........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

      a

கட்டுரை-10

         பொங்குக... தமிழுணர்வுப் பொங்கல்..!

-ஆல்பர்ட், அமெரிக்கா.

இவர்கள் "சேற்றில்" கை வைத்தால்தான் நாம் "சோற்றில்" கை வைக்க முடியும். யார் இவர்கள்? உழவர் பெருமக்கள். உழவர்கள் - தமிழர்கள்; அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள் தான்... பொங்கல் பண்டிகை. இந்தத் தமிழர் திருநாள்... பொங்கல் திருநாள்... உலகெங்கும் உள்ள தமிழர்கள் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்.

தை முதல் நாளுடனேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. அதாவது, தை முதல் நாளே திருவள்ளுவர் ஆண்டுத் துவக்க நாளான முதல் நாளும் வருகிறது. ஆங்கில ஆண்டு 2007. திருவள்ளுவர் ஆண்டு 2038. எனவே தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையும் தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பையும் ஒரு சேரக் கொண்டாடுகிற நிலைதனைப் பெற்றிருக்கிறோம்!

இது இந்துக்கள் பண்டிகை, கிறிஸ்தவர்கள் பண்டிகை அல்லது முஸ்லிம் பண்டிகை என்று சொல்லாமல் தமிழர் திருநாள் என்கிறோம்.

நஞ்செய், புஞ்செய் நிலங்களானாலும் சரி, வானம் பார்த்து மழைக்குக் கதறும் பூமியானாலும் சரி, இராப்பகலாக உழைத்து உழைப்பின் செல்வம் அறுவடைக்கு வருகிற நாள் "தை" யில்தான்! .

உழைப்பை அறுவடை செய்து செல்வம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் பலன் பெறக் காரணமாக இருந்த நிலம், நீர், காற்று, சூரியன், கால்நடைகளுக்கு நன்றிப் பெருக்கோடு எடுக்கும் விழாதான் பொங்கல் பெருவிழா! .தை மாதம் கொண்டாடப்படுவதால் "தைத் திருநாள்" என்றும் அழைக்கிறோம்.

உழுது, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, நீர் பாய்ச்சி, கண்ணின் கருமணி போல பாதுகாக்கின்ற உழவனின் இந்தக் காலங்களில் மடியில் காசு இருக்காது. அறுவடை முடிந்தால்தான் அவன் மடியும் கனக்கும்; மனமும் நிறைந்திருக்கும். அதனால்தான் மகன், மகள் திருமணம் அல்லது சீர்செனத்தியோடு புத்தாடைகள் வாங்குவதையே உழவன் ஒத்திப் போட்டுக் கொள்வது வழக்கம்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழியே இதனால் ஏற்பட்டதுதானே!

மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுவது போகிப் பொங்கல். "பழையன கழிதலும் புதியன புகுதலும் "இந்நாளில்தான்! .பீடைகள் ஒழிக்கப்பட்டு மங்கல வாழ்வுதனை மகிழ்ச்சியோடு துவங்கும் நன்நாள்தான் போகித் திருநாள். மொத்தத்தில் உறைவிடம் நிறைவிடமாகக் காட்சி தரும்.

மழைக்கு அதிபதியான வருணன் தனது வெப்பவீச்சுக் கதிர்களால் பூமியிலிருந்து ஒரு பங்கு நீரை எடுத்துக் கொண்டு பதிலாக பத்து மடங்கு மழையாகப் பொழிகிறான். அதேபோல சூரியனைப் பூஜிப்பதால் வாழ்க்கைக்கு தேவையான எல்லாம் பத்து மடங்காகக் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு வரும் தகர்க்க இயலாத நம்பிக்கையாகும்.

"பரிதியே பொருள் யாவிற்கும் முதலே" என்கிற முறுக்கு மீசைகாரக் கவிஞன் பாரதியின் கதிரவன் வணக்கப் பாடலில் குறிப்பிடுவது போன்று கதிரவனை முதன்மைப்படுத்தி வணங்குதல் கடைப்பிடிக்கப் படுகிறது. எனவே சூரியக் கடவுள் அந்த வருட விளைச்சலுக்குத் துணை புரிந்தமைக்கு நன்றி கூறியும், எதிர்வரும் ஆண்டில் நல்ல விளைச்சலைத் தர வேண்டியும் பொங்கலன்று முதல் வணக்கம் சூரியனுக்குச் செய்வார்கள்.

கதிரவன் கணக்கு...

