........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

      a

கட்டுரை-52

தமிழுக்கு நேர்ந்த அவமானங்கள்

-முனைவர் தமிழப்பன்.

தமிழ்நாட்டில் ஆங்கில அரசாட்சியேற்பட்ட பின்னர்த் தாய்மொழியாகிய தமிழை அதன் வழிமொழிகளாகிய தெலுங்கு, கன்னட, மலையாள, துளுவங்களோடு அடக்கி "உண்ணாட்டுமொழிகள்" என வகைப்படுத்தினர் சிலர். தாய்மொழி ஒன்றை அதன் வழிமொழிகளோடு வகைப்படுத்தலாமே? அது முன்னதனை இழிவுபடுத்ததாகாதா? என்று இருபதாம் நூற்றண்டுத் தொடக்கத்தில் பரிதிமாற் க்லைஞர் தொடுத்த வினாவையே இருபத்தொன்றாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் செம்மொழிக் கொண்டாட்டத்தைச் செய்து கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கேட்க வேண்டியதிருக்கிறது.

செம்மொழிப் பட்டியலில் சேர ஆயிரம் ஆண்டுப் பழமை போதுமென்ற வரையறை எதை உணர்த்துகிறது? தன்னேரில்லாத தாய்மொழியாகிய தமிழை அதன் சேய்மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகியவற்றோடு சேர்த்து அதன் தகுதியைக் குறைத்துவிட வேண்டுமென்பதுதானே இந்த வரையறையின் உள் நோக்கம். ஒரு நூற்றாண்டுக் காலம் கடந்தும் தமிழுக்கு அன்று ஏற்படுத்தப்பட்ட அவமானம் தொடர்கதையாகி நிற்பதை உணராமல் "ஆகா, ஓகோ" என்று துள்ளிக் குதிப்பதை என்னவென்று சொல்வது? அன்று சென்னை சர்வகலா சாலை செய்ததி இன்று இந்திய அரசு செய்திருக்கிறது. அதை வரவேற்றுத் தமிழர்களும் கொண்டாடிக் கொண்டிருப்பதுதான் வருத்தத்தைத் தருகிறது.

சர்வகலா சாலைப் பாடப்பகுதிகளில் தமிழின் நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. தமிழ் முதலிய தாய்மொழிகளுக்கு அனாவசியமான முக்கியத்துவம் அளிக்கப்படுவதாயும், வடமொழியொன்று நீங்கலாக ஏனைய பாஷைகளை மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் சில பெரிய இடத்து மனிதர்களுக்கு வகுத்து விட்டது. லார்டு கர்ஸான் இந்திய ராஜப் பிரதிநிதியாக இருந்த காலம் அது. வட, தென் இந்தியாக்களில் இருந்த வடமொழி அபிமானிகள் ஒன்று கூடிக் கொண்டு மத்திய சட்டசபையில் சுதேசத் தாய்மொழிகளையெல்லாம் சர்வகலாச்சாலைப் பாடப்பகுதிகளினின்றும் நீக்கிவிட வேண்டும் என்பதாக ஒரு பிரேரணை கொண்டு வந்தனர். ராஜப்பிரதிநிதி இப்பிரேரணையைச் சென்னை சர்வகலா சாலைக்கு அதன் கருத்தைத் தெரிவிக்கும்படி அனுப்பி வைத்தார். சென்னைச் சர்வகலாசாலையோ சென்னை ஆசிரியர் சங்கத்திற்கு இப்பிரேரணையை அனுப்பி விட்டது. வடமொழி அபிமானிகள் பற்பல இடங்களில் கூட்டங்கள் கூடிச் சட்டசபைப் பிரேரணையைச் சட்டமாக்கிவிட பெரும்பாடுபட்டனர். என்ற செய்தி நமக்கு என்ன சொல்கிறது? பரிதிமாற்கலைஞரும், மு.சி.பூரணலிங்கம் பிள்ளையும் அன்றில்லாதிருந்தால் வடமொழிப் பற்றாளர்களின் எண்ணம் அன்றே நிறைவேறியிருக்கும். இன்றைக்குத் தமிழ் படிக்காமலேயே தமிழ் நாட்டில் எந்தப்பட்டமும் பெறலாம் என்ற நிலை அன்றைக்கே நடைமுறைக்கு வந்திருக்கும்.

"செந்தமிழ்" முதல் இதழ் வெளியீட்டில் (1901) பரிதிமாற்கலைஞர் உயர்தனிச் செம்மொழி என்றவொரு கட்டுரையை எழுதியிருந்தார்.

"திருந்திய பண்புஞ் சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம்" என்று இலக்கணம் கூறி தமிழ் செம்மொழியென்பது திண்ணம் என்றும் தமிழ் உயர்தனிச் செம்மொழியாகவே வடமொழிக்கு ஒருமுறியிலும் தாழ்ந்ததில்லை அன்றியும் நடைமுறையில் பயிலப்படும் மொழி எனவே ஓராற்றல் வடமொழியினுஞ் சிறந்தது" என்றும் கூறியிருக்கிறார்.

