........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...
a
Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

      a

கட்டுரை-8

             மாடு பிடிக்கும் ஜல்லிக்கட்டுத் திருவிழா.

-தாமரைச்செல்வி.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான மாட்டுப் பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் பல கிராமங்களில் மாடுபிடிக்கும் ஜல்லிக்கட்டுத் திருவிழா நடத்தப்படுகிறது. முந்தைய காலத்தில் இந்த ஜல்லிக்கட்டுத் திருவிழா ஆடவர்களின் வலிமையைக் காண்பிக்கும் ஒரு திருவிழாவாக ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு, மாடு பிடித்தல் என்று பல் வேறு பெயர்களில் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் பல கிராமங்களில் இந்த ஜல்லிக்கட்டுத் திருவிழா நடத்தப்பட்டாலும் இந்த ஜல்லிக்கட்டுவிற்குப் உலகம் முழுவதும் பெயர் போன கிராமம் மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் தான். மதுரையிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் இந்த அலங்காநல்லூர் கிராமம் தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் படி "பேரூராட்சி" நிலையில் உள்ளது.

சுமார் எட்டாயிரம் மக்கள் தொகையுடைய இந்த கிராமத்திலிருக்கும் முனியாண்டி சுவாமி மற்றும் காளியம்மன் கோவில்களின் பொங்கல் திருவிழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டு வரும் இந்த ஜல்லிக்கட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட காளை மாடுகள் பங்கு கொள்கின்றன.

இந்த காளை மாடுகளை அடக்கித் தங்களது வீரத்தை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் தமிழகத்தின் சில கிராமத்து இளைஞர்கள் இதற்கென்று அவரவர் கிராமங்களில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்வதுண்டு. இப்படி பயிற்சி செய்த கிராமத்து இளைஞர்களோடு ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்திருக்கும் கிராமத்து இளைஞர்களும் ஆர்வத்தில் மாடு பிடிக்க களத்தில் இறங்கி விடுவதுண்டு. இப்படி மாடு பிடிப்பதற்கென்று இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அலங்காநல்லூரில் களத்தில் இருப்பார்கள்.

இந்த ஜல்லிக்கட்டைக் காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கில் வந்து குவிந்து விடுகின்றனர். சுற்றுலாத்துறையின் மூலம் அழைத்து வரப்படும் வெளiநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இதில் உண்டு.

இந்த ஜல்லிக்கட்டில் முதலாவதாக வெளிவரும் அலங்காநல்லூர் கிரமத்தின் காளையான முனியாண்டி சுவாமி கோவில் காளையை மட்டும் யாரும் அடக்குவதில்லை. அந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் வழக்கப்படி முதல் காளையான அந்த கோவில் காளைக்கு மதிப்பளிக்கும் மாடு பிடிக்கும் வீரர்கள் அடுத்து தொடர்ந்து வரும் காளைகளின் மேல் பாய்ந்து மாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதன் திமிலைப் பிடித்தபடி மாட்டின் போக்கில் செல்வர்.

இப்படி மாட்டின் திமிலைப் பிடித்தபடி குறிப்பிட்ட (சுமார் 30 அடி) தூரம் வரை செல்பவர்களுக்கு தங்கச் செயின், வெள்ளிக்காசுகள், பாத்திரங்கள் என்று மாட்டின் தரத்திற்கேற்ப பரிசுகள் வழங்கப்படுகிறது. இப்படி அடக்க முடியாதபடி செல்லும் மாட்டைக் கொண்டு வந்திருப்பவர்களுக்கும் பரிசுகள் அளிக்கப்படுகிறது.

உயிருக்குப் பாதுகாப்பில்லாத இந்த வீர (விபரீத) விளையாட்டிற்கு வருடந்தோறும் சிலர் பலியாவது வருத்தத்திற்குரியது. இதில் மாடு பிடிக்க வந்தவர்கள் தவிர பார்வையாளர்களாக இருப்பவர்கள் கூட சில சமயம் பாதிக்கப்படுவதுண்டு.

இதனைப் பார்த்த மனித உரிமை பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தன. இதே போல் பிராணிகள் நலன் கருதும் சில அமைப்புகளும் இந்த ஜல்லிக்கட்டால் மாடுகள் கொடுமைக்குட்படுத்தப் படுவதாகத் தெரிவித்து தடை கோரி வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்குகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம் தற்போது சில கட்டுப்பாடுகளுடன் அனுமதியை வழங்கியுள்ளது.

என்னதான் வீரமென்று சொன்னாலும் மனித உயிர் பலியாவதை மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. மாடுகளுக்கு அடங்காத குணம் வருவதற்காகப் போதைப் பெருட்களை கட்டாயாப் படுத்தி அளிப்பது, மாடுகளை பிளேடு போன்ற பொருட்களை வைத்து காயப்படுத்துவது என்பது போன்ற மனிதனின் செயல்களும் வருத்தத்தைத்தான் அளிக்கிறது.

வீர விளையாட்டு என்ற பெயரில் விபரீதத்தை நாம் இன்னும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?. சிந்தித்தால் நல்லது...

முந்தைய கட்டுரைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.