........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......  

                         

 இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

1

 அடையாளம்-5

        இலக்கியப் பொன்விழா காணும் நாகை தருமன்  

நாகப்பட்டினத்தில் பிறந்த மா.தருமலிங்கம் நாகை தருமன், மாரி தருமன், மாரிதாஸ், மருதவாணன், நாதன், நாகை மருதன், லட்சுமி மணாளன், மாரிமைந்தன் என்கிற புனைப் பெயர்களில் பல்வேறு பத்திரிகைகளில் கதை , கட்டுரைகள் எழுதியிருந்தாலும் நாகை தருமன் என்ற பெயரில்தான் அதிக அளவில் எழுதியிருக்கிறார்.

துவக்கத்தில் தமிழ்நாடு, நம்நாடு, நவமணி, நவ இந்தியா, தனியரசு, முரசொலி நாளிதழ்களில் செய்தியாளராகவும் பின் மன்றம் வார இதழ் மற்றும் தாய் வார இதழ் ஆகியவற்றில் துணை ஆசிரியராகவும் இலக்கியப் பணியாற்றி இருக்கும் இவருடைய படைப்புகள் தமிழகப் பத்திரிகைகள் மட்டுமின்றி சிங்கப்பூர் , மலேசியா, இலங்கை, பர்மா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வரும் தமிழ் இதழ்களிலும் வெளியாகி இருக்கின்றன.

இவர் பேரறிஞர் அண்ணா குறித்த , "இலக்கிய உலகில் அண்ணா, தமிழ் புதையல் அண்ணா, அண்ணாவின் கடைசி நாட்கள், அண்ணாவின் திருக்குரல், அண்ணாவின் நவமணிகள்"

என்று ஐந்து நூல்களும்,

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் குறித்த , "புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள், பாரதரத்னா எம்.ஜி.ஆர், இதயக்கனி எம்.ஜி.ஆர்"

என்று நான்கு நூல்களும்

டாக்டர் கலைஞர் குறித்த  "கலைஞர் போற்றும் கலைஞர், உவமைக் களஞ்சியம்" என்கிற நூல்களும்

கவியரசர் கண்ணதாசன் குறித்த " கவியரசர் சொல் கேளீர் " நூலும்

"அன்பு மழை, வெற்றிவீரன், அறிவு விளக்கு , கல்விக்கண், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, அறிவூட்டும் அன்புவழிக் கதைகள், மாயாபுரி மன்னன், புலிப்பாறை முத்தையன்“ என்கிற எட்டு குழந்தை இலக்கிய நூல்களையும்

"மீண்ட உறவு, ஒரே பிள்ளை, வாழ்க்கைப் பந்தயம், நிலவின் நிழல், புழுதியிலே புதுமலர்" என்கிற ஐந்து நாவல்கள், "இதுதான் உலகம், கிழக்கு வெளுத்தது, பொன்விழா" என்கிற மூன்று சிறுகதைத் தொகுப்புகள், "தெய்வீக மணம்" எனும் ஆன்மீக நூல் ஒன்று என மொத்தம் 29 நூல்களை எழுதியிருக்கிறார்.

தமிழ்த் திரைப்படம் "துணை" க்கு கதாசிரியராகவும், காமராஜர் பற்றிய வீடியோ படத்திற்கு உரையாடலாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சென்னை வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார்.

இவருடைய பத்திரிகைப் பணிக்காக ரோஜா விருது, அன்னை சந்தனம்மாள் விருது, வீரபாகு விருது, தேவர் விருது போன்ற விருதுகளும் எழுத்துச் சிகரம், எழுத்துச் சிற்பி பட்டங்களும் இலக்கிய அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர், அமிதாப்பச்சன், ஜெய்சங்கர், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன், ஆர்.எம்.வீரப்பன், கி.ஆ.பெ.விசுவநாதம், வி.என்.சிதம்பரம், டாக்டர் வாசவன், முன்னாள் அமைச்சர் தங்கபாலு ஆகியோர் இவருடைய எழுத்து மற்றும் கலைப் பணிகளைப் பாராட்டி பரிசுகள் வழங்கியிருக்கிறார்கள்.

கலை, இலக்கிய விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் இவர் நாகப்பட்டினத்தில் "வாயில்தோறும் வள்ளுவர்" என்று வாரம்தோறும் தெருக்கள் முழுவதும் திருவள்ளுவர் விழா எடுத்து ஒவ்வொரு வீட்டிலும் திருவள்ளுவர் படம் இடம் பெறச் செய்த தனிப்பெருமை இவருக்குண்டு.
 

எம்.ஜி.ஆர்.பவள விழா புகைப்படக் கண்காட்சி துவக்க விழாவில் நாகை தருமன் (2) ,  கற்பகம் ரவி (1) , வி.என்.சிதம்பரம்(3) , தேனி ராஜதாசன்(4) ஆகியோர் உள்ளனர்.


பல்வேறு கலை, இலக்கியம் மற்றும் சமுதாய அமைப்புகளில் பொறுப்பு வகித்த இவர் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார் என்பது இவருக்கு இன்னுமொரு சிறப்பு.

இப்படி பல சிறப்புகளை உடைய நாகை தருமன் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்து ஐம்பதாண்டுகள் நிறைவடைந்திருப்பதை அடுத்து நாகை தருமன் இலக்கியப் பொன்விழாக் குழு ஒன்றை தேனி ராஜதாசன் மற்றும் திருப்பூர்.எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் அமைத்துள்ளனர்.

இலக்கியப் பொன்விழா காணும் நாகை தருமனை நாமும் நம்முடைய முத்துக்கமலத்தில் அடையாளம் காட்டி வாழ்த்துகிறோம். 
                                                                                                                                                                                              - தாமரைச் செல்வி.

முந்தைய அடையாளம் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.