கரந்தைத் தமிழ்ச்சங்கம்,

1. உலகத்து உயர்தனிச் செம்மொழிகளில் முதல் மொழியெனக் கருதப்படுவதற்குரித்தான எல்லா இலக்கணாமும் தமிழ்மொழி உடையதாயிருப்பதால் அதனை அத்தகைய மொழியாக ஆட்சியர் கருதி ஐ.சி.எஸ். பட்டத்திற்கு அதை ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இந்திய அரசியலாரைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் கேட்டுக் கொள்கின்றனர்.

2. தமிழ் மொழியானது தொன்மையும் சீர்மையும் வாய்ந்து விளங்குகின்ற ஓர் உயர்தனிச் செம்மொழியெனப் பல திறத்தாராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதால் சென்னைப் பல்கலைக்கழகத்தார் தாம் இதுகாறும் கொண்டிருந்த கொள்கையை மாற்றித் தமிழ் மொழி ஓர் உயர்தனிச் செம்மொழி என்பதை ஒப்புக் கொண்டு இத்தென்தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகத்தில் அதற்கு முறைப்படி முதல் இடமும் உரிமைகளும் கொடுக்க வேண்டுமென்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் வற்புறுத்துகிறார்கள் என்று இரு தீர்மானங்களை 1919 ஆம் ஆண்டில் நிறைவேற்றிச் சென்னைப் பல்கலைக்கழகத் தலைவர் அவர்களுக்கும், துணைத்தலைவர் அவர்களுக்கும், பதிவாளர் அவர்களுக்கும், சென்னையாட்சி அமைச்சர் அவர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.

கரந்தை தமிழ்ச்சங்கத்தின் இரண்டாவது தீர்மானத்தின் மூலம் தமிழைச் செம்மொழியாகச் சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் தமிழுக்குரிய இடமும் உரிமைகளும் மறுக்கப்பட்டிருக்கின்றன எனப்தும் தெரியவரும். அதெ நிலைதானே இன்றும் நீடிக்கிறது? தமிழ் ஒரு கட்டாயமில்லாத பாடமொழியாகவே இருந்து வருகிறது. முற்றிலும் பயிற்று மொழியாகப் பயன்படவில்லை என்பதும்தானே உண்மை.

தமிழர்கள் தங்கள் மொழிக்குரிய இடத்தைப் பெறுவதில், உரிமைகளைப் பெறுவதில் காலங்காலமாகப் போராடினாலும் வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இன்றுவரைக்கும் இருந்து வருகிறது.

ஆட்சியாளர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புத் தமிழர்களுக்கு அவ்வளவாக வாய்க்கவில்லை. வாய்த்த சில வாய்ப்புகளையும் அவர்கள் கை நழுவவே விட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த வாய்ப்பைப் பெற்ற வடமொழிவாணர்கள் குரங்குப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு தங்கள் மொழி தேவமொழி, தெய்வமொழி என்றெல்லாம் ஆட்சியாளர்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.

"India" என்ற பெயரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து ஆண்டுத் தொகுப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 1854 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையை அவர்கள் வெளியிட்டுத் தொடக்கக் கல்வி, பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி பற்றியெல்லாம் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

"India in 1880" என்ற தொகுப்பில் (இலண்டனில் அச்சிடப்பட்டது) வந்ததை அப்படியே தருகிறேன்.

The resources of Sanskrit, the ancient language of India with its Copiousness, precision and flexibility are adapted to the diffusion of modern knowledge among the natives.

1856-ல் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை வெளியிட்டார். அதற்குப்பின் 24 ஆண்டுகள் கழித்து வெளிவருகின்ற தொகுப்பில் தமிழைப் பற்றிய ஒரு குறிப்பும் இல்லை. மாறாக, சமஸ்கிருதத்தை உச்சிமேற்கொண்டல்லவா ஆங்கிலேயர்கள் போற்றியிருக்கிறார்கள். அவர்களை அவ்வாறு எழுதத் துண்டியவர்கள் யாராக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இன்றைக்கும் அதே நிலைதான் நீடிக்கிறது என்பதைக் கீழே காணும் ஆண்டறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

1984-85 ஆண்டறிக்கை- மனிதவள மேம்பாட்டுத்துறை

"Recognising the importance of Sanskrit in promoting national integration international understanding & appreciation & preservation of our cultural heritage several schemes have been introduced by the Government of India for the development and promotion of Sanskrit education and learning"

1996-97 ஆண்டறிக்கை- மனிதவள மேம்பாட்டுத்துறை

Sanskrit is not only a classical languages but also a repository of our cultural heritage. Preservation, propagation and development of this heritage is therefore essential.

