பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்
முனைவர் சி. சேதுராமன்
58. பகல் - இரவு
காலத்தைப் பொழுது என்று குறிப்பிடுவர். இலக்கண நூலார் ஓராண்டினையும் நாளினையும் ஆறு பிரிவுகளாகப் பகுத்துரைப்பர். வழக்கில் பெரும்பாலும் பகல், இரவு என்று குறிப்பர். ஒரு பகலும் ஓரிரவும் கொண்டதே ஒரு நாள் ஆகும். இப்பொழுதுகளின் பிரிவுகளாக மணி, நொடி, நிமிடம், விநாடி, விகடிகை என்று பலவற்றை மக்கள் வழக்கில் வழங்குகின்றனர்.
பழங்காலத்தில் நாழிகை என்று நேரத்தைக் குறிப்பிட்டமை நோக்கத்தக்கது. இந்நாழிகையை அளந்தறியக் கூடியவர்களும் அன்று அரசனுடைய அரண்மனையில் இருந்தனர், அவர்களுக்கு நாழிகைக் கணக்கர் என்று பெயர். இந்நாழிகைக் கணக்கர் மணற் கடிகாரம், நிழற் கடிகாரம், நீர்க் கடிகாரம் என்பன போன்ற கருவிகளைக் கொண்டு பொழுதுகளை அளந்தறிந்து அரசனுக்கு அறிவித்தனர்.
இக்காலத்தை நேரம் என்றும் குறிப்பிடுகின்றனர். ஜோதிடத்தில் நாள் நட்சத்திரம், எமகண்டம், குளிகை, ராகு காலம் என்று பலவாறு குறிப்பிடுவதைக் காணலாம். ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்று பெரியோர்கள் கூறுவதும் நோக்தக்கதாகும். ஒரு நாளை, வைகறை, விடியல், நண்பகல், மாலை ஏற்பாடு, யாமம் என்று ஆறு கூறுகளாகப் பழந்தமிழர்கள் பிரித்தனர். இதனை நாம் இன்று, அதிகாலை, காலை, முற்பகல், பிற்பகல், மாலை, இரவு, நள்ளிரவு என்று கூறி வருகின்றோம்.
இக்காலங்களை வைத்துப் பெரியோர்கள் பழமொழிகளைக் கூறி பண்பாட்டு நெறிகளையும் வாழ்வியல் முறைகளையும் விளக்கிச் சென்றுள்ளனர். இப்பழமொழிகள் நமக்கு வாழ வழிகாட்டும் ஒளி விளக்குகளாகத் திகழ்கின்றன.
பகல் - இரவு
பகலில் தான் பெரும்பாலும் அனைவரும் அனைத்து வேலைகளையும் செய்வர். அதிகாலையில் எழுந்து அன்றையப் பொழுதில் நாம் என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை வேலையையும் முறைப்படி செய்து முடித்தல் வேண்டும். அதுபோன்றே பிறரைப் பற்றியோ அல்லது முக்கியமான யாரும் அறியக் கூடாத இரகசியங்கள் குறித்தோ நாம் பேசும்போது கவனமாகப் பேச வேண்டும். இல்லையெனில் அதனைப் பற்றிப் பிறர் அறிந்து அச்செயலைச் செய்யத் தடையாக மாறிவிடுவர். அதுமட்டுமன்றி செயலைச் செய்பவருக்கு இடையூறு விளைவிப்பர். அதனால் எதை எதை நாம் எவ்வெவ்வாறு பேசவேண்டும் என்று வரைமுறையறிந்து பேச வேண்டும். எதை வேண்டுமானாலும் எப்படிப்பட்ட இடத்திலும், நேரத்திலும் பேசக் கூடாது. காலம் அறிந்து இடமறிந்து சூழல் அறிந்து பேச வேண்டும் என்பதை,
“பகல்ல பக்கம் பாத்துப் பேசு இராத்திரியில அதுவும் பேசாதே”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
பகல் நேரத்தில் ஆள் நடமாட்டம் இருக்கும். அதனால் மறைபொருளைப் பகிரங்கமாக அனைவரும் அறியப் பேசக் கூடாது. அதே போன்று பிறரைப் பற்றியும் பேசுதல் கூடாது. பகலில் அக்கம் பக்கத்தில் இருப்போர் நாம் என்ன பேசுகிறோம் என்று கவனிப்பர். அவ்வாறு கவனித்து நாம் எங்கு எப்போது போகிறோம்? நம்முடைய நிலை என்ன? என்பதைப் பற்றியெல்லாம் அறிந்து கொண்டு நமக்குத் தீங்கு விளைவிக்கக் கருதுவர். அதனால் பகலில் அக்கம் பக்கம் பார்த்துக் கவனமாகப் பேசவேண்டும்.
