வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும்
முனைவர் சி. சேதுராமன்
16. தளபதி செய்த துரோகம்
துரோகத்திற்கு இந்த இனம், இந்த இடம் என்று எந்தக் கணக்குமில்லை. எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அது எந்த வடிவத்திலும் வரும். சிலர் தங்களின் காரியம் முடிகின்ற வரைக் காலைப் பிடித்து வலம் வந்து தங்களது காரியங்களை நிறைவேற்றிக் கொள்வர். காரியம் முடிந்தவுடன் தங்களுக்கு உதவியவரைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்காமல் அவருக்கே துரோகம் செய்வர்.
என்னுடைய நண்பர் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர். யார் துன்புற்றாலும் ஓடோடிச் சென்று உதவி செய்வார். அவர் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் பார்க்க மாட்டார். அவருக்குத் தெரிந்ததெல்லாம் உதவி செய்வதுதான்.
அவரிடம் ஒருநாள் திடீரென்று ஒரு இளைஞர் உதவிகேட்டு வந்தார். அந்த இளைஞரும் அவருக்கு நன்கு அறிமுகமானவர். புதிதாகக் கணக்காயர் பணியைத் தொடங்கிச் செய்துவந்தார். தனது மனைவிக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது என்றும் மருத்துவமனையில் கட்டுவதற்குப் பணம் வேண்டும் என்றும் தனக்குப் பத்தாயிரம் ரூபாய் தந்துவிட்டால் தனது மனைவி குணமடைந்ததும் ஓரிரு மாதத்திற்குள் தந்துவிடுவதாகக் கண்ணீர் விட்டு அழுதார்.
அவரது நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட நண்பர் அவரது நிலையை எண்ணி இரக்கப்பட்டு, தன்னிடம் பணமில்லாததால் மற்றொருவரிடம் பணத்தைக் கடன்வாங்கிக் கொடுத்தார். வந்த இளைஞர் அவரது காலில் விழுந்து இந்த உதவியை தான் எப்போதும் மறக்க மாட்டேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.
இளைஞரின் மனைவி உடல் நலம் பெற்று இல்லம் திரும்பினார். இளைஞர் குறிப்பிட்ட ஓரிரு மாதங்களும் கடந்தன. மாதங்கள் ஆண்டுகளாகின... ஆனால், அந்த இளைஞர் சொன்னபடி பணத்தைத் திருப்பித்தரவில்லை. கடன் வாங்கிக்கொடுத்த நண்பர் தான் வாங்கிய கடனுக்காக வட்டி கட்டிக் கொண்டிருந்தார். அந்த இளைஞர் நடத்தி வந்த அலுவலகத்திற்குச் சென்றார். அந்த இளைஞரும் இருந்தார். தனக்கு உதவியவர் வந்திருக்கிறார் என்று சிறிதும் கவலைப்படாமல் அவரைக் கண்டு கொள்ளாதிருந்தார். நண்பரோ என்ன தம்பி எப்படி இருக்கீங்க...? என்ன நம்ம வீட்டுப் பக்கமே உங்களைப் பார்க்க முடியலையே...? என்று நலம் விசாரித்துவிட்டு, தான் வாங்கிக் கொடுத்த பணத்தைக் கேட்டார்.
அந்த இளைஞர் மறுநாள் தருவதாகச் சொன்னார். மறுநாளும் அவரைத் தேடி நண்பர் சென்றார். இப்படியே அந்த இளைஞர் மறுநாள் கதையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த நண்பர், “எப்பொழுதுதான் பணத்தைத் தருவீர்கள்?” என்று கோபமாகக் கேட்டுவிட்டார். அதற்கு அந்த இளைஞர், “அடுத்த மாதம் ஐந்தாம் தேதி” என்றார். அதனை நம்பிய நண்பர் அவரைப் பார்க்கச் சென்றார். அந்த இளைஞர் “அடுத்த மாதம்” என்கிற கதையைத் தொடர்ந்தார். இப்படியே இரண்டு வருடங்கள் போய்விட்டன.
