|
கட்டுரை-23
நம் தேசத்தை
ஆள ஒரு தலைவன்
-எஸ்.எஸ்.பொன்முடி.

சான்றாண்மையுடன் பழி பாவங்களுக்கு அஞ்சி நேர்வழியுடன் வாழ்ந்து வருபவர்களை
அப்பாவிகள் என்றும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் நாம் நம்ப ஆரம்பித்து
விட்டோம். கையூட்டு பெறுவது மற்றும் கொடுப்பது நியாயப்படுத்தப்பட்டு மெல்ல
மெல்ல நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மாறி வருகின்ற அவலத்தை சமீப காலங்களில்
நாம் உணர்ந்து வருகின்றோம்.
யாரோ கொடுக்கின்றார்கள், யாரோ வாங்குகின்றார்கள், நமக்கென்ன? என்று நம்
குடிமக்கள் பொறுப்பின்றி வாழ்ந்து வருவது சரியா என்று ஆய்வு செய்திடல் வேண்டும்.
ஒரு அரசாங்க அலுவலர் வாங்கும் 100 ரூபாய் லஞ்சத்தில் ஆரம்பித்து ஆள்வோர்கள்
அரவமின்றி வாங்கும் 100 கோடி ரூபாய் லஞ்சம் வரை ஒட்டு மொத்த உருவடுத்து நாம்
தேசத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கின்றது. நம் தேசத்தின் இறையாண்மை உலக
நாடுகள் மத்தியில் கேள்விக்கு உள்ளாகின்றது. மறைமுகமாக வசூலிக்கப்பட்டு
நிர்வகிக்கப்படும் பணம் பெரும்பாலும் மறைமுக தேவைகளுக்கே பயன்படுத்தப்பட்டு
வருகின்றது.
திடீர் திடீரென்று ஏறி இறங்கும் பங்கு சந்தை நிலவரம், சம்பந்தமில்லாத விலையுடன்
எட்டாக்கனியாய் ஏறி நிற்கும் வீட்டு மனைகள், குறிப்பிட்ட காலங்களில்
குறிப்பிட்ட விளைபொருட்களின் விலை ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றிற்கு காரணம் இஞ்ச
லாவண்ய பணத்தின் பரிவர்த்தனைகளேயாகும். ஆகையால் கையூட்டு கொடுப்பதும்
வாங்குவதும் அவற்றிற்கு பிந்தைய முதலீடுகளும் சிறிது காலத்திற்கு பின் ஏழை,
எளிய, நடுத்தர மற்றும் விவசாயப் பொருங்குடி மக்களின் வாழ்க்கையை நேரடியாக
பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை உணரலாம்.
பசித்த வயிறுடன் தூங்கச் செல்பவர்கள், சத்துணவுக் குறைவால் அவதிப்படுபவர்கள்,
வானமே கூரையாய் வாழ்பவர்கள், அடிப்படை மருத்துவ வசதி கிடைக்கப் பெறாதவர்கள்
ஆகியோர் நாற்பது சதவீதத்திற்கும் மேல் நம் தேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். உலக
பணக்காரர்களுடன் போட்டியிடும் தொழிலதிபர்களும், நடுத்தர, உயர்நடுத்தர
பணக்காரர்கள் லட்சக்கணக்கான எண்ணிக்கையிலும் வாழ்ந்து வருகின்றனர். நுகர்வுப்
பொருட்களுக்கான உலகின் இரண்டாவது பெரிய சந்தை இந்தியாவாகும். பொருளாதார ரீதியாக
நம் தேசம் மிகுந்த குழப்பத்துடன் செங்குத்தான ஏற்றத்தாழ்வுடன் விளங்குவதை
பொருளாதார வல்லுநர்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றனர்.
