|
....... ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
| இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... |
|
a |
|
a |
|
கிறுக்குத்தனம்-5
நான் நானேதான்
எனக்குத் தெரிந்த ஒருவர் , தன்னை மட்டும்
எல்லோரும் பாராட்ட வேண்டும், தன்னைப் பற்றித்தான் எல்லோரும் பேச வேண்டும்
என்கிற எண்ணமுடையவர். அவர் நடத்தி வந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள்
அனைவரிடமும் தான் மட்டும்தான் இங்கே எல்லாம், தன்னைத் தவிர இங்கு யாருக்கும்
எந்த அதிகாரமுமில்லை என்றபடி தன்னை உயர்த்திக் காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில்
பேசத் துவங்கினார். வேலை செய்யாமல் ஏமாற்றி அலைந்தவர்களுக்கு இது போதாதா? அந்த
நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஏமாற்றுப் பேர்வழிகள் தங்களது குறைகளை மறைத்து,
அவரைப் பற்றி ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்து, உயர் அதிகாரிகளைப் பற்றி அவரிடம்
குறைகளைச் சொல்லத் துவங்கினர். அந்த ஏமாற்றுப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிய
அவர் இதையெல்லாம் விசாரித்துக் கூடப் பார்க்காமல் அவரும் அதிகாரிகளை சத்தம்
போடத் துவங்கினார். அதிகாரிகள் பலரும் தங்களது பணியை விட்டுவிட்டுச் சென்றனர்.
இதனால் அங்கு அவருக்கு நம்பிக்கையாய் வேலை செய்து கொண்டிருந்தவர்களெல்லாம் கூட
வேலையை விட்டுப் போய்விட்டனர். அந்நிறுவனத்தின் முக்கியச் செயல்பாடுகள் எல்லாம்
முடங்கிப் போயின. அந்த ஏமாற்றுப் பேர்வழிகளும் இதையே வழக்கமாகக் கொண்டு அவருடன்
ஒட்டிக் கொண்டு விட்டனர். கூடவே , ஏமாற்றுப் பேர்வழிகள் உங்களுக்கு நிறைய ஐடியா
இருக்கிறது, நீங்கள் இப்படி செய்யலாம், அப்படிச் செய்யலாம் என்றும், நீங்கள்
இதைக் காட்டிலும் பெரிய நபராகி விடலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாத
தொழில்களைப் பற்றியெல்லாம் கூறி, ஆசை வார்த்தைகளுடன் புதுப்புது ஐடியாக்களைக்
கொடுத்து, புதிய களத்திலும் இறக்கி விட்டனர். அவரும் அந்த தெரியாத தொழிலில்
இறங்கி, தற்போது அந்த புதிய தொழிலிலும் அரைகுறையாய் தவித்துக் கொண்டிருக்கிறார்.
பழைய நிறுவனமும் தகுந்த நபர்கள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டுள்ளது.
தரமில்லாதவர்களின் பேச்சைக் கேட்டு தன் தரத்தையும் இழந்து பழைய நிறுவனத்தின்
தாழ்வு நிலைக்கும் காரணமாக இருப்பது அவரின் " நான் நானேதான் " என்கிற அவரின்
தாழ்வான எண்ணம்தான். தகுதியில்லாதவர்களது பேச்சையெல்லாம் நம்பி ஏமாந்து வரும்
அவரது நிலையைக் கிறுக்குத்தனம் என்று சொல்வதா? இல்லை முட்டாள்தனம்
என்று சொல்வதா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
-என். கலியபெருமாள், வேலூர்.
|
| முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.