அதன் பின்பும் பொறுக்க முடியாத நண்பர் அந்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று தான் வாங்கிக் கொடுத்த பணத்தைக் கேட்க அந்த இளைஞரும், அவரது மனைவியும் அவரை ஏளனமாகப் பேசியது மட்டுமின்றி அவரை அடிக்கவும் துணிந்து விட்டனர். அத்துடன் அவரை அவமானப்படுத்தி விரட்டி விட்டனர். அந்த நண்பர் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் காவல்துறையில் புகார் வேறு அளித்து விட்டனர். பணம் கொடுத்த நண்பர் அதிலிருந்து மீண்டு வருவதற்கு மிகவும் துன்பப்பட்டார்.
உதவி செய்து தான்பட்ட அவமானத்தை நினைத்து இன்றும் அவர் மிகவும் வருந்திக் கொண்டிருக்கிறார். ஆனால், துரோகம் செய்த அந்த இளைஞன் ஒரு நாள் தன் வண்டியில் போனபோது லாரி மோதி இறந்தும் போய்விட்டான். நல்லவனைப் போல நடித்து, உண்மையில் நல்லவர்களாக இருப்பவர்களை ஏமாற்றினால் கடைசியில் முடிவு நயவஞ்சகர்களுக்குப் பெரும் துன்பம் தருவதாகவே அமையும். இருப்பினும் இதுபோன்ற துரோகங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இது இப்போதுதான் நடக்கிறது என்றில்லை. புத்தர் காலத்திலேயே இந்தத் துரோகம் நடந்திருக்கிறது.
சாக்கிய குலம்
கெளதம புத்தர் சாக்கிய மரபில் வந்தவர். புத்தரின் வரலாறு பாலி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இவ்வரலாற்றில் பல்வேறுவிதமான வியப்பினைத் தரும் வரலாற்றுக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சாக்கிய குலத்திற்குச் சுத்தோதனர் தலைவராக விளங்கினார். சாக்கிய நாடு என்பது சிறிய நாடு ஆகும். அது கோசல நாட்டின் ஒரு பகுதியாகவே விளங்கியது.
புத்தர் கெளதமர் என்றே பாலி மொழிக் குறிப்புகளில் குறிப்பிடப்படுகிறார். புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் என்பதாகும். இப்பெயர் எந்த இடத்திலும் பதிவாகவில்லை என்பது நோக்கத்தக்கது. சாக்கிய குலத்தின் தலைவராக விளங்கிய சுத்தோதனரின் மகனாகத் தோன்றியவரே கெளதமர். சுத்தோதனருக்கு தொத்தோனர், சக்கோதனர் சுக்லோதனர், சுழிதோதனர் என்று பல உடன்பிறந்த சகோதரர்கள் இருந்தனர். அமீதா, பமீதா என்று இரு உடன்பிறந்த சகோதரிகளும் இருந்தனர்.
புத்தர் துறவறம் பூண்டதால் அவருடைய சிறியதந்தையின் மகனாகிய மஹாநமா பல சூழ்ச்சிகளைச் செய்து சாக்கிய குலத்தின் ஆளுநராக ஆகிவிட்டான். இவன் புத்தருடன் உடனிருந்த ஆனந்தருடைய சகோதரன் ஆவான்.
சாக்கிய மரபினரின் தனித்தன்மை
சாக்கியர்கள் கோசலத்திற்குக் கட்டுப்பட்டிருந்தாலும் அவர்கள் தாங்களே உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டனர். அவர்கள் வேறு எந்த இனத்திற்குள்ளும் கொள்வினை கொடுப்பினை செய்து கொள்வது கிடையாது. அதனை விரும்பவும் மாட்டார்கள். பாசனதி என்பவன் கோசல நாட்டின் அரசனாக இருந்தான். பாசனதிக்கு அவனது மனைவி மூலம் மகன் பிறக்கவில்லை. பாசனதி மகதப் பேரரசன் பிம்பிசாரனின் தங்கை தேவியை மணந்தான். தனக்கு மகன் இல்லையே என்ற வருத்தம் பாசனதியை பெரிதும் வாட்டியது. இந்நிலையில் பாசனதி தனது அரண்மனையில் மாலை கட்டுபவனின் மகள் மல்லிகா என்பவளின் அழகில் மயங்கி அவளை மணந்து கொண்டு அரசியாக்கினான். மல்லிகாவிற்கு மகன் பிறந்தான். ஆயினும் அவனின் வாரிசுப் பிரச்சனை தீரவேயில்லை.