இன்றைக்கு அறிவியல் உலகம் அசுர வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஆனால் அன்றைய தமிழன் சந்திர, சூரியப் போக்கை வைத்து காலத்தையே கணித்தவர்கள்; கதிரவன் உத்ராயணப் பயணம் மேற்கொண்டு தனுசிலிருந்து மகர இராசியில் நுழையும் இயற்கை நிகழ்வினைத்தான் நாம் தைத் திருநாளாகக் கொண்டாடுகிறோம்.

"பொங்கலோ பொங்கல்"

அறுவடையில் வந்த புது நெல் அரிசியிட்டு கரும்புச் சாறில் செய்த வெல்லமிட்டு, பாலூற்றி, பசு நெய் விட்டு பொங்கல் வைப்பார்கள். உலை கொதித்து, பொங்கலின் மணம் நாசியில் நுழைய சுற்றி இருப்பவர்களின் கண்கள் மொத்தமும் பொங்கல் பானையின் மீதே இருக்க...ஆயிற்று. பொங்கல் பொங்கி வழிய "பொங்கலோ பொங்கல்" என்ற உற்சாகக் குரல்கள் பீறிட பொங்கல் தயார்! .குடும்பமே கூடி நிற்க, தலை வாழை இலை விரித்து, தேங்காய் உடைத்து, பூ, பழம் வைத்து, கற்பூரம் கொளுத்தி, கதிரவனுக்கு பூஜை நைவேத்தியம் செய்து, பொங்கலையும் படையல் செய்து வணங்குவார்கள்.

எண்சாண் உடம்பும் பூமித் தரையில் பட விழுந்து பரிதியின் ஆசி பெறுவர். அதன் பின் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு இவர்களும், இவர்களுக்கு அவர்களும் பொங்கல் வழங்கி உண்டு மகிழ்வார்கள்!

பூஜை முடிந்த பின் சைவச் சாப்பாடு விருந்துபோல நடக்கும். விருந்திற்கு முன்பாக இல்லத் தலைவனும் தலைவியும் தங்கள் மகள் மருமக்களுக்கு பொங்கல் சீர்வரிசை அளித்துக் கெளரவிப்பதும் வழக்கமான பழக்கங்களில் ஒன்று.

பொங்கல் பண்டிகைக்கு மறு நாள் கொண்டாடப்படுவது கனுப் பொங்கல். இதைக் கரி நாள் என்றும், "கனுப் பீடை" நாள் என்றும் கூறுவது உண்டு. கனுப் பொங்கல் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

"மாட்டுப் பொங்கல் "

மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் " உழவர்களின் உற்ற நண்பர்கள் கால்நடைகள் தான். நிலத்தை உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, (வீட்டுக்கு வெளிச்சம் தர பயன்படும் எரிவாயு அளிப்பதிலிருந்து) எண்ணற்ற விதங்களில் பயன்படும் கால்நடைகளை கெளரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது.

உழவுக் கருவிகளை அது டிராக்டராக இருந்தாலும் சரி, கலப்பையாக இருந்தாலும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் மோட்டார் பம்பு செட் உட்பட அனைத்துக் கருவிகளையும் இதே போல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். பொங்கல் பொங்கும் போது "பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல்" என்று எல்லோரும் குரல் கொடுக்க சிறுவர்கள் சந்தோஷித்து குதூகலிப்பார்கள். தொடர்ந்து சாமி கும்பிட்டு கற்பூர தீபாராதனை காட்டப்படும்.

அதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் பிரசாதத்தை கொடுப்பார்கள். இப்படி கால் நடைகளுக்கு நன்றி கூறும் நாளைத்தான் " மாட்டுப் பொங்கலாக "க் கொண்டாடுகின்றனர்.

காணும் (கன்னிப்) பொங்கல்

நான்காவது நாளைக் காணும் பொங்கலாக அனுசரிப்பார்கள். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் என்றும் உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் இந் நாளில்தான். தெருக்களில் ஒலி பெருக்கிகள் காதைத் துளைக்கும். அந்த நற்பணி மன்றம், இந்த நல சங்கம், ரசிகர் மன்றங்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.

இரவில் இசை கச்சேரிகள், நாடகம் என்று ஊருக்கு ஏற்றவாறு ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று தொன்மையான கலைகள் இரவு விளக்கு வெளிச்சத்தில் நடைபெறுவதும் உண்டு. கிராமப்புறங்களில் கிராமியக் கலைகள் இந்த நாளில் நடத்தப்படும். கரக ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம் இவற்றோடு வீர விளையாட்டான மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும். சண்டித்தனம் செய்யும் காளைகளின் கொட்டத்தை அடக்கி வெற்றி வாகை சூடுபவர்களுக்கு பரிசுகள், பண முடிப்புகள் வழங்கப்படும்.