இந்தியாவில் லஞ்சம், கமிசன் ஆகியவை எவ்வாறு பரந்து விரிந்துள்ளது என்று அறிந்து
கொள்வது என்பது அவற்றுக்கு எதிரான போராட்ட யுக்திகளை வகுத்துக் கொள்வதற்கு
வாய்ப்பாக அமையும். இந்திய அரசியல் சட்டத்திற்கும் நம் பாரம்பர்ய தர்ம
சிந்தனைகளுக்கும் எதிரானவைகளாகக் கருதப்படும் லஞ்ச லாவண்ய கமிசன் வகையறாக்களை
கீழ்க்கண்டவாறு வகுத்துப் பார்க்கலாம். அவை;
(1). சாதாரண பொது மக்கள் சான்றிதழ்கள், அனுமதிச் சீட்டுக்களைப் பெறுதல்,
சமூக நல அமைப்புக்களால் வழங்கப்படும் உதவித் தொகைகளைப் பெறுதல் ஆகியவற்றுக்கு
பெறப்படும் லஞ்சம்.
(2). தகுதிகளை மீறி, கால மூப்பினை மீறி உரிமங்கள் மற்றும் நிர்வாக அனுமதி
பெறுவதற்கு தரப்படும் கையூட்டு
(3). விதிகளை மீறிய வேலைவாய்ப்பு, கல்வி சார் சேவைகள், பணி மாறுதல்
ஆகியவற்றிற்கு தரப்படும் கையூட்டு
(4). உள்ளாட்சி அமைப்புக்கள் முதல் மத்திய, மாநில அமைச்சர்கள் வரை பெற்றுக்
கொள்ளும் ஒப்பந்த பணிகளுக்கான கமிசன்
(5). பன்னாட்டு முதலாளிகள், உள்நாட்டின் மிகப்பெரும் தொழிலதிபர்கள் ஆகியோர்
மத்திய, மாநில அரசுகளின் மிக உயர்ந்த பதவிகளில் வீற்றிருப்போருக்கு தொழில்
அனுமதி சார்ந்த பணிகளுக்காக வழங்கும் கோடிகளில் புரளும் கையூட்டு
போன்றவையாகும்.
மேற்கூறியவற்றில் முதல் மூன்று வகைகள் அரசாங்க அலுவலக நடைமுறைகள் சார்ந்தவைகள்
கடைசி இரண்டு முறைகள் ஆளும் அரசியல், அதிகார மட்டத்தின் சான்றாண்மை, நேர்மை
சார்ந்ததாகும். கடந்த ஐந்து வருடங்களில் மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள்
அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டும் (E-Governance) இலக்க மயமாக்கப்பட்டும்
(digital) வருவதை நாம் அறிவோம். இதன் விளைவாக பயண விசாரணைகள், அரசின் கொள்கை மற்றும்
திட்டங்களை அறிந்து கொள்ளல், கால மூப்பு விவரங்களைத் தெரிந்து கொள்ளல் ஆகிய
சாதாரண பணிகள் வீண் அலைச்சல் இன்றி நமக்கு தானியங்கி முறையில் கிடைக்க
ஆரம்பித்துள்ளன என்பதை நாம் அறிவோம்.
ஆனால், மாநில அரசு தன்னுடைய மிக முக்கிய அலுவலகங்களாகிய பத்திரப்பதிவுத் துறை,
வருவாய்த்துறை, சமூக நலத்துறை, கனிம வளத்துறை, வட்டார அளவிலான போக்குவரத்து துறை
மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றை முழுமையான கணிணி மயமாக்கப்படாமல்
இருப்பதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
அரசுத் துறைகள்
கணினி மயமாக்கப்பட்டால் நமக்கு எவ்வகையான நன்மைகள் கிடைக்கும்
என்று பார்க்கலாம்.
(1). வரிசைமுறை மற்றும் பணி மூப்பு விவரங்கள் வெளிப்படையாக
உறுதி செய்யப்படும்
(2). பணபலம், அதிகார பலம் கொண்டோரின் தலையீடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்
(3). இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்படும்
(4). வெளிப்படைத் தன்மையின் விளைவால் மக்களிடையே விதிகளை மீறுவதால் ஏற்படும்
குற்ற உணர்ச்சி அதிகரிக்கும்; சமூக பொறுப்புணர்வு மிகுந்து காணப்படும்.
