தீவினை செய்தால் தீவினையும் ஏற்படுகிறது. ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்கள் (குற்றங்கள்) நீங்கினால் மட்டுமே அடுத்த பிறப்பு ஓர் உயிருக்கு இராது. மும்மலங்களுள் மிகவும் வலிமை வாய்ந்தது கன்மம் ஆகும். இது அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக அமைந்து வாழ்வைக் குலைக்கின்றது. வாழ்வின் நன்மைக்கும் தீமைக்கும் கருமங்களே காரணங்களாகின்றன.
நாம் செய்யக் கூடிய பாவச் செயலானது தொடர்ந்து வந்து நம்மைத் துன்புறுத்தும். நம்முடைய நிழலானது எவ்வாறு நம்மைவிட்டு அகலாதோ அதுபோன்று நாம் செய்த பாவவினைகளும் நம்மைவிட்டு அகலாது. இப்பாவவினைகள் அகல காசிக்குச் சென்று காசிவிசுவநாதரை மனமுருகி வழிபடவேண்டும். மனமுருகி வழிபாடு செய்தால் நாம் செய்த கரும வினைகள் ஓடிவிடும். காசிக்குச் சென்று நாம் வழிபட்டாலும் சில பாவங்கள் தீராது. இதனை,
“காசிக்குப் போனாலும் கருமம் தொலையாது”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. சிலர் கொடிய பாவச் செயல்களைச் செய்துவிட்டு காசிக்குச் சென்று இறைவனை வழிபட்டால் அதன் தீமை குறைந்துவிடும் என்று கருதுகின்றனர். ஆனால் சிலர் செய்த பாவம் எத்தனை முறை இறைவனை வேண்டினாலும் தீராது. தீவினை செய்தவரே அதன் பலனை அனுபவிக்க வேண்டும் என்பதை இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகிறது.
காசியும் பட்டும்
காசிக்கு வரணாசி என்ற பெயரும் உண்டு. இந்நகரம் பட்டுத்தொழிலுக்குப் பெயர்போனது. பட்டு நெசவு செய்வோர் இங்கு அதிகம் உள்ளனர். யார் சென்றாலும் நெசவு தொடர்பான தொழிலைச் செய்தால்தான் அவருக்கு உண்ண வழிகிடைக்கும். இதனை,
“காசிக்குப் போனால் காலாட்டிக்கிட்டே சாப்பிடலாம்”
என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சிலர் காசி சென்று காலாட்டிக் கொண்டே இருந்தால் சாப்பிடலாம் என்று இப்பழமொழிக்கு தவறான பொருள் கொள்கின்றனர். நெசவுத் தொழிலில் காலால் மிதித்துத் தறியை இழுத்து அடித்து ஓட்டினால் மட்டுமே துணியை நெய்ய முடியும். அவ்வாறு வேலை செய்தால் மட்டும அங்கு உணவு உண்பதற்கு வழி ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டே இப்பழமொழியைக் கூறியுள்ளனர். காசிப் பட்டை பனாரஸ் பட்டு என்று குறிப்பிடுவதிலிருந்தே நாம் இதனை உணர்ந்து கொள்ளலாம்.
திருவண்ணாமலையும் நினைவும்
வாழ்வில் நடைபெறும் ஒவ்வொன்றையும் நாம் நினைவில் வைத்திருப்பது என்பது இயலாது. ஆனாலும் சில நிகழ்வுகள் நமது நினைவுகளில் பதிந்துவிடும். மறையாது. சிலவற்றை நினைக்கும்போது மனம் மகிழ்ச்சியில் ததும்பும். சிலவற்றை நினைக்கின்ற போது நல்லவை நடக்கும். சிலவற்றை நினைக்கும் போது ஏன்தான் நினைத்தோமோ என்ற எண்ணம் வரும். இன்னும் சிலவற்றை நினைக்கின்ற போது இதயத்தைப் பிழிவதைப் போன்ற நெருடல் வரும். அதுகூட சுகமானதாக இருக்கும். அது போன்று சில ஊர்களை நினைக்கின்றபோது நம் மனதில் இனிமையும் கசப்பும் மாறி மாறி வருவதுண்டு. அந்த வகையில் திருவண்ணாமலையினை நினைக்கின்ற போதே நல்லவை நிகழத் தொடங்கும்.