-இவ்வாறெல்லாம் மத்திய அரசு அறிவிப்பதற்கு யார் பின்னணியில் இருந்திருப்பார்கள் என்பதைச் சற்றி எண்ணிப் பார்த்தால் உங்களுக்கு உண்மை புரியவரும். அதே மத்திய அரசு தன் மொழிக் கொள்கையை எவ்வாறு கூறியிருக்கிறது?

1986 INDIA - Promoting of languages: "The policy of the Government is to encourage the development of all Indian languages including classical, modern and tribal"

இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பன்றி வேறெதுவும் இல்லை. தமிழைப் பற்றி ஒரு சிறு குறிப்பு கூட இந்த ஆண்டறிக்கைகளில் இல்லை. அத்தோடு மட்டுமில்லை மலைவாழ் மக்களின் மொழிகளைப் பற்றிக் கூட ஏதும் இல்லை. அவ்வாறு எழுதத் தூண்டியவர்களுக்கு முன் சில கேள்விகளைக் கேட்டு வைப்போம்.

திருத்தியமைக்கப்பட்ட சமசுகிருதம் சிறந்ததா?

திருத்தியமைக்கப்படாத செந்தமிழ் சிறந்ததா?

வழக்கில் உள்ள வளர்தமிழ் சிறந்ததா?

வழக்கற்றுப் போன சமசுகிருதம் சிறந்ததா?

நீசபாஷை என்றது யார்?

திருக்குறளை மட்டம் தட்ட வேண்டுமென்று ஆண்டாள் பாடிய "தீக்குறளாஇச் சென்றோதோம்" என்பதைத் "திருக்குறளைச் சென்றோதோம்" என்று மாற்றிச் சொன்னது யார்?

"குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்" என்ற இயல்பான அடியை மாற்றி "பார்ப்பார்த்தப்பிய கொடுமையோர்க்கும்" என்று மாற்றியது யார்?

தமிழ் வித்துவான் பட்டம் பெற சமசுகிருதம் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தியவர்கள் யார்? அவ்வாறு வற்புறுத்தியவர்கள் சமசுகிருதம் பட்டம் பெறத் தமிழ் படிக்க வேண்டும் என்று ஏன் வற்புறுத்தவில்லை?

சமசுகிருத ஆண்டைக் கொண்டாடியவர்கள் ஏன் தமிழ் ஆண்டைக் கொண்டாட மறந்து போனார்கள்?

இந்தக் கேள்விகளுக்கு யார் விடையாக வருவார்களோ அவர்களால்தான் தமிழ் மொழிக்கு அன்றிலிருந்து இன்றுவரை அவமானம் நேர்ந்து வந்திருப்பதைப் புரிந்து கொள்ள, நம் இனமானத் தமிழர்களுக்கு எது தடையாக இருக்கிறது என்பதுதான் புரியவில்லை.

கால்டுவெல் கைகளுக்குத் தொல்காப்பியம் கிட்டாமற் போயிற்று. அதுமட்டும் கிட்டியிருந்தால் அவரே தமிழை முதன்மொழி என்று நிறுவியிருப்பார். தமிழ் எந்த மொழியின் உதவியின்றியும் இயங்க வல்லது என்று அயல்நாட்டவராகிய அவரே அறுதியிட்டுக் கூறிய பின்னரும் இங்குள்ள சிலர் தமிழ் அவ்வாறு இயங்க இயலாது என்று எழுதி வருகிறார்கள். உலக முதன்மொழி தமிழே என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் ஒன்றன்பின் ஒன்றாக முகங்காட்டத் தொடங்கியிருக்கின்றன. இருந்தும் தமிழைச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ள மத்திய அரசிற்கு மனமில்லை என்பதை ஆயிரம் ஆண்டுக் கால வரையறை எடுத்துக் கூறுகிறது.

வடநாட்டுயர் தனிச்செம்மொழி சமசுகிருத மெனக் கொண்டாற் போலத் தென்னாட்டுயர் தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடைத்தாம்" எனப் பரிதிமாற்கலைஞர் பரிந்துரைத்த பின்னரும் சமசுகிருதத்தோடு ஒப்பு தமிழை அறிவிக்க மனமில்லாமல்தான் தனிப் பட்டியலை மத்திய அரசு அறிவித்திருக்கிறது போலும்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடிய அதே பாரதி பிறிதோரிடத்தில் "ஆரியத்திற்கு நிகர் என வாழ்ந்தேன்" என்று கூறுவது எதைக் காட்டுகிறது? பாரதியின் உள்ளத்தில் சமசுகிருதம் உயர்ந்தது, தமிழ் தாழ்ந்தது என்ற எண்ணம் இருந்ததைக் காட்டவில்லையா?