அதே போன்று இரவில் பகலை விடப் பார்த்துப் பேசுதல் வேண்டும். ஏனெனில் இரவு நேரத்தில் யார் அக்கம் பக்கத்தில் உள்ளார்கள் என்று நம்மால் அறிந்து கொள்வது இயலாது. நமக்கு வேண்டாதோர் அருகில் இருந்து நாம் பேசுவதைக் கேட்டு நமக்குத் தீங்கு விளைவிக்கக் கருதலாம். அதனால் எதையும் எந்த நேரத்திலோ இடத்திலோ பேசாது காலம் அறிந்து கவனமாகப் பேச வேண்டும் என்பதை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் தெளிவுறுத்துகின்றனர்.
மனிதர்களுள் சிலர் நிறைவேறாத நினைவுகளை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பர். அதிலும் தமது சக்திக்கு மேற்பட்டதாக அவர்கள் நினைப்பர். அது நிறைவேறாது என்று அவர்களுக்குத் தெரிந்தாலும் அதுகுறித்து அவர்கள் கனவும் கற்பனையும் செய்து கொண்டிருப்பர். அவர்களைப் பார்த்து,
“பகல் கனா பலிக்காது”
என்று கூறுவர். பகலில் விழித்துக் கொண்டே கனவு காண்கிறான் என்றும் சிலரைப் பார்த்துக் கூறுவர். தமது ஆற்றலை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப ஒவ்வொருவரும் முயலுதல் வேண்டும் என்ற சிந்தனையை இப்பழமொழி நமக்கு அறிவுறுத்துவதாக அமைந்துள்ளது நோக்கத்தக்கது.
சிலரிடம் உதவி கேட்டால் உடன் செய்வர். ஆனால் சிலரோ செய்யும் வாய்ப்பிருந்தும் செய்ய மாட்டார்கள். எந்த நிலை வந்தாலும் தங்களது நிலையிலிருந்து அவர்கள் மாறமாட்டார்கள். அவர்களை ஈவிரக்கமற்ற அரக்க குணம் படைத்தவர்களாக மக்கள் கருதுவர். அது மட்டுமல்லாது அவர்களுக்குச் சமுதாயத்தில் எந்தவிதமான மதிப்பும் இருக்காது. அவர்களிடம் எவரும் உதவிக்காகச் செல்லமாட்டார்கள். அவர்களிடம் உதவி கேட்டுப் போவோரைப் பார்த்து,
“இருந்திருந்து இராப் பிச்சக்காரன்கிட்டப் போயி கடன் கேட்ட மாதிரிதான்”
போயிக் கேக்குறீங்க. ஒங்களுக்கு வேற ஆளே கெடைக்கலியா? என்று கேட்பர். இரவில் பல வீடுகளுக்கும் சென்று பிச்சை எடுத்து உண்பவர்களை இராப் பிச்சைக்காரர்கள் என்று குறிப்பிடுவர். அவரிடம் ஒரு பொருளும் இராது. அந்நிலையில் அவரிடம் எனக்குக் கடன் கொடுங்கள் என்று கேட்டால் அப்பிச்சைக்காரரால் எப்படித் தர இயலாதோ அதுபோன்று இரக்கமற்ற மனம் படைத்தவர்கள்,
உதவ மனமில்லாதவர்கள் எந்த நிலையிலும் பிறருக்கு உதவி செய்ய மாட்டார்கள் அத்தகையவரிடம் சென்று எதனையும் கேட்கக் கூடாது என்ற அறிவுறுத்தலை இப்பழமொழி நமக்கு நவில்கின்றது. யாரிடம் உதவுகின்ற மனம் இருக்கின்றதோ? யார் உதவத் தயாராக இருக்கின்றார்களோ அவர்களிடம் சென்று கேட்டு அவர்கள் இல்லை எனறுகூறாது தம்மால் இயன்றதைச் செய்வர். அப்படிப் பட்டவர்களிடமே உதவிக்காகச் செல்ல வேண்டும் என்ற வாழ்வியல் நடைமுறையையும் இப்பழமொழி விளக்குவதாக அமைந்துள்ளது.
நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுள் சிலர் இரவானால் தங்காது அவரது வீட்டிற்குச் சென்றுவிடுவர். இரவு எத்தனை நேரமானாலும் பிறரது வீட்டில் தங்குவதை அவர்கள் தவிர்ப்பர். இவர்களின் செயலைப் பார்த்து,
“ரிஷிபிண்டம் ராத் தங்காதுன்னு சொல்லுவாங்க”
அது மாதிரி இவரும் ராத்திரி எங்கேயும் தங்க மாட்டார் என்று வழக்கில் மக்கள் வழங்குவர்.
ரிஷி என்பது முனிவர்களைக் குறிக்கும். பிண்டம் என்பது அவரது உடலைக் குறிக்கும். முனிவர்கள் எக்காரணங் கொண்டும் இரவில் வேறிடத்தில் தங்க மாட்டார்கள். தமக்கென்று உள்ள குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே தங்குவர். அவ்வாறு பிறிதோரிடத்தில் தங்க நேர்ந்தால் ஏதேனும் நேரலாம் என்று உணர்ந்தோ அல்லது மனம் அலைய நேரிடும் என்பதாகவோ இருக்கலாம். அதனைக் கருத்தில் கொண்டே முனிவர்கள் பிறரது இல்லத்திலோ இருப்பிடத்திலோ இரவில் தங்க மாட்டார்கள். அவர்கள் தமக்கென்று உரிய இருப்பிடத்திலேயே தங்குவர். அதுபோன்று நமக்குப் பொருந்தாத இடத்தில் எவரும் தங்கக் கூடாது. அவ்வாறு தங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்ற உலகியல் நடைமுறையை இப்பழமொழி விளக்குவதாக அமைந்துள்ளது.
பகலும் எருமையும்
மனிதர்களுள் சிலர் எதையும் புரிந்து கொள்ளும் நிலையில் எப்போதும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு எதைச் சொன்னாலும் புரியாது. தாங்கள் நினைத்ததைத்தான் எப்போதும் சரியென்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். எப்போதும் எதையும் சரியாகச் சொல்ல மாட்டார்கள். அவர்களின் இயல்பினை,
“பகல்ல எருமை போறதே தெரியாதவனுக்கு
ராத்திரியில என்ன தெரியும்?”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இயல்பாகவே ஒன்றைப் பற்றிச் சரியாகச் சொல்லத் தெரியாதவனுக்கு எவ்வாறு நுட்பமான கருத்துக்களை அறிந்து சொல்ல முடியும்? அவனால் இயலாது. பகலில் எருமை போவதே தெரியாதபோது இரவில் எதையும் பார்த்துச் சொல்ல முடியாது என்று மனிதர்களின் இயல்பினை எடுத்துரைக்கும் வண்ணம் இப்பழமொழி அமைந்துள்ளது.
முற்பகலும் பிற்பகலும்
நாம் பிறருக்கு என்ன செய்கின்றோமோ அதுவே நமக்குத் திரும்பவும் கிடைக்கும். நல்லன செய்தால் நல்லன கிடைக்கும். அல்லாதன செய்தால் அல்லாதனவே கிடைக்கும். நமக்கு நல்லவை வாழ்க்கையில் நடக்க வேண்டுமெனில் நாம் பிறருக்கு நல்லவற்றையே செய்தல் வேண்டும். மறந்தும் பிறருக்குத் தீங்கு செய்தல் கூடாது. காலையில் ஒருவருக்குத் தீங்கு செய்தால் அத்தீங்கு செய்தவர் அந்நாளிலேயே அதே போன்றதொரு தீங்கினைப் பெற்று அனுபவிப்பர். அதேநாளில் என்பது இப்போது அதே பிறவியிலேயே துன்பத்தை அடைவர். இதனை,
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. இப்பழமொழியுடன்,
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்”
என்ற திருக்குறள் ஒப்புமை உடையதாக அமைந்துள்ளது.
