பெண்ணைக் கேலி செய்த இளைஞனுக்கு...
டெல்லியில் போலிஸ்காரராகப் பணியாற்றும் ஒருவரது மகன் பரத் அல்வாட். 21 வயதான இவர் டெல்லியில் ஓட்டல் நிர்வாகம் படித்த மாணவர்.
இவர் கடந்த ஆண்டு பஸ்ஸில் சென்றபோது ஒரு பெண்ணைக் கேலி செய்திருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தபெண் அளித்த புகாரின் பேரில் பரத் அல்வாட்டைக் கைது செய்த போலிஸ் வழக்கும் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி தருண் ஷெராவத், மாணவரின் எதிர்காலம் வீணாகாமலும், அதேநேரம் அந்த மாணவர் செய்த தவறை உணரும் வகையிலும் நூதனத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.
பொது இடங்களில் பெண்களைக் கேலி, கிண்டல் செய்வதால் அவர்களின் மனம் எந்த அளவிற்குப் புண்படும் என்றும், பெண்களை ஏன் கேலி செய்யக்கூடாது என்பது குறித்தும் விளக்கமாக 25 பக்கங்களுக்கு எழுதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், பெண்களைக் கேலி செய்வதைத் தடுக்கும் சட்டங்கள் பற்றியும் அதற்கான தண்டனைகள் குறித்தும் 500 பிரசுரங்கள் தயாரித்து அதை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அல்லது டெல்லிப் பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேரவரும் மாணவர்களிடம் போலிஸ்காரரின் கண்காணிப்பின் கீழ் வினியோகிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வித்தியாசமான தண்டனை வழங்கிய நீதிபதியைப் நாமும் பாராட்டலாம்.
- சுபாஷினி முருகன்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.