ஜல்லிக் கட்டு...

 சண்டித்தனம் செய்யும் காளைகளின் கொட்டத்தை அடக்கி வெற்றி வாகை சூடுபவர்களுக்கு பரிசுகள் பண முடிப்புகள் வழங்கப்படும். தமிழகத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் அலங்காநல்லூரில் உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடை பெறுவது வழக்கம். இந்த ஜல்லிக்கட்டைப் பார்க்க அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் ஒவ்வொரு வருடமும் வந்து குவிந்து விடுவார்கள். இலட்சக் கணக்கானவர்கள் திரண்டு வந்து இந்த ஜல்லிக்கட்டைப் பார்ப்பார்கள்.

இந்த ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு வருடமும் அடங்காத காளைகள் வீரர்களைப் படு மோசமாக காயப் படுத்தி விடும். இதை எல்லாம் பொருட்படுத்தாமல் வீர சாகசத்துடன் காளையை மூக்கணாங் கயிறு பிடித்து அடக்கி வெற்றி வாகை சூடுவார்கள். அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் கோவை, கம்பம், காங்கேயம், இராமாநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, சேலம் போன்ற இடங்களிலிருந்து லாரிகள் மூலமாக கொண்டு வருவார்கள். இத்தகைய காளைகள் விவசாயத்திற்கோ மற்ற வேலைகளுக்கோ பயன்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்காகவே வளர்ப்பார்கள்.  இது தமிழகத்தில் மிகப் பழமையான வீர விளையாட்டாகும். மன்னர்கள் ஆண்ட காலத்தில் கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களையே பெண்கள் மணந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கிறது. (ஆனால் இப்போது மாப்பிள்ளை ஜல்லிக்கட்டுக்கு போறார்னு தெரிஞ்சா, இந்த இடம் நம்ம புள்ளைக்கு ஒத்து வராது என்று ஒதுங்கி விடுவார்கள். மாடு முட்டி குடல் சரிஞ்சு செத்துப் போனா மக வாழாவெட்டியாப் போயிருவாள் என்று மகளைப் பெற்ற மகராசர்கள் சிந்தனைதான் காரணம் )

இது தவிர "ரேக்ளா ரேஸ்" எனப்படும் ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டிப் பந்தயம் கூட பல இடங்களில் நடை பெறும். இதற்கும் ஏராளமான கூட்டம் கூடும். எந்த வண்டி ஜெயிக்கும் என்று வேடிக்கை பார்ப்பவர்கள் பந்தயம் கட்டுவது வழக்கம்.

சாவக்கட்டு...

இது தவிர "சாவக் கட்டு" என்றழைக்கப்படும் கோழிச் சண்டைகள் தமிழகத்தில் பரவலாக நடை பெறும். கோழிச் சண்டை என்று சொன்னாலும் சேவல்களைத்தான் சண்டை போட விடுவார்கள். சேவல்களை கோழிச் சண்டைக்காகவே வளர்ப்பார்கள். சேவல் கால் நகங்களை வெட்டி வெட்டி கூராக்கி வருவார்கள். முதிர்ச்சியடைந்ததும் அதை சண்டைக்கு பழக்குவார்கள். சேவலின் கால்களில் ஒரு சாண் நீளமுள்ள கூரான கத்தியை கட்டி விடுவார்கள். அவரவர் சேவல்களை களத்தில் எதிரும் புதிருமாக இறக்கி விடுவார்கள்.

சேவல்கள் எகிறி எகிறி சண்டை போட்டுக் கொள்ளும். சண்டையில் சேவல்களின் காலில் உள்ள கத்தியால் இரண்டுக்கும் காயம் ஏற்படலாம். ஆனால் ஆக்ரோசமான சண்டையில் எதாவது ஒரு சேவல் தலை சாய்ந்துவிடும். ஜெயித்த சேவலுக்குரியவர் தோற்ற சேவலை எடுத்துக் கொள்வார். ஆனால் எந்தச் சேவல் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டுபவர்கள் கூட்டம் தான் கட்டுக்கு அடங்காமல் இருக்கும். இது சில இடங்களில் அடிதடி, கத்திக்குத்து வரை போய் விடுவதும் உண்டு.