திருவண்ணாமலையில்தான் இறைவன் அழல் வடிவில் நின்று அருள்புந்தான். திருமால், பிரமன் இருவரது ஆணவத்தையும் அடக்கி அருள்புரிந்த தலமாகவும் இத்தலம் திகழ்கிறது. இத்தலத்திலுள்ள இறைவனை,
“ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி”
என்று மாணிக்க வாசகர் குறிப்பிடுகின்றார். இத்தகைய புனிதமான திருவண்ணாமலையினை நினைத்தவுடன் இறைவனது அருள் நமக்குக் கிடைக்கும். இதனை,
“திருவண்ணாமலையை நினைக்க முக்தி”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. திருவண்ணாமலைத் திருத்தலத்தின் பெருமையை விளக்குவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.
திருநெல்வேலியும் அல்வாவும்
ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிறப்பான உணவுவகை கிடைக்கும். அந்த வகையில் திருநெல்வேலியை நினைத்தவுடன் நமது நினைவுக்கு வருவது இருட்டுக்கடை அல்வாதான். நினைத்தவுடன் வாயில் நீரூறும். அந்த அளவிற்கு திருநெல்வேலி அல்வா பெயர் பெற்றது. திறமை வாய்ந்தவர்களிடம் சென்று அவர்களிடமே அவர்கள் கற்றுக் கொடுத்ததைச் சிலர் செய்துகாட்டுவர். அப்போது அவர் “நான்தான் உனக்குச் சொல்லிக் கொடுத்தேன். என்னிடமே வந்து உன்னோட திறமையைக் காட்டுகின்றாயா?” என்று கூறி,
“திருநெல்வேலிக்கே அல்வாவா?”
என்று கேட்பார்.
இது வழக்கில் வழங்கப்படும் சொற்றொடர் போன்று காணப்படினும் இது பழமொழியாகும். இப்பழமொழி,
“கொல்லன் தெருவில் சென்று ஊசி விற்பது மாதிரி”
என்ற பழமொழி போன்று அமைந்திருப்பது நோக்கத்தக்கது. அறிவில் சிறந்தவர்களிடம் அடக்கத்துடனும் பணிவுடனும் நடந்து கொள்ள வேண்டுமேயன்றி தனது திறமையைக் காட்டுவதாக எண்ணி அவர்களை அவமதித்தல் கூடாது என்ற பண்பாட்டு நெறியையும் இப்பழமொழி நமக்கு தெளிவுறுத்துகிறது.
மதுரையும் வழியும்
மதுரை என்று கூறினால் நமது நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சியம்மன் கோவிலும், மதுரை மல்லிகைப் பூவுமே ஆகும். மதுரை மல்லிகை இன்று காப்புரிமை வாங்கப்பட்டிருப்பது சிறப்பிற்குரியது. இம்மதுரையை வைத்து நமது முன்னோர்கள் பண்பாட்டை உணர்த்தும் பழமொழி ஒன்றை வழங்கி வருவது நோக்கத்தக்கது.
வாயினைத் திறந்து தங்களுடைய உரிமைகளை ஒருவர் கேட்டுப் பெறவேண்டும். மற்றவர்கள் தமக்காகக் கேட்பார்கள் என்று மெத்தனமாக இருத்தல் கூடாது. வாய்மூடி மெளனியாக எதற்கும் செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது. இழப்புகளே மிஞ்சும். மேலும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அமைதியாக இருப்பதும் துன்பம் தரும். தங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றாலும் அதனை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். அவனே வாழ்வில் முன்னேறுவான். இத்தகைய வாழ்வியல் சிந்தனையை,
“மதுரைக்கு வழி வாயிலே”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
மதுரைக்கு வழி தெரியவில்லை என்றால் வாயைத் திறந்து பிறரிடம் வழியினைக் கேட்டுத் தெரிந்து கொண்டு நாம் செல்லவேண்டும். அப்போதுதான் நாம் செல்லவேண்டிய ஊருக்கு எந்தத் தடங்கலும் இன்றி செல்லமுடியும். வாய் உண்பதற்கு மட்டுமே படைக்கப்பட்டதல்ல. நல்லவற்றைப் பேசவும் நல்லவற்றைப் பிறரிடம் கூறுமாறு கேட்கவும் இறைவனால் படைக்கப்பட்டது. இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் வாழ்தல் வேண்டும் என்ற வாழ்வியல் நெறியை இப்பழமொழி அறிவுறுத்துவது குறிப்பிடத்தக்கது.