பாசனதி மல்லிகா இருக்க அடுத்ததாக ஒரு மனைவியைத் தேடி ஓடினான். அவனுக்கு சாக்கிய மரபிலிருந்து ஒரு பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் இருந்தது. புத்தரோடு கொண்டிருந்த நட்பினால் சாக்கிய மரபில் பெண் கொண்டு அவள் வாயிலாகத் தமக்கு வாரிசு உதயமாகும் என்று பாசனதி கருதினான்.
தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாசனதி மஹாநமாவின் மகள் வசபாவை மணமுடிக்க எண்ணம் கொண்டான். மஹாநமவிடம் முறையாகப் பெண் கேட்டான். சாக்கிய மரபில் உதித்த அவனுக்கு ஒரு வெறி இருந்தது. தங்கள் இனப்பெண் வேறு இன ஆணுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற ஆணவம் இருந்தது. ஆனால் கோசல நாட்டு மன்னன் பாசனதி பலம் வாய்ந்தவன். அவனது பகையைப் பெற்றால் சாக்கிய நாட்டின் கதி அதோ கதியாகிவிடும். எனவே மஹாநம தனக்கும் தன் அரண்மனையில் பணிபுரிந்த அடிமைப்பெண் நாகமுண்டா என்பவளுக்கும் பிறந்த வசபாவைச் சிறந்த பெண் என்று கூறி பாசனதிக்கு மணம் செய்து வைத்தான். மிகப் பெரிய ஒற்றர் படையை வைத்திருந்த பாசனதிக்கு இது தெரியாமல் போய்விட்டது.
வசபாவிற்கும் பாசனதிக்கும் பிறந்தவன் தான் விதுதபா ஆவான். இவனே கோசலநாட்டின் வாரிசாக அறிவிக்கப்பட்டான். விதுதபாவைப் பெரியயானையின் மீது அமர வைத்து ஊர்வலம் நடத்தினர். இவ்விதுதபா சிறிய வயதினனாக இருக்கும்போது சாக்கிய நாட்டிற்குச் செல்ல நேர்ந்தது.
சிறுவனான விதுதபாவிற்குத் தாய்வழி உறவில் பரிசுப் பொருள்கள் வழங்கப்படாமலிருந்தது. இது சிறுவனுக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தந்தது. அவன் அடிக்கடி தனது தாயிடம், “எனக்கு மட்டும் ஏன் தாத்தாவிடமிருந்து பரிசுகள் வராமலிருக்கின்றன?” என்று அடிக்கடி கேட்டு தொல்லை கொடுத்தான்.
அதனைக் கேட்ட வசபா சாக்கியத்தின் கபிலவஸ்து தொலைவில் இருப்பதால் தான் தாத்தாவால் உனக்கு விளையாட்டுப் பொருள்களைக் கொடுக்க முடியவில்லை என்று சமாதானம் கூறி வந்தாள். இதனைக் கேட்டு மனநிறைவு கொள்ளாத விதுதபா தான் மட்டும் கபிலவஸ்து சென்றுவரத் தன் தாயிடம் அனுமதி கேட்டான். வசபா அதற்குச் சம்மதம் தெரிவித்தாள்.
மஹாநமாவின் அவமதிப்பு
தாத்தாவின் வீட்டிற்கு வந்த விதுதபாவை மஹாநமவைத் தவிர வேறு யாரும் வந்து வரவேற்கவில்லை. அவனது ஒரு மாமன் மட்டுமே வந்து அவனைச் சந்தித்தான். விதுதபாவிற்கு மனதில் தன்னை மற்றவர்கள் வந்து வாழ்த்தவுமில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளித்தது. தனது தாத்தாவிடம் இது குறித்து அவன் கேட்டதற்கு அரசகுடும்பத்தினர் அனைவரும் கிராமப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டதால் விதுதபாவை வாழ்த்த வரவில்லை என்று பொய்க்காரணத்தைக் கூறினான்.