இப்படி நடக்கும் இடங்களில் அடுத்த தடவை சாவக்கட்டு கிடையாது என போலீசார் தடை விதித்து விடுவதும் உண்டு. அவர்களுக்கு 'கடுக்காய்' கொடுத்து விட்டு வேறு இடத்தில் ரகசியமாக சாவக்கட்டை நடத்துவார்கள். இது ஒரு சூதாட்டம் போல் நடப்பதால் பெரும்பாலும் கோழிச் சண்டை நடத்த போலீஸ் தடை இருக்கும். அதை எல்லாம் மீறி சாவக்கட்டு பொங்கல் திருநாளில் தமிழகத்தில் நடந்து வருகிறது. பொங்கல் திருநாளில் கிராமங்களில் கோழிக் குழம்பு மணக்கிறது என்றால் அது பெரும்பாலும் சாவக்கட்டில் சாவடிக்கப்பட்ட சேவல் குழம்பு மணமாகத் தானிருக்கும் என்றால் அது மிகை இல்லை.

இப்படி பொங்கல் நான்கு நாள் திருவிழாவாக இன்னும் நடக்கிறதா?...ஊஹீம்..

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் எப்படி இந்தத் தமிழர் திருநாளைக் கொண்டாடுகின்றனர்?

வார வேலை நாட்களில் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதில்லை. வார இறுதியில் சனி அல்லது ஞாயிறு அன்று அங்கங்கேயுள்ள தமிழ் அமைப்புகள் பொங்கல் விழா என்று நடத்துவார்கள். ஏன் கொண்டாடப்படுகிறது என்றோ அவற்றின் மூலம் என்ன என்று தங்கள் குழந்தைகள் அறிந்து கொள்ளச் செய்யவேண்டும் என்பதில் அக்கறை கொள்வதில்லை. இதில் கலந்துகொள்வோர் அவரவர் இல்லங்களிலிருந்து சமையல் செய்து கொண்டுவரும் விதவிதமான பொங்கல் வகைகளோடு மற்ற பதார்த்தங்களோடு தமிழர்கள் ஒன்றுகூடி உணவருந்தி விட்டு சிறுவர் சிறுமியர் கலை நிகழ்ச்சிகள் என்று ஏற்பாடு செய்து மகிழ்கின்றனர். இன்னும் பலர் இந்த நாளில் திரைப்படங்களை திரையிட்டு பார்த்து ரசித்தோ பொழுதைக் கழிக்கின்றனர். நான்கு நாள் நிகழ்வை நான்கு மணி நேர நிகழ்வுகளாக நடத்தி சந்தோஷிக்கின்றனர்.

சில இடங்களில் விதி விலக்காக, பட்டிமண்டபம், அல்லது சிறப்புப் பேச்சாளர்களைக் கொண்டு உரை நிகழ்த்துவதைக் காண முடிகிறது.

வெளிநாடு வாழ் தமிழர்கள்தான் இப்படி என்றில்லை .... தமிழக கிராமங்களில்தான் பாரம்பரியமாக தமிழர் திருநாள் பழஞ்சுவடுகளின் அடையாளமாகக் கோலாகலமாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால்.... இன்றைக்கு தமிழகத்தையே எடுத்துக் கொண்டால், நகர்ப்புறங்களில் எல்லாம் வீட்டுக்குள் ஸ்டவ் அடுப்பு பெயருக்கு ஒரு பொங்கல், சாமி படங்களுக்கு முன் நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு பொங்கல் சாப்பிட்டு விட்டு ரெண்டு துண்டுக் கரும்பை கடிப்பதோடு பொங்கல் முடிந்து விடுகிறது...!

காலங்காலமாய்..கலித்தொகைக் (பரிபாடல்) காலந்தொட்டு, திருவாதிரைத் திருவிழா ...அறுவடை விழா...உழவர் திருநாள்..தமிழர் திருநாள் என்றெல்லாம் நாம் நன்றியோடு விழா எடுப்பதைப் போலவே... இன்றைக்கும் மகர சங்கராந்தி ...மகா சங்கராந்தி... போகி... இந்திர விழா என்று தமிழகத்தை ஒட்டியுள்ள அண்டை அயல் மாநிலத்தார் கூட கொண்டாடி மகிழ்வதை நாமறிவோம்!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.. இது நம்பிக்கையின் காலம்....ஆகவே.. பொங்குக எங்கும் தமிழுணர்வுப் பொங்கல்..!

சாதி மத பேதமின்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து உவப்போடு "தமிழர் திருவிழா" வைக் கொண்டாடுகிற பெருவிழா இந்தப் பொங்கல் திருநாள் ஒன்று தான் என்பது அதனினும் மகிழ்தன்றோ!!

ஆல்பர்ட் பெர்னாண்டோ அவர்களது இதர படைப்புகள

முந்தைய கட்டுரைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.