|
சிறுகதை-10
அப்பாவி சுப்பையா கதைகள்.
- தேனி. எஸ்.மாரியப்பன்.

தூக்கம் வர...
'' அப்பாவி சுப்பையா சில நாட்களாக சரியாகத்
தூக்கம் வராமல் அவதிப்பட்டார். அவரின் மனைவியின் யோசனையின் பேரில் ஒரு டாக்டரைப்
பார்க்கச் சென்றார்.
அவரைப் பரிசோதித்த டாக்டர், " உங்கள் வீட்டில் ஒரு கோழிப் பண்ணை இருப்பதாக
நினைத்துக் கொள்ளுங்கள். தினமும் இரவு படுத்தவுடன் கற்பனையில் கோழிப் பண்ணையில்
உள்ள கோழிகளை எண்ணிக் கொண்டிருங்கள். எப்படியும் நூறு கோழிகளை எண்ணிக்
கொள்வதற்குள் உங்களுக்குத் தூக்கம் வந்து விடும்" என்றார்.
பத்து தினங்கள் கழித்து டாக்டரிடம் திரும்பி வந்தார்.
வந்தவர், " டாக்டர் என் நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது. முன்பாவது
விடியற்காலையில் சிறிது நேரம் தூங்குவேன். இப்போது அதுவும் போய் விட்டது."
என்றார்.
டாக்டர்,"ஏன்? என்ன ஆயிற்று? விளக்கமாகச் சொல்லுங்கள்" என்றார்.
அதற்கு அப்பாவி சுப்பையா, " கோழிகளை எண்ணிக் கொண்டிருக்கும் போது , ஏழாயிரத்தைத்
தாண்டியது. அப்போது நாலைந்து திருடர்கள் வந்து இரண்டாயிரம் கோழிகளைத் திருடிக்
கொண்டு சென்று விட்டார்கள். ஒரு கோழி ஐம்பது ரூபாய் என்றால் கூட ஒரு லட்சம்
ரூபாய் ஆகிவிட்டதே. இதனால் எனக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்? நஷ்டப்பட்ட எனக்கு
எப்படி டாக்டர் தூக்கம் வரும்?" என்று கேட்டார்.
இதைக் கேட்ட டாக்டருக்கு சிரிப்பதா ? அழுவதா? என்று தெரியவில்லை.
______________________________________________________________________________
உன் பெற்றோரிடம் சொல்.
அப்பாவி சுப்பையா எட்டாம் வகுப்பு வரை
படித்துவிட்டு ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
கடைக்கு வருபவர்கள் கொடுக்கும் லிஸ்ட் கொடுத்தவுடன் அதன்படி சரக்குகளைக் கட்டிப்
போட்டு விடுவார். முதலாளி பில் போட்டு விடுவார்.
ஒருநாள் மதிய நேரம் முதலாளி வீட்டிற்குச் சாப்பாட்டிற்குச் சென்றிருந்தார்.
அப்பாவி சுப்பையா மட்டும் கடையில் இருந்தார்.
அப்போது ஒர் சிறுமி கடைக்கு வந்து நூறு கிராம் மிளகாய் வற்றல் வேண்டுமென்று
கேட்டாள்.
அப்பாவி சுப்பையா நூறு கிராம் மிளகாய் வற்றலை நிறுத்து ஒரு காகிதத்தில் மடித்து
அப்படியே அச்சிறுமியிடம் கொடுத்தார்.
அந்தச் சிறுமி மடித்துக் கொடுத்ததை, " கட்டிக் கொடுங்கள் " என்று சொல்ல,
உடனே அப்பாவி சுப்பையா , " உன்னை நான் எப்படியம்மா கட்டிக் கொடுக்க முடியும்?
உன்னைப் பெற்றவர்கள்தான் கட்டிக் கொடுக்க முடியும் ( திருமணம் செய்து வைத்தல்)
" என்றார் அப்பாவியாக.
இதைக் கேட்ட அச்சிறுமி வெட்கத்துடன் ஓடினாள்.
_______________
தேனி.எஸ்.மாரியப்பன்
அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய கதைகள் காண

|