இருப்பினும் விதுதபா இதனைத் தனக்கேற்பட்ட அவமானமாகக் கருதி உளம் குமைந்தான். இருந்தாலும் அவனது தாத்தாவின் சமாதானத்தால் அமைதியானான் விதுதபா. கபிலவஸ்துவில் அவன் தங்கியிருந்த நாள்கள் மிகுந்த மகிழ்ச்சியான நாள்களாகக் கழிந்தன. பின்னர் தனது தாத்தாவிடம் கண்ணீர் மல்க விதுதபா பிரியாவிடை பெற்றுத் தனது நாட்டிற்குக் கிளம்பினான். மஹாநமாவும் கண்ணீர் மல்க விடைகொடுத்தார். படைகளுடன் புறப்பட்ட விதுதபா சிறிது தூரம் சென்றதும் படைவீரன் ஒருவன் தனது வாளை அரண்மனையில் வைத்துவிட்டு வந்துவிட்டதை அறிந்து அரண்மனைக்குத் திரும்ப நேர்ந்தது.
அரண்மனைக்குச் சென்ற படைவீரன் அங்கு நடந்ததைக் கவனித்தான். அரண்மனையில் ஒரு பெண் விதுதபா அமர்ந்திருந்த இருக்கையைக் காட்டி, “இங்குதான் அந்த அடிமைப் பெண் வசபாவின் மகன் அமர்ந்திருந்தான்” என்று பல்லைக் கடித்தவாறு கூறிக்கொண்டே பாலைத்தெளித்துச் சுத்தப்படுத்தினாள். இதனைக் கண்ட அந்தப் படைவீரனுக்கு உடலும் உள்ளமும் துடித்தது. அவன் தனது தளபதியிடமும் இளவரசன் விதுதபாவிடமும் நடந்ததைக் கூறினான்.
விதுதபா நான் அரியணையில் அமர்ந்ததும் இந்தச் சாக்கியர்களின் கழுத்தை அறுத்து அவர்களின் இரத்தத்தால் எனது ஆசனத்தைக் கழுவுவேன் என்று சபதமிட்டான்.
இதனைக் கேள்வியுற்ற பாசனதி தனது மனைவி வசபாவையும் மகன் விதுதபாவையும் அரச மரியாதைகளைக் களைந்து அவமானப்படுத்தினான். அவர்களின் தலைகளைச் சிரைத்து சாக்குப்பையைக் கொடுத்து அவர்களை அடிமை வாழ்விற்கே மீண்டும் பாசனதி அனுப்பினான்.
புத்தரின் காதுகளுக்கு இச்சம்பவம் எட்டியது. உடனே புத்தர் ஓடோடி வந்து பாசனதியைச் சந்தித்து அவன் தவறை அவனுக்கு உணர்த்தினார். சாக்கியர்கள் செய்தது மாபெரும் குற்றம் என்று ஒப்புக் கொண்டார். மேலும் இதில் வசபாவிற்கும் அவளது மகனுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் கூறினார். எழுபது வயதான பாசனதி தனது மனைவியையும் மகனையும் மன்னித்து ஏற்றுக் கொண்டான்.
தளபதி காரையானாவின் துரோகம்
ஓராண்டு ஓடியது. பாசனதி புத்தரைப் பார்க்க வேண்டும் என்று ஆவல் கொண்டான். அதனால் புத்தரைப் பார்ப்பதற்கு அவர் தங்கி இருந்த இடத்திற்கு அருகில் வந்தான். மன்னன் பாசனதியுடன் அவனது தளபதி காரையானாவும் சென்றிருந்தான். இந்தக் காரையானாவின் மாமன் பந்துலாவைப் பாசனதி கொன்றான். இதற்காகப் பழிக்குப் பழிவாங்குவதற்காகத் தளபதி காத்திருந்தான்.
பாசனதி புத்தர் தங்கியிருந்த பூங்காவை வந்தடைந்தான். அவரைப் பார்ப்பதற்கு அரச உடையில் செல்ல விரும்பாத பாசனதி மகுடத்தையும் பாதக்குறடுகளையும் உடைவாளையும் தனது தளபதியிடம் கொடுத்துவிட்டு எந்தவிதமான ஆயுதமுமின்றிச் சென்றான். புத்தரின் கால்களைத் தன் கண்ணீரால் கழுவினான். நீண்ட நேரம் புத்தருடன் இருந்தான்.
