|
........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
| a |
|
Your Advertisement Here
/
உங்கள் விளம்பரம்
இங்கு இடம் பெற |
|
a |
|
கட்டுரை-7 தமிழர்களின் நன்றித் திருநாட்கள். -சித்ரா பலவேசம்.
முந்தைய காலத்தில் விவசாயத்தையே முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்த தமிழர்கள் தங்களது உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்த மழை, சூரியன், உழவு மாடுகள் மற்றும் ஆறு மற்றும் குளங்கள் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வருடந்தோறும் கொண்டாடி மகிழும் இந்த நான்கு நாள்களும் பொங்கல் திருநாட்கள்தான். உழவுத் தொழில் வருடத்தின் கடைசி மாதமான மார்கழி மாதம் கடைசி நாளில், தங்கள் உழவுத் தொழிலுக்கு ஆதாரமான மழையைத் தரும் கடவுளான இந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கோடு அந்தக் காலத்தில் இந்திர விழாவாக ஒவ்வொரு மன்னரும் நாடு முழுவதும் கொண்டாடினர். பின்னர் நாளடைவில் இந்திரனின் இன்னொரு பெயரான போகி என்ற பெயரில் போகிப் பண்டிகையாக உழவர்கள் தங்கள் வீடுகளில் கொண்டாடத் துவங்கினர். போகிப் பண்டிகை தினத்தன்று தங்கள் வீட்டிலுள்ள தேவையற்ற பொருட்களை எரித்தும், கழித்தும் வீடுகளை வெள்ளை மற்றும் வர்ணங்களைக் கொண்டு புதுப்பித்தும் போகிப் பண்டிகை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை நாம் கொண்டாடுவதற்குள்ளும் ஒரு தத்துவம் ஒளிந்திருக்கிறது. நாமும் தேவையற்ற விரோதம், செயல்கள் போன்றவைகளைத் தவிர்த்து விட்டு புதிய விஷயங்களில் கவனம் செலுத்தத் துவங்கினால் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் உணர முடிகிறது. உணவுப் பொருள்கள் உற்பத்திக்கும், உயிர் வாழ்வதற்கும் முக்கியமானதாக உள்ள சூரிய ஒளியை அளிக்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தை மாதம் முதல் நாளில் சூரிய வழிபாடு செய்யப் படுகிறது. இந்த சூரிய வழிபாட்டிற்கு அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து சூரியனுக்கு முன்பாகப் பொங்கலிட்டுப் படைத்து வணங்கி நன்றி தெரிவிக்கும் தைத் திருநாள் பொங்கல் திருநாளாகி விட்டது. இதே போல் உழவுக்கு உதவிய உழவு மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கலுக்கு மறுநாளான தை மாதம் இரண்டாம் நாளில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது. இந்த நாளiல் மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அலங்காரம் செய்து பொங்கலிட்டு வழிபாடுகள் செய்கின்றனர். சில இடங்களில் ஜல்லிக்கட்டு எனும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. தை மாதம் மூன்றாம் நாளில் இளம் கன்னிப் பெண்கள் ஆற்றங்கரையிலோ, குளத்தங்கரையிலோ ஒன்று சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்து ஆற்றுக்குப் படைத்து வழிபாடு செய்கின்றனர். இதைக் கன்னிப் பொங்கல் என்று அழைக்கின்றனர். இந்நாளில் நில உரிமையாளர்கள் தங்களைக் காணவரும் உழவுத் தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது. உழவுத் தொழிலாளர்கள் நில உரிமையாளர்களைக் காண வருவதால் காணும் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பொங்கல் திருநாட்களை நாம் தமிழர்களின் நன்றித் திருநாட்கள் என்று அழைப்பதில் தவறேதுமில்லை.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.