துரோகங்கள் காலங்காலமாக இருந்தாலும் அவற்றின் வடிவம் மட்டும் பச்சோந்தி மாதிரி மாறிக் கொண்டே இருக்கிறது. யாரை நல்லவர்கள் என்று நினைத்து அனைத்துத் தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறோமோ? யார் நம்முடைய நலம் விரும்பும் நண்பன் என்று நினைக்கின்றோமோ அவர்களே நமக்குத் துரோகம் செய்யும் போது நம்முடைய உள்ளம் நொறுங்கிப் போகிறது…. யார் நமக்கு உதவி செய்கிறார்கள் என்று நினைக்கிறோமோ அவர்களே துரோகியாக மாறிவிடும் போது அது தரக்கூடிய வலி இங்கு குறிப்பிட முடியாது, அதை எழுத்தால் கூட எழுத முடியாது. அந்த மாதிரியான துரோகங்கள் விடுதலைப் போராட்டக் காலத்திலும் நிறையவே நடந்தது… அதில் ஒன்றுதான் வீரன் வேலுத்தம்பியைக் காட்டிக் கொடுத்த துரோகம்.
சாதாரணக் குடும்பத்திலிருந்து தளவாயாக நியமிக்கப்பட்ட ஒரே நபர் வேலுத்தம்பியாவார். அரண்மனையிலும், நாட்டிலும் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்ட போது அதனைச் சமாளிக்க முடியாமல் மன்னர் பலராமவர்மன் தடுமாறிக் கொண்டிருந்தார். இதற்கு மக்களிடம் அறிமுகமான ஒருவர் தேவை என்பதை உணர்ந்த மன்னர், வேலுத்தம்பியைத் தளவாயாக நியமித்தார். 1802 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் நாள் திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக வேலுத்தம்பி பதவி ஏற்றுக் கொண்டார்.
வேலுத்தம்பி தளவாயகப் பதவி ஏற்றுக் கொண்ட போது திருவாங்கூரின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையிலிருந்தது. ஆங்கிலேயர்களின் கணக்குப்படி திருவாங்கூர் அரசு ஆங்கிலேயர்களிடம் இருபத்து நான்கு இலட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்தது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆண்டு வருமானமே இருபது லட்சம்தான். ஆனால் வரவைவிடச் செலவு அதிகம் இருந்தது. அதனால் கடனை அடைக்க முடியாமல் போனது. இக்கடனை அடைப்பதற்கு மிகுந்த முயற்சிகளைச் செய்தார் வேலுத்தம்பி.
புதிய திவானாகச் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த வேலுத்தம்பி நியமிக்கப்பட்டதைப் பழைய திவானின் ஆட்களும் அரண்மனையில் உள்ள உயர் குடியில் பிறந்தவர்களும் எதிர்த்தனர். அதோடுமட்டுமல்லாமல் வேலுத்தம்பிக்கு எதிராகக் கலகம் செய்தனர். வேலுத்தம்பி அக்கலகக்காரர்களை அடக்கி அவர்களைத் தண்டித்தார். இருப்பினும் கலகக்காரர்கள் வேலுத்தம்பியின் மீது வன்மம் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் கொச்சி சமஸ்தானத்தின் இருப்பிட அதிகாரி மெக்காலேயும், சென்னை மாகாண ஆங்கிலேய அரசும் வேலுத்தம்பியின் திவான் பதவிக்கு அங்கீகாரம் அளித்தனர். நிதிநிலைமையைச் சமாளிக்க நினைத்த வேலுத்தம்பி மெக்காலேயைச் சந்தித்து நாட்டு நிலைமையை விளக்கிக் கூறிக் கடனில் ஏழு லட்சம் ரூபாய் வரை தள்ளுபடியும் பெற்றார். இவ்வாறெல்லாம் செய்தும் அரசர் வேலுத்தம்பியின் மீது முழுமையான நம்பிக்கை வைக்கவில்லை. அரண்மனைவாசிகளின் சதிப் பேச்சைக் கேட்ட மன்னர் அதனை உண்மை என்று நம்பி வேலுத்தம்பியைக் கைது செய்து கழுமரத்தில் ஏற்றிக் கொல்லுமாறு உத்தரவிட்டார்.