பின்னர் புத்தரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்ட பாசனதி அங்கிருந்து திரும்பினான். அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தளபதி அவ்விடத்தில் இல்லை. அங்கு ஒரு குதிரையும் இரு பணிப்பெண்கள் மட்டுமே இருந்தனர்.
காரையானாவின் மனதில் பாசனதியைப் பழிக்குப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அத்தருணத்திற்காகவே காரையானா காத்திருந்தான். பாசனதி புத்தரின் குடிலுக்குச் சென்றவுடன் காரையானா மகுடம், உடைவாள் உள்ளிட்டவற்றுடன் வதுதாபாவிடம் சென்று மன்னர் அரசாட்சியை மகனிடம் ஒப்படைக்கச் சொன்னதாகப் பொய் கூறினான். விதுதபாவிற்கு மிகுந்த மகிழ்ச்சி. தன்னையும் தன் அம்மாவையும் அவமானப் படுத்திய சாக்கியர்களைப் பழிக்குப் பழி வாங்க முனைந்தான் விதுதபா.
தனியாக விடப்பட்ட பாசனதி மகதத்தை ஆண்டு கொண்டிருந்த பிம்பிசாரனின் மகன் அஜாதசத்துருவை சந்திக்கச் சென்றான். ராஜகட் என்ற அவன் தலைநகருக்குக் கங்கையைக் கடந்து அவன் அந்நகரை அடைந்தான். ஆனால் இரவு நேரமாகிவிட்டதால் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டிருந்தன. பாசனதி அஜாத சத்துருவின் சம்பந்தி என்பதைக் கூறிக் கதவுகளைத் திறந்துவிடச் சொல்லியும் காவலர்கள் கதவைத் திறக்கவில்லை. காவலர்கள் பாசனதியை உள்ளே விடவில்லை.
அதனால் பாசனதி வெளியிலேயே தங்க நேரிட்டது. அப்போது அங்கு வந்த காரையானா பாசனதியை வெட்டிக் கொன்றான். இரவு விடிந்து பார்த்தால் பாசனதியின் சடலம் அவ்விடத்தில் கிடந்தது. பாசனதியை அவனது படைத்தளபதியே துரோகம் செய்து கொன்றான்.
பாசனதியின் மகன் விதுதபா பெரும்படையுடன் சென்று சாக்கிய குலத்தினரைக் கொன்று குவித்து அழித்தான். புத்தர் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்காமல் தன்னை அறிமுகப்படுத்திய சாக்கிய குலத்தில் ஒருவரையும் விட்டு வைக்காமல் அழித்தான். துரோகங்கள் எல்லா இனங்களையும் குலங்களையும் கூசாமல் துரத்தும். அத்துரோகங்கள் மகத்தான மகான்களையும் களங்கப்படுத்தும். நாம் செய்யும் செயல் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும். அதனை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
பணத்தையும் பதவியையும் முதன்மையானது என்று கருதுபவர்களுக்கு மனிதநேயம் என்பது இருக்காது. நமக்காக உதவியவர்களை நாம் ஏமாற்றிவிட்டோமே என்றெல்லாம் அவர்கள் நினைத்து வருந்த மாட்டார்கள். அவர்கள் துணிச்சலாக வலம் வருவார்கள்.
மனிதன் உடல் அடிப்படையில் பரிணாம வர்ச்சியைப் பெற்றிருந்தாலும் அவன் தனது மேல்த்தோலைக் கீறினால் அவனுக்குள் ஒளிந்திருக்கும் விலங்கு வெளிப்பட்டுவிடுகிறது. இதைத்தான் இவ்வரலாற்றுச் சம்பவங்கள் நமக்குப் புலப்படுத்துகின்றன. எந்த நேரத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதையும் வெளிப்படையாகப் பேசுகிறேன் என்று நினைத்துக் கொண்டு அனைத்தையும் வெளியில் கொட்டிவிடக் கூடாது. ஏனென்றால் அவை எப்போதும் நமக்கு எதிராகத் திரும்பலாம். செல்வத்தை நம் கையிருப்பில் வைத்திருப்பது மிக மிக அவசியம். ஏனெனில் உறவுகள் என்பது வீட்டுக்குள் ரத்தத்தின் அடிப்படையிலும் பொருளாதாரத்தின் அடிப்படையிலும் மட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றன. இதனை யாராலும் மறுக்க இயலாது.
