........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                         

 இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

1

அடையாளம்-3

            பழ வியாபாரத்துடன் இலக்கியத்திலும் பார்வை பதித்தவர்.

தேனி சீருடையான்.

தேனியில் பஸ் நிலையம் எதிர்புறம் சாலையோரத்தில் பழங்கள் விற்பனை செய்யும் பழக்கடை வைத்து நடத்தி வரும் 57 வயதாகும் எஸ்.கருப்பையா இலக்கிய ஆர்வம் மிக்கவர். தேனி சீருடையான் என்கிற புனைப் பெயரில் தமிழில் வெளியாகும் பல முக்கியப் பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள், நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. “ஆகவே...” , “ஒரே வாசல்” , “விழுது”, “பயணம்” என்று இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் நூலாக வெளி வந்திருக்கின்றன. “கடை” என்கிற பெயரில் நாவல் ஒன்றும் நூலாக வெளி வந்திருக்கிறது. இதே போல் சிறுகதை குறித்து “சிறுகதை-பாதையும் பயணமும்” என்கிற இவருடைய ஆய்வு நூலும் வெளியாகி உள்ளது.

சாதாரணமாக பழ வியாபாரம் செய்து வந்த தன்னை “பத்திரிகைகளில் எழுதுங்கள் உங்களாலும் இலக்கியம் படைக்க முடியும்” என்று உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டியவர் என்று புதிய நம்பிக்கை பத்திரிகையின் ஆசிரியர் பொன். விஜயனை நினைவு கூறும் இவர் , இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு நூலான “ஆகவே...” நூலை வெளியிட்டு இவருடைய படைப்புகளை தமிழகம் முழுவதும் கொண்டு சென்ற எழுத்தாளர் அல்லி உதயனை என்றும் மறக்க மாட்டேன்” என்றும் சொல்கிறார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டி, நாவல் போட்டியில் பரிசுகளைப் பெற்றிருக்கும் இவர் மேலும் இலக்கிய வீதி , இளைஞர் முழக்கம் ஆகியவற்றிலும் பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

"இந்தப் பரிசுகளை விட இவருடைய “ விடியும் வெளிச்சம்  வரை ” சிறுகதை மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பாடத்தில் ஒன்றாகவும், இவருடைய “கடை” நாவல் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பாடமாகவும் வைக்கப் பட்டுள்ளது என்பது இவருடைய எழுத்துக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு " என்கிறார்.

இப்படி பழ வியாபாரத்துடன் தமிழ் இலக்கிய உலகிலும் பார்வையைப் பதித்த இவருக்கு துவக்க காலத்தில் கண் பார்வையில்லை என்பது இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம். ஆம், இவர் சென்னை பூவிருந்தவல்லியில் இருந்த பார்வையிழந்தோர் பள்ளியில்தான் எஸ். எஸ். எல்.சி வரை படித்தார். அதன் பின்பு இலவசமாய்க் கிடைத்தநவீன அறுவை சிகிச்சை ஒன்றைச் செய்து கொண்டு கண் பார்வை பெற்றார். தான் பெற்ற கண் பார்வையுடன் தமிழ் இலக்கியத்திலும் பார்வையைச் செலுத்தினார். இலக்கியங்கள் படைத்தார்.

இவர் தற்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும், தேனி மாவட்டச் செயலாளராகவும் பொறுப்புகள் வகித்து வருகிறார்.

இவருடைய எழுத்துக்களில் கிராமிய நயத்துடன் கூடிய பேச்சு வழக்கு நடை பயன்படுத்தப் படுவதால் இவருடைய எழுத்துக்களை, எவரும் எளிதில் படித்துப் புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய உலகின், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் அன்றாட விஷயங்களைக் கருவாகக் கொண்ட இவரது கதைகள் சமுதாய வளர்ச்சிக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் முக்கியப் பங்கு வகிக்கும் என்றே சொல்லலாம்.

“ஆகவே...” இவரது “சிறுகதை-பாதையும் பயணமும்” கொண்ட எழுத்துப் “பயணம்” இவரது பழக்“கடை” எனும்“ஒரே வாசல்” மட்டுமில்லாமல் இலக்கியத்துடன் இணைந்து ஆலமரமாய் “விழுது” விட்டு படர்ந்திட வாழ்த்தி இவரை முத்துக்கமலம் உங்களுக்கு அடையாளம் காட்டி பெருமை கொள்கிறது.

                                                                                                                                                                                            - தாமரைச் செல்வி.

முந்தைய அடையாளம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.