அரசரின் துரோகத்திற்குத் துணைபோன அறிவிப்பைக் கேள்வியுற்ற வேலுத்தம்பி உடனடியாகக் கொச்சினுக்குத் தப்பிச் சென்று அங்கு தங்கியிருந்த மெக்காலேயின் உதவியை நாடினார். வேலுத்தம்பிக்கு ஆங்கில அதிகாரியின் ஆதரவு இருப்பதை அறிந்த மன்னர் தமது உத்தரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். வேலுத்தம்பி இரண்டாவது முறையாக ஆங்கிலேயர்களிடம் விண்ணப்பித்து மீண்டும் கடனில் தள்ளுபடி பெற்றார். இருந்தும் நாட்டின் நிதிநிலைமை சீரடையவில்லை.
இதனைக் கண்ட வேலுத்தம்பி வீண் செலவுகளைக் கண்டறிந்து, அதனைக் குறைப்பதற்கு வழி தேடினார். அதில் மிக முக்கியமான வீண் செலவினைக் கண்டறிந்தார். திருவாங்கூர்ப் படைப்பிரிவுகளில் முக்கியமானது நாயர் பிரிவாகும். கேரளச் சமூகத்தின் உயர் பிரிவான நாயர் சமூகத்தினர் மட்டுமே இடம் பெற்றுள்ள இந்தப் பிரிவிற்கென்று சில சிறப்புச் சலுகைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அவற்றுள் ஒன்று அவர்களின் பொருளாதார நிலையோடு நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது.
போர்க்காலங்களில் மட்டுமே இதரப் படைப்பிவினருக்குப் போர்க்கால ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆனால், நாயர் படைப்பிரிவிற்கு மட்டும் அனைத்து நாட்களுக்கும் போர்க்கால ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இதனால் அரசுக்குப் பெருந்தொகையானது ஊதிய இழப்பு ஏற்பட்டது. இந்தச் சிறப்புச் சலுகையினை மொத்தமாக வேலுத்தம்பி ரத்து செய்தார்.
இதனால் நாயர் சமூகத்தினர் வேலுத்தம்பிக்கு எதிராகக் கலவரத்தில் ஈடுபட்டனர். இக்கலவரத்தை வேலுத்தம்பி அடக்கினார். இந்நிலையில் ஆங்கிலேயர்கள் மன்னருடன் புதிய ஒப்பந்தம் ஒன்றினையும், 1805 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் செய்து கொண்டனர். மேலும் வேலுத்தம்பியிடம் ஆதாயம் பெற முயன்றனர். பெருந்தொகையை வேலுத்தம்பியிடம் எதிர்பார்த்து அவரிடம் ஆங்கிலேயர்கள் அதனைக் கேட்கவே வேலுத்தம்பி அதனை ஏற்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டதோடு ஆங்கிலேயர்களுடன் மோதும் நிலை உருவானது. மன்னரால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது. ஆங்கிலேயர்களின் கைப்பாவையாக மன்னர் செயல்படவேண்டிய நிலை உருவானது.
இந்நிலையில் 1809 ஆம் ஆண்டு திருவாங்கூரை விட்டு வெளியேறிய வேலுத்தம்பி கொச்சி சமஸ்தானத்தின் திவான் பலியத்து அச்சனைச் சந்தித்தார். இருவரும் இணைந்து ஆங்கில அதிகாரி மெக்காலேயின் இருப்பிடத்தைத் தாக்கினர். இதனை அறிந்த சமஸ்தானத்தின் உயர்குடியைச் சார்ந்த அதிகாரிகள் மெக்காலேக்கு உதவி செய்து அவரைக் காப்பாற்றினர்.
இதனால் வேலுத்தம்பியின் முயற்சி தோல்வியில் முடிந்தது. வேலுத்தம்பி தன்னிடமுள்ள படையினைக் கொண்டு ஆங்கிலப் படையின் மீது தாக்குதல் தொடுத்தார். இத்தாக்குதலின் போது நாயர் படைப்பிரிவின் பெரும்பகுதி வேலுத்தம்பியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற வன்மத்தில் திருவனந்தபுரத்திலேயே தங்கிவிட்டது. இதனால் வேலுத்தம்பி இந்தப் போராட்டத்தில் தோல்வியைச் சந்திக்க வேண்டியதாகி விட்டது.