வாய் இனிக்க இனிக்கப் பேசுபவர்கள் எல்லாம் இனிமையானவர்கள் அல்ல. இறுக்கமாக இருப்பவர்கள் எல்லாம் வெறுக்கத் தக்கவர்கள் அல்ல. எல்லோரிடமும் சாதாரண விஷயங்களை மட்டுமே பேசினால் பிரச்சனைகள் ஏதும் வராது. அறிவு தொடர்பான விஷயங்களைப் பேசினால் பிரச்சனையில் கொண்டுபோய் விட்டுவிடும்.
வாழ்க்கை துன்பம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். இன்பமும் அதன் மடியிலேய நிறைந்து இருக்கின்றது. எப்போதோ போட்ட ரொட்டித்துண்டிற்காக வாலை ஆட்டிக் கொண்டே தனது நன்றி உணர்வை நாய் காட்டுகின்றது. அதேபோன்று தன்னை வளர்த்தவர் வெட்டுகின்ற கசாப்புக் கடைக்காரரிடம் தன்னைப் பிடித்துக் கொடுக்கின்ற போதும் ஆடானது அமைதியாகச் செல்கின்றன. எல்லாவற்றிலும் தான் மேம்பட்டவன் என்று சொல்லிக் கொள்ளும் மனிதன் மட்டுமே துரோகியாக மாறுகிறான்.
இந்தத் தொடரைப் படித்த உங்களுக்குத் துரோகிகளிடமிருந்தும் துரோகங்களிடமிருந்தும் தப்பிப்பது எப்படி? என்ற கேள்வி எழலாம். துரோகங்களைச் சந்திக்கின்ற போதுதான் நாம் பக்குவமடைகிறோம். ஒருமுறை ஏமாந்தவன் அடுத்தடுத்து மிகவும் கவனமுடன் செயல்படுகின்றான். நமது அவமானங்களும் அனுபவங்களுமே நமக்குப் பேராசான்கள். இதனை ஒவ்வொருவரும் உணரவேண்டும். மனித மனங்களைப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு படித்தால் மட்டுமே துரோகங்களிலிருந்து விடுபடுவோம். அவ்வாறு இல்லையெனில் வீழ்ந்த இடத்திலேயே நாம் வீழ்வோம்.
தன்னலம் இன்றி இங்கு எதுவும் இல்லை. குடும்பம், உறவுகள், சமுதாயம் என்ற அனைத்து அமைப்புகளும் தன்னலம் என்ற மைய அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கின்றன. ஒரு பெரிய கசப்பான உண்மை எது தெரியுமா? அனைவரையும் சுயநலம்தான் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. இது உண்மை. சுயநலத்தைக் கைவிடுவது கூட அதைக் காட்டிலும் ஒரு பெரிய சுயநலத்தை மனத்தில் வைத்துதான் எனலாம். இது கசப்பானதாகத் தெரியலாம். ஆனால் இக்கசப்பு சரியான அளவில் இருந்தால் நலம்பயக்கும்.
இந்த உலகத்தில் துரோகத்தைத் தவிர நல்லது எதுவும் இல்லையா? என்று நாம் நினைக்கலாம். உண்மையில் இவ்வுலகம் அழகானது; உலகத்தை அழகாக்கும் முயற்சியில் பல நல்ல மனிதர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர். அவர்களால்தான் இவ்வுலகம் காப்பாப்றப்படுகின்றது. அவர்களைத்தான் பண்புடையோர், பண்பாளர் என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் இருப்பதாலேயே உலகம் உள்ளது.
புதிய இடங்களில் நாம் வழி தெரியாது தவிக்கின்ற போது நம்கூடவே வந்து வழிகாட்டிவிட்டுச் செல்லும் நல்லிதயங்களும் உண்டு. அதேபோன்று சாலையில் செல்கின்ற போது எதிர்பாராத விதமாக விபத்து நேரிட்டு நாம் கீழே விழுந்துவிட்டால் முகம் தெரியாத யாரோ ஒருவர் ஓடிவந்து நமக்கு உதவி செய்துவிட்டுப் போவதுமுண்டு. அப்படிப்பட்ட மனித நேயம் மிக்கவர்களும் இவ்வுலகில் வாழ்கின்றனர்.