பட்டுக்கோட்டையும் - கொட்டைப் பாக்கும்
சிலரிடம் நாம் ஒன்று கேட்டால் அவர் ஒன்று சொல்லுவார். நாம் எதைக் கேட்டாலும் அந்த நபர் கூறியதையே கூறிக் கொண்டிருப்பார். சிலருக்கு நாம் கேட்டது புரியாமல் இருக்கும். அதனால் வேறொன்றினைக் கூறுவர். வேறு சிலரோ மாற்றுத் திறனாளியாக இருக்கும் காரணத்தால் நாம் கூறியவற்றை விளங்கிக் கொள்ளாது அவர் நினைத்ததைக் கூறிக்கொண்டிருப்பார். இத்தகைய மனிதர்களின் இயல்பினை விளக்குகின்ற வகையில்,
“பட்டுக்கோட்டைக்கு வழி எதுடான்னு கேட்டா கொட்டைப் பாக்கு காசுக்கு எத்தனைன்னானாம்”
என்ற பழமொழி அமைந்துள்ளது. மற்றவர்கள் என்ன கூறுகின்றார்கள் எனபதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றாற் போன்று நாம் வாழ வேண்டும் என்று இப்பழமொழி நமக்கு அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது.
திண்டுக்கல்லும் வைரக்கல்லும்
திண்டுக்கல் என்ற ஊரினை நாம் கேட்டதும் நமக்குப் பூட்டுத்தான் நினைவுக்கு வருகின்றது. பூட்டுக்குப் பெயர்போன நகரமாகத் திண்டுக்கல் திகழ்கின்றது. ஒருவர் நம்மைப் பற்றி இழிவாகத் திட்டும்போது அதனைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு அமைதிகாத்தல் வேண்டும். அதைவிடுத்து நாமும் சரிக்குச் சமமாக அவரைத் திட்டினால் நமக்கும் அவருக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லாது போய்விடும். ஒருவர் நம்மைத் திட்டினால் அமைதி காத்தல் வேண்டும். அவ்வாறு நாம் இருந்தால் அந்த ஏச்சுக்கள் அவரையே சென்றடையும். நம்மை வந்தடையாது. நம்மதிப்புக் கூடுமே தவிர குறையாது. இதனை,
“திட்டத் திண்டுக்கல்லு வையவைய வைரக்கல்லு”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
கல்லிலே வைத்துக் கூர்மையான ஒரு பொருளை எவ்வளவு நேரம் தீட்டினாலும் அக்கல்லானது அப்படியே இருக்கும். அது மாறாது. தீட்டத் தீட்ட திண்டுக்கல்லுதான் (மேடான உருண்டு திரண்டு இருக்கும் கல்) பட்டைத் தீட்டத் தீட்ட வைரம் ஒளிரும் தன்மை உடையது. அதுபோன்றே ஒருவரைத் துன்பம் வந்துற்ற போது அதனைக் கண்டு கலங்காது எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும். பிறர் தரும் துன்பம் நம்மைப் பக்குவப்படுத்தி மென்மேலும் முன்னேற்றமடையச் செய்யும் என்ற வேறொரு வாழ்வியற் கருத்தையும் இப்பழமொழி நமக்குத் தருகின்றது.
ஊர்கள் சிறப்பாக விளங்குவதைப் போன்று அவ்வூரில் வாழும் நாமும் சிறப்பானதொரு வாழ்க்கையை வாழவேண்டும். அப்போதுதான் நமக்கும் பெருமை; நம்மைச் சார்ந்தோருக்கும் பெருமை. ஊரினை வைத்து நம் முன்னோர்கள் கூறியுள்ள பண்பாட்டு நெறிப்படி வாழ்வோம். வாழ்க்கை ஒளிரும்!
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.