இத்தோல்வியைத் தவிர்க்க வேலுத்தம்பி வெகுவாகப் போராடினார். குண்டறை என்னுமிடத்திற்குச் சென்று அங்கு தனது படையினருடன் பொதுமக்களையும் திரட்டினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெறும் இப்போரில் பொதுமக்களும் பங்கு கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அந்தப் பொதுக்கூட்ட மேடையில் குண்டறைப் பிரகடமை என்ற தனது பிரகடனத்தை வெளியிட்டார். இப்பிரகடனம் திருவிதாங்கூர் வரலாற்றில் முக்கிய ஆவணமாகக் கருதப்படுகின்றது.
குண்டறைப் பிரகடனத்தை அன்றைய திருவாங்கூர், கொச்சின், மலபார் பகுதி மக்கள் ஏற்றுக் கொண்டனர். வேலுத்தம்பிக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்தது. அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வேலுத்தம்பியின் படையினரோடு இணைந்து கொண்டனர்.
திருவனந்தபுரம் முதல் கொச்சி வரையிலான இடங்களிலிருந்த ஆங்கிலப் படையினரின் மீது வேலுத்தம்பியின் படை தாக்குதல் நடத்தியது. கொச்சியில் நடைபெற்ற தாக்குதலுக்கு அந்நாட்டின் திவான் பலியத்து அச்சன் கோவிந்த மேனன் தலைமை தாங்கினார். முதலில் வெற்றி கிட்டினாலும் இறுதியில் அவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை. வேலுத்தம்பியால் குறிவைக்கப்பட்ட ஆங்கிலப் படைத்தளபதிகளும் அவர்களது உதவியாளர்களும் நம் நாட்டுத் துரோகிகளின் உதவியால் தப்பிவிட்டனர்.
சென்னையிலிருந்து கர்னல் மன்றோவின் தலைமையில் வந்த ஆங்கிலப் படையினர் நவீன ஆயுதங்களைக் கொண்டு வேலுத்தம்பியின் தலைமையிலான படையினரைத் தாக்கினார். இறுதி வரைப்போராடிய நிலையில் வேலுத்தம்பியின் படை தோல்வியைச் சந்திக்கும் நிலை உருவானதால் அவரது படை பின் வாங்கியது. இதனால் அவரது படைப்பிரிவு பல பிரிவுகளாகச் சிதறியது.
தங்களைப் பின் தொடர்ந்த ஆங்கிலப் படையினரிடமிருந்து தப்பிப்பதற்காக மண்ணடி என்னுமிடத்திலிருந்த பகவதி அம்மன் கோவிலுக்குள் தங்கினர். ஆங்கிலேயர்களின் கை ஓங்கியிருப்பதை அறிந்த மன்னர் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். வேலுத்தம்பியினை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வந்து கொடுப்போருக்குச் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்து ஆங்கிலேயர்கள் மீது தனக்குள்ள விசுவாசத்தைக் காட்டிக் கொண்டார்.
வேலுத்தம்பியைப் பழிவாங்கக் காத்திருந்த நாயர் படையினர் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர். பகவதி அம்மன் கோவிலுக்குள் வேலுத்தம்பி தங்குவதற்கு கோயில் அதிகாரி உம்மிணித் தம்பி உதவி செய்தான். ஆனால் அவன் மனதில் வேலுத்தம்பியைப் பழிவாங்கும் எண்ணமே மேலோங்கி இருந்தது.
நல்லவன் போன்று வேலுத்தம்பியிடம் அவன் நடித்தான். வேலுத்தம்பி ஐயுறாத வண்ணம் அவன் நடந்து கொண்டான். மன்னர் அறிவித்திருந்த சன்மான அறிவிப்பும், அவனது துரோகச் செயலுக்கு எரிகின்ற தீயில் எண்ணெயில் ஊற்றுவது போன்று அமைந்தது. இந்தச் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த கோயில் அதிகாரி தன்னிலை மறந்தான். பணவெறி அவனது உள்ளத்தில் கொழுந்து விட்டெறிந்தது. வேலுத்தம்பியைக் காட்டிக் கொடுத்தால் தமக்கு உயர்ந்த பதவியியை மன்னர் வழங்குவார் என்ற உம்மிணித்தம்பி கருதி வேலுத்தம்பியைக் காட்டிக் கொடுக்கும் இழி செயலைச் செய்யத் துணிந்தான்.
