........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                         

 இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

1

அடையாளம்-4

        கிராமத்து எழுத்து வேந்தன்  

 நல்லாசிரியர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகிலுள்ள கள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சு.குப்புசாமி, அந்த ஊரிலுள்ள நாயகம் நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வு பெற்றிருப்பவர்.

ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்திலிருந்து பல்வேறு தமிழ் பத்திரிகைகளில் எழுதத் துவங்கிய இவர் இன்று வரை இவர் கள்ளிப்பட்டி சு.குப்புசாமி என்ற பெயரிலும் சேவகன், சமதர்மப் பித்தன் , நேசன் மற்றும் உண்மை விளம்பி என்கிற புனைப் பெயர்களில் 2010 துணுக்குகள், குறை தீர்க்கக் கோரும் 1544 சீர்திருத்தக் கடிதங்கள், 335 கேள்வி பதில்கள், வித்தியாசமான சுவையான 225 பேட்டிக் கட்டுரைகள், அறிஞர்களின் வாழ்வில் நடந்த 78 சுவையான சம்பவங்கள், 72 சிறுகதைகள் மற்றும் தமிழக தியாகிகள் 36 பேர்களைப் பற்றிய சிறு கட்டுரைகள் என்று இவரது எழுத்துக்கள் பிரசுரமாகியுள்ளது.

இது தவிர 47 மேடை நாடகங்களையும் எழுதி அரங்கேற்றியிருக்கிறார். வானொலியிலும் நாடகங்கள், சமுதாய சீர்திருத்தப் படைப்புகள் என்று இவருடைய பல நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி இருக்கின்றன. மேலும் இவருடைய சில நிகழ்ச்சிகள் தொலைக் காட்சிகளிலும் ஒளிபரப்பாகி உள்ளது. பல்வேறு பதிப்பகங்கள் நாடகம் , சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல தலைப்புகளில் இவர் எழுதிய 29 நூல்களை வெளியிட்டுள்ளன.

மாநில அரசின் நல்லாசிரியர் விருது, மும்பை திருக்குறள் பேரவையின் வி.ஜி.பி.விருது, உரத்த சிந்தனையின் ஜி.வி.விருது, டெல்லி பாரதிய தலித் சாகித்ய அகாடமியின் டாக்டர்.அம்பேத்கார் பெல்லோஷிப் விருது, உலகத் தமிழ் மாமன்றத்தின் எழுத்துச் செம்மல் விருது உட்பட 24 விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.

மாநில நல்லாசிரியர் விருது பெற்ற கள்ளிப்பட்டி சு.குப்புசாமி அவர்களை அப்போதைய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாரட்டிய போது எடுக்கப்பட்ட படம்

இவருடைய எழுத்துக்களையும், கிராம சேவைகளையும் பாராட்டி இவருக்கு பல்வேறு சமூக சேவை அமைப்புகள் வாயிலாக கிராமத்து எழுத்து வேந்தன், மக்கள் எழுத்தாளர், சீர்திருத்த ஆசிரியர், பொதுநலச் சிற்பி, நாடகச் செம்மல், எழுத்துச் செம்மல் என்பது போன்ற 14 பட்டங்கள் வழங்கப் பட்டிருப்பது தனிச் சிறப்பு.

இவ்வளவு சிறப்புடைய இவரைப் பாராட்டி தினமலர், வாரமலர், நகர் மலர், தினசரி, தினகரன், தினமணி, தினபூமி நாளிதழ்களும் தேவி, தமிழ்ப்பாவை, பொதிகை, நாதம் மற்றும் ஓரெழுத்துப் பத்திரிகை "ஓ" ஆகியவை சிறப்புச் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.

இந்த வரிசையில் முத்துக்கமலமும், கிராமத்தில் பிறந்து, வளர்ந்து கிராமத்திற்காகவே தன் எழுத்தாலும், பணியாலும் பல் வேறு சிறப்புகளைச் செய்துள்ள இவரைச் சிறப்பு செய்யும் நோக்கத்துடன் அடையாளம் காட்டி மகிழ்கிறது.


                                                                                                                                                                                                  -தாமரைச்செல்வி.

முந்தைய அடையாளம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.