செம்மொழித் தகுதிகளாக இன்று குறிப்பிடப்படும் 11 தகுதிகள் அனைத்தையும் பெற்றது தமிழ். ஆனால் 7 தகுதிகள் மட்டுமே கொண்டது சமசுகிருதம். இருந்தும் சிலர் இந்தியப் பண்பாட்டிற்கு சமசுகிருதம் அரைப்பங்கும் தமிழ் அரைப்பங்கும் வழங்கியிருக்கிறது என்று சரிக்கட்டப் பார்க்கிறார்கள். அவர்களது உள் நோக்கம் எதுவாக இருக்கும் என்பதை நீங்களே உய்த்துணர்ந்து கொள்ளலாம்.

செம்மொழியாக இருந்துவரும் ஒரு மொழியைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று அரசிடம் வேண்டுகோள் வைத்தவர்களின் நோக்கம் என்ன? அவ்வாறான அறிவிப்பால் தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்பதுதான். சமசுகிருதம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளோடு தமிழையும் செம்மொழியாக அறிவிப்பார்கள்; அம்மொழிகளுக்குக் கிடைப்பதைப் போல நம்மொழிக்கும் கிடைக்கும் என்றுதான் தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடந்தது என்ன?

செம்மொழிப் பட்டியல் என்று ஒன்று அறவே இல்லை என்றார்கள். இந்த அறிவிப்பை செய்தவர்  17-09-2004 அன்று தமிழ் செம்மொழி ஆகிறது என்ற அறிவிப்பைச் செய்த அமைச்சர். அன்று வேறு துறையைச் சார்ந்த தமிழக அமைச்சர். நாடாளுமன்றத்தில் மறுமொழி கூற வேண்டிய அமைச்சர் அவையில் இல்லாத பொழுதுதான் அவர் சார்பில் வேறொரு அமைச்சர் அவைத்தலைவரின் ஒப்புதலோடு மறுமொழி கூற முன்வருவார்.

அரசின் அறிவிப்பில் ஐயங்கள் ஏற்படுமானால் அவற்றைத் தெளிவுபடுத்துமாறு கேட்க ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உண்டல்லவா? அந்த வகையில் இந்திய அரசின் முன் இந்தக் கேள்விகளை முன் வைக்கிறோம்.

1. தமிழக அரசு தமிழைச் செம்மொழியாக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு எழுதிய மடலில் ஆயிரம் ஆண்டு பழமை போதும் என்று கூறியிருக்கிறதா?

2. சமசுகிருதம், பாரசீகம், அரபு ஆகிய செம்மொழிப்பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும் என்து கூறியிருக்கிறதா? கூறவில்லையா?

3. செம்மொழிப் பட்டியலே இல்லையென்றால் 1977 ஆம் ஆண்டு முதலாக "Sanskrit and other Classical languages" என்ற தொடர் எவ்வாறு ஆண்டறிக்கைகளில் குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறது?

4. கல்வி, மனிதவள மேம்பாட்டுத் துறையே சமசுகிருதம் முதலிய செம்மொழிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளைச் செய்து வரும் போது தமிழின் செம்மொழி அறிவிப்பையும் அத்துறைதானே செய்திருக்க வேண்டும். மாறாகப் பண்பாட்டுத்துறை அறிவிக்க வேண்டிய தேவை என்ன?

5. கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மொழிகளின் ஆய்வகப் பரிந்துரைப் பெறப்பட்டதா? இல்லையா?

6. சாகித்திய அகாதமிக்குத் தமிழைச் செம்மொழியாக்கலாமா என்று கேட்டது எந்த அடிப்படையில்?

7. பிரதமர் தலைமையில் இந்திய மொழிகளின் வளர்ச்சி முதலானவை பற்றி அறிவுரை கூற அமைக்கப்பட்ட இந்திய மொழிகளின் தேசிய அவை முன் தமிழின் செம்மொழிக் கோரிக்கை கொண்டு செல்லப்படாததேன்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மத்திய அரசு மறுமொழி தர வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டு பழமை போதும் என்ற வரையறையோடு இனிவரும் அரசின் முறையான அறிவிக்கை இருக்குமானால் அதை அறவே தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அப்படியாவதைவிடத் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படாமலே போகட்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களது உள்ளக்கிடக்கையை உறுதிப்பாட்டை மத்திய அரசு உணர்ந்து கொள்வதே நல்லது. அத்தோடு செம்மொழிப்பட்டியல் என்ற ஒரு பட்டியலே இருக்க வேண்டும். இரண்டு பட்டியல் போட்டு ஒன்றில் சமசுகிருதம், பாரசீகம், அரபும் மற்றதில் தமிழும் இருப்பதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

முனைவர் தமிழப்பன் அவர்களது மற்ற படைப்புகள்

முந்தைய கட்டுரைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.