தன்னை நம்பிய வேலுத்தம்பி தங்கி இருக்கும் இடத்தை ஆங்கிலேயரிடம் இரகசியமாகத் தெரிவித்தான். உடன் விரைந்து வந்த ஆங்கிலேயப் படையினர் கோயிலைச் சூழ்ந்து கொண்டனர். வேலுத்தம்பி தனக்குக் கோயிலதிகாரி உம்மிணித் தம்பி செய்த துரோகச் செயலை உணர்ந்து துடிதுடித்தார். மன்னர் காட்டிய பண ஆசைக்கு உம்மிணித் தம்பி ஆட்பட்டு துரோகியாகி விட்டானே என்று வருந்தினார் வேலுத்தம்பி.
தாம் வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்த வேலுத்தம்பி ஆங்கிலேயரிடம் அகப்பட்டு அவமானப்பட விரும்பவில்லை. சிறிது நேர யோசனைக்குப் பின்னர் வேலுத்தம்பி ஒரு முடிவுக்கு வந்தவராய் தனது சகோதரன் பத்மநாபன் செண்பகராமனை அழைத்தார். தனது உடைவாளைக் கையிலெடுத்துத் தன் சகோதரனின் கையில் கொடுத்து, “தம்பி நீயே என் கழுத்தை வெட்டிவிடு” என்றார். அதனைக் கேட்ட வேலுத்தம்பியின் சகோதரர் கண்ணீர் வடித்தார். தன் அண்ணனைக் கொல்ல மறுத்தார்.
இதனைக் கண்ட வேலுத்தம்பி தனது வாளினை கோயில் நந்தவனத்தில் உள்ள ஒரு மரத்தில் வைத்து நூறடி பின்னோக்கிச் சென்று வேகமாக ஓடிவந்து தனது கழுத்தை வாளின் அருகிகே கொடுத்து மரணத்தைத் தழுவினார். எந்தத் தெய்வத்தை அவர் மனதார வணங்கி வந்தாரோ அந்தத் தெய்வத்தின் கோவில் அதிகாரியாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு 1809 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் நாளன்று வீர மரணத்தைத் தழுவினார்.
பணத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டுக் கோவில் அதிகாரியால் காட்டிக் கொடுக்கப்பட்ட தியாக தீபம் அணைந்தது. துரோகம் அங்கு சிரித்தது. வேலுத்தம்பியின் உடலைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் கயிற்றுக் கட்டிலில் அவரது உடலைக் கட்டி வைத்துத் திருவனந்தபுரம் கொண்டு வந்தனர். அப்போது கூட வேலுத்தம்பியின் வீரம் ஆங்கிலேயரின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியது. வேலுத்தம்பியின் உடலைப் பார்வையிட்ட மெக்காலே அவரைத் தூக்கிலிட உத்தரவிட்டார். பணவெறியும் இனவெறியும் சேர்ந்து புனிதமான கோயிலதிகாரியையே துரோகியாக மாற்றி விட்டது. மனிதர்கள் சுயநலம் மிக்கவர்கள். அவர்களுடைய அத்தனை செயலும் ஆதாயத்தை நோக்கியே செயல்படும்” என்கின்ற மார்க்ஸின் கூற்று எத்தனை உண்மை?
உலகில் விசுவாசிகள் குறைவு. முட்டாள்களை வைத்து வேலை வாங்கிவிடலாம். ஆனால் துரோகிகளோடு நிர்வாகத்தை நடத்துவது மிகவும் கடினம். நம்பியவர்கள் செய்கிற துரோகத்தைக் காட்டிலும் நம்மிடம் நல்லதைச் சாதித்துக் கொண்டவர்கள் செய்கிற துரோகம் கொடுமையானது. உயிர் காப்பான் தோழன்னு சொல்வார்கள். ஆனால், இங்கு ஒரு தோழன் உயிருக்கு உலை வைத்தான். அந்தக் கயவன் யாருன்னு தெரிந்து கொள்ள வேண்டுமா? அடுத்த பகுதி வரை காத்திருங்கள்!