தங்கள் வண்டியில் வந்தவர்கள் விட்டுச்சென்ற பெட்டிகளை எடுத்துச் சென்று அவர்களிடம் ஒப்படைக்கின்ற நேர்மை மிகு தானி (ஆட்டோ), மகிழுந்து ஓட்டுநர்கள், பெற்றோர்களுக்காக தங்களின் நலன்களை விட்டுக் கொடுக்கும் மகன்கள், மகள்கள், ஏழைக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்து, தந்தை இறந்த பின்னர் தன் தங்கை, தம்பிகள் அனைவருக்கும் மணம் செய்து வைத்த பின்னர் தங்களது வாழ்க்கையைத் தொடங்கும் வழிபாட்டிற்குரிய அண்ணன்கள், அக்காக்கள், தன்னிடம் பயிலும் மாணவர்கள் அனைவரும் தன் குழந்தைகளே என்று கருதி அவர்களின் உயர்வுக்குப் பாடுபடும் பெருமைக்குரிய ஆசிரியர்கள், கொடுத்த வாக்குறுதியைக் காப்பதற்காக தங்களது லாபத்தையும், வசதி வாய்ப்புகளையும் விட்டுக் கொடுக்கின்ற உத்தமர்கள், எந்த நிலையிலும் பிறர் மனம் புண்படக் கூடாது என்று கருதி வாழும் உயர் பண்பாளர்கள், ஏழ்மையான நிலையில் தான் காதலித்த பெண்ணாவது மகிழ்ச்சியாக வாழட்டும் என்று உள்ளத்தைக் கல்லாக்கிக் கொண்டு வாழும் காதலன்கள், காதலனாவது நன்றாக வாழட்டும் என்று விட்டுக் கொடுக்கும் நல்லுள்ளம் படைத்த காதலிகள், படுத்த படுக்கையாகக் கிடக்கும் தன் மனைவியைக் குழந்தை போன்று பார்த்துக் கொள்ளும் கணவன்கள், நோயாளிக் கணவனுக்கு எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு எப்போதும் பணிவிடை செய்யும் நல்ல மனைவிகள், பிறர் தமக்குத் தீங்கு செய்தாலும் எப்போதும் நன்மையையே நாடும் நல்லோர்கள், என்ற இப்படிப்பட்ட பண்பாளர்களால்தான் இவ்வுலகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. மழையும் அவ்வப்போது பெய்கின்றது.
துரோகங்களை சந்தித்து அவற்றிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்லவர்கள் தோற்றாலும் அவர்களை உலகம் எப்போதும் நினைவு கூர்ந்து கொண்டே இருக்கின்றது. கள்ளமில்லாதோரே இச்சமுதாயத்திற்குக் கலங்கரை விளக்கமாக இருக்கின்றார்கள். இவ்வுலகம் இன்பம் துன்பம் துரோகம் என்று எல்லாம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. அவ்வாறு காணப்பட்டாலும் இன்பத்தைக் காணும் இயல்பு வேண்டும். இதனைப் பக்குடுக்கை நன்கணியார்
“ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே”
(புறம்.,194)
என்ற பாடலில் எடுத்துரைக்கின்றார்.
ஒரு மனையில் சாப்பறை முழங்க, ஒரு மனையில் மணப்பறை முழங்குகிறது. ஒருத்தி பூவணியாற் பொற்புற்று விளங்க, ஒருத்தி கணவனைப் பிரிந்து கண் கலங்கி நிற்கிறாள். இவ்வாறு அமையுமாறு இவ்வுலகினைப் படைத்தவன் பண்பறிந் தொழுகும் பண்பாடில்லாதவன் ஆவான்.
இவ்வுலகில் இத்தன்மையை அறிந்தவன் இதனிடையே கிடந்து உழல வேண்டுமென்பதன்று. இதனிற் சிறந்த இன்ப உலகத்து இன்ப வாழ்வினைக் காணுதல் வேண்டும் என்ற புறநானூற்றுப் புலவரின் பாடல் எத்துணை உண்மையானது.
இவ்வுலகம் எப்படி இருப்பினும் கலங்காது உள வலிமையோடு நின்று இனியன காண்போம் இன்புற்று வாழ்வோம்.

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.