கணினி மயமாக்கலில் குறைகளும் உள்ளதாகச் சுட்டிக் காட்டப்படுகின்றது. அவை,
எல்லோராலும் அலுவலகங்களுக்கு நேரடியாக வருகை தர முடியாது என்பதும் எல்லோராலும்
வரிசை முறையைப் பின்பற்ற முடியாது என்பதும் ஆகும். சான்றிதழ்கள், அனுமதிச்
சீட்டுகள், பதிவுகள், புதுப்பித்தல்கள், நிர்வாக அனுமதிகள் போன்ற சாராரண அரசு
சேவைகளை இலவச மற்றும் கட்டண முறையில் (Free & Paid Services) மாற்றிக் கொள்ளலாம்
.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு முன்
அரசாங்க நிர்வாகங்கள் குடிமக்களுக்குரிய சான்றிதழ்கள், உரிமங்களின் தேவைகளை
முடிந்தளவு குறைத்தும், எளிமையாக்கிடவும் வேண்டும். மேலும், ஒவ்வொரு சாதாரண
அரசாங்க அலுவல்களுக்கும் கோப்புகளையும், கையொப்பமிட்ட தாள்களையும் நம்பிக்
கொண்டிருக்கும் மனநிலைகள் கைவிடப்பட வேண்டும். அது மட்டுமின்றி எதற்கெடுத்தாலும்
ஆதாரங்களைக் கேட்கும், தேடும் வழிமுறைகளை அகற்றுவதற்குரிய தீர்வுகள் தேடப்படல்
வேண்டும். இவை போன்ற நடவடிக்கைகள் சாதாரண, எளிய, நடுத்தர மற்றும் விவசாயப்
பெருங்குடி மக்களின் வீண் அலைச்சலையும், சில அலுவலகங்களில் நிர்பந்திக்கப்படும்
கையூட்டும் முறைகளையும் முடிந்தளவு குறைக்கும் என்று நம்பலாம்.
உள்ளாட்சி அமைப்புகள் முதல் மாநில அமைச்சர்கள் வரை பெரும்பாலானோர் வாங்கும்
கமிஷன் என்னும் ஒருவகை கையூட்டு ஒப்பந்தப் பணிகளின் மூலமாக கிடைக்கின்றது. இந்த
விவகாரம் பொதுமக்களால் சாதாரணமாக டீக்கடைகளில் கூட விவாதிக்கப் படுகின்றது.
ஒப்பந்தக்காரருக்கு கிடைக்கப் பெறும் வருவாயின் ஒரு குறிப்பிட்ட சதவீதமே
கமிஷனாக வசூலிக்கப்படுகின்றது என்றும் அக்குறிப்பிட்ட பணிகளின்
நிர்ணயிக்கப்பட்ட தரம், அளவு போன்றவை பொறியாளர்கள் மட்டத்தில் கண்காணிக்கப்
படுவதால் கமிசன் பெறுவது தீது ஆகாது என்றும் நியாயப்படுத்தப் படுகின்றது.