காலையும் விருந்தும்
நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுள் சிலர் தங்குவர். சிலர் தங்காமல் உடன் சென்றுவிடுவர். அதிலும் காலையில் வரும் விருந்தினர்கள் பெரும்பாலும் தங்காமல் தங்களின் ஊருக்குச் சென்று விடுவார்கள். அதே போன்று காலையில் வரும் மழை நின்று பெய்யாது போய்விடும். மழை காலையில் பொழியும் போது மக்கள் வழக்கமாக,
“காலையில வந்த விருந்தாளி நிக்கமாட்டாக”
அதுமாதிரி மழையும் நிற்காது போய்விடும் என்று கூறுவர். மழை குறித்த நம்பிக்கையை விளக்குகின்ற வகையில் இப்பழமொழி அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
அற்பனும் – அர்த்த ராத்திரியும்
உயர் குணம் படைத்தவர்கள், இழி குணம் படைத்தவர்கள் என்று மனிதர்களை இருவகையாகப் பகுப்பர். பகவத் கீதையானது, உத்தமன், உத்தமோனுத்தமன், பாவி, மகாபாவி என்று மனிதர்களை நான்கு வகையாகப் பகுக்கின்றது.
எப்போதும் பிறருக்கு நன்மை செய்பவன் உத்தமனாவான். பிறர் கெடுதல் செய்தாலும் அதனைப் பொருட்படுத்தாது அவனுக்கும் நன்மையையே செய்பவன் உத்தமோனுத்தமன் ஆவான். இத்தகைய குணம் படைத்தவன் எப்போதும் பிறருக்கு நன்மையையே செய்வான். மறந்தும் பிறருக்குக் கெடுதலைச் செய்யமாட்டான். அதனால் இவனை மகாத்மா என்பர்.
பிறருக்குக் கெடுதல் செய்பவன் பாவியாவான். நாள்தோறும் யாருக்காவது கெடுதலைத் தேடிப் போய்ச் செய்து அவர்கள் படும் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியடைபவன் மகாபாவி ஆவான். இவன் தனக்குப் பிறர் நன்மை செய்தாலும் அவருக்கும் தன்னாலியன்ற கெடுதலைச் செய்து மகிழ்வான். இத்தகைய இழிகுணம் படைத்தவர்களை வழக்கில் அற்பன் என்று மக்கள் அழைப்பர். இவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தகாத நேரத்திலும் தகாத முறையில் நடந்து கொள்வான். தன்னுடைய மகிழ்ச்சியைப் பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இயல்பு நிலையிலிருந்து பிறழ்ந்து நடந்கொள்வான். ஆனால் நற்பண்பு உடையவர்கள் அமைதியாக இருப்பர். எந்த நிலையிலும் பிறழ நடந்து கொள்ள மாட்டார்கள். இழிகுணம் கொண்டவர்களின் இயல்பினை,
“அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியிலும் கொடை பிடிப்பான்”
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இரவில் குடைபிடிப்பது என்பது வழக்கத்தில் இல்லாத ஒன்று. மழை வந்தால் மட்டுமே இரவில் குடை பிடிப்பர். இத்தகைய இயல்பிற்கு மாறான செயல்களில் அற்பர்கள் ஈடுபட்டுத் தங்களின் இருப்பைப் பிறருக்குக் காட்டுவர். இவ்வாறு ஒருபோதும் யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்ற பண்பாட்டு நெறியையும் இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் நமக்குத் தெளிவுறுத்தியுள்ளமை நோக்கத்தக்கது.
பகல், இரவு குறித்த பழமொழிகள் நாம் எப்படி வாழவேண்டும் என்ற வாழ்க்ககை நெறிகளை மிகவும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. அற்பத்தனமாக வாழாது பிறர்க்குத் தீங்கு செய்யாது நல்லெண்ணத்துடன் நாமும் வாழ்ந்து பிறரும் வாழ்வதற்கு உறுதுணையாக இருப்போம். வாழ்க்கை வசந்தமாய் மாறும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.