|
குட்டிக்கதை-17
முட்டாள்களின் பட்டியலில் முதலிடம் யாருக்கு?

பாரசீக நாட்டு மன்னரின் அழைப்பை ஏற்று பாரசீகம்
சென்று திரும்பிய அக்பர் அங்கு அமைக்கப்பட்டிருந்த நந்தவனம் போல் நம் நாட்டிலும்
அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
நந்தவனத்தை நிர்மாணிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார். தோட்ட வேலைகளில் திறமை
வாய்ந்த இரு நபர்களை அழைத்து வரும்படி சொன்னார். காவலாளிகளும் இரண்டு
தோட்டக்காரர்களை அழைத்து வந்தனர். ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் பொற்காசுகளை
அளித்து இரண்டு மாத காலத்திற்குள் நந்தவனத்தை அமைத்துத் தரச் சொன்னார்.
பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட அவர்களும் அடுத்த நாளே பணிகளைத் துவக்கி இரண்டு
மாத காலத்திற்குள் முடித்துத் தருவதாகக் கூறிச் சென்றனர்.
அடுத்த நாளே தோட்டவேலையை ஆரம்பிப்பதாகச் சொல்லிவிட்டுப் போன தோட்டக்காரர்கள்
திரம்பி வரவே இல்லை. பல நாட்கள் கடந்து விட்டன. காவலாளிகளை அழைத்து இரண்டு
தோட்டக்காரர்களையும் தேடச் சொன்னார். அவர்களும் நிறைய இடங்களில் தேடிப் பார்த்து
திரும்பி விட்டார்கள். தோட்டக்காரர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
சில நாட்கள் கடந்து விட்டது.
அக்பரைச் சந்திக்க பீர்பால் வந்திருந்தார்.
அவர் கையில் ஒரு நீண்ட பட்டியல் இருந்தது. அதில் பல பெயர்கள் வரிசையாக
எழுதப்பட்டிருந்தது. தலைப்பில் முட்டாள்களின் பட்டியல் என்று எழுதப்பட்டிருந்தது.
அதில் முதல் பெயர் அக்பர் என்று இருந்தது.
இதைப் படித்தவுடன் அக்பர் கோமடைந்து பீர்பாலைப் பார்த்தார்.
"அரசே, முட்டாள்களின் பட்டியல் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டு எழுத
ஆரம்பித்தேன். அதல் முதல் பெயராக தங்கள் பெயரை எழுதுவதுதான் சிறந்தது என்று
கருதி உங்கள் பெயரை முதலில் எழுதியிருக்கிறேன். " என்று அமைதியாக கூறினார்
பீர்பால்.
அக்பருக்கு ஒன்றும் புரியவில்லை. மிகுந்த கோபத்துடன் பீர்பாலைப் பார்த்தார்.
"அரசே, தாங்கள் சிறிது கூட யோசிக்காமல் யார் என்று விசாரிக்காமல் திடீரென்று
வந்த தோட்டக்காரர்களிடம், ஒவ்வொருவருக்கும் பத்தாயிரம் பொற்காசுகளைக் கொடுத்து
ஏமாந்து விட்டீர்கள். அறிவாற்றல் அதிகமுடைய நீங்கள் இப்படி ஏமாந்து விட்டீர்கள்
என்று நினைக்கும் போது முட்டாள்களின் பட்டியலில் முதலாவதாக தங்களைச் சேர்த்ததில்
என்ன தவறு இருக்கிறது? என்றார் பீர்பால்.
அக்பர் சற்று யோசித்தார்.
பின்பு பீர்பாலிடம், "என்னிடம் பொற்காசுகள்
பெற்றுச் சென்ற தோட்டக்காரர்கள் திரும்பி வரலாமல்லவா?" என்றார்.
"அரசே, அவர்கள் வரப்போவது இல்லை. அப்படி வந்து விட்டால் முட்டாள்களின்
பட்டியலில் உள்ள தங்களது பெயரை நீக்கி விட்டு முதலாவதாக அந்த தோட்டக்காரர்களின்
பெயர்களைக் குறித்துக் கொள்கிறேன்." என்றார் பீர்பால்.

முந்தைய குட்டிக்கதைகள் காண

|