உள்ளாட்சி அமைப்பினரால் செய்யப்படும் பணிகளான சிமெண்ட் சாலை, சாக்கடை,
குடிநீர்த் தொட்டி, தடுப்புச் சுவர்கள அமைத்தல், அலுவலக பள்ளி கட்டிட
பராமரிப்புகள், ஏரி, குளங்கள் ஆழப்படுத்துதல் ஆகியவை பொதுமக்கள் முன்னிலையில்
ஓரளவு சரியாகவே நடைபெறுகின்றன. ஆனால் நெடுஞ்சாலைகள், அரசுக் கட்டிடங்கள்,
வாய்க்கால்கள், ஆகிய பணிகள் பொதுமக்களின் கவனத்திற்கு அப்பாற்பட்டு நடைபெறுவதால்
ஊழல் மலிந்தும் தரம் குறைந்தும் காணப்படுகின்றன. ஆகையால் இவை போன்ற
கோடிக்கணக்கான மதிப்பீட்டில் நடைபெறும் கையூட்டு இந்தியப் பொருளாதாரத்தைப்
பாதிக்கின்றது. உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் பணிகள் பொதுமக்களால்
இயல்பாகவே கண்காணிக்கப் படுவதைப் போல் கோடிக்கணக்கான மதிப்பீட்டில் நடைபெறும்
பணிகளை கண்காணிக்கவும் சமூக
தணிக்கை (Social Audit) பொது மக்கள் பங்கேற்புடன்
நடைபெற வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளின் மிகமிக உயரிய பதவிகளில் உள்ளோரால் ஐம்பது கோடி, நூறு
கோடி என பெருந்தொகை பன்னாட்டு, உள்நாட்டு தொழில் அதிபர்களிடம் கையூட்டாகப்
பெறப்படுகின்றது. அத்தொகை குறிப்பிட்ட தொழிலின் நுழைவு, அனுமதி, மற்றும்
தடையில்லாச் சான்று ஆகியவற்றிற்காகப் பெறப்படுவதாக சமூகவியலாளர்கள்
கருதுகின்றனர். அரசாங்க அமைப்பின் கீழ்மட்டத்தில் பெறப்படும் கையூட்டு
ஏற்படுத்தும் விளைவுகளை விட சமூக, பொருளாதார கேடு ஆள்வோரால் பெறப்படும் போது
பன்மடங்கு உண்டாகின்றது. அத்தகைய பணம் சினிமா, தொலைக்காட்சி, பங்கு மார்க்கெட்,
ரியல் எஸ்டேட் மற்றும் இவை போன்ற எண்ணற்ற மறைமுக தொழில்களுக்கு வாரி இறைக்கப்
படுகின்றது. மக்களுக்கு தொண்டு செய்யாமல் அதிரடியாக பொது வாழ்க்கைக்கு
வருபவர்கள், சமூக விரோதிகள், ஆகியோர் அரசியலில் வெற்றி பெற பன்னாட்டு
தொழிலதிபர்களிடம் பெறும் பணம் உதவுகின்றது.
கணினி சார் மனித வளத்தைப் பொறுத்த அளவில் உலக நாடுகளில் முதல் ஐந்து
இடத்திற்குள் நாம் வந்து விட்டோம் என்பதில் நமக்கு பெருமைதான். லஞ்ச லாவண்யம்
மிகுந்து இருக்கும் நாடுகளில் நம் தேசம் முதல் பத்து இடத்திற்குள்
வீற்றிருக்கின்றது என்பதற்காக நாம் வருத்தப்படுகின்றோமா? வேர் முதல் அடிவரை
நீக்கமற நிறைந்து நிற்கும் லஞ்ச-லாவண்ய முறைகளை நாமே நியாயப்படுத்திக் கொள்வது,
அதைவிடக் கேவலம் இல்லையா? இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?
நேர்மையான குடிமக்கள் - நேர்மையான அரசு - நேர்மையான தலைவன் என்னும் சமூக இயல்
தத்துவம் உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகின்றது. அடித்தட்டு மக்களின்
அறியாமையையும் வறுமையையும் பயன்படுத்தி இலவசங்களால் அவர்களின் நெற்றிப் பொட்டில்
ஓங்கி அடித்து உறங்க வைக்கும் தலைமைத் தேர்தலின் மூலம் வாக்குகளால் விரட்டப்பட
வேண்டும். நீடித்த வளர்ச்சி ( SUSTAINABLE DEVELOPMENT ) யைத்
தீர்க்க தரிசனத்துடன் யோசித்து நதிநீர் இணைப்பு, சேது சமுத்திரக் கால்வாய், ஜாதி,
மதநல்லிணக்கம் ஊனமுற்றோர் நல்வாழ்வு, பொது வாழ்வில் தூய்மை போன்ற
திட்டங்களுக்காக மக்களை ஒருங்கிணைத்து சலிக்காமல் போராடும் ஒரு தலைவன் நம்
தேசத்தை ஆள்வதற்கு அவசரமாகவும் அவசியமாகவும் தேவை. அதற்கான முயற்சிகளில்
ஈடுபடுவது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

எஸ்.எஸ்.பொன்முடி
அவர்களின் இதர படைப்புகள்

முந்தைய கட்டுரைகள் காண

|