இவ்வுலகம் ஐம்பூதங்களால் ஆனது. ஐம்பூதங்கள் என்பதை வடமொழியில் பஞ்சபூதங்கள் என்றுகுறிப்பிடுவர். ஐம்பூதங்களின் சேர்க்கையைப் பிரபஞ்சம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இவற்றில் சமநிலை இருப்பின் உலகம் வளமானதாகவும், நலமானதாகவும் இருக்கும்.
மனிதன் இயற்கைக்கு மாறாகச் செயல்படும்போது ஐம்பூதங்களும் மாற்றத்திற்கும், பதிப்பிற்கும் உள்ளாகின்றன. இப்பி்ரபஞ்சத்தை அண்டம் என்பர். இவ்வண்டத்தில் உள்ளதே நிலம், நீர், காற்று, நெருப்பு(தீ), ஆகாயம்(வானம்) என்ற ஐம்பூதங்களாகும். இவ்வைம்பூதங்கள் குறித்த பல்வேறு தகவல்களை நமது முன்னோர்கள் பழமொழிகள் மூலம் தெளிவுறக் கூறிப்போந்துள்ளனர்.
நமது உடலைப் பிண்டம் என்று குறிப்பிடுவர். இவ்வண்டத்தில் உள்ளது நமது உடலில் உள்ளது. ஐம்பூதங்களின் சேர்க்கையால் ஆனது நமது உடல். இவற்றின் இயக்கத்தினால்தான் நமது உடல் இயங்கிக் கொண்டிருக்கின்றது எனலாம். இதனை,
"அண்டத்தில் இருப்பது பிண்டத்தில்"
என்ற பழமொழி உணர்த்துகிறது. நிலம்-எலும்பு, நீர்-இரத்தம், காற்று-மூச்சுக் காற்று, நெருப்பு-உடலில் உள்ள வெப்பம், ஆகாயம்-உடலில் உள்ள வெற்றிடம் இக்கருத்தினையே மேற்கண்ட பழமொழி எடுத்துரைக்கின்றது.
நிலம்
இவ்வைம்பூதங்களில் முதன்மையானதாக விலம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. நிலத்தை பூமி, மண் என்று குறிப்பிடுவர். இந்நிலம் அனைத்திற்கும் அடிப்படை. கல், மண், நீர் உள்ளிட்ட பல்வேறுவிதமான அணுமூலக்கூறுகளின் சேர்க்கையாக இந்நிலமானது விளங்குகிறது. நிலத்தை வைத்துப் பழமொழிகளை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
பொறுமையின் நிலைக்களனாக விளங்குவது நிலமாகிய மண். எவ்வளவுதான் அதனைக் குத்தித் தோண்டித் துன்புறுத்தினாலும் பொறுமையாக இருந்து தன்னைத் துன்புறுத்தியவர்களுக்குப் பலனைக் கொடுக்கும். பெண்களும் பொறுமைக் குணம் மிகுந்தவர்கள். தங்களுக்கு எந்தவிதத் துன்பமும் நேர்ந்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு நன்மையானவற்றையே செய்வர். இதனை,
"மண்ணும் பெண்ணும் ஒண்ணு"
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.
பெண்மையின் உயர்வை ‘‘மண்மகள், நிலமகள், நிலமடந்தை, பூமகள், பூமித்தாய்’’ போன்ற சொற்கள் விளக்குவது போன்று மேற்குறிப்பிட்ட பழமொழியும் பெண்ணின் பெருமையை விளக்குவதாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
தவறு செய்பவன் தண்டனையில் இருந்து தப்புதல் இயலாது. உறுதியாகத் தண்டனையை அனுபவிப்பான். அவன் இல்லாவிட்டாலும் அவனைச் சார்ந்தவர்கள் அனுபவிப்பர். இதனை,
"தின்ன மண்ணுக்குச் சோகை"
என்ற பழமொழி குறிப்பிடுகிறது. மண்ணைத் தின்றால் இரத்தச் சோகை ஏற்பட்டு உடலில் வலிமை என்பது இல்லாமல் போய்விடும் என்பதையே இப்பழமொழி எடுத்துரைக்கின்றது.
(தின்ற மண்-செய்கின்ற உண்மைக்குப் புறம்பான தீய செயல்கள் சோகை-தண்டனை)
நீர்
உலக வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாக நீர் விளங்ககிறது. நீர் உணவாகவும், உணவிற்கு அடிப்படையாகவும், உணவு தயாரிப்பதற்கும், அனைத்திற்கும் இன்றியமையாத ஒன்றாகவும் விளங்குகின்றது. அதனால் இந்நீரை, ‘அமிழ்தம்’ என்று குறிப்பிடுவர். அமிழ்தமாகிய இந்நீர் மனிதரின் செயற்பாடுகளால் மாசடைந்து விஷமாக மாறி வருகிறது.
பழங்காலத்தில் ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் தாகமெடுக்கும் மனிதர்கள் நீரினைப் பருகித் தங்களின் தாகத்தைத் தீர்த்துக் கொள்வர். ஆனால்இன்று அவ்வாறு செய்ய இயலாது. ஏனெனில் மனிதனால் அனைத்தும் பாழ்பட்டுச் சிதைந்து வருவது நோக்கத்தக்கது. இதனைத் தடுத்தல் வேண்டும். இன்றுள்ள ஆறு, குளம், ஏரி ஆகியவற்றில் காணப்டும் நீரினைக் கண்டவுடன் அருவருப்புடன் கூக்கைப் பொத்திக் கொண்டு செல்லக்கூடியநிலை உள்ளதனை அனைவரும் அறிவர். இதனை முன்கூட்டியே உணர்ந்த நமது முன்னோர்கள்,
"தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே"
என்ற பழமொழி வாயிலாகக் கூறிப்போந்தனர் எனலாம்.
தண்ணீரைப் பார்த்து "இது அருவருக்கத் தக்கது, மோசமானது, தொடக்கூடாது பருகக் கூடியதன்று" என்று யாரும் பழிக்கின்ற நிலையை உருவாக்கக் கூடாது. தாயைக் கூடப் பழிக்கலாம். ஆனால் அனைவருக்கும் அமுதாமாக விளங்கும் நீரைப் பழிக்கும் நிலை வராமல் நீர்ச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னதமான சுற்றுச் சூழல் சிந்தனையை இப்பழமொழி நமக்கு உணர்த்துவது குறிப்பிடத்தக்கது.
நீரை வைத்து உறவுகளையும், வாழ்க்கைச் சூழல்களையும் நமது முன்னோர்கள் விளக்கியுள்ளனர். உறவுகளுக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் உறவை முறித்துக் கொள்ளுதல் கூடாது. உறவு என்றும் ஆகாமல் போகாது. உறவு என்றாவது ஒருநாள் உதவும் என்பதனை உணர்ந்து உறவுகளுடன் சேர்ந்து வாழ முயற்சி செய்தல் வேண்டும்.
நீர் வேகமாக வந்து தேங்கிக் கிடக்கின்ற நீர் மீது மோதினால் அந்நீர் விலகுமா? விலகாது. ஒன்று சேர்ந்து இரண்டறக் கலந்துவிடும். அதுபோல உறவுகளுக்குள் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் உறவை முறித்துக் கொள்ளாது, விட்டுக் கொடுத்து நீர்போல் சேர்ந்து வாழவேண்டும். இத்தகைய அரிய கருத்தினை,
"நீரடித்து நீர் விலகுமா?"
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. இப்பழமொழியை,
"நீரடித்து நீர் விலாகாது"
என்றும் வழக்கில் வழங்குவர்.
உண்மையினை எப்போதும் மூடி மறைக்க முடியாது. அது என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும். உண்மையானது யாருக்கும் தெரியாமல் போய்விடும் என்று கருதியிருந்ததால் அது அறிவீனமாகும். அது பகலவன் போல் வெளிப்பட்டுத் தோன்றும். இதனை,
"தண்ணீருக்குக் கீழே குசுவிட்டாலும்
தலைக்குமேல் தான் வந்து வெடிக்கும்"
என்ற பழமொழி விளக்கி நிற்கிறது. இப்பழமொழியை,
"தண்ணிக்குக் கீழே குசுவிட்டாலும்
வெளியே வந்து தான் ஆகவேண்டும்"
என்றும் வழங்குவர்.
(தண்ணி-நீர் கீழே-உள் குசு-மனிதனின் மலக் குடலில் இருந்து வெளியேறும் வாயு)
உண்மையின் நிலையினை விளக்குவதாக இப்பழமொழி அமைந்துள்ளது. பிறருக்குப் புலப்படாது என்று ஒரு செயலைச் செய்தாலும் அது மற்றவருக்கு என்றாவது ஒருநாள் புலப்பட்டே தீரும். மற்றவர்கள் அறியார் எனச் செய்தாலும் அச்செயல் பிறருக்கு ஒரு நாள் தெரிய வரும். அத்தகைய மறைவான செயல்களில் பிறர் ஈடுபடக் கூடாது என்பதனையும் மேற்குறித்த பழமொழி விளக்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவர் தவறுகள் செய்தால் அதற்குரிய தண்டனையை அனுபவித்துத்தான் தீர வேண்டும். அதுவே நியதியாகும். தன்னைத் தண்டிக்க யாரும் உலகில் இல்லை என்று கருதி தவறுக்கு மேல் தவறு செய்து வாழ்பவர் உறுதியாகத் தண்டனையை அனுபவித்தல் வேண்டும் என்பதை,
"உப்புத் தின்னவன் தண்ணீர் குடிச்சுத்தான் ஆகணும்"
என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.
(உப்பு-தவறு தின்னவன்-தவறு செய்தவன் தண்ணீர்-தண்டனை குடித்தல்-அனுபவித்தல்)
காற்று
காற்றினை வளி, உயிர்வளி(ஆக்ஸிஜன்), கால் என்றும் கூறுவர். வடக்கிருந்து காற்று வீசினால் வாடைக் காற்று என்றும் தெற்கேயிருந்து வீசினால் தென்றல் காற்று என்றும் கிழக்கில் இருந்து வீசினால் கீழ்க்காற்று என்றும் மேற்கேயிருந்து வீசினால் மேற்காற்று என்றும் சுழன்று சுழன்று வீசினால் சுழற்காற்று, சூறைக்காற்று என்றும், புழுதியுடன் வீசினால் புழுதிக் காற்று, ஆடி மாதத்தில் வீசினால் ஆடிக்காற்று என்றும் சித்திரை மாதத்தில் வீசினால் சித்திரைச் சுழி என்றும் காற்றுடன் மழையும் சேர்ந்து வந்தால் புயற்காற்று என்றும் இக்காற்றினை அதன் தன்மையைக் கொண்டு பலவகையான பெயர்களில் வழங்குவர்.
இக்காற்று உயிர் வாழ்க்கைக்கு முக்கியமானதாக விளங்குகின்றது. ஒருவரது உடலில் உயிர் உள்ளதா? இல்லையா? என்பதை முதலில் அவரது மூக்கினருகில் கையை வைத்துப் பார்த்தபின்னர் தான் முடிவு செய்வர். மூக்கில் இருந்து மூச்சுக் காற்று வரவில்லை என்றால் அவர் உயிர் பிரிந்து விட்டது என்ற முடிவிற்கு வருவர்.
உடலில் மூச்சுக் காற்று உள்ளவரை தான் ஒருவருக்கு மதிப்பு, மரியாதை. மூச்சுக்காற்று இல்லை எனில் அவரை அஃறிணைப் பொருளாகவே மதிப்பர். அவர் அதுவாகி விடுவார். அதனால் உடலில் உயிர் மூச்சு இருப்பதற்குள் நல்ல செயல்களைச் செய்துவிட வேண்டும். அதுவே நமக்கு நன்மையும் புண்ணியமும் தரக்கூடியதாகும். இதனை,
"காற்றுள்ள போதே தூற்றிக் கொள்"
என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.
இங்கு காற்று என்பது உயிரிக் குறிக்கும். தூற்றிக்கொள் என்பது நல்லவற்றைச் செய்து புண்ணியத்தினைத் தேடிக்கொள் என்பதனைக் குறிக்கும். இத்தகைய கருத்தினையே இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. மேலும் உயிர் மூச்சு இருக்கின்றபோது தமது தீய செயல்களைக் கைவிட்டுவிடுதல் வேண்டும் என்ற கருத்தையும் இப்பழமொழி வாயிலாக நம்முன்னோர்கள் எடுத்துரைத்திருப்பது நோக்கத்தக்கது.
இப்பழமொழிக்கு வேறு பொருளையும் கூறுவர். வாய்ப்புகள் இருக்கும்போதே அதனைப் பயன்படுத்தி ஒருவர் தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். இதில் காற்று-வாய்ப்பு தூற்றுதல்-வாய்ப்பினைப் பயன்படுத்தி முன்னேறுதல் என்று காற்றினைக் குறியீடாக வைத்து விளக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வீசும் காற்றானது ஒவ்வொரு விதமான தன்மை உடையதாக விளங்கும். சில மாதங்களில் வீசும் காற்றானது ஆளையே தூக்கிச் செல்லக் கூடியதாக இருக்கும். காற்றின் வேகத்தை,
"ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்"
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.
ஆடி மாதத்தில் வீசும் காற்றானது வேகத் தன்மை வாய்ந்தது. ஆடியில் காற்றடிக்கும் வேகத்தைப் பொறுத்தே அடுத்து வரும் ஐப்பசி மாதத்தில் நன்கு மழை பொழியும் என்பதை,
"ஆடியில காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்"
என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.
நெருப்பு
ஐம்பூதங்களுள் மிகவும் வெப்பத் தன்மை வாய்ந்தது நெருப்பாகும். இந்நெருப்பினைத் தீ என்றும் வழங்குவர். இந்நெருப்பைக் குறியீடாக வைத்து வாழ்வியல் நிகழ்வுகளையும் தத்துவங்களையும் நமது முன்னோர்கள் விளக்கிச் சென்றுள்ளனர்.
பொருள் முதல் வாதம் கருத்து முதல் வாதம்
பொருள் இன்றி கருத்துத் தோன்றாது. முதலில் பொருளே தோன்றியிருத்தல் வேண்டும். அதன் பின்னர் தான் கருத்துத் தொன்றியிருக்க வேண்டும். அதன் பின்னர் தான் கருத்துத் தோன்றியிருக்க முடியும் என்று பலர் கூறுவர். இவர்களைப் பொருள் முதல்வாதிகள் என்பர். மற்றொரு சாரர் கருத்துத் தோன்றிய பின்பே பொருள் தோன்றியிருக்க இயலும் என்று கூறுவர். இவர்களைக் கருத்து முதல்வாதிகள் என்பர். இதுபோன்ற கருத்துக்களுக்கு மேலை நாடுகளில் முடிவு காண முடியாமல் தொடர்ந்து வாதித்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் நமது முன்னோர்கள் இதற்கு முற்றுப் புள்ளி வைத்துவிட்டனர். ஒரு பொருள் இருந்தால் மட்டுமே கருத்தானது தோன்ற முடியும் எனும் நோக்கில் பொருளே முதலில் தோன்றி பின் அது பற்றிய கருத்துத் தோன்றியிருக்க முடியம். இதுவே பிரபஞ்ச உண்மை என்பதனை,
"நெருப்பில்லாமல் புகையுமா?"
என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. இப்பழமொழியை,
"நெருப்பில்லாமல் புகையாது"
என்றும் கூறுவர். உலகில் பலவாதங்களுக்குப் பின் இதற்கு முடிவுகள் கண்டனர். ஆனால் எளிமையாகவும், நேரிடையாகவு, பொருத்தமாகவும் நமது முன்னோர்கள் கூறியிருப்பது போற்றுதற்குரியதாகுதம்.
சிலர் இறப்பிற்கு அஞ்சுவர். மேலும் இறப்பு பற்றியும் மரணம் பற்றியும் இவர்கள் பேசுவதற்கே அச்சப்படுவர். இது அவரவர்களின் மனதைப் பொருத்து அமைந்த ஒன்றாகும். இறப்பைக் குறித்து அஞ்சுவது மடமையானது. அவற்றைக் குறித்துப் பேசினால் அறப்பு நேரிடும் என்று கூறுவதும் தவறானதாகும். இதனை அனைவரும் உணர வேண்டும் என்பதை,
"நெருப்புன்னு சொன்னா
வாய் வெந்தா போய்விடும்"
(நெருப்புன்னு-நெருப்பு என்று)
என்ற பழமொழி வாயிலாக விளக்கினர்.
நெருப்பு சுடும்; எதையும் அழிக்கும் தன்மை உடையது. அதனைக் கூறிய அளவிலேயே வாய் வெந்து போய்விடாது. அதனைப் போன்றே இறப்புமாகும். இறப்பு குறித்த வீண் அச்சததைப் போக்கிட வேண்டும் என்பதை இப்பழமொழி தெளிவுறுத்தி மக்களுக்கு மனஉறுதியை அளிக்கின்றது.
வழக்கில் இந்நெருப்பை வைத்து சில வழக்குத் தொடர்கள் வழங்குவது நோக்கத்தக்கது. பருவமடைந்த பெண்ணை வைத்திருப்பவர்கள் தங்கள் பெண் பத்திரமாகவும், எந்தவித தீய செயல்களுக்கு ஆட்பட்டுவிடாமலும் இருக்க வேண்டும் என்று நினைத்து, தங்களது மகளைக் கண்ணுங் கருத்துமாகப் பார்த்து காத்துவருகின்றனர். அவளுக்கு ஒரு திருமணத்தை முடித்து வைத்துவிட்டால் அவர்கள் நிம்மதி அடைவர். அதுவரை அவர்கள் மனம் துன்பப்பட்டுக் கொண்டும் அலைபாய்ந்து கொண்டும் இருக்கும். தங்கள் மகள் வெளியில் சென்று வீடுதிரும்பும் வரை அவர்கள் மனம் அமைதியின்றி இருக்கும். இதனை,
"நெருப்பை மடியில கட்டிக்கிட்ட மாதிரி இருக்கு"
என்ற கூறுவர். நெருப்பு என்பது குறியீடாக வைத்து சொல்லப்படுவது நோக்கத்தக்கது. பெண்களைக் கண்களைப் போன்று பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வழங்கும் வழக்குத் தொடராக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நெருப்பு எதையும் அழித்துவிடும் ஆற்றல் வாய்ந்தது. தன்னைச் சார்ந்த எதையும் தன்னிடத்தே ஐக்கியப்படுத்தி அழித்து விடும் தன்மை உடையது. இதனால் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு. இந்நெருப்புப் பிடித்து எரிந்த இடத்தில் எதுவும் இராது. அதனால் நெருப்பினைக் கவனமாகப் பயன்படுத்துதல் வேண்டும். அதுவே பயன் நல்கும். இதனை,
"களவாணி புகுந்த வீட்டிலயாவது ஏதாவது இருக்கும்.
தீப்பிடித்த வீட்டில அதுவும் இருக்காது"
என்ற பழமொழி எடுத்துரைக்கிறது. திருடர்கள் வீட்டிற்குள் புகுந்து திருடினால்கூட திருடியது போக எஞ்சியது இருக்கும். ஆனால் தீப்பற்றிய வீட்டில் எந்தப் பொருளும் இராது. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வாழ்க்கையில் நெருப்பினைப் பயன்படுத்த வேண்டும் என்ற பேரிடர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை இப்பழமெமாழி வாயிலாக நம்முன்னோர்கள் உணர்த்தியுள்ளனர் எனலாம்.
வானம்
இதனை ஆகாயம், வெட்டவெளி என்றும் வழங்குவர். வாணம் பல்வேறு வியக்கத் தக்க நிகழ்வுகளைத் தன்னிடத்தே நாள்தோறும் நிகழ்த்தி வருகின்றது. இவ்வானம் மனிதன் வாழ்க்கையில் பெரும்பங்கு வகிக்கின்றது. மனிதன் பிற மனிதனுக்கு உதவ நிகைக்க மாட்டான். பிறன் கெடுதல் செய்தாலும் அவனுக்குக் கெடுதல் செய்யாது நல்லவற்றைச் செய்தல் வேண்டும். ஆனால் வானம் எல்லோருக்கும் நன்மை தரக்கூடிய மழையைத் தருகிறது. உலகைக் காப்பாற்றுகிறது. இதனை,
"வானம் நினைத்தால் மழை
மனிதன் நினைத்தால் வினை"
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. ஐம்பூதங்களில் ஒன்றாக விளங்கக் கூடிய வானத்தின் பெருமையை விளக்குவதாக இப்பழமொழி அமைந்திருப்பது நோக்கத்தக்கது.
முயற்சி செய்யாது, உழைக்காது பிறர் உழைப்பினைச் சுரண்டி வாழ நினைப்பவன் நான் அதனைச் செய்வேன், இதனைச் செய்வேன் என்று வீண் பேச்சினைப் பேசிக் கொண்டிருப்பான். இத்தகையோரின் பண்பினை வெளிப்படுத்துவது போன்று,
"கூரைஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானத்தில் ஏறி
வைகுண்டம் போனானாம்"
என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. கூரை மீதே ஏற இயலாதவன் எங்ஙனம் வானத்தில் ஏறிவிட இயலும். சிறிய வேலையையே செய்ய இயலதவன் எவ்வாறு பெரிய வேலைகளில் ஈடுபட்டுஅதனைச் செய்து முடிப்பான்? என்ற வினாவை எழுப்பி மனிதன்செயல்படும் திறன் உடையவனாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வுச் சிந்தனையை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் வழங்கியுள்ளனர்.
ஐம்பூதங்களின் செயல்பாடுகளையும், அவற்றைக் குறியீடாகவும் வைத்து மனிதன் செம்மாந்த வாழ்வு வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தினை பழமொழிகள் வாயிலாக நமது முன்னோர்கள் வழங்கியுள்ளனர். ஐம்பூதங்களை அளவுடனும், அதன் தன்மையை அறிந்தும் பக்குவமாகப் பயன்படுத்துதல் வேண்டும் என்ற சூழலியல் சிந்தனையையும் இப்பழமொழிகள் வலியுறுத்துவது போற்றுதற்குரியதாகும்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.