|
குட்டிக்கதை-18
மறு கல்யாணத்துக்கு விடாத பிசாசு.

ஒருவனுடைய மனைவி மிகவும் நோய்வாய் பட்டு
மருத்துவமனையில் இருந்தாள். அவள் இறக்கும் தருவாயில் தன்னுடைய கணவனிடம் "உன்னை
விட்டுவிட்டுப் போவதற்கு மனம் இல்லை. உயிரோடு இருக்க மாட்டேன் என்பது நிச்சயம்.
ஆனால் எனக்கு நீ துரோகம் செய்வது பிடிக்காது. எனக்கு ஒரு சத்தியம் செய்து
கொடுக்க வேண்டும். நான் செத்த பின்பு வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து
கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்" என்று கேட்டாள். கணவனும் அவள் கேட்டவாறே
சத்தியம் செய்து கொடுத்தான். "ஆனால், சத்தியத்தை மீறி திருமணம் செய்தால் ஆவியாக
வந்து உன்னை நான் துன்புறுத்துவேன்" என்று பயமுறுத்தி விட்டு செத்தாள்.
பல மாதங்கள் தன்னுடைய மனைவிக்கு செய்து கொடுத்த சத்தியத்தைத் தவறாமல் காத்து
வந்தான். ஆனால் முடிவில் எதேச்சையாக சந்தித்த ஒரு பெண்ணிடம் மனதைப்
பறிகொடுத்தான். இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்யப் பட்டது.
அன்று இரவு ஆவியாக அவனுடைய மனைவி வந்தாள். அவன் தனக்கு கொடுத்த வாக்கைக்
காப்பாற்றவில்லை என்று மிகவும் குறைபட்டுக் கொண்டாள். அதன் பிறகு ஒவ்வொரு இரவும்
அவன் தூங்கும் போது வந்து அவனை தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள். எதிர்கால
மனைவியுடன் அவன் தனிமையில் பேசிய ஒவ்வொன்றையும் அந்தப் பிசாசு ஒரு வார்த்தை கூட
மாறாமல் திருப்பிக் கூற ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல அதனுடைய தொந்திரவு
அதிகரிக்க ஆரம்பித்தது அவனால் கொஞ்சம் கூட தூங்க முடியவில்லை.
பக்கத்துக் கிராமத்தில் இருந்த ஸென் ஆசிரியர் ஒருவரிடம் நடந்த கதை
எல்லாவற்றையும் கூறி தன்னை அந்தப் பிசாசிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று
கேட்டுக் கொண்டான். "மிகவும் புத்திசாலியான பிசாசாக இருக்கும் போலிருக்கிறதே"
என்று கதையைக் கேட்ட ஸென் ஆசிரியர் அவனைப் பார்த்துக் கூறினார். "ஆமாம், அது
நான் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் அறிந்து வைத்து இருக்கிறது. நான் பேசுகின்ற
ஒவ்வொரு வார்த்தையையும் நினைவு வைத்திருந்து என்னிடமே திரும்பச் சொல்கிறது" என
ஆசிரியரைப் பார்த்து பரிதாபமாகக் கூறினான். "அந்தப் பிசாசை நாம் பாராட்டாமல்
இருக்க முடியாது. இருந்தாலும் நான் கூறுவதைப் போல் அடுத்த முறை செய்" என்று அவன்
காதில் ஒரு விஷயத்தைக் கூறினார்.
அன்று இரவு வந்த பிசாசிடம், ஸென் ஆசிரியர் கூறியவாறு "நீ உண்மையிலேயே
புத்திச்சாலியான பிசாசு" என்று கூறியவன், மேலும் தொடர்ந்து "உன்னிடமிருந்து நான்
எதையும் மறைக்க முடியாது. நீ என்னுடைய ஒரு கேள்விக்கு பதில் அளித்தால் போதும்,
நான் என்னுடைய நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விடுகிறேன். மேலும் வாழ்நாள்
முழுவதும் தனி மனிதனாகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறேன்" என்று அவனுடைய
முன்னாள் மனைவியான பிசாசினைப் பார்த்துக் கூறினான். "உன்னுடைய கேள்வியைக் கேள்",
என்று பிசாசு கூறியது தான் தாமதம் கீழே ஒரு பெரிய பீன்ஸ் மூட்டையில் இருந்து ஒரு
கைப்பிடி பீன்ஸை எடுத்துக் கொண்டு, "என்னுடைய கையில் எத்தனை பீன்ஸ் இருக்கிறது
என்று சொல்" என்றான்.
அந்த நிமிடமே அந்தப் பிசாசு அவன் கண்களிலிருந்து மறைந்தது. அதன்பின் அது
திரும்பி வரவில்லை.
-ஸென் கதை

முந்தைய குட்டிக